/

இனி எல்லாம் சூரிய சக்தி மயம்

காசினியிருளை நீக்கும் கதிரொளியாகியெங்கும் / பூசனையுலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும் / வாசியே ழடையதேர் மேல் மகாகிரி வலமாய் வந்த / தேசிகாவென ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி -ஆதிசங்கரர்.

News image
Updated On :24 டிசம்பர் 2017, 9:22 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

காசினியிருளை நீக்கும் கதிரொளியாகியெங்கும் / பூசனையுலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும் / வாசியே ழடையதேர் மேல் மகாகிரி வலமாய் வந்த / தேசிகாவென ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி -ஆதிசங்கரர்.
 ஆரரிவார் எங்கள் அண்ணல் பெருமையை / ஆரரிவார் இந்த அகலமும் நீளமும் / பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் / வேரறியாமை விளம்புகின்றேனே - திருமூலர்.
 பரிதியின் சக்தியை ஆதிசங்கரரின் ஆதித்ய ஹ்ருதயமும், திருமூலர் வாசகமும் அன்றே முன்மொழிந்துவிட்டன!
 நிலக்கரிப் பயன்பாட்டுக்கும் மெல்ல, மெல்ல எண்ணெய், எரிவாயுவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சுற்றுச்சூழலைக் கெடுக்காத சூரிய சக்தி பயன்பாடு மிகுந்து, புவி காக்கப்படும் என்று முழுமையாக நம்புவோம்.
 கால நிலை மாற்றத்தால் புவிவெப்பமாகி, ஓசோன் படலம் குறைந்து, மனித நல்வாழ்வை நாசமாக்குவது நிலக்கரி கொண்டு நிர்மாணிக்கப்படும் மின் நிலையங்களே. மின்சார உற்பத்தியின் தேவை கருதியே நிலக்கரி தோண்டப்படுகிறது. அடுத்து எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோல், டீசல் பயன்பாடு. பின்னர், எரிவாயு. எனினும் முதல் எதிரி நிலக்கரி என்பதை மறக்கக் கூடாது.
 ஜவாஹர்லால் நேரு தேசிய சோலார் கமிஷன் 2010-ஆம் ஆண்டில் உருவானது. தேசிய சோலார் கமிஷனின் உன்னதக் குறிக்கோள் நிலக்கரிப் பயன்பாட்டைப் படிப்படியாக வேரறுக்க வேண்டும் என்பது. வரும் 2022-இல் சூரிய மின் உற்பத்தி ஆண்டுக்கு 20,000 மெகாவாட் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நல்லெண்ணத்தில் சர்வதேச சூரிய மின்சக்தி அமைப்பும் நமது நாட்டின் தேசிய அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதால் சூரிய மின் சக்திப் பயன்பாடு பன்மடங்கு உயர்வதற்கான சூழ்நிலை கனிந்துவிட்டது.
 சூரிய மின்சக்தி சாதனங்கள் மட்டுமல்ல, சூரிய மின்சக்தி யூனிட் விலையானது, அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தியான மின்சாரத்தின் விலையைவிட இப்போது குறைந்துள்ளது. 2010-இல் ஒரு யூனிட் சூரிய மின்சக்தி விலை ரூ.12 என்ற நிலைமாறி, 2017-இல் ரூ.3
 எனக் குறைந்துவிட்டது. அந்த அளவுக்கு சூரிய மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது.
 சூரிய மின் சக்தி சாதனங்களில் முதலாவதாக, ஒளி ஈர்ப்புப் பலகைள்- அதாவது சோலார் போட்டோ-வோல்ட்டிக் சாதனங்களின் விலை சுமார் 80% குறைக்கப்பட்டுள்ளது.
 பல்வேறு மோடி வித்தைகளில் இந்த சாதனை பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை! சூரிய மின்சக்தி உற்பத்தியில் குஜராத்தும் ராஜஸ்தானும் முன்னணி மாநிலங்களகவுள்ளன.
 தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தபோது சூரிய மின் உற்பத்தியில் முதலிடம் பெற நல்ல கொள்கைகளை வகுத்திருந்தார். இப்போது அதைப்பற்றி ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ பேசுவதில்லை.
 சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றி இருப்பு வைக்கும் திறனுடைய லித்தியம் அயோன் பாட்டரி கொண்ட "மின் சுவர்' அதாவது "பவர்வால்' இப்போது கிடைக்கிறது. பதினைந்து ஆண்டுகள் உத்தரவாதத்துடன் 14 கிலோ வாட் அளவு மின் உற்பத்தி செய்து இருப்பு வைக்கும் "வீட்டு மின் நிலையங்களை' டெஸ்லா நிறுவனம் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. முதல் மாடல் விலை 12,400 டாலர் - சுமார் ரூ. 8 லட்சம். இரண்டாவது மாதிரி 10 கிலோ வாட் சூரிய சக்தி மின்சுவர் விலை சுமார் ரூ.6 லட்சம். கிரிட் என்னும் மின் தொகுப்பில் இணையாமல், சுதந்திரமாக மின் தேவைகளை இதன் மூலம் நிறைவேற்ற முடியும். இப்போது மூன்றாவது மாடல் அறிமுகமாகியுள்ளது.
 சூரிய மின்சக்தியின் அடிப்படையான பிரச்னை - உற்பத்தியை சேமிக்கும் திறன். இது செலவுமிக்கது என்றாலும், சேமிக்கும் திறனுள்ள லித்தியம் பேட்டரிகள் சற்று விலை குறைந்துள்ளது ஆறுதலான விஷயம். இதில் தன்னிறைவுக்குரிய ஆராய்ச்சிகள் மேலும் தேவை. இன்னமும் லித்தியம் பேட்டரிகளை தென் கொரியாவிலிருந்துதான் இறக்குமதி செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.
 அதே சமயம், வீடுகள் போன்ற சிறு தேவைகளுக்கு ஏற்ப குறைந்த ஆற்றலுள்ள சூரிய மின்சக்திச் சுவர்களும் உண்டு. பேட்டரியின் ஆற்றல், சேமிக்கும் கொள்திறன் பொருத்து விலை குறைவான சுய யூனிட்டுகள் அங்காடிக்கு வந்துவிட்டன. இன்று சூரிய மின்சக்தி குறித்த இலவசத் தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
 இந்தியாவில் லித்தியம் பேட்டரி உற்பத்திக்கு நிறைய ஊக்கம் வழங்கப்படுகிறது. விரைவில் லித்தியம் பேட்டரி இறக்குமதி முற்றிலும் தவிர்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
 சர்வதேச சூரிய மின்சக்தி அமைப்பின் தகவல்படி, சூரிய மின்சக்தி தொழில்நுட்ப அறிவுப் பரவலுக்கு மொத்தம் 121 உறுப்பு நாடுகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி மேம்பாட்டுக்கு ஐ.நா.வும் உலக வங்கியும் பெருமளவு உதவி வருவதால், சூரிய மின்சக்தி உற்பத்தியில் நாம் புதிய எல்லைகளைத் தொடுவோம் என்று நம்பலாம். இவ்வாறு பெரிய திட்டங்கள் நிறைய உண்டு.
 மூன்றாவதாக, சூரிய சக்தி மூலம் இயங்கவல்ல மின்விளக்குகள், மின் விசிறி, பம்புசெட், குளிர் சாதனப்பெட்டிகள், வாஷிங் மெஷின், டிஷ்வாஷர், அடுப்புகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. மரபுசார் உற்பத்தி மூலம் மின்தொகுப்பு வழி கிடைக்கும் மின்சாரத்தைவிட, சூரிய மின்சக்தி மூலம் இயக்கும் மின்சாதனங்கள் பழதுறாமலும், ஷார்ட் சர்க்யூட் அடித்து ஃப்யூஸ் போகாமலும் இயக்கப்படுவது மேலும் சிறப்பு. மின்சக்தியை மிச்சப்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் அறிமுகமாகியுள்ளன. எல்.ஈ.டி. விளக்குகள் போல் குறைவாக 25 வாட் சக்தியில் இயங்கக் கூடிய மின்விசிறிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் முதலியவற்றால், வீட்டு உபயோகப் பொருள்கள் துறையில் சூரிய மின்சக்தி புகுந்து விளையாடப் போகும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை.
