நாட்டில் அமைதியையும், வாழ்க்கையில் நிம்மதியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனைத் தரவேண்டியது மக்களாட்சி முறையில் அரசாங்கத்தின் கடமையாகிறது. அந்தக் கடமையைச் சரிவர செய்ய முடியாத அரசாங்கங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து விடுகின்றன.
நாட்டில் முக்கிய நகரங்களில் குண்டுகள் வெடிப்பதும், அதன் காரணமாக எதற்கும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளாகிவிட்டன. மக்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை; ஆனால் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அதிரடிப்படை பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு துச்சமாகப் புறக்கணிக்கப்படுகிறது.
அண்மையில் உச்ச நீதிமன்றம், ""முன்னாள் அமைச்சர்களுக்கு ஏன் "ஒய்' - பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்?'' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக இருந்த ராம்வீர் உபாத்தியாய்க்கு அப்போது "ஒய்' - பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அகிலேஷ் யாதவ் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், ராம்வீருக்கு அளிக்கப்பட்டு வந்த இந்தப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு, இதற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய ஒரு கான்ஸ்டபிள் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து பழையபடி "ஒய்' - பிரிவு பாதுகாப்பு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் பணம் பெருவாரியாகச் செலவழிக்கப்படுகிறது. தங்களுக்கென தனிப்பாதுகாப்பு வைத்துக்கொள்ள வசதியிருந்தும் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மக்கள் பணத்தில் பாதுகாப்புத் தர வேண்டிய தேவை என்ன?
இதுபற்றி நீதிமன்றங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பியுள்ளன. எனினும் அரசாங்கங்கள் சரியான பதில் கூறாமல் மழுப்புகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றி விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மாநாடு தில்லியில் கடந்த ஜூன் 4 அன்று நடைபெற்றது. "தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்' (என்.சி.டி.சி.) அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
""நக்சல்களால் நாட்டுக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதம், மத வன்முறைகள், இடதுசாரி பயங்கரவாதம் ஆகியவற்றை முழுமூச்சுடன் எதிர்க்க இதுவே சரியான தருணம்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் பேசியுள்ளார்.
நம்மிடையேயுள்ள கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தேச நலனைக் கட்டிக் காக்க அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா - வங்கதேசம், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னைகள், சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பாதுகாப்புப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள், காஷ்மீரில் ஏற்பட்டுவரும் அமைதி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் முனுசாமி கலந்துகொண்டார். அதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை; அவருக்குப் பதிலாக அவரது மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா கலந்துகொண்டு அறிக்கை வாசித்தார்.
தமிழக அரசின் சார்பில், பயங்கரவாதத்தை ஒடுக்க "தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்' தேவையில்லை என்றும், "மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை'தான் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த எதிர்ப்புப் படைக்குத் தேவையான நிதி மற்றும் ஆயுதங்களை வாங்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
""தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் தொடர்பாக எந்தவொரு மாநிலத்தையும் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை; மத்திய உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்யவும், பொருள்களைப் பறிமுதல் செய்யவும் அதிகாரத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் இந்த நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
""மத்திய உள்துறையின் செயல்பாடு, "பெரியண்ணன்' போக்கில் உள்ளது. அத்துடன் ஜனநாயக முறைகளைக் கேலிக்கூத்தாக்குகிறது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை சதுரங்கத்தில் பகடைக் காய்களைப்போல மத்திய உள்துறை பயன்படுத்த முயல்கிறது'' இவ்வாறு தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
மாநிலக் காவல்துறையைத் தனிமைப்படுத்திவிட்டு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால் மத்திய அரசு நியமிக்கும் அமைப்பு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடலாம். அதில் பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டால், "அதற்கு யார் பொறுப்பேற்பது?' என்றும் கேட்டுள்ளார்.
மத்திய உளவுத்துறை, "ரா' உளவுப்பிரிவு, ராணுவ உளவு இயக்குநரகம் ஆகியவற்றுக்கு இடையே நிலவும் "அதிகாரப் போர்' யாவரும் அறிந்த ஒன்றுதான். அதையே சரிசெய்ய முடியவில்லை. இந்நிலையில் உள்ளூர் மொழி மற்றும் கட்டமைப்பைப் புரியாதவர்கள் உளவு சேகரிப்பில் ஈடுபட்டால் குழப்பங்களே மிஞ்சும்.
