முதல் இரண்டு உலகப் போர்களைப் பார்த்த மனிதகுலம் போரையே வெறுக்கத் தொடங்கிவிட்டது. உலகப் போர்களால் ஏற்பட்ட சேதங்களும், மனித உயிர்களின் அழிவுகளும் எழுத்தில் அடங்காதவை. மிச்சம் மீதியிருந்த மக்கள் மனநோயாளிகளாகவே மாறிவிட்டனர்.
ஒருமுறை போரினால் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்ய பல தலைமுறைகளாலும் முடியவில்லை. கல், வில், வாள், வேல், துப்பாக்கி, பீரங்கி என்று தொடங்கி இப்போது அணு ஆயுதங்களின் காலமாகப் போய்விட்டது. எனவே போரைத் தொடுக்கும் நாடும், துணைபோகும் நாடுகளும்கூட இனி தப்பிக்கவே முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் வீசப்பட்ட அணுகுண்டுகளினால் ஏற்பட்ட அழிவு இன்னும் தொடர்கிறது. இனிமேல் போர் தொடங்கினால் அது அணு ஆயுதங்களின் போராகவே அமையும்; அதனால் புல், பூண்டுகள்கூட மிஞ்சாது என்பதால் மக்கள் இந்தப் போரை வெறுக்கத் தொடங்கிவிட்டனர். போரை நேசிப்பவர்கள் மனநோயாளிகளாகவே இருப்பார்கள் என்று அறிவுலகம் முடிவு செய்துவிட்டது.
எனினும் போருக்கான சூழ்நிலை முற்றிலும் மறைந்துவிடவில்லை; எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே தொடர்கிறது; உலகில் ஆங்காங்கு கலகம், உள்நாட்டுப் போர், நாடுகளிடையே சச்சரவு என மழைவிட்டும் தூவானம் விடவில்லை.
அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் கெடுபிடியால் ஆப்கானிஸ்தான், இராக், எகிப்து, சிரியா எனப் போர் மேகங்கள் இடி இடித்து எல்லோரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் போர்மழை பெய்யலாம்.
இப்போது கொரிய தீபகற்பப் பகுதிக்கு அமெரிக்காவின் நாசகாரிப் போர்க்கப்பல் விரைந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்ட கப்பலாகும் இது.
வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதச் சோதனை, ராக்கெட் ஏவுதல் போன்ற நடவடிக்கைகளால் வடகொரியா பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதால் வடகொரியா கோபம் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர்ப்பயிற்சி நடத்துகிறது. அமெரிக்காவின் அதிநவீன விமானங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருதரப்புக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை வடகொரியா ஒரு தரப்பாக ரத்து செய்துவிட்டது. "இப்போதைய நிலையில் வடகொரியா, தென்கொரியா இடையிலான உறவுகள் போர்க்காலத்தில் இருக்கும் நிலைமைகளை ஒத்திருக்கிறது. எனவே, எந்த விவகாரமானாலும் போர்க்கால நடைமுறைகளின்படிதான் தென்கொரியாவுடன் பேச்சு நடத்துவோம்' என்று வடகொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடல், நில எல்லைப் பகுதியில் சிறு தவறு ஏற்பட்டாலும் அது போராக மாறிவிடும். அணு ஆயுதப்போர் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950 - 53 ஆண்டுகளில் நிகழ்ந்த போருக்குப் பின்னர், இரு நாடுகளும் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. எனினும் அமைதி ஒப்பந்தம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வடகொரியா, ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டன. அதனால்தான் ஆத்திரமடைந்த வடகொரியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா, "அந்தப் பகுதியில் 28,500 அமெரிக்கப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும், எங்களுடன் ஜப்பான் உள்ளிட்ட பல நட்பு நாடுகள் கைகோத்துள்ளன என்றும், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றும் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய வணிகமே ஆயுத விற்பனையாகும். இதற்காக நாடுகளுக்கிடையே பகைமை மூட்டியும், உள்நாட்டுப் போரைத் தூண்டியும் ஆயுத விற்பனைக்கு வழி செய்கிறது. வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தினைக் கவரவும், ஆயுத விற்பனைக்காகவும் போர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்போது கொரிய தீபகற்பம் அவர்களுக்கு வாசலைத் திறந்து விடுகிறது.
இந்நிலையில் ஐ.நா. அவையில் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஆயுத விற்பனை கண்காணிப்பு ஒப்பந்தம் 154 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, ரஷியா, கியூபா, சவூதி அரேபியா முதலிய 23 நாடுகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. வடகொரியா, ஈரான், சிரியா ஆகிய மூன்று நாடுகள் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தன.
