/

உணவுப் பாதுகாப்பில் ஊட்டம்

எல்லாருக்கும் உணவு என்ற அடிப்படையில் உலகமக்கள் பட்டினியால் மடிந்து விடக்கூடாது என்ற கருத்தில் உலகநாடுகள் ஒவ்வொன்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிப் பசித்தவர்களுக்கு உணவு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்ற ஐ.நா. வற்புறுத்தலுக்கு இணங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் உணவுப்பாதுகாப்புச் சட்டம் நிறைவேறியது.

News image
Updated On :25 டிசம்பர் 2016, 8:32 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

எல்லாருக்கும் உணவு என்ற அடிப்படையில் உலகமக்கள் பட்டினியால் மடிந்து விடக்கூடாது என்ற கருத்தில் உலகநாடுகள் ஒவ்வொன்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிப் பசித்தவர்களுக்கு உணவு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்ற ஐ.நா. வற்புறுத்தலுக்கு இணங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் உணவுப்பாதுகாப்புச் சட்டம் நிறைவேறியது.
இன்று, உணவு உற்பத்தியில், குறிப்பாக, அரிசி, கோதுமை விளைச்சலில் இந்தியா ஒரு முன்னணி நாடாக மாறியுள்ளது. பொது வினியோகத்திற்குத் தேவையான உணவைக் கொள்முதல் செய்து கணிசமாக இருப்பு வைத்துக் கொண்டு மாநில உணவு விநியோகத் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. இந்த விஷயத்தில் உணவுக் கழகம் தோன்றிய வரலாற்றை நினைவில் கொள்வோம்.
1957-இல் இந்தியப் பிரதமராயிருந்த நேரு, இரண்டாவது உணவுக் கொள்கைக் குழுவை நியமித்து, பிரபல சோஷலிஸ்டுக் கட்சித் தலைவரும் பொருளியல் நிபுணருமான அசோக்மேத்தாவை தலைவராக அமர்த்தி உகந்த பரிந்துரைகளை வழங்கும்படி உத்தரவிட்டார்.
1957 காலகட்டத்தில் இந்தியா உணவை இறக்குமதி செய்துவந்த பற்றாக்குறை நாடாக இருந்தது. அரிசியிலும் கோதுமையிலும் பதுக்கலும் கருப்புச் சந்தையும் நிலவின. ஆகவே இறக்குமதி செய்த உணவைப் பாதுகாத்து உகந்த அளவு இருப்புவைத்து முறைப்படி பொதுவிநியோகத்தை உருவாக்கினால் பதுக்கல் குறைந்து வெளிச் சந்தைவிலை குறையும் என்று அசோக்மேத்தா கருதினார். ன
இப்பணியை முழுமைப்படுத்த அரசுத்துறையில் ஃபுட் கார்ப்பரேஷன் ஒன்றை அமைக்க அசோக்மேத்தா பரிந்துரை செய்யவே 1964-இல் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் அசோக்மேத்தாவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அதன்படி ஃபுட் கார்ப்பரேஷன் உதயமானது.
இந்த கார்ப்பரேஷன் உதயமான பின்னரே பசுமைப்புரட்சியின் விளைவால் உணவுஉற்பத்தி உயர்ந்து உணவு இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது. அது நாள்வரை இறக்குமதி செய்த கோதுமை, அரிசியைப் பாதுகாத்து இருப்புவைத்து முறைப்படி விநியோகம் செய்து வந்த பணியுடன் உள்ளூரில் கொள்முதல் செய்து அதையும் இருப்புவைக்கும் பணியை கார்ப்பரேஷன் செய்தது.
பசுமைப் புரட்சியின் விளைவால் உற்பத்தி உயர்ந்து முதல் நிலை அங்காடிகளில் விலைசரிந்து தேக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையாக உணவுப்பாதுகாப்பு விலை அல்லது கொள்முதல் விலை நிர்ணயமானது. அக்கொள்முதல் விலைக்கு கோதுமை, அரிசி வாங்கிய ஃபுட் கார்ப்பரேஷன் கணிசமான அளவில் இருப்புவைத்துக் கொண்டு பற்றாக்குறை வறட்சி ஆண்டுகளிலும் நுகர்வோரின் வாங்கும் சக்தியைக் கருத்தில் கொண்டு வெளி அங்காடி விலையைக் கட்டுக்குள் வைத்துக் காப்பாற்றுகிறது.
