மத்திய அரசின் வரவு செலவு கணக்கில், செலவினங்களின் தன்மையை ஆராய்ந்தால், சில பயனுள்ள தகவல்கள் புலப்படும். கட்டுமான வசதிக்கான மேம்பாடுகள் (infrastructure development) மற்றும் உள்நாட்டு உற்பத்தி பொருள்களின் பயன்பாடுகள் மேம்பாடு சம்பந்தமான செலவுகள், உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பை (ஜி.டி.பி.) அதிகரித்து, வேலை வாய்ப்புகளை பெருக்கி, நாட்டின் பொருளாதார வளச்சிக்கு வித்திடும்.
மக்களின் வரிப் பணம், இம்மாதிரி செலவுகள் மூலம், நாட்டின், அடுத்தக்கட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு, அதன் பயன்கள், நடுத்தர மற்றும் நீண்ட கால இடைவெளியில், சாதாரண குடிமகனையும் சென்றடையும்.
அதற்கு மாறாக, சமீப காலங்களில், அரசுச் செலவினங்களில் கணிசமான பெருந்தொகை வாராக்கடன்களால் அரசு வங்கிகளுக்கு ஏற்பட்ட மூலதன இழப்பீடுகளை நிரப்ப பயன்படுத்தப்பட்டு வருவது சற்று கவலை அளிக்கும் விஷயமாகும்.
அரசு வங்கிகளின் மூலதன இழப்பீடுகளை நிரப்பவில்லையென்றால், வங்கிகளின் மூலதனம் குறுகி, அவைகளின் தொழில் கடன் வழங்கும் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இதனால், தொழில் துறை பாதிக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி தடைபடும். அதேசமயம், இம்மாதிரி செலவினங்கள், அரசு வரவு - செலவு கணக்கில், விரிசலை அதிகரிக்கும். விரிசலை தவிர்க்க, புதிய வரிகள் விதிக்கப்பட்டு, அது சாதாரண குடிமகனை தாக்கும்.
அரசு வங்கிகளின் மூலதனத்தில் பெரும்பகுதி, மத்திய அரசுடையதாகும். மக்களின் வரிப் பணமாகிய அந்த மூலதனத்தை பழுதடையாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்புகளில் ஒன்றாகும். மூலதன பழுதுக்கு, வாராக்கடன்களால் ஏற்படும் நஷ்டங்கள் முக்கிய காரணமாகும்.
வங்கிகள், அரசு கஜானாவின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அதிகாரிகள் எனும் பிரதிநிதிகள் மூலம், அந்த கஜானாக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. நிர்வாகத்தில் திறன் குறைவு ஏற்பட்டால், கஜானாவில் ஓட்டை விழுந்து, பொருளாதார இழப்புகள் ஏற்படும். அந்த இழப்புகள், சாதாரண குடிமகன் மீதான வரிச்சுமையை அதிகரிக்கிறது.
ஆகவே, சாதாரணக் குடிமகனின் அடிப்படை வசதிகளை பாதிக்கும் நிகழ்வுகளிலிருந்து அவனை காப்பாற்றும் மறைமுக சமூகப் பொறுப்பு, வங்கி அதிகாரிகளுக்கு உள்ளது. நஷ்டக் கணக்கில் எழுதப்படும் ஒவ்வொரு வாராக்கடனும், சாதாரண குடிமகனின் தலையில் வரிச் சுமையாக விழுகிறது என்பதுதான் உண்மை நிலவரம்.
சுருங்கச் சொன்னால், வங்கிகளில் வாராக்கடனாகும் ஒவ்வொரு ரூபாயையும், சாதாரண குடிமகன்தான், கூடுதல் வரிகள் மூலமாக, திரும்ப செலுத்துகிறான். எனவே, வாராக்கடன் எனும் இடர்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பெரும்பான்மை முதலீட்டாளரான மத்திய அரசுதான் மேற்கொள்ளவேண்டும்.
நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களில் பெரும்பகுதியை வசூலிப்பது, அதன் தற்போதைய அளவு அதிகரிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை வரையறுப்பது போன்ற செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவுகள், ஏற்க முடியாத மட்டத்துக்கு சென்று விட்டன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சமீபத்தில் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு, அஜாக்கிரதை (Staffnegligence), செயலற்ற தன்மை (Lack of action) ஆகியவை பகுதி காரணங்களாக இருப்பதாக தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்ட கடனை வசூலிப்பதில் ஏற்படும் தொய்வுதான் வாராக்கடனின் பிறப்பிட மேடையாகும். வாராக்கடனின் அளவீட்டை பொருத்துதான், ஒரு வங்கியின் செயல்பாடுகள் தற்போது கணிக்கப்படுகின்றன.
அரசு வங்கிகளிடையே வளர்ந்து, பரவி வரும் வாராக்கடன் எனும் வியாதி, நிர்வாக தொய்விற்கான ஆழமான அறிகுறிகளில் ஒன்றாகும். பல நிலைகளில் தொய்வடைந்திருக்கும் வங்கி நிர்வாகங்களை சீரமைக்கும் பணி தாமதப்படுத்தப்படாமல் மேற்கொள்ளப்படவேண்டிய காலக் கட்டம் இது.
இதை மனதில் கொண்டு, பொதுத் துறை வங்கிகளைச் சீரமைக்க, இந்திர தனுஷ் என்ற ஏழு அம்ச சீர்திருத்த திட்டம், சமீபத்தில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. வங்கி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, இந்த திட்டம் செயல்
படுத்தப்படும் என்று தெரிகிறது.
திறமையான உயர் மட்ட வங்கி அதிகாரிகளை நியமிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துதல், வங்கி வாரிய செயலகம் அமைத்தல் (Bank Board Bureau), மூலதன தேவைக்கான அதிக நிதி ஒதுக்கீடு, வாராக்கடன்களின் அளவை குறைத்தல், வங்கி நிர்வாகங்களுக்கு அதிக அதிகார சுதந்திரம் வழங்குதல் (Empowerment), வங்கி அதிகார வர்க்கத்தின் பொறுப்புரிமையை (Accountability), அதிகரித்தல், திறமையும், நேர்மையும் கொண்ட வெளிப்படையான நிர்வாக அமைப்பு (Transparent good governance) ஆகிய காரணிகள் இந்த ஏழு அம்ச திட்டத்தில் அடங்கும்.
இந்த திட்டத்தின் முன்னோட்டமாக, தனியார் வங்கி துறையில் பணிபுரிந்த இருவர், பாங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக தலைவர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். தனியார் துறையின் வியாபார திறமைகளோடு பொதுத் துறைக்கு தேவையான சமூக நல நோக்கையும் சரியான விகிதத்தில் கலந்து, செயல்பட்டு, தங்கள் நியமனத்தை இவர்கள் நியாயப்படுத்த வேண்டும் என்பதுதான், வங்கித் துறை சார்ந்த அனைவரது எதிர்பார்ப்பு ஆகும்.
தனியார் துறையில் வழங்கப்படும் ஊதியத்தை இவர்கள் பொதுத் துறையில் எதிர்பார்க்கமுடியாது என்பதால், இவர்களுக்கான ஊக்கத்தொகையை (Incentives) அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நடைமுறைப்படி, ஒரு பொதுத் துறை வங்கியில் பணிபுரிந்தவர், பெரும்பாலும், அதே வங்கியில் செயல் இயக்குநர் (Executive director) அல்லது நிர்வாகத் தலைவர் (Managing director) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மற்றொரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குள் நுழையும் இவர்கள், குறுகிய காலம்தான் தலைவர் பதவி வகிக்கின்றனர். அந்த குறுகிய காலத்தில் இவர்களால், இலக்கை சாதிக்க முடிவதில்லை.
ஒரு வங்கியில் பணிபுரிந்த அதிகாரிக்கு, அந்த வங்கியின் பண்பாடு (Culture) ஏற்ற, தாழ்வு வரலாறு, பலம் - பலவீனம், பணியாளர்களின் தனத்திறமைகள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகிய விவரங்கள், புதிதாக மற்றொரு வங்கியிலிருந்து நியமிக்கப்படும் அதிகாரியைவிட அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு, வங்கி சார்ந்த உணர்வு (Sense of belonging) பற்று அதிகம் இருக்கும்.