உலகில் ஆயுத விற்பனையில் அமெரிக்காவே முதலிடம் வகிக்கிறது. அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஆயுத விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அமெரிக்கா நினைத்தால் ஒரு நாட்டுக்கு இந்த ஒப்பந்தத்தைக் காட்டி ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ள முடியும் என்று இதனை எதிர்க்கும் நாடுகள் கூறுகின்றன.
"இப்போது உலக அளவில் ஆயுத விற்பனை ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டிவிட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றுவதன் மூலம் இனி ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும்' என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவும், சீனாவும் ராணுவத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இந்தியா 2013 - 14- ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 672 கோடி ரூபாய் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 14 விழுக்காடு அதிகமாகும்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் இந்தியா ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்த ஐ.நா. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக இனி இதனை அளவுகோலாகப் பயன்படுத்தி, அமெரிக்கா நமது ஆயுத இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் உள்நோக்கமும் இதற்குள் அடங்கி இருக்கிறது; இதன் மூலம் ஆசியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு இது வழி செய்யக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உலக அளவில் தனது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. எனவே ராணுவத்தை நவீனமாக்க வேண்டிய தேவையிருப்பதால் ராணுவத்துக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், ""நாட்டின் பாதுகாப்பைப் பொருத்தமட்டில் இன்னும் கூடுதல் நிதி தேவைப்படுமானாலும், அதை ஒதுக்க எந்தவொரு தடையும் இருக்காது'' என்றும் உறுதிபடக் கூறினார்.
ஒவ்வொருவரும் தங்கள் தாய்நாட்டின் பாதுகாப்பை விரும்புவது இயற்கை. ஆனால், தேசப் பாதுகாப்பு என்ற பெயரால் ஒதுக்கப்படும் பெருந்தொகையை ஆயுதம் வாங்குவது என்ற பெயரால் ஊழலுக்கு உள்படுத்தலாமா? அப்போதைய ஃபோபர்ஸ் பீரங்கி பேர ஊழலும், இப்போதைய இத்தாலி ஹெலிகாப்டர் பேர ஊழலும் கூறும் கதை என்ன? தேசப் பாதுகாப்பு விஷயத்தில் யாருடனும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறுபவர்கள் ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளலாமா?
ஒவ்வொரு நாடும் தங்கள் இறையாண்மையைக் காப்பதாகக் கூறிக்கொண்டு, இல்லாத எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர் காய்கின்றன. "புலி வருகிறது, புலி வருகிறது' என்று புதிய "கிலி'யை ஏற்படுத்தித் தங்கள் அரியணைகளைத் தக்கவைத்துக் கொள்ளவே முயல்கின்றன. இதுவும் ஒருவகையில் அரசு பயங்கரவாதம்தான், என்ன செய்வது?
கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமும் இப்படிப்பட்டதுதான். வடகொரியாவின் பின்னணியில் சீனாவும், தென்கொரியாவின் பின்னே அமெரிக்காவும் இருக்கின்றன. அத்துடன் இந்த நாடுகளிடம் அணுஆயுதங்களும் இருக்கின்றன. ஒரு தீப்பொறி பட்டாலும் உலகம் வெடித்துச் சிதறிவிடும்.
இப்போது வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவும் தமக்குச் சொந்தமான குவாம் தீவில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை நிறுவி வருகிறது. பென்டகன் மற்றும் விண்வெளி பாதுகாப்புத்துறை சார்பில் டிரக்குகளிலிருந்து ஏவக்கூடிய ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் அமெரிக்க நிலைகள் மீது அணுஆயுதத் தாக்குதல் நடத்தத் தமக்கு அனுமதி கிடைத்துவிட்டதாக வடகொரிய ராணுவம் கூறியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் உச்ச நிலையை அடைந்துள்ளது.
அணுயுகத்தின் தந்தையெனக் கூறப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: ""மூன்றாவது உலகப்போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?'' அதற்கு அந்த அறிவியல் மேதை தந்த பதில்: ""மூன்றாவது உலகப் போரைப் பற்றி எனக்குத் தெரியாது. நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லுமே பயன்படுத்தப்படும்...''
இதற்கு என்ன பொருள்? மூன்றாம் உலகப்போர் வந்தால் அணு ஆயுதங்களால் உலகமே அழிந்து போகும்; அதன் பிறகு கற்காலத்தில் இருந்துதான் நாகரிகம் தோன்றும்; அப்போது கல்லும், வில்லும்தானே ஆயுதமாகும். இதைத்தான் அந்த அறிஞர் அவ்வாறு எச்சரித்துள்ளார். எனவே, மனிதகுலம் போருக்கு எதிராகப் போராட வேண்டும்.
கட்டுரையாளர்: பணி நிறைவுற்ற பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.