உலகின் ஒரு மூலையில் ஏற்படும் பொருளாதார மாற்ற நிகழ்வுகள், மற்ற பகுதிகளில் அதிர்வு அலைகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துவது தற்போதைய காலகட்டத்தில் இயல்பாகிவிட்டது என்று சொல்லலாம்.
கச்சா எண்ணெய் விலை இறக்கத்தால் பொருளாதார வீழ்ச்சி கண்ட ரஷியாவுடன் வியாபாரத் தொடர்பிலிருந்த பல இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது இதற்கு உதாரணமாகும். கிரேக்கப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதார சந்தையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி, அதன் சுவடுகள் இன்னும் மறையாமல் இருக்கின்றன.
உலகின் ஒரு கோடியில் ஏற்படும் பொருளாதார மாற்றம், சாதாரண இந்தியக் குடிமகனின் அன்றாட வாழ்வின் அடிப்படை வசதிகளை பாதிக்ககூடிய வல்லமை படைத்தது என்பதால், அதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
பொருளாதாரத்தில் அமெரிக்காவை அடுத்து, இரண்டாம் இடத்தை வகித்து வந்த சீனாவின் பொருளாதாரம் சற்று தொய்வு அடைந்திருக்கும் செய்தி சமீபத்தில் வெளியானது.
சமீபகாலம் வரை, பத்து சதவீதத்துக்கு மேல் தொடர் ஏற்றம் கண்ட அதன் பொருளாதார வளர்ச்சி, ஏழு சதவீதமாகக் குறைந்திருப்பது உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது. இது ஆறு சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் வளர்ச்சி குன்றினால், அது அந்த நாட்டுக்கான தனிப்பட்ட பிரச்னை என்று ஒதுக்கித் தள்ளிவிடமுடியாத காலகட்டம் இது.
கடந்த சில ஆண்டுகளில், சீனப் பங்குச் சந்தை மூன்று மடங்கு ஏற்றம் கண்டிருந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட 22 சதவீத தொடர் மதிப்புச் சரிவு, அந்நாட்டு பொருளாதாரப் பின்னடைவின் முக்கிய அறிகுறியாகக் கருதப்பட்டது.
கருப்புத் திங்களாகக் கருதப்படும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி, மேலும் 9 சதவீதம் சரிந்து, முதலீட்டாளர்களின் பல நூறு கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகளை, சீனப் பங்குச் சந்தை கபளீகரம் செய்தது. அதன் எதிரொலியாக, உலகப் பங்குச் சந்தைகள் நடுக்கம் கண்டன. இந்தத் தொடர் நடுக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில், முதலீட்டாளர்கள் இதுவரை ரூ.2 லட்சம் கோடி வரை தங்கள் முதலீடுகளை இழந்திருக்கின்றனர்.
சீனாவின் நாணயமான யுவான், பாதுகாக்கப்பட்ட பலமுள்ள நாணயமாக (Protective currency) பல காலங்களாக இருந்து வந்திருக்கிறது. அமெரிக்க டாலருடன் மட்டும் இணைக்கப்பட்டிருந்த அதன் மதிப்பில், தினசரி அதிக ஏற்ற, இறக்கம் இருந்தது இல்லை.
ஆனால், ஆகஸ்ட் 11-இல் இருந்து மூன்று நாள்களுக்குள் அந்த நாணயத்தின் மதிப்பு 4.7 சதவீதம் வரை அரசால் குறைக்கப்பட்ட நிகழ்வு (Currency devaluation) பொருளாதார வளர்ச்சி பாதிப்பின் மற்றோர் அறிகுறியாகக் கருதப்படுகிறது. நாணய மதிப்பு பாதுகாப்பைத் தளர்த்தி, அதை சந்தையின் போக்குக்கு முதல் முறையாக உள்படுத்தி இருக்கும் சீன அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாகும்.
ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதன் மூலம், அந்த நாட்டின் ஏற்றுமதியை மலிவாக்கி, அன்னியச் செலாவணி அதிகம் ஈட்டலாம். அதோடு, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) நிர்வகிக்கும் சர்வதேச நாணயக் காப்பில் (Basket of reserve currencies) அங்கம் வகிக்கும் அமெரிக்க டாலர், யூரோ, யென், பிரிட்டிஷ் பவுன்ட் ஆகியவற்றோடு, யுவானை சேர்க்கும் கோரிக்கையை பலப்படுத்தி, தளர்ந்திருக்கும் தன் உருவத்தை உலக அரங்கில் உயர்த்திக் கொள்ள சீனா முற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.
இதைத்தவிர, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் கடந்த மாதங்களில் சீன மத்திய வங்கி கணிசமாகக் குறைத்திருப்பது, பொருளாதாரப் பின்னடைவைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும். வங்கிக் கடன்களை ஊக்குவித்து, உற்பத்தியைப் பெருக்குவதற்கு வட்டி குறைப்பு ஓர் ஆயுதமாகும்.
20 ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த சீனப் பொருளாதாரத்தில், திடீரென்று தொய்வு அறிகுறிகள் ஏன் தென்படுகின்றன என்ற கேள்வி எழலாம். வெகு காலமாக, சீனப் பொருளாதாரம், ஏற்றுமதியையும், பெரு மதிப்புள்ள உள்கட்டமைப்பு முதலீடுகளையும் சார்ந்திருக்கிறது.
மற்ற வளர்ந்த நாடுகளில், மொத்த பொருளாதார நடவடிக்கைகளில் 15 முதல் 20 சதவீதம் வரைதான் இந்த மாதிரி முதலீடுகளின் அளவு இருக்கிறது. ஆனால், சீனாவில் அது 48 சதவீதம் வரை உள்ளது. இந்த முதலீடுகள் கடனாகப் பெறப்பட்டவை.
நெடுஞ்சாலைகள், பாலங்கள், புறநகர் பகுதி வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். வேகமாக வளரும் இந்த மாதிரியான உள் கட்டமைப்பு வசதிகளை ஓர் எல்லை வரைதான் பயன்படுத்தி, அதற்குரிய பொருளாதார வளர்ச்சி காண முடியும். அதற்கு மேல், அவை பயன்படுத்த முடியாத வசதிகளாக மாறி, பொருளாதாரத்தைப் பின் இழுக்கும். இந்த மாதிரி, பின் இழுப்புகள்தான் சீனாவில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மேலும், சீன அரசின் கட்டுப்பாடுகளால், பொருளாதாரத் தளர்ச்சி செய்திகள், சந்தைகளை சற்று தாமதமாகத்தான் வந்தடைந்திருக்கின்றன என்று கருதப்படுகிறது. ஆகவே, இந்தப் பொருளாதாரத் தொய்வுகள், சில காலங்களாகவே நிகழ்ந்து கொண்டிருந்தவைதான். பலவீனங்கள், பங்குச் சந்தை, நாணய மதிப்பீடு குறைப்பு போன்ற நிகழ்வுகளால் உலகுக்குத் தெரியவந்திருக்கிறது என்று கருதலாம்.
சீனாவில் உற்பத்தியாகும் பொருள்களின் பெரும் பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்களின் உள்நாட்டுப் பயன்பாடுகளை மேம்படுத்தும் முயற்சிகளோடு கூடிய சமன்பாடுகள் நிறைவடையும் வரை, சீனப் பொருளாதார முன்னேற்றம் தாமதமாகும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பாகும்.
சீனாவின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவு, அந்த நாட்டைவிட, மற்ற நாடுகளை அதிகமாக பாதிக்கும் என்பதுதான் உண்மை நிலையாகும்.
கச்சா எண்ணெயின் சமீபத்திய விலை வீழ்ச்சிக்கு சீனப் பொருளாதாரப் பின்னடைவு ஒரு முக்கிய காரணமாகும். இதனால், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் உற்பத்தியாகும் உலோகப் பொருள்களில் 47 சதவீதம் வரை சீனா பயன்படுத்துகிறது. 2011-ஆம் ஆண்டைவிட, தற்போது உலோகப் பொருள்களின் விலை 44 சதவீதம் வரை படிப்படியாக வீழ்ச்சி கண்டிருப்பதற்கு சீனப் பொருளாதாரப் பின்னடைவுதான் காரணம்.