 உலகளாவிய நிலையிலான எரிசக்திப் பயன்பாட்டின் மாற்றத்திற்கு சர்வதேச எரிசக்தி அமைப்பு ஊக்கமளித்து வருவதை நாம் அறிவோம்.
 முன்பு, ரயில் போக்குவரத்தில் நிலக்கரிப் பயன்பாடு தவிர்க்கப்பட்டு டீசல் அறிமுகமானது. அடுத்த கட்டமாக, டீசல் பயன்பாட்டைக் குறைத்து, ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் செயல்படுவதை கவனிக்கலாம்.
 ஒட்டுமொத்த எரிசக்திப் பயன்பாட்டில் 21% மட்டுமே மின்சாரம் மூலம் பூர்த்தியாகிறது; மீதி 79 சதவீதத் தேவை நிலக்கரி, பெட்ரோல், டீசல், உள்ளிட்ட பல தரப்பட்ட எரிபொருள்கள் மூலம் நிறைவேறுகிறது. வரும் 2040-ஆம் ஆண்டில், நமது மின்சாரத் தேவை 70 சதவீதம் உயரும் என்றாலும் நமது தேவையின் 40 சதவீத அளவை புதுப்பிக்கத் தக்க எரிசக்திகளான சூரிய ஒளி, காற்றாலை மூலம் பெற முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
 டீசல் தேவையை தாவர எண்ணெய்கள் மூலமாகவும் பெட்ரோல் தேவையை எரிசாராயம் மூலமாகவும் பூர்த்தி செய்யலாம்.
 வாகனங்களைப் பொருத்தவரையில், மின்சாரத்தில் இயக்கும் கார்கள் அறிமுகமாகத் தொடங்கியுள்ளன. உலக அளவில் சீனா இதில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. நம் நாட்டில் மின்சாரக் கார்களின் பயன்பாட்டுக்கு அடித்தளம் இடப்பட்டு வருகிறது. வரும் 2030-ஆம் ஆண்டை நெருங்கும்போது உலகில் சுமார் 33 சதவீதம் கார்கள் மின்சாரத்தால் இயங்கக் கூடியதாக இருக்கும்.
 எதிர்காலத்தில் பெட்ரோல் நிலையங்கள் எல்லாம் மின் கார் பேட்டரிகளுக்கு மின்னூட்டம் பெறும் ரீசார்ஜ் நிலையங்களாக மாறிவிடும்!
 எளிய நடுத்தர வர்க்க மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு உகந்த வண்ணம், சிறிய சூரிய மின்னுற்பத்தி சாதனங்களுக்கான தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. அதற்கான ஆராய்ச்சிகள் முழுமை பெற்று வருகின்றன.
 சர்வதேச மின் சக்தி அமைப்பின் முயற்சியில், 30,000 கோடி டாலர் முதலீட்டில் உலக சூரிய மின்சக்தி நிதியம் அமையும் திட்டம் கனிந்து வருகிறது. சூரிய மின்சாரம் வழியே பசுமை எரிசக்தி மேம்பாட்டுக்கு வழிகோலுமாறு சர்வதேச தொழிலகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 சூரிய மின் சக்தியை எளிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்று, நிலக்கரி, எரிவாயு, கச்சா எண்ணெய் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்கும் திட்டம் வரும் 20 ஆண்டுகளில் நிறைவேறும்.
 ஸர்வ தேவாத் மகோ ஹ்யேஷ:
 தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
 ஏஷதேவா ஸரகணான்-
 லோகான் பாதி சுபஸ்திபி:
 எல்லா தெய்வங்களுடைய இதயத்திலும் குடிகொண்டுள்ள சூரிய தேவன், ஒளியின் கிரணங்களால் உலகைக் காப்பாற்றுகிறான் என்கிறது ஆதித்ய ஹ்ருதயம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.