தொடர்ச்சியற்ற நிர்வாகத் தலைமை, வங்கிகளின் நிர்வாகத் தொய்வுக்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆகையால், பரிசோதனை முயற்சியாக, இரண்டு பொதுத் துறை வங்கிகளில், அந்த வங்கிகளில் நீண்ட காலம் பணி புரிந்த அதிகாரிகளையே, நிர்வாக தலைவராக (Managing Director) நியமித்து, வியாபார வளர்ச்சி மற்றும் நிர்வாக தொய்வு சீர்திருத்த மேம்பாடுகளை கண்காணிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும் முறையை மற்ற வங்கிகளில் அறிமுகப்படுத்தலாம்.
மேலும், 2015-16இல், 19,000 அதிகாரிகளும், 2016-17இல் 18,500 அதிகாரிகளும், பல பொதுத் துறை வங்கிகளிலிருந்து பணி ஓய்வு பெறுகின்றனர். அந்த இழப்புகளை ஈடுசெய்ய, பணிகளை வேகமாக கற்றுக்கொண்டு செயல்படும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
தொழில் ரீதியான திறமையுள்ள இடைநிலை அதிகாரிகளையும் (Professional talents) வெளியிலிருந்து தேர்வு செய்து, பொதுத்துறை வங்கிகளில் நியமிக்கவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த முறையால், உள்ளிருக்கும் ஊழியர்களின் உற்சாகம் தொய்வடைவதோடு, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்கள் பறிபோகும் என்று வங்கி ஊழியர் யூனியன்கள் கருதுகின்றன.
தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான தொழில்முறை பயிற்சிகளை அளித்து, அவர்களுடைய செயல்திறமையை மேம்படுத்துவது, வங்கி நிர்வாகங்களின் தலையாய கடமையாகும்.
சிறிது காலம், வங்கிகள் அதிகாரிகளை கல்லூரி வளாகங்களில், வளாகத் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தன. இந்த முறையில், திறமையான இளைஞர்கள் வங்கி பணிக்கு கிடைத்தனர்.
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு வங்கிப் பணியாளர் தேர்வு மையத்தின் (Institute of Banking Personnel Selection) மூலமாக மட்டும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு முறையில் ஏற்படும் காலதாமதங்களினால், போதிய ஊழியர்கள் இல்லாமல், வங்கிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்பது வங்கியாளர்களின் கருத்தாகும்.
மேலும், இம்முறையில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மற்றொரு மாநிலத்தில், கிளை அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
வங்கிப் பணியில், ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே, தகவல் பரிமாற்றத்தில், அப்பகுதியின் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது.
பிகாரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க நியாயமில்லை. வியாபார விரிவாக்கம், கடன் வழங்குதல், வழங்கிய கடனை வசூலித்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும், பணி செய்யும் வங்கி அதிகாரிக்கு அப்பகுதியில் பேசப்படும் மொழி தெரியவில்லை என்றால், அவரால், எந்த பணியையும் சரிவர செய்ய முடியாமல் போய்விடும். இம்மாதிரி வியாபாரத் தடை அளிக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, அவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு வங்கி நிர்வாகங்களுக்கு உண்டு.
நிர்வாகத் திறமையில் குறைபாடுதான் வாராக்கடன்களுக்கு காரணம் என்று அரசுப் பிரதிநிதிகள் கருத்து சொன்னாலும், அந்த குறைபாடுகளை நீக்குவதற்கான முழுப்பொறுப்பும் அவர்களிடம்தான் உள்ளது. வங்கிகளுக்கு தற்போது தேவைப்படுவது, மூலதன நிதிமட்டும் அல்ல. அதை திறம்பட நிர்வகித்து, மூலதனத்தில் புதிய ஓட்டைகள் விழாமல் பாதுகாக்கும் திறமையும் தேவை.
வங்கி சீர்திருத்தங்கள், வேகமான பேச்சு அளவில்தான் நிற்கின்றன. ஆனால், அவைகளை விவாதித்து அமல்படுத்தும் செயல்முறை ஆமை வேகத்தில் நகர்கின்றது.
நாட்டின் பொருளாதார சின்னங்களான பொதுத் துறை வங்கிகளின் வேகமான சீர்திருத்தங்கள், மக்களின் வரிப்பணம் விரயமாகாமல் பாதுகாக்கும் கவசங்களாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.