முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஐந்தாண்டுத் திட்டம் என்னும் விண்மீன்!

இந்தியாவுக்கு திட்டமிட்ட பொருளாதாரம் 65 ஆண்டுகளாக வளர்ச்சிக்கு வழிகாட்டி மறைந்துவிட்டது. கடைசியாகத் தீட்டப்பட்ட 12-ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலம் இன்று (31.3.2017) முடிவுக்கு வருகிறது.

News image
Updated On :30 மார்ச் 2017, 8:04 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இந்தியாவுக்கு திட்டமிட்ட பொருளாதாரம் 65 ஆண்டுகளாக வளர்ச்சிக்கு வழிகாட்டி மறைந்துவிட்டது. கடைசியாகத் தீட்டப்பட்ட 12-ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலம் இன்று (31.3.2017) முடிவுக்கு வருகிறது. இந்நாள், நமக்கெல்லாம் ஒரு நினைவுநாள் என்ற உணர்வுடன் பின்னோக்கிச் செல்வோம்.
1947-இல் விடுதலை பெற்றதும் இந்தியா எதிர்நோக்கிய பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒன்றாயிருந்த நாடு இந்துஸ்தான் என்றும் பாகிஸ்தான் என்றும் மதரீதியான பிரிவினையை ஆங்கிலேயர்கள் தூண்டிவிட்டதால் பாகிஸ்தானிலிருந்து பணக்கார இந்துக்கள் விரட்டப்பட்டதைப்போல் இந்தியாவிலிருந்த ஏழை இஸ்லாமியர்கள் விரட்டப் பட்டார்கள்.
தில்லிக்கு வெளியே அகதி முகாம்கள் உருவாயின. உணவு உற்பத்தியில் சரிவு. பஞ்சம், பசி, பட்டினி தலை விரித்தாடின. உணவுக்கும் மண்ணெண்ணெய்க்கும் கள்ளச்சந்தை, பதுக்கல் வியாபாரம் தலைதூக்கியிருந்தது. தொழில் வளர முடியாமல் மூலதனப் பற்றாக்குறை. பணம் எதுவும் மிச்சம் வைக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய கஜானாவை சுத்தம் செய்து சுரண்டி இங்கிலாந்தில் பிரிட்டிஷ் மூலதனமாக மாற்றியது.
வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்து பட்டினிச்சாவுகள் பெருகின. இப்படிப்பட்ட சரிவிலிருந்து இந்தியாவை மீட்கும் ஆயுதமாக அரசு மூலதனத்தை மையமாக வைத்து திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் நாட்டை மேம்படுத்த நேரு விரும்பிச் செயல்பட்டதன் விளைவாக ஐந்தாண்டுத் திட்டங்கள் வரையப்பட்டன.
1950-களில் திட்டமிட்ட பொருளாதாரங்களை மையப்படுத்தி, முதல் உலகப்போருக்குப் பின்னர் சோவியத் ரஷியாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் அமெரிக்காவையே அச்சுறுத்தும் அசுர பலத்தை ரஷியா பெற்றதைக் கருத்தில் கொண்டு, அதே பாதையில் செல்ல, இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள மாபெரும் பொருளாதார மேதைகளை பி.சி. மகலானோபிஸ் தலைமையில் வி.கே.ஆர்.வி. ராவ், வி.டி. கிருஷ்ணமாச்சாரி, டி.ஆர். காட்கில், எம்.எஸ். சிவராமன், மாயவரம் கே. சந்தானம் ஆகியோரைக்கொண்ட குழு ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை வடிவமைத்தது.
'திட்டமிடுதல் என்பது ஒரு முறை யோசனை அல்ல. ஒவ்வோர் ஆண்டும் யோசனைகள் தொடரும். ஒரு திட்டகாலம் முடிந்து அடுத்த திட்டகாலம் வரும்போது முதல் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டனவா, வளர்ச்சிக்கு எதிரான இடர்கள் எவை என்ற பரிசீலனைகள் தொடர்கின்றன.