ஜனநாயக ஆட்சியில் மாநிலத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இந்நிலையில் மாநிலங்களை ஐயக் கண்ணோட்டத்துடனும், நம்பிக்கையற்றும் பார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
""தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்காவிட்டால் நாடு அதற்கான கடும் விலையைக் கொடுக்க நேரிடும்'' என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்; மாநிலங்களுக்கு மத்திய அரசின் மறைமுக எச்சரிக்கையாகும் இது. இதனைப் பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணித்துவிட்டதனால் ஏற்பட்ட கோபமாகும்.
சட்ட விரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம், தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் ஆகியவற்றின் திருத்தங்களோடுதான், "தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்' யோசனையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மாநிலங்கள் ஒப்புதல் தரவில்லை; இதனை எதிர்ப்பது தவறானது என்று மத்திய அரசு எண்ணுகிறது. மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
மாநில அரசின் அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளவே மத்திய அரசு திட்டமிடுகிறது. ஏதாவது ஒரு நெருக்கடியை உருவாக்கி மாநில அரசுகளை அடிமைப்படுத்துவதே அதன் நோக்கமாக இருக்கிறது. நாட்டில் பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளும் காரணங்கள் இல்லையா?
கடந்த மே 25-ஆம் நாள் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகளின் வன்முறை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய "பரிவர்த்தன்' யாத்திரையின்போது கார்கள், மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளாயின.
அன்றைய தாக்குதலில் இறந்துபோன 27 பேரில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் ஆகியோருடன் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக "சல்வா ஜுடும்' என்ற தனியார் ஆயுதப் படையை உருவாக்கிய மகேந்திர கர்மாவும் அடங்குவார்.
மாவோயிஸ்டுகள் 2004-இல் இந்த அரசுக்கு எதிரான போரை அறிவித்த பின் இதுபோன்ற தாக்குதல்கள் பல நிகழ்ந்துள்ளன. 2050-இல் இந்திய அரசைத் தூக்கி எறிவதே அவர்களின் இலக்கு என அறிவித்துள்ளனர். இவர்களின் வன்முறையை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இருப்பினும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முதலிய பெரியவர்களின் அறிக்கை எழுப்பும் நியாயங்களை மறுதலிக்க முடியாது.
இந்தியாவின் வனப்பகுதிகளிலுள்ள கனிம வளங்களைக் குறிவைத்து பல பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூர் தொழிலதிபர்களும் போட்டி போடுகின்றனர். அவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பழங்குடி மக்களின் வாழ்விடங்களைப் பறித்தெடுக்கத் துடிக்கின்றன.
இந்நிலையில் இந்த ஆதிவாசிகளுக்கு மாவோயிஸ்டுகளைத் தவிர வேறு புகலிடம் ஏது? ஒன்றுமே அறியாத இந்தப் பழங்குடி மக்களை ஆயுதம் ஏந்தச் செய்தது யார்? இந்தப் பயங்கரவாதங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் காரணம் இல்லையா? இந்தக் கேள்விகளை மனச்சாட்சியுள்ள பெரியவர்கள் கேட்காமல் வேறு யார் கேட்க முடியும்?
மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அப்போது உறுதிபடத் தெரிவித்தார். இந்த உறுதி எல்லா நிலைகளிலும் ஒரு நாட்டுத் தலைவருக்கு இருக்க வேண்டியதுதான். இந்த உறுதியே நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.
""அகிம்சை என்பது, தீமையானவைகளையெல்லாம் உண்மையில் எதிர்த்துப் போராடுவதினின்று ஒதுங்கியிருந்து விடுவது என்பதல்ல. இதற்கு மாறாக, நான் கருதும் அகிம்சை அதிகத் தீவிரமானது. தீமைகளை உண்மையில் எதிர்த்துப் போராடுவதும், பதிலுக்குப் பதில் செய்துவிடுவது என்பதும் இயல்பாகவே தீமையை அதிகரிப்பதாகும். ஆகையால் அதைவிட அகிம்சை அதிகத் தீவிரமானது...'' என்று காந்தியார் கூறுவது, தீமைகளை எதிர்த்து நிற்க வேண்டியதன் தேவையை எடுத்துக் காட்டுகிறது.
தேசம் என்பது மண்ணும், மலைகளும் அல்ல; ஆறுகளும் காடுகளும் அல்ல. தேசம் என்பது ஊனும், உயிருமான மக்கள்; தேசத்தை நேசிப்பது என்பது மக்களை நேசிப்பது. மக்களை விட்டுவிட்டு தேசத்தை நேசிக்க முடியுமா? தீமைகளை எதிர்த்து நிற்பதே தேசத்துக்குச் செய்யும் தியாகமாகும்.
கட்டுரையாளர்:
பணி நிறைவுபெற்ற தமிழாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.