சேமிப்பும் பாதுகாப்பும்

முதலீடு என்ற செயல்பாடு, சேமிப்பு என்ற நல்ல பழக்கத்திற்கு நெருக்கமானத் தொடர்புடையதாகும். ஏனென்றால், திட்டமிட்ட சேமிப்புகள்தான் முதலீடுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.
சேமிப்பும் பாதுகாப்பும்
Updated on
3 min read

முதலீடு என்ற செயல்பாடு, சேமிப்பு என்ற நல்ல பழக்கத்திற்கு நெருக்கமானத் தொடர்புடையதாகும். ஏனென்றால், திட்டமிட்ட சேமிப்புகள்தான் முதலீடுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.

தற்கால வசதிகள் சிலவற்றை தியாகம் செய்து, கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற எதிர்காலச் செலவுகளுக்காக, வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதுதான் சேமிப்பு. 

செலவிற்கு மிஞ்சிய வருமானம்தான் சேமிப்பு என்று பலராலும் கணிக்கப்படுகிறது. ஆனால், வருமானத்தில் ஒரு சிறிய தொகையையாவது கட்டாயமாக சேமிப்புக்கு என ஒதுக்கிவிட்டு, மீதியை செலவு செய்யும் செயல்பாட்டைத்தான், உண்மையான சேமிப்பு என்று கருத வேண்டும். 

சேமிப்புப் பழக்கத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்ற கேள்வி எழலாம். அன்றாட அவசிய தேவைகளைத் தவிர, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் மோகம், சேமிப்புக்கு தடைக் கல்லாக அமைகிறது. இந்த மோகத்தை ஓரளவு குறைத்தாலே, சேமிப்பு என்ற செடிக்கான விதை முளைக்க ஆரம்பிக்கும்.

கடன் பெற்று, வட்டி செலுத்தி ஒரு பொருளை வாங்கும்போது, அதனால் நமக்கு எவ்வளவு சேமிப்பு என்று கணக்கிட வேண்டும். வட்டித் தொகையைவிட, அந்த பொருள் மூலம் ஈட்டப்படும் வருமானம் அதிகமாக இருந்தால், அதை ஒரு விவேகமான செயல்பாடாக கருதலாம்.

நமக்கு அத்தியாவசியத் தேவையில்லாத வசதியை மட்டும் அதிகரித்து, நிகழ்கால, எதிர்கால வருமானத்தை குறைக்கும் செலவுகளைத் தவிர்த்தால், சேமிப்புக்கான வாய்ப்பு உருவாகும்.

பொருளாதார பலம் இல்லாமல், மற்றவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறைகளைக் காப்பியடித்து வாழ எண்ணுபவர்கள், கடன் என்னும் புதை குழிக்குள் விழுந்து, மீண்டு எழ முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அவசரத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய கடன் அட்டைகளை (கிரெடிட் கார்டுகள்)ஆடம்பர வாழ்க்கைச் செலவுகளுக்குப் பயன்படுத்தி, அசலையும் வட்டியையும் திருப்பச் செலுத்த முடியாமல், வீட்டை விற்றவர்களின் சோகக் கதைகள் ஏராளம். சேமிப்புப் பழக்கத்தை விட்டு இவர்கள் விலகி விட்டதுதான் இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கு முக்கியக் காரணம்.

சேமிப்புப் பழக்கத்தை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளலாம். சேமித்து பழக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் அருமையும் பெருமையும் புரியும். குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சேமிப்பு பழக்கத்தை பெற்றோர் கற்றுத் தரவேண்டும்.

இப்பொழுது குழந்தைகளுக்கு அன்றாடம் பாக்கெட் மணி  கொடுப்பது வழக்கமாகிவிட்டது. கொடுக்கப்பட்ட தொகையில் எவ்வளவு சேமித்தாய் என்று குழந்தைகளை கேட்கும் பழக்கத்தை பெற்றோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், செலவோடு சேமிப்பும் அவசியம் என்பது குழந்தைகளின் மனதில் பதிய வாய்ப்பு ஏற்படும்.

