வடக்கே வாழ்ந்த "ஜான்சி ராணி' லட்சுமி பாயின் வீரத்தையும் தியாகத்தையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது; அதே சமயத்தில் ஜான்சி ராணிக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் வெள்ளையருக்கு எதிராகக் களம் கண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரம் செறிந்த வரலாறு, வரலாற்று அறிஞர்களையே வியக்க வைக்கிறது.
பல மொழிகளை அக்காலத்திலேயே வேலு நாச்சியார் அறிந்து வைத்திருந்ததும், குதிரையேற்றத்திலிருந்து சிலம்பாட்டம் உள்ளிட்ட சில தற்காப்புக் கலைகளைக் கற்று வைத்திருந்ததும், ராணியாக மட்டும் அரண்மனையிலும் அந்தப்புறத்திலும் உலா வருபவராக அல்லாமல், ஆயுதங்கள் ஏந்தி ஆங்கிலேயர் கூலிப்படையை புறமுதுகு காட்டி ஓடச் செய்த ஒரு போர் படைக்கே நேரடியாகத் தலைமையேற்றதும் இந்திய விடுதலைப் போரட்ட வரலாற்றில் அரிதினும் அரிதான அத்தியாயங்களாகும்.
புறநானூற்றுத் தாய்மாரை நினைவூட்டக்கூடிய இத்தகைய வீரத்தமிழ் மகளிர் பலரின் வரலாற்றை விடுதலைப் போராட்ட வழி நெடுகப் பார்க்க முடிகிறது.
நேதாஜி தலைமையில் செயல்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் மகளிர் படைத் தளபதியாக விளங்கிய கேப்டன் லட்சுமி அவர்களில் ஒருவர். அவர் வசித்த கான்பூர் நகருக்கே சென்று அவரது வரலாற்றை அவரிடமே நேரடியாகக் கேட்டறிந்தோம். நேதாஜியின் சேனையில் தமிழ்ப் பெண்கள் ஆற்றிய தீரமிக்க சேவையை அவர்மூலம்தான் அறிய முடிந்தது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற லட்சுமி, சிங்கப்பூரிலுள்ள அவரது உறவினர்களைச் சந்தித்து சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு இந்தியா திரும்பும் திட்டத்தில் சென்றார். சென்ற இடத்தில், அவரது உறவினர்கள் வற்புறுத்திய காரணத்தினால் அங்கேயே மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். அங்கு இந்தியரான ராஷ்பிகாரி போஸ் தொடங்கியிருந்த இந்திய சுதந்திரக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். மோகன் சிங் தலைமையில் "இந்திய தேசிய இராணுவம்' என்ற அமைப்பு சிறிய அளவில் செயல்பட்டு வந்தது. இதில் ராணுவத்தில் பணியாற்றியவர்களைத் தவிர பிறர் சேர்க்கப்படவில்லை. காலப்போக்கில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை மோகன்சிங் கைவிட்டு விட்டதால் அதனையும் ராஷ்பிகாரி போúஸ தலைமையேற்று நடத்தி வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சிங்கப்பூர் வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் வரவேற்ற எழுச்சி மிக்க நிகழ்ச்சியில் லட்சுமியும் பங்கேற்றார்.
நேதாஜி, சிங்கப்பூர் வந்ததும் அடுத்த நாள் இந்திய சுதந்திரக் கழகம், இந்திய தேசிய ராணுவம் ஆகிய அமைப்புகளின் உணர்ச்சிமிக்க மாநாடு சிங்கப்பூர் மாநகரிலேயே நடைபெற்றது. அம்மாநாட்டில் தம்மிடமிருந்த இந்த இரண்டு அமைப்புகளின் முழுத் தலைமைப் பொறுப்பையும் நேதாஜியிடம் ஒப்படைத்தார் ராஷ்பிகாரி போஸ். அன்று நேதாஜி நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரைதான் லட்சுமியின் நாட்டுப்பற்றுமிக்க உள்ளத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்தடுத்து சிங்கப்பூரிலேயே நேதாஜி ஆற்றிய இரண்டு, மூன்று உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் லட்சுமிக்குக் கிடைத்தது.