தொழில்நுட்பம், பொருளாதாரம், வேளாண்மை, சமூக வளர்ச்சி தொடர்பான புள்ளிவிவரங்கள் காலந்தோறும் திரட்டப்பட்டு வளர்ச்சி நிலை சீரமைக்கப்படும்.....' என்ற பொன்னான வாசகங்கள் முதலில் தொடங்கிய திட்டக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
திட்டமிட்ட வளர்ச்சிப் பொருளாதாரம் என்பது ஓர் ஐந்தாண்டுத் திட்டத்துடன் நின்று விடுவது இல்லை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பன்னிரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை வரைந்த பொருளாதார மேதைகளான அசோக் மேத்தா, கே.என். ராஜ், பி.ஆர். பிரம்மானந்த், எம்.எல். தாந்த்வாலா, எஸ்.ஆர். சென், சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம் போன்ற மேதைகளை நினைவில் கொள்ள வேண்டும்.
திட்டமிட்ட வளர்ச்சிப் பொருளாதாரத்தின் உயிர்நாடிகளான நிதிக்கொள்கை, தொழில் கொள்கை, விவசாய விலைக் கொள்கை, விவசாயக் கொள்கை, தொழிலாளர் ஊதியம் தொடர்பான சில்லறை விலைக் குறியீட்டெண், வரிக்கொள்கை என்று ஏகப்பட்ட முன்னுரிமைகளை திட்டக்குழு வகுத்தளித்துள்ளது.
இப்படிப்பட்ட முன்னுரிமைகளில் விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மாபெரும் அணைக்கட்டுத் திட்டங்களான பாக்ரா நங்கள், ஹிராகுட் போன்றவை இடம் பெற்று நிறைவேறின. ஃபோர்டு அறக்கட்டளை நிபுணர்களை வரவழைத்து பசுமைப் புரட்சிக்கான வரைவு திட்டத்தை வழங்க ஜவாஹர்லால் நேரு உத்தரவு இட்டார்.
இந்தியாவுக்கு வந்த இந்த நிபுணர் குழு பலதரப்பட்ட விவசாயிகளையும், சமூக அமைப்புகளையும் சந்தித்து, இந்திய எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான உணவு, விவசாயக் கொள்கையை வகுத்து திட்டக்குழுவுக்கு வழங்கியது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் சி. சுப்பிரமணியத்தின் அயராத உழைப்பின் காரணமாக, ஃபோர்டு அறக்கட்டளை வகுத்திருந்த விவசாய திட்டக் கொள்கையைச் செயல்படுத்தி இந்தியாவில் பசுமைப்புரட்சியை மலரச் செய்தார்.
விவசாயம் செய்யும் கிராம மக்களுக்கு முதலீடு வழங்கும் திட்டமும் பசுமைப் புரட்சியின் ஒரு சிறப்பு. விவசாயிகளுக்கு கிராம அளவில் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அமைக்கப்பட்டு உரம், விதைகளுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டதால் கிராமங்களில் பணப்புழக்கம் உருவாகி, விவசாயம் சார்ந்த தொழில்களும் உடன் வளர்ந்தன. உணவு இறக்குமதி படிப்படியாகக் குறைந்து பசி, பட்டினியிலிருந்து நாடு விடுதலை பெற்றது.
பின்னர் அசோக் மேத்தா வகுத்தளித்த உணவுக் கொள்கை மூலம் உணவு விநியோகத்தில் அரசு முதலீடும், தலையீடும் உருப்பெற்று உணவில் நிலவிய கள்ளச்சந்தைக்கு முடிவு கட்டப்பட்டது. இந்திய உணவுக் கழகம் உதயமானது.
நுகர்வோர் நலன் காப்பாற்றப்பட்டதுடன் விவசாயிகளுக்கு அதிகபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு உணவுக் கொள்முதல் திட்டம் நெல், கோதுமையில் இன்றளவும் செயல்படுகிறது. நாம் உணவை ஏற்றுமதி செய்யும் அளவில் வளர்ந்துள்ளதற்கு அன்றே திட்டக்குழு அடிக்கல் நாட்டியுள்ளது.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, இயந்திர சாதனங்கள் போன்ற பெருந்தொழில்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இருப்பினும் முன்பே இந்தத் தொழில்களில் கால்பதித்திருந்த டாட்டா, பிர்லா போன்ற நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுடன் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டன.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மின் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்பட்டு கிராமந்தோறும் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு முதலில் சலுகை விலைக்கு மின்சார மோட்டார், பம்புசெட் வழங்கப்பட்டு நீர்ப்பாசனம் சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தியுடன் விவசாய உற்பத்தியும் பெருகியது. பசுமைப் புரட்சி வெற்றிக்கு கிணற்று நீர்ப்பாசனம் முக்கிய காரணம்.