பற்றாக்குறை உணவுப் பொருளாதார அடிப்படையில் அமைக்கப்பட்ட இக்கார்ப்பரேஷன், இன்று உபரி உணவுப் பொருளாதாரமாக இந்தியா மாறிப் போனதால், ஆண்டுதோறும் கொள்முதலானவற்றை கொட்ட இடமில்லாமல் உணவை வீணாக்கும் கார்ப்பரேஷனாகிவிட்டது. உணவை வீணாக்குவதால் அதற்குச் செலவழித்த நீரும் வீணாகிறது. காலத்திற்கு ஏற்ப வரலாறு புதுப்பிக்கப்பட வேண்டும்.
அப்படி புதுப்பிக்கப்படும் போது ஜங்க் உணவுக்கு முக்கியத்துவம் வழங்கிப் பன்னாட்டு உணவு நிறுவனங்களை உள்ளே இறக்கிவிட்டு, ஊட்டமில்லாத கலோரி - ஜங்க் உணவு விநியோகத்தைத் தனியார் துறை மூலம் விரிவாக்கம் செய்து நோயை ஏற்படுத்தும் ஒரு நிலைப்பாட்டை மாற்றவேண்டும். நலவாழ்வைக் கருத்தில் வைத்துப் புதியதோர் உணவு விநியோகக் கொள்கையை வகுப்பதுவே நன்மை தரும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இது நாள்வரை ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 10,000 கோடி ரூபாய் உணவுமானியம் கூடுதலாயிருக்கிறது. நிதிப்பளு சற்றுக் குறைந்தாலும் வயிற்றுக்குள் செல்லும் கலோரி பளு குறையாமல் கூடிச் செல்கிறது. உணவு விநியோகத்தில் செயலாற்ற வேண்டிய அடிப்படை மாற்றம் பற்றிய யோசனை மத்திய அரசிடமும் இல்லை. மாநில அரசிடமும் இல்லை. எதிர்க்கட்சிகளிடமும் இல்லை.
ஒரு மனிதன் குறிப்பாக உழைக்கும் மனிதன் உயிர்வாழ நாளொன்றுக்கு 2200 கலோரி உணவு வேண்டும். இந்த அடிப்படையில் நபர் ஒருவருக்கு 600 கிராம் அரிசி வேண்டும். இந்தக் கணக்கைத் தயாரித்தவர் டாக்டர். பி.வி. சுகாத்மே.
சுகமான மனிதராகிய சுகாத்மே மனிதர்களுக்குரிய கலோரித் தேவையை நிர்ணயித்தாரே தவிர மனிதன் சுகமாக வாழ 600 கிராம் அரிசி மட்டும் சாப்பிடலாம் என்று கூறவில்லை. 600 கிராம் அரிசியைச் சோறாக்கினால் ஆறு பேர் சாப்பிடலாம்.
அரிசிச்சோறில் மாவுச்சத்து அதாவது கார்போ ஹைட்ரேட்தான் கிடைக்கும். கூடவே, காய்கறிகள், பழங்கள், முட்டை, இறைச்சி அல்லது பால், பருப்பு, உலர் தானியங்கள் உண்டால் தான் மனிதன் சுகமாக வாழமுடியும். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறமுடியும். நோய் எதிர்ப்பு சக்தி பெறப் புரதச்சத்துடன் நுண்ணூட்டச் சத்தும் (பழ்ஹஸ்ரீங் உப்ங்ம்ங்ன்ற்ள்) வேண்டும்.
காய்கறி, இறைச்சி ஆகியவற்றைச் சமைக்கும் போது மிளகு, பூண்டு, மிளகாய், தனியா, சீரகம், லவங்கம், கசகசா சேர்க்கிறோம். இனிப்பு உணவில் திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய், குங்குமப்பூ, ஜாதிபத்திரி சேர்க்கிறோம். இவற்றில் உள்ள நுண்ணூட்டங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை.
ஒரு மனிதன் நோயின்றி வாழ தினமும் 300 கலோரி அளவில் கார்போஹைட்ரேட் (80 கிராம் அரிசி) போதுமானது. இன்று மருத்துவர்களும் ஊட்ட உணவு நிபுணர்களும் கலோரி உணவைத் (கார்போ ஹைட்ரேட், கொழுப்பு) தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.
குறைந்த கலோரி தரும் பருப்பு, பால், காய்கறி, பழங்கள், கீரைகள் மூலம் பெறும்படி கூறுகிறார்கள். அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் ஆகியவை கலோரியை கூட்டும் உணவு. இவற்றைத் தானே பொதுவிநியோகக் கடைகளில் வழங்குகிறார்கள். இதனால்தான் உடம்பில் சதை ஏறுகிறது. இதனால் கலோரி அதிகரித்து உடம்பில் தேவைக்கு மேல் கொழுப்பு சேர்ந்து உடல்பருமனாகிறது.