நேதாஜியை நேரில் சந்தித்துப்பேசப் பெரிதும் விரும்பினார் லட்சுமி. அங்கு அந்த அமைப்புகளில் செயல்பட்டு வந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான எல்லப்பா என்பவர் உதவியுடன் நேதாஜியைச் சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே, லட்சுமி சிறிது நேரம் உரையாடியதை அடிப்படையாக வைத்து, விடுதலைப் போராட்டத்தின் அவசியம் குறித்தும் அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் லட்சுமியிடம் சுமார் 5 மணி நேரம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் நேதாஜி. பெண்கள் களமிறங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
நேதாஜியின் கருத்துகளால் ஆழமாகக் கவரப்பட்ட லட்சுமி அடுத்த சந்திப்பிலேயே இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். அதுவரை வெறும் ஆண்களை மட்டுமே உள்ளடக்கிய அமைப்பின் முதல் பெண்மணியாக லட்சுமி விளங்கினார். உடற்பயிற்சி, ஆயுதப்பயிற்சி என்று பல விதமான தீவிரப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டே தன்னோடு நூற்றுக்கணக்கான பெண்களை இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்தார் லட்சுமி. இவரது ஊக்கம், உற்சாகம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்து "ராணி ஜான்சி ரெஜிமேண்ட்' என்ற மகளிர் பிரிவை அமைத்து அதன் கேப்டனாகவும் லட்சுமியை நியமித்தார் நேதாஜி. அன்றிலிருந்து இவர் பெயர் "கேப்டன் லட்சுமி' என்றே வரலாற்றில் நிலைத்துவிட்டது.
"டெல்லி சலோ' என்ற முழக்கத்தோடு, அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கீழ் செயல்பட்டு வந்த இந்திய ராணுவத்திற்கெதிராகப் போரைப் பிரகடனப்படுத்தினார் நேதாஜி. டெல்லி செங்கோட்டையைக் கைப்பற்றி இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிப்பதுதான் "அறிவிக்கப்பட்ட போரின்' நோக்கம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜப்பான் ஆட்சியாளர்கள் நேதாஜிக்கு ஓரளவு உதவி செய்தனர்.
ஆண்களுக்குச் சமமாக ஆயுதங்களைக் கையிலெடுத்து போர்க் களத்தில் ஆங்கிலேய அடிமை ராணுவத்தை எதிர்த்து வீரமங்கையர் களம் கண்டனர். தொடக்கத்தில் இந்திய ராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்தது நேதாஜியின் தேசபக்த ராணுவம். ""போர்க்களத்தில் முன்னோக்கிச் சென்றபோது எனக்கு முன்னே துப்பாக்கியேந்தி பிரிட்டிஷ் ராணுவத்தை வெற்றிகொண்டு சென்ற வீராங்கனைகள் சிலர் எதிரிகளின் குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தனர். அவர்கள் வீரமரணமடைந்து கிடக்கிற அந்தக்காட்சியை அவர்களுக்குப் பின்னாலே சென்ற நான் பார்த்து அவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு, எனது ஆயுதத்துடன் கவனமாகவும் உறுதியாகவும் முன்னோக்கிச் சென்றேன்'' என்று நெகிழ்ந்துபோய் பழைய சம்பவங்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார் கேப்டன் லட்சுமி.
விடைபெற்றபோது கேப்டன் லட்சுமி எம்மிடம், ""ராணி ஜான்சி ரெஜிமெண்டில் முழுப்பயிற்சி எடுத்து ஆயுதம் தாங்கிப் போர்க்களத்திற்குப் போனவர்கள் சுமார் 1,500 வீராங்கனைகள் ஆவர்; அதில் எண்பது சதவீதத்திற்கும் மேல் தமிழ்ப்பெண்கள் என்ற வரலாற்று உண்மையை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சொல்லுங்கள்'' என்ற வேண்டுகோளோடு விடை கொடுத்தார்.
சாதாரண கிராமத்தில் வாழ்கிற, படிப்பறிவற்ற பாமரப் பெண்களிலிருந்து உயர் குடியில் பிறந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய பெண்கள் வரை தங்களது கடமைகளை உணர்ந்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் பொருட்டு கூட்டம் கூட்டமாக புறப்பட்டதற்குக் காரணம் மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலும் அணுகுமுறையும்தான் என்பதில் சந்தேகமில்லை.
1905-இல் வெடித்த சுதேசி இயக்கத்திலிருந்தே பெண்கள் விதிவிலக்காக சிலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலோர் அப்போராட்டத்தில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் தலைவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களாகவே இருந்தனர். 1919-க்குப் பிறகு வந்த காந்திய சகாப்தத்தில்தான் பெண்கள் அணிஅணியாகப் போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்கினர். அதன் உச்சம்தான் 1942-ல் நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்கள் பங்கெடுத்ததாகும்.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 }ஆம் தேதி இரவு காந்தியடிகள் பம்பாயில் காங்கிரஸ் மாநாட்டில் பேசினார். அதுவரை அவர் ஆற்றிய உரைகளுக்கும் அன்று அவர் நிகழ்த்திய சொற்பொழிவுக்கும் பலத்த வேறுபாடு காணப்பட்டது. "செய் அல்லது செத்துமடி', "வெள்ளையனே வெளியேறு' என்ற இரட்டை முழக்கத்தை இக்கூட்டத்தில்தான் பிரகடனப்படுத்தினார். காந்தியடிகள் உரை நிகழ்த்தியதும், அவரும் அவரோடு சேர்ந்து நாட்டிலுள்ள அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் ஆகஸ்ட் 9-இல் தலைவர்களே இல்லாத சூழலில், மக்களே போராட்டத்திற்கு அந்தந்த இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் தலைமையேற்றனர்.
