மனிதநேயத்துக்கு எதிரான போர்

இந்த உலகம் அழியாமல் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? தமக்காக வாழாமல் பிறர்க்காக
Updated on
3 min read

""இந்த உலகம் அழியாமல் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? தமக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்பவர்கள் இருப்பதால்தான் உலகம் அழியாமல் நிலைத்திருக்கிறது'' என்று சங்க இலக்கியம் புறநானூறு கூறுகிறது. அப்படிப்பட்ட நல்லவர்கள் குறைந்துகொண்டே போவதால்தான் "இந்த உலகம் அழிந்து போய்விடுமோ?' என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது. அதனால் வதந்திகளும் வந்து உலவுகின்றன.

 உலகில் ஆங்காங்கு நிகழும் பயங்கரவாதங்களும், குண்டுவெடிப்புகளும், "இந்த அழிவுக்கான அறிகுறிகள்தானோ?' என்ற ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. செய்தி ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதாக்கி பீதியடையச் செய்கின்றன. ஏதாவது நடந்து விடுமானால், "அன்றே கூறினோம்' என்று "முந்தித் தந்த செய்தியால்' பெருமைப்பட்டுக் கொள்கின்றன.

 கடந்த (2013) பிப்ரவரி 21 அன்று ஹைதராபாதில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புகளால் இந்தியாவே அதிர்ந்தது. இந்திய மக்கள் அனைவரும் திடுக்கிட்டனர்; திகைத்துப் போயினர். ஹைதராபாத் நகரமே அழிவும், மரணமும் தாண்டவமாடும் இடமாக மாறியது. 17 பேர் மாண்டனர், 120-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

 "தில்சுக்' நகர்ப்பகுதி ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. எனவே நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

 மத்திய - மாநில அரசுகளும், காவல்துறையும் தங்கள் இயலாமையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு நம் பாதுகாப்பு அமைப்பு மீதான நம்பிக்கையை மீண்டும் தகர்த்திருக்கின்றன.

 இந்த நிகழ்வினால் நாடாளுமன்றத்திலும் அமளி ஏற்பட்டது. வழக்கம்போல் மத்திய அரசு, "உள்துறை முன்னதாகவே எச்சரிக்கை செய்தது, மாநில அரசு அதை நிறைவேற்றத் தவறிவிட்டது' என்று கூறியுள்ளது.

 பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறக் கூடும் என்று மாநில அரசுகளை எச்சரிப்பதுடன் மத்திய அரசின் பொறுப்பு முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. தொடர்புடைய மாநில அரசுகளுடன் இணைந்து இத்தகைய தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

 ""ஹைதராபாத் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும், அதைத் திட்டமிட்டவர்களையும் பிடிப்பதற்கு மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்'' என்று உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே மக்களவையில் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. செயலாளர் பான் கி மூன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க வெளிவிவகாரச் செய்தித் தொடர்பாளரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும், இந்தத் தாக்குதல் தொடர்பாக புலன் விசாரணையில் இந்தியா கேட்டுக்கொண்டால் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 பயங்கரவாதத்தை எந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாதச் செயல்களையும், அதை ஊக்குவிப்பவர்களையும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் இந்தியாவின் வலியை நன்கு உணர முடிகிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

 இவ்வாறு பாதிக்கப்பட்ட நாட்டுக்காக அனுதாபம் தெரிவிப்பது மனிதநேயத்தின் பாற்பட்டது. இந்த மனிதநேயம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டிருக்கிறது. அதன் அடையாளம்தான் இப்படிப்பட்ட குண்டுவெடிப்புகளாகும். இந்த நகருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் புதிதல்ல, பல முறை நடந்துள்ளது.

 2007-ஆம் ஆண்டு 42 பேரை பலி வாங்கிய இரட்டை குண்டுவெடிப்புக்குப் பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் இப்போது மற்றொரு குண்டுவெடிப்பு என்பது அம்மக்களின் பொறுமையைச் சோதிப்பதாகும்.

 இதனிடையே ஆந்திர மாநில அரசு தீவிரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு ஒரு திட்டம் தீட்டியது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் பயிற்சியும், தேர்ச்சியும் கொண்ட ஒரு தனிப்பிரிவை உருவாக்கியது. இதற்கு "ஆக்டோபஸ்' என்று பெயர். 30 ஆயிரம் புதிய காவலர் பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டன. உளவுப் பிரிவும் வலுவாக்கப்பட்டது. என்றாலும் இத்தகைய முன்னேற்பாடுகள் இருந்தும்கூட இத்தகைய கோரச் செயலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

 "கசாப் மற்றும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்வினை இருக்கலாம் என்று மட்டுமே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட எச்சரிக்கை ஏதும் இல்லை' என்று ஆந்திர மாநிலத்தின் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 ""நகரின் முக்கிய இடங்களில் மொத்தம் 3,500 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 1995-ஆம் ஆண்டு முதலே ஹைதராபாத் நகரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. பலமுறை இதுபோன்ற தாக்குதல் திட்டங்களை முன்னதாகவே கண்டறிந்து முறியடித்துள்ளோம். ஒரு சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன...'' என்று ஆந்திர உள்துறை அமைச்சர் பி. சபீதா இந்திரா ரெட்டி கூறியுள்ளார்.