இவ்வாறு நோயைப் பரப்பும் உத்தியைத்தான் பன்னாட்டு நிறுவனங்களும் செய்கின்றன. ஆகவே தான் அவற்றை ஜங்க் ஃபுட் என்று கூறுகிறோம். குளிர்பானங்கள், நூடுல்ஸ், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், பிஸ்ஸா, பாஸ்தா, பர்கர் என்று என்னென்னவோ புதிய புதிய பெயர்களில் துரித உணவுகளைப் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் வழங்குகின்றன.
இவற்றில் புரதச்சத்து, தாதுப்புக்கள், வைட்டமின்கள் எதுவும் இல்லை. அளவுக்கு மீறிய சர்க்கரை, மாவுச்சத்து, உப்பு, கொழுப்பு மட்டுமே உண்டு. கொழுப்பு உணவிலும் கலோரி அதிகம்.
அரிசி, கோதுமை இரண்டுமே பொது விநியோகம் ஆகும்போது, புரதச்சத்து இழக்கப்பட்டு மாவுச்சத்து மட்டுமே எஞ்சியுள்ளது. நெல்லை அரிசியாக மாற்றும் போது தவிடு முற்றிலும் நீக்கப்பட்டுச் சத்து நிறைந்த குறுணையாகிறது. அந்த தவிட்டிலும், குறுணையிலும் புரதச்சத்துடன் வைட்டமின்களும் தாதுப்புக்களும் அடக்கம். கைக்குத்தல் அரிசியில் முனைபோனாலும் தவிடு எஞ்சியிருக்கும். ஷெல்லர் பாலீஷ் செய்து ஹல்லருக்குப் போகுமுன் நெல்லில் உள்ள உமி மட்டுமே நீக்கப்பட்டியிருக்கும்.
இன்று ஷெல்லர் பாலிஷ்செய்த அரிசி கைக்குத்தல் என்று விற்கப்படுகிறது. அதுசத்துமிக்கது என்றாலும் ஊறவைத்து, உலர்த்தி, மாவாக்கிப் புட்டு செய்து உண்டால்தான் ஜீரணமாகும். அப்படியே சோறு சமைத்தால் செரிமானமாவது கடினம். நவீன அரிசி ஆலைகள் சத்துள்ள தவிடை தனியே பிரித்து அரிசித்தவிடு எண்ணெயாக மாற்றி அதிக விலைக்கு விற்கிறார்கள். அரிசித்தவிடு எண்ணெய் (தண்ஸ்ரீ ஆழ்ஹய் ர்ண்ப்) உடலுக்கு நல்லது அல்ல.
எனினும், இன்று தொழில் ரீதியாக அரிசித்தவிடு எண்ணெய்க்கு அகில உலகச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால், முற்றிலும் தவிடு நீக்கப்பட்ட வெள்ளை அரிசி தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மனிதனுக்குத் தேவையான தாதுப்புக்கள் உலோகச் சத்தை உலர் தானியங்கள் மூலம் பெறமுடியும். சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி மூலம் சுண்ணாம்பு, பாஸ்வரம், இரும்பு, நரம்புச்சத்து ஆகியவற்றைப் பெறலாம்.
புரதச்சத்தைப் பருப்பு வகைளாலும், பால், முட்டை வகையறாக்காலும் பெறலாம். பருப்புகளைச் சுண்டல் செய்து உண்டால் புரதச்சத்துடன் வைட்டமின் சத்துகளையும் பெறலாம்.
இன்றுள்ள பொதுவிநியோக முறையில் கலோரி உணவை (மாவு சர்க்கரை சத்து) மட்டுப்படுத்திப் புரத உணவும், உலோகச்சத்துள்ள உலர்தானிய உணவும் தரவேண்டும். ஒரு நபருக்கு மாதம் 3 கிலோ அரிசி, 3 கிலோ உலர்தானியம், 1 கிலோ பருப்பு 500 கிராம் சர்க்கரை 500 கிராம் சமையல் எண்ணெய் வழங்கவேண்டும்.
பருப்பு என்றால் துவரம் பருப்பு அல்லது மசூர்பருப்பு மட்டும் அல்ல. பாசிப்பயறு, காராமணி, கொண்டைக்கடலை போன்றவை வழங்கப்பட்டால் சுண்டல் செய்து உண்ணலாம்.
உணவுப் பாதுகாப்பு என்றால் கலோரியை மட்டும் அர்த்தப்படுத்தாமல் ஊட்டச்சத்துள்ள தானியங்களையும் பருப்பு வகைகளையும் உகந்த அளவு வழங்கினால் தான் உணவுப் பாதுகாப்பில் ஊட்டச்சத்தையும் பெற்று ஊட்டக்குறைவால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க முடியும்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.