மணலுக்கு வரி தேவை

தமிழகத்தின் திருச்சி, கரூர் மணல் என்றாலே அது சிறந்த மணல் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. அதனால்தான் அரசியல்வாதிகளின் முழுமையான ஆசியுடன் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட அதிக அளவில் மணலை எடுத்துச் சம்பாதிக்கின்றனர்.
Updated on
2 min read

தமிழகத்தின் திருச்சி, கரூர் மணல் என்றாலே அது சிறந்த மணல் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. அதனால்தான் அரசியல்வாதிகளின் முழுமையான ஆசியுடன் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட அதிக அளவில் மணலை எடுத்துச் சம்பாதிக்கின்றனர்.

தமிழகத்தின் இயற்கை வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனை தரும் உண்மை.

தமிழகத்தில் இருந்து கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் தமிழகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதைப் பயன்படுத்தி இங்குள்ள மணல் வியாபாரிகளும் லாரி உரிமையாளர்களும் பிற இடங்களுக்கு மணலைக் கடத்துகின்றனர்.

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஆறுகளில் மணல் எடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த உத்தரவை மீறி அங்கு யாரும் மணல் எடுப்பதில்லை. இதனால் அம் மாநிலங்களில் மணலுக்கு அதிகத் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆனாலும், கட்டுமானப் பணிகள் குறையவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்படும் மணல்தான். கூடுதல் விலையைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

தங்கள் மாநிலத்தின் இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டால் போதும் என்ற எண்ணம்.

ஆற்றில் மணல் அள்ளும் இடங்களில் சொந்த லாரியென்றால் கூடுதல் மணலும், வேறு லாரிகளென்றால் அரசு நிர்ணயித்த அளவு மணலும் கொடுக்கிறார்கள் என மணல் லாரி உரிமையாளர்கள் கொந்தளித்த காலம் உண்டு.

ஒரு ஊரில் கூடுதல் மணலுடன் வரும் லாரிகளுக்கு அபராதம் விதித்த சார் - ஆட்சியரை மிரட்டியவர்களும் உண்டு. அபராதம் விதித்ததால் லாரிகளை இயக்காமல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தமும் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் மணலுக்கு கேரள அரசு நுழைவு வரி விதித்தது. இதன்மூலம் நாளொன்றுக்குப் பல லட்ச ரூபாய் கேரள அரசுக்கு வருமானம் கிடைத்தது.

இதில் கேரள அரசுக்கும் லாபம், இங்கிருந்து மணலைக் கடத்தியவர்களுக்கும் லாபம். ஆனால், இயற்கை வளத்தை இழந்த தமிழக அரசுக்கு எவ்வித லாபமும் இல்லை.

இதே நிலைதான் கர்நாடகத்திலும். அண்மையில் தமிழகத்தில் இருந்து மணல் கடத்திய சுமார் 300 லாரிகளைப் பிடித்து வருவாய்த் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

அபராதம் மணல் கடத்தியதற்காக இல்லை. கர்நாடகப் பகுதியில் லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விடக் கூடுதலாக மணல் ஏற்றியதற்காகவும், லாரிகளை அசுர வேகத்தில் ஓட்டியதற்காகவும்தான்.

தமிழகத்தில் மணல் லாரிகளால் ஏற்படும் மற்றொரு பிரச்னை விபத்துகள். இரவு நேரத்திற்குள் எல்லையைக் கடந்து விட வேண்டும் என்ற நினைப்பில் அதிவேகத்தில் லாரிகளை இயக்குகின்றனர்.

அதிவேகத்தில் இயக்கப்படும் லாரிகள் மோதி பல இடங்களில் விலைமதிப்பில்லாத உயிர்கள் பலியாவது சோகத்தை ஏற்படுத்துகிறது.

கேரளத்துக்குப் பெரும்பாலான காய்கறிகள் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றன. இதற்கு எவ்வித வரியும் கிடையாது. ஆனால், தமிழகத்தில் இருந்து செல்லும் கறிக்கோழிகளுக்கு கேரள அரசே கிலோவுக்கு இவ்வளவு என விலை நிர்ணயித்து அதற்கு நுழைவு வரி விதிக்கிறது.

கேரளத்தில் கறிக்கோழித் தொழிலை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து தேவையான அளவு காய்கறிகள் மற்றும் கறிக்கோழி உள்ளிட்ட உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் கேரள அரசு தமிழகத்துக்குச் செய்யும் கைம்மாறு என்ன தெரியுமா? அங்குள்ள மருத்துவ, மாநகராட்சி, நகராட்சிக் கழிவுகளை தமிழகப் பகுதிகளுக்குள் கொட்டுவதுதான்.

இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக கழிவுகளைக் கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்த வேண்டும். எங்கிருந்து இந்தக் கழிவுகள் கொண்டு வரப்படுகிறதோ, அந்த உள்ளாட்சி அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் சர்க்கரைக்கு வாட் வரி விதிக்கப்படவில்லை (கர்நாடகத்தில் வரி இல்லை). ஆனால், இப்போது வரி விதிக்கப்பட்டதால் சர்க்கரையின் விலை இங்கு உயர்ந்துள்ளது.

இதனால் கர்நாடகம், ஆந்திரத்தில் இருந்து சர்க்கரை தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு செல்லும் சர்க்கரையின் அளவு குறையும். ஏனென்றால், கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தமிழகத்தைவிட விலை குறைவு.

தமிழகத்தின் இயற்கை வளங்களைச் சூறையாடி ஒருசிலர் மட்டும் லாபமீட்டும் மணல் கடத்தலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் மணலுக்குக் கடுமையாகவும் கூடுதலாகவும் வரி விதிக்க வேண்டும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களைச் சூறையாட நினைக்கும் கேரள, கர்நாடக அரசுகள் நமக்கு உரிமையுள்ள தண்ணீரை தர மறுக்கின்றன. ஆனால், மணலுக்கோ, காய்கறிகளுக்கோ பிற பொருள்களுக்கோ எவ்வித மறுப்பும் சொல்வதில்லை.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு (குறிப்பாக கேரளம், கர்நாடகத்துக்கு) கொண்டு செல்லப்படும் மணல், காய்கறிகளுக்குக் கடுமையாக வரி விதிக்க வேண்டும். அப்போதுதான் இப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com