ராஜபாளையம் ரவுண்டானாவில், ஒரு கையில் கதர்க்கொடியும் இன்னொரு கையில் ஒரு வயது கைக்குழந்தையுமாக காளியம்மாள் என்ற கிராமத்துப் பெண், "காந்தியடிகளை விடுதலை செய்' என்ற வீர முழக்கத்தோடு வீறு கொண்டு பத்துப் பதினைந்து பெண்களுடன் ஆர்ப்பரித்துச் சென்றார். இதே போன்று சிறு சிறு குழுக்கள் ஆங்கிலேயர்கள் பிறப்பித்த அத்தனை அடக்குமுறை உத்தரவுகளையும் மீறி கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் ரவுண்டானாவை வலம் வந்தன. இளைஞர்கள் ஆவேசமாகக் காணப்பட்டனர்.
திடீரென்று சற்றும் எதிர்பாராத விதத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி காவல்துறையினர் வானத்தில் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட கூட்டம் சிதறி ஓடியது. புகை மண்டலத்தின் ஊடே காவலர்கள் கண்டபடி சுடத்தொடங்கினர்.
பெண்கள் ஊர்வலத்தின் பக்கம் துப்பாக்கிகள் திரும்பின. கூட்டத்தோடு கூட்டமாக ஓடிய காளியம்மாள் பாதையின் தடுப்பொன்றில் கால்பட்டு இடறி கீழே விழுந்ததால் கையில் கொடியுடன் காளியம்மாள் ஒரு பக்கம் கிடந்தார். கைகளையும் கால்களையும் தூக்கியவாறு என்ன நடக்கிறது என்பதே தெரியாத அவளின் ஒரு வயது கைக்குழந்தை அழுதவாறே சற்று தள்ளி மல்லாக்கக் கிடந்தது. சரமாரியாக சுட்ட போலீசாரின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் பச்சைக்குழந்தை மீது பாய்ந்தன. அந்தக் குழந்தை அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் செத்து மடிந்தது.
இந்திய சுதந்திரத்திற்காக ஒரு வயது தமிழ்க் குழந்தை கூட ரத்தம் சிந்தியதோடு உயிரையும் கொடுத்திருக்கிறது.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் விதவிதமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மதுரையில் ஊர்வலத்திற்குத் தலைமையேற்ற சொர்ணத்தம்மாள், லட்சுமிபாய் ஆகிய இருவரையும் அன்றைய முரட்டு போலீஸ் அதிகாரியான "தீச்சட்டி கோவிந்தன்', காவல்துறை வாகனத்தில் ஏற்றி இரவு நேரத்தில் ஊரைத்தாண்டி அங்கிருந்த காட்டிற்குள் இறக்கிவிட்டதோடு ஈவிரக்கமின்றி அவர்களின் ஆடைகள் அனைத்தையும் அகற்றி அவர்களை முழு நிர்வாணமாக்கி அங்கேயே விட்டுவிட்டு வந்தான். செய்வதறியாது துடித்த அந்த இரண்டு போராளிகளும் இரவு முழுக்க அங்கிருந்த செடி கொடிகளினூடே தங்களின் உடலை மறைத்துக் கொண்டு காலையில் அங்கு வந்த விவசாயிகளிடம் விவரத்தைச் சொல்லி அவர்கள் கொடுத்த ஆடையைக் கட்டிக்கொண்டு மதுரை நகர் வந்து சேர்ந்தனர்.
கடலூர் அஞ்சலையம்மாள், மதுரை பத்மாசினியம்மாள், திருப்பூர் பத்மாவதி ஆஷர், ருக்மிணி லட்சுமிபதி, பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள், கே.பி. ஜானகியம்மாள், கே.பி. சுந்தராம்பாள், பட்டம்மாள் என்ற வரிசையில் ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இவர்களும் இவர்களைப் போன்ற இன்னும் இதே அளவுக்கு முக்கியத்துவம் உள்ள பலரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களது பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியுள்ளனர்.
இத்தகைய நீண்ட அரசியல் விடுதலைப் போராட்ட அனுபவம்தான் விடுதலை கிடைத்ததற்குப் பிறகு நடைபெற்றுக் கொண்டுள்ள சமூக விடுதலை, பெண் விடுதலைப் போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
கட்டுரையாளர்: வழக்குரைஞர், வரலாற்று ஆய்வாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.