ஆண்களைவிட பெண்கள், சேமிக்கும் பழக்கத்தில் முன்னிலை வகிக்கின்றனர். பெண்களால்  நிர்வகிக்கப்படும் 60 சதவீதத்திற்கு  மேற்பட்ட குடும்பங்களில் சேமிப்புக்கு முக்கிய பங்கு அளிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் சேமிப்பு விகிதம் அதிகம் காணப்படுகிறது.

உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் தனி மனித சேமிப்பு அதிக அளவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிக பணவீக்கம் போன்ற பொருளாதார நிகழ்வுகளால், இதன் வளர்ச்சி சமீப காலங்களில் தொய்வு அடைந்திருக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.4 சதவீத அளவில் நிலவிய சேமிப்பு தொகை, தற்போது 12 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி கண்டிருப்பதாகத் தெரிகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேகப்பாதையில் செல்ல ஆரம்பித்தவுடன், தனி மனித சேமிப்பும் அதற்கு தகுந்தாற்போல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய வளர்ந்த நாடுகளில் தனி மனித சேமிப்பு, கடந்த சில வருடங்களில், 10 முதல் 13 சதவீதம் வரை வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவைப் பொருத்தவரை, 2005-ஆம் ஆண்டில் வெற்று நிலையிலிருந்த தனி மனித சேமிப்பு, 5 சதவீத வளர்ச்சியை எட்டியது.

2008-ஆம் ஆண்டில், அமெரிக்கா சந்தித்த பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம், தனி மனித சேமிப்பு ஒரு சதவீத அளவுக்கு சரிந்திருந்தது என்பதாகும்.

இந்திய வங்கிகளின் மொத்த டெபாஸிட்டுகளில் 58 சதவீதம் தனி மனித சேமிப்பாகும். இதில் 55 சதவீதம் வரை நிரந்தர வைப்பு தொகையிலும், மீதி சேமிப்புக் கணக்குகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. 

மக்களின் சேமிப்பு பழக்கம், அந்த நாட்டின் கலாசாரம், கல்வி, பணவீக்க அளவு, மதக் கோட்பாடுகள், திருமணச் சடங்கு முறைகள் ஆகியவைகளையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. பெண்ணின் திருமணத்தின்போது சீர்வரிசை, வரதட்சணை போன்ற கட்டாய சம்பிரதாயங்கள் நிறைந்த நம் நாட்டில், அந்த செலவுகளை சமாளிக்க சேமிப்பு அவசியமாகிறது.

புகையிலை, சிகரெட், மது, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள் சேமிப்புக்கு எதிரிகளாகும். சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட, அதிக செலவில் பார்ட்டி கொடுக்கும் கலாசாரம் நம்மிடையே இப்பொழுது பரவி வருகிறது. இம்மாதிரி பழக்கங்கள் சேமிப்பை தடுத்து கடனை தோற்றுவிக்கின்றன.

கடைக்குப் போவதற்கு முன்பு, தேவையான பொருள்களை பட்டியலிட்டு அவற்றை மட்டுமே வாங்குவதுதான் நல்ல பழக்கமாகும். அதற்குப் பதிலாக, கண்ணில் பட்ட பொருள்களை எல்லாம் வாங்குவதால், மாதாந்திர குடும்ப பட்ஜெட்டும் அதனால் சேமிப்பும் பாதிக்கப்படும்.

இலவச இணைப்புகளுக்காக சில பொருள்களை வாங்கும் பழக்கம் நம்மிடையே வளர்ந்து வருகிறது. ஐந்து ரூபாய் இலவச இணைப்பிற்காக, தேவையற்ற 80 ரூபாய் பொருளை வாங்க வேண்டுமா என்று யோசித்தால், அனாவசியச் செலவு மிச்சமாகும். திட்டமிட்ட செலவுகள் சேமிப்புக்கு வழி வகுக்கும்.