செம்பு, இரும்பு போன்ற உலோகம் மற்றும் தாதுப் பொருள்களை சீனாவுக்குத் தொன்றுதொட்டு ஏற்றுமதி செய்துவரும் பெரு, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகள் இதனால் பெருமளவு பாதிக்கப்படும். பிரேசில், பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். இந்த நாடுகளில் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவு, உலகின் மற்ற நாடுகளையும் பாதிக்கும் அபாயமும் காத்து நிற்கிறது.
சீனாவுக்கு உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் தாய்லாந்து, கொரியா, நியூஸிலாந்து, கனடா, மலேசியா போன்ற நாடுகளின் வணிக மதிப்பு பாதிக்கப்படும். மேலும், சீனாவுடன் ஏற்றுமதி விற்பனை விலையில் போட்டியிடுவதற்கு, மற்ற ஏற்றுமதி நாடுகள் தங்கள் நாணய மதிப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதன் பக்க விளைவுகளால் ஏற்படும் எதிர்மறை பொருளாதாரத் தாக்கங்களை அந்த நாடுகள் சந்திக்க நேரிடும்.
2008-ஆம் ஆண்டில் சந்தித்த பெரும் சரிவிலிருந்து தங்கள் பொருளாதார நிலையை மீட்க, குவான்டிடேட்டிவ் ஈஸிங் (Quantitative easing) என்ற அசாதாரண பொருளாதார ஆயுதத்தை அமெரிக்க மத்திய வங்கி பயன்படுத்தி வந்தது.
ஒவ்வொரு மாதமும் 8,500 கோடி டாலர் அளவுக்கு கடன் பத்திரங்களை சந்தையிலிருந்து வாங்குவதன் மூலம், நாட்டில் பணப் புழக்கம் செயற்கையாக அதிகரிக்கப்பட்டது. சமீப காலங்களில், செயற்கைப் பணப் புழக்கத்தின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் செப்டம்பர் 16-17 தேதிகளில் நடக்க இருக்கிறது. சீனாவின் பின்னடைவு, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணிகளும் கொள்கை முடிவுகளின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு அறிவிப்பு வெளியானால், வளரும் நாடுகளிலிருந்து அன்னிய முதலீடுகள் அமெரிக்காவை நோக்கி வெளியேறும். இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்து, மற்ற நாட்டு நாணயங்களின் வலு குறைந்து, அதற்கான விளைவுகளுக்கு வித்திடும்.
வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், கணிசமான வளர்ச்சியை இந்தியாவில்தான் காண முடிகிறது. நிகழாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏழிலிருந்து ஏழரை சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கச்சா எண்ணெய், உலோகங்களின் விலை வெகுவாகக் குறைந்திருப்பது இந்தியத் தொழில் துறைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையாகும். இந்தச் சூழ்நிலையை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில், பல உள்கட்டமைப்புத் திட்டங்கள், நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் ஏற்பட்ட தடையால், நிறைவடையாமல் தேங்கி நிற்கின்றன. ஜி.எஸ்.டி. மசோதாவும் நிறைவேற்றப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறினால், உள்நாட்டு மொத்த தொழில் உற்பத்தி இரண்டு சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
போட்டி நாடுகளின் பலவீனங்களை, நமது பலத்துக்கான காரணிகளாக மாற்றி வேகமாக வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் நல்ல நேரம் இது.
நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மசோதாக்களை விவாதித்து, அவற்றை நிறைவேற்றும் வல்லமை படைத்த நாடாளுமன்றம் சரிவரச் செயல்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயல்படத் தொடங்க வேண்டும் என்பதே இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

ராத்து ராசன் பாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