பின்னர் வந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. மன்னர் மானியம் ரத்தானது. சுருக்கமாகச் சொல்வதானால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பல சாதனைகளை திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலமே பெற்றோம்.
ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடங்கும்போது எழுச்சியற்ற நாடாயிருந்த இந்தியா, தொடர்ந்து செயல்பட்ட அடுத்தடுத்த ஐந்தாண்டுத் திட்டங்களினால் எழுச்சி பெற்ற நாடாக மாறியுள்ளது. இதன் அடுத்தகட்டம் இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும். அப்படிப்பட்ட வல்லரசு உருவாக நேரு, காமராஜர், ராஜாஜி போல் ஒழுக்கமுள்ள தலைவர்கள் உருவாக வேண்டும்.
ஆனால், உதட்டளவில் தேசபக்தி போற்றப்பட்டு, ஊழலான செயல்பாடுகள் ஓங்கிவிட்டன. அரசியல்வாதிகள் சொத்து சேர்க்கும் நிலையைப் பார்க்கும்போது 'தேசபக்தியின் விளக்கம் தேசத் துரோகமே' என்று நமது அரசியல்வாதிகள் செயல்படுவது புலனாகிறது.
இப்படிப்பட்ட திட்டங்கள், அதாவது துரோகிகளின் திட்டங்கள் 21-ஆம் நூற்றாண்டு தொடங்கியபோது, குறிப்பாக, மன்மோகன் சிங் பிரதமராயிருந்தபோது உருவாயின. 1990 காலகட்டத்தில் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியே கேள்விக்குறியானது. சுற்றுச்சூழல் வாழ்வில் காலநிலை மாற்றம் என்பதுபோல் திட்டமிட்ட பொருளாதாரத்தில் தனியார் மூலதனம் ஆதிக்கம் பெற்றது.
உலகமயமாக்கல் நடைமுறை சித்தாந்தமானது. அரசு மூலதன ஆதிக்கம் தடம் புரண்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்தியா மட்டும் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது.
கடந்த 15 ஆண்டுகளில் உலகமயமாக்கல், தனியார் மூலதனப் பெருக்கம் உயர்ந்த சூழ்நிலையில் திட்டக்குழுவுடன் தொடர்புள்ள பல்வேறு பொதுநல - அரசுசாரா அமைப்பு சார்ந்த நிபுணர்கள், பல்கலைக்கழக சமூகவியல் - பொருளாதார பேராசிரியர்கள், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கியுள்ள அரிய ஆலோசனைகளைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ள 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டம் 10,000 பக்கம் கொண்டதாம்.
உதாரணமாக, இதில் உணவு தானிய, வேளாண் உற்பத்தி மதிப்பைவிட கால்நடைப் பொருளாதார மதிப்பு உயர்ந்துவிட்டதாக ஒரு கருத்து உண்டு. இந்தியப் பொருளாதார மேதைகளின் இத்தகைய பல கருத்துரைகள் ஊடகங்கள் மூலம் வெளி உலகத்திற்குத் தெரிய வேண்டும்.
திட்டக்குழு வகித்த இடம் இன்று நிதி அமைச்சரகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஒரு பிரிவாக செயல்படும் மத்திய கொள்கைக் குழு (நிதி ஆயோக்) என்ற பெயரில் சுருங்கிவிட்டது.
அரசியல் பொருளாதாரம் என்ற காலச் சக்கரத்தில் பொதுத்துறை ஆதிக்கமும், பன்னாட்டு ஏகபோகங்களைத் தூக்கிப்பிடிக்கும் தனியார் ஆதிக்கமும் மாறி மாறி ஏறுவதும், இறங்குவதும் இயல்பே. எனினும் இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் நேரு கண்டுபிடித்த 'ஐந்தாண்டுத் திட்டம்' என்ற சோஷலிசத் தீர்வு இன்று மறைந்துவிட்டாலும் அது என்றுமே வானத்தில் ஒரு விண்மீனாக ஒளிவிடும்.

(இன்று 12-ஆவது ஐந்தாண்டுத் திட்ட நிறைவு நாள்.)

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.