நம்மை செலவழிக்கத் தூண்டும் சில விற்பனை விளம்பரங்களுக்கு பலியாகாமல் இருந்தால், அது நம் சேமிப்புக்கு துணை நிற்கும். பக்கத்து வீட்டில் இருக்கிறது, எதிர்த்த வீட்டில் இருக்கிறது, உங்கள் வீட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது நம் வீட்டிற்குத் தேவையா என்று சிந்தித்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

பருவத்திற்கு தக்கபடி, விலை குறைந்து காணப்படும் வீட்டு பயன்பாட்டுப் பொருள்களை அந்தந்த பருவங்களில் வாங்கி சேமித்தால், செலவு குறைந்து சேமிப்பு அதிகமாகும்.

சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பதுக்கல் போன்ற அசாதாரண காரணங்களால் திடீரென்று விலை உயரும் பொருள்களை, நம் அன்றாட உபயோகத்திலிருந்து ஒதுக்கி வைக்க பழகிக்கொள்ள வேண்டும். 

கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்ற வெங்காயம், தக்காளி போன்ற அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் விலை, நாளடைவில் நாம் வாங்கும் நிலைக்கு வந்ததை நாம் அறிவோம்.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பண்டங்களையும், காய்கறிகளையும் தேவையான அளவு மட்டும் சமைத்து, வீணடிக்காமல் உண்டால், அதுவும் ஒரு சேமிப்பாகும்.

அதேபோல், தேவையற்ற நேரங்களில் வீட்டில் விளக்கு, டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை சுவிட் ஆஃப் செய்வதும் சேமிப்புக்கு வழி வகுக்கும்.

சேமிப்பது ஒரு கலை என்றால், அதைப் பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது மற்றொரு கலையாகும். சில வருடங்களுக்கு முன்பு வரை, வங்கி சேமிப்பு மற்றும் தங்கம் ஆகியவை மட்டுமே பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்பட்டன.

ஆனால், தற்போது, பரஸ்பர நிதி (M‌u‌t‌u​a‌l​ ‌f‌u‌n‌d‌s)​,​​ பங்குச் சந்தை போன்ற மாற்று முதலீட்டு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. பரஸ்பர நிதித் துறை, செபியின் (S‌e​c‌u‌r‌i‌t‌i‌e‌s​ a‌n‌d​ E‌x​c‌h​a‌n‌g‌e​ B‌o​a‌r‌d​ ‌o‌f​ I‌n‌d‌ia)​ கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் வளரும் துறையாகும். சிறு முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் ஏற்ற துறையாகும்.

இந்தியர்களின் சேமிப்பில் பத்து சதவீதம் வரைதான் இந்தத் துறைகளில் தற்போது முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சரியான வழிகாட்டுதலுடன் செயல்பட்டால், இந்தத் துறைகளில் செய்யப்படும் முதலீடுகள், வரும் காலங்களில் நல்ல வருமானத்தை கொடுக்கும்.

மொத்தமாக முதலீடு செய்ய முடியாத சிறு முதலீட்டாளர்கள், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, "சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' மூலம் (SIP)​  முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில், தினசரி வாங்கி விற்பதைவிட (T‌r​a‌d‌i‌n‌g)​,​​ நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடுகள் நல்ல பலனை தரும்.

ஒருவருடைய வயது, வருமானம், சேமிப்பு தொகை ஆகியவற்றைப் பொருத்து மூலதனங்கள் திட்டமிடப்பட வேண்டும். மூலதனங்கள் எப்பொழுதும் ஒரே துறையை சார்ந்திருக்காமல், எளிதில் பணமாக மாற்றக்கூடிய பல துறைகளில் பரவி இருக்கவேண்டும்.

நம்முடைய சொந்த சேமிப்பை மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி முதலீடு செய்வது விவேகம் அல்ல.

நல்ல முதலீடு என்பது நமக்கு நிம்மதியான தூக்கத்தை தர வேண்டும். தூக்கத்தை கெடுக்கும் எந்த முதலீடும் எவ்வளவு வருவாயைக் கொடுத்தாலும் அது நல்ல முதலீடு அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com