பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் கேரளத்துக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடவுளின் சொந்த நாடு என்று பெருமை கொள்ளும் கேரளத்துக்கு தமிழகப் பகுதியில் இருந்துதான் காய்கறிகள், இறைச்சிக்குப் பயன்படும் அடிமாடுகள், கறிக்கோழிகள், கட்டடத் தொழிலுக்குப் பயன்படும் மணல் ஆகியவை கொண்டு செல்லப்படுகின்றன.
கேரளத்தில் மக்கள் பயன்பாடு போக கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீர் சுமார் 2,000 டி.எம்.சி.யைவிட அதிகம். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரும் புதிய அணையைக் கட்டியே தீர வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.
முல்லைப் பெரியாறைப் போலவே பரம்பிக்குளம் ஆழியாறு, சிறுவாணி அணைப் பிரச்னைகளிலும் கேரள அரசு நியாயத்தை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தைப் பொருத்தவரை கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டி முடித்துவிட்டால் கூடுதலாக சில டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்கும்.
ஆனால், அணை கட்டியாகிவிட்டது. சில இடங்களில், சில கி.மீ. தூரத்துக்கு மட்டும் பாசனக் கால்வாய்கள் அமைக்க வேண்டியுள்ளது.
இதைக் காரணம் காட்டி தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீரைத் தர கேரள அரசு பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட ஒப்பந்தம் 1988இல் காலாவதியாகிவிட்டது. இரு தரப்பும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் இதற்கும் இன்றுவரை கேரள அரசு ஒப்புக் கொள்ளவில்லை.
பரம்பிக்குளம் அணை கேரளப் பகுதியில் இருந்தாலும், அதற்கான கட்டுமானச் செலவை கேரள அரசு இன்றுவரை தரவில்லை.
கேரளத்தில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த பிரேமசந்திரனிடமும், முதல்வர் உம்மன் சாண்டியிடமும் இது தொடர்பாகக் கேட்டபோது விரைவில் தருவதாகத் தெரிவித்துச் சென்றனர். ஆனால் அதன்பின் இதுபற்றிப் பேசவேயில்லை.
இந்தச் சூழ்நிலையில் முல்லைப் பெரியாறில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் சிறுவாணி அணைப் பிரச்னையைக் கேரள அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
கோடைக்காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது அணையின் நிரந்தர நீர் இருப்புக்குக் கீழ் உள்ள குகை நீர்ப்பாதையில் இருந்து சுமார் ஆறு கோடி லிட்டர் எடுக்கப்படும். அதற்குள் மழை வந்துவிடும். ஆனால் இதிலும் இப்போது பிரச்னை ஏற்படுத்துகிறது கேரளம்.
கேரளத்தைப் பொருத்த வரையில் தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் மணலுக்கு வரி விதித்து தனது வருவாயைப் பெருக்கிக் கொள்கிறது.
தமிழகத்தின் நீர்நிலைகளில் இருந்து அதிக ஆழத்துக்கு மணல் எடுக்கப்படுகிறது. ஆனால், கேரள நீர் நிலைகளில் மணல் எடுப்பதை அங்குள்ள அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.
இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் அடிமாடுகள், கறிக்கோழிகள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கும் பிரச்னையை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது கேரளம். கேரள அரசு பிரச்னை செய்யாமல் இருப்பது காய்கறிகளுக்கு மட்டுமே.
தமிழகத்தில் சேலம் ரயில்வே கோட்டம் உருவாகும்போதும் கேரளம் பிரச்னை செய்ததால், பாலக்காடு கோட்டத்துக்குப் பொள்ளாச்சி தாரை வார்க்கப்பட்டது.
கேரளத்தின் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன.
இப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டும் என்று சில இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
தமிழக மக்களின் நலனுக்கு எதிராகப் பிரச்னைகளை ஏற்படுத்திவரும் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
சுமார் ஒரு மாத காலத்துக்கு காய்கறிகள், மணல், கறிக்கோழி மற்றும் அடிமாடுகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் நாம் கேரளத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது என்று தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்கினால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
அப்படியொரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படாவிடில், கேரள அரசு, தொடர்ந்து தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும். அவ்வாறு நடக்காமல் இருக்க இப்போதையத் தேவை ஒரு கடினமான நடவடிக்கையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.