 "ஆனைக்கும் அடிசறுக்கும்' என்பது உண்மைதான். ஆனால், "அடிக்கடி சறுக்குகிறதே!' என்பதுதான் பொதுமக்களின் ஆதங்கம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படாமல் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதால் பயன் என்ன? மக்களின் பாதுகாப்பு என்பது அரசியல்வாதிகளின் பாதுகாப்பை விடவும் முக்கியம் இல்லையா?

 மும்பை, தில்லி, கோவை என்று இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. இதற்குக் காரணமானவர்கள் யார் என்று உளவுத்துறை முடிவு எடுப்பதற்குள் தகவல்தொடர்பு ஊடகங்கள் செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு புதிய புதிய திருப்பங்களை உண்டாக்கி விடுகின்றன. இத்தகைய பரபரப்பான வதந்திகள் உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடவும், அப்பாவிகள் மாட்டிக் கொள்ளவும் வழிவகுத்து விடுகின்றன.

 இதுபற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், பாட்னாவில் நடைபெற்ற கிழக்குப் பிராந்திய நீதிக் கருத்தரங்கில் பேசியுள்ளார்:

 ""அண்மைக்காலமாக வழக்குகள் பற்றி ஊடகங்களே விசாரணை நடத்தும் போக்கு கவலையளிக்கிறது. இவ்வாறு நடக்கக் கூடாது. இது ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராகத் தவறான கருத்தை உருவாக்க வாய்ப்புள்ளது...'' என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வருந்தியுள்ளார்.

 மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அப்சல் குரு ஆகிய இருவருக்கும் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனைக்குப் பழி வாங்குவதே இந்தக் குண்டுவெடிப்பு என்று இந்திய உளவுத்துறை கூறுகிறது.

 இத்தகைய பயங்கரவாதச் செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே! ஒரு தொடர்பும் இல்லாத அவர்களை அழிப்பதன் மூலம் சதிகாரர்கள் அடையும் பயன் என்ன? "பழிக்குப் பழி' என்ற இந்த வெறித்தனமான செயல்களால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுகின்றனர் என்பதை அறியாமல் போனது எப்படி?

 சுதந்திரப் போராட்டக் காலத்தில் மறக்க முடியாத ஒரு துயரம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919 ஏப்ரல் 13 அன்று அது நடந்தது. இது நடந்து 94 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்குச் சென்றார். "இந்தச் சம்பவம் பிரிட்டிஷ் வரலாற்றில் வெட்கக்கேடான செயல்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தக் குண்டுவெடிப்புகளும் அப்படித்தான். வெட்கக்கேடான செயல்களைச் செய்தவர்களும் வெட்கக் கேடானவர்களே! எந்தக் குறிக்கோளும் இல்லாமல் அழிவை மட்டுமே செய்யும். இந்த அநாகரிக மனிதர்கள் சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இன்னும் சொன்னால் அவர்கள் மனிதர்களே அல்ல; மனிதர்களை அழிப்பவர்களை எப்படி மனித இனத்தில் சேர்க்க முடியும்?

 இத்தகைய மனிதப் பிறவிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாமா? மனம் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாமா? இப்படிப்பட்ட விவாதங்களும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. சட்டமும், நீதியும் தம் கடமைகளைச் செய்யட்டும். மனித சமுதாயம் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்கக் கடமைப்பட்டுள்ளது.  இந்த உலகம் பல்லாயிரம் ஆண்டுகளில் எண்ணற்ற மனிதர்களின் உழைப்பினால் இந்த நிலையை அடைந்துள்ளது. எதையும் அழிப்பது எளிது; ஆக்குவதே கடினம். அதனால்தான் அழிவைத்தரும் போரை எதிர்த்து அமைதியையும், சமாதானத்தையுமே அறிவுலகம் நாடுகிறது; அதையே தேடுகிறது.

 சிறந்த அறிவியல் மேதை ஐன்ஸ்டீன், "போர் எந்நாளுமே தேவையற்றது' என்றும், அது மனித இயல்புக்கு ஒவ்வாத ஒன்று என்றும் கருதினார். முதல் உலகப்போர் சமயத்தில் ஜெர்மானியர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கையெழுத்திட அவர் மறுத்துவிட்டார். அதனால் அவரை "தேசத் துரோகி' என்று தூற்றினர். சமாதானத்தின் பொருட்டு தம் உயிரையே பணயம் செய்யத் தயாராக இருந்தார்.

 இதுவும் ஒரு போர்தான். மனித சமுதாயத்துக்கு எதிராக அழிவு சக்திகள் நடத்தும் போர். இந்தப் போர் உலகம் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை எதிர்த்து வெற்றிபெறும் வலிமை மனித குலத்துக்கு இருக்கிறது.

(கட்டுரையாளர்: பணி நிறைவுற்ற ஆசிரியர்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com