புஞ்சையில் பூத்த புது மலர்
இந்த ஆண்டு வறட்சி தமிழ்நாட்டை மட்டுமே தாக்கியதாக எண்ண வேண்டாம். மானாவாரி விவசாயத்தை நம்பி மாடு வளர்த்துப் பிழைப்பு நடத்தும் மேட்டு நிலமாயுள்ள தக்காண பீடபூமியைச் சார்ந்த கர்நாடகம், தெலங்கானா,


இந்த ஆண்டு வறட்சி தமிழ்நாட்டை மட்டுமே தாக்கியதாக எண்ண வேண்டாம். மானாவாரி விவசாயத்தை நம்பி மாடு வளர்த்துப் பிழைப்பு நடத்தும் மேட்டு நிலமாயுள்ள தக்காண பீடபூமியைச் சார்ந்த கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.
அப்படியிருந்தும் முன்கூட்டியே திட்டமிட்டு வறட்சியை விரட்டிய கிராமம், மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத் நகர் அருகில் உள்ள ஹிவரே பாஜார் என்ற கிராமம்தான் அது. தினமணியில் வறட்சியை எதிர்த்து வென்ற ராலேகான் சித்தி பற்றியும் ஹிவரே பாஜார் பற்றியும் செய்திக் கட்டுரைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தன.
ஆனால் அந்த வெற்றி இன்னமும் தொடர்கின்றனவா என்பதைக் காணச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் ஹிவரே பாஜாரைப் பசுமையாக்கிய பாப்பட் ராவ் பாவாரை - குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் - என்று வர்ணிக்கிறார். ஹிவரே பாஜாருக்கு அருகில் உள்ளதுதான் ராலேகான் சித்தி. பிரபல காந்தியவாதி அண்ணா ஹசாரே உருவாக்கிய ராலேகான் சித்தியைப் பார்த்து உருவானதுதான் பாப்பட் ராவ் பாவார் உருவாக்கிய ஹிவரே பாஜார். பாப்பட் ராவ் பாவார் பாசன நீர் பட்ஜெட் போட்டு வென்றார்.
இந்த விஷயத்தில் அப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாததால் ராலேகான் சித்தியில் இந்த ஆண்டு வறட்சியை சமாளிக்க முடியாமல் தினம் தண்ணீர் லாரி வேண்டும் என்று ராலேகான் சித்தி அரசிடம் விண்ணப்பித்துள்ளது. அண்ணா ஹசாரே உருவாக்கிய ராலேகான் சித்தியில் சிறிது சறுக்கல். ஹிவரே பாஜாருக்கு முழு வெற்றி. ராலேகான் சித்தி விவசாயிகள் செய்த தவறு என்ன?
இந்தக் கேள்வியை ஹசாரேயிடம் வைக்கப்பட்டபோது அவர் கூறிய பதில், 'இந்த கிராமத்தில், 90 அடி முதல் 200 அடி வரை பாதாளத்தில் ஊற்றுகள் உண்டு. நான் வழங்கிய மழை சேமிப்புத் திட்டத்தில் மேல்மட்ட ஊற்றுகளை முறையாக ரிசார்ஜ் செய்து வந்த விவசாயிகள் ஊறும் நீரளவைக் கருத்தில் கொள்ளாமல் நீர்ச் செலவுள்ள பயிர்களைச் சாகுபடி செய்து வற்றச் செய்து விட்டார்கள்.
ரிசார்ஜ் ஆகும் தண்ணீருக்கு ஏற்ற வறட்சிப் பயிர்த் திட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை...' என்று விளக்கம் அளித்தார். அதேசமயம் ஹசாரேயின் சிஷ்யர், பாப்பட் ராவ் பாவார், ஹிவரே பாஜார் கிராமத்தில் மேல்மட்டக் கிணற்றில் ஊறும் நீர் அளவுக்கு ஏற்ப வறட்சிப் பயிர் சாகுபடிக்கு வித்திட்டதால் ஹிவரே பாஜார் வறட்சியிலும் வளமாக உள்ளது. கிராமமே பசுமையால் மலர்ச்சி பெற்றுள்ளது.
வறட்சியை எதிர்த்து வென்ற ராலேகான் சித்தி, ஹிவரே பாஜார் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கடன் இல்லாமல் வாழ்கிறார்கள். ஆற்று மணல் அள்ளவில்லை. ரியல் எஸ்டேட் செய்யவில்லை. ஆழ்துளைக் கிணறு தோண்டவில்லை.
எனினும் ஹிவரே பாஜார் விவசாயிகளில் 160 நபர்களின் ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு மேல். அதாவது மில்லியனர்களாக உள்ளனர். விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் மில்லியனர்கள் என்று புள்ளிவிவரங்கள் ஆய்வு விண்டுரைக்கின்றது! ஹிவரே பாஜார் கிராமத்தில் 100 சதவீதம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இந்தியாவிலேயே ஜி.டி.பி. அடிப்படையில் அதிக வருமானம் ஈட்டும் கிராமங்களில் ஹிவரே பாஜார் முதல் நிலை வகிக்கிறது.
ஊர் ஒன்றுகூடி தேர் இழுப்பதுபோல், ஊர் ஒன்றுகூடி பாசன நீருக்கு பட்ஜெட் போட்டு வறட்சியில் வளம் கண்ட இந்தப் புஞ்சையில் பூத்த புதுமலர் வழங்கிய தொழில்நுட்பம் எப்படி? ஒரு மழை பெய்தும் மழையின் வரவு கணக்கிடப்பட வேண்டும்.
பருவம் வரை பொறுத்திருந்து ஓராண்டுக்கான வரவை மழை மூலம் எந்த அளவுக்கு மேல்மட்டக் கிணறுகளின் ஆழம் கூடுதலாயுள்ளதைக் கணக்கிட்டு எந்த அளவு நீர் ரிசார்ஜ் ஆனதோ அதுவே நாம் பயிர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய பாசன நீர் என்ற முடிவுடன் பயிர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல மழை பெய்து அதிகப்படி ரிசார்ஜ் ஆகியிருந்தால் நீர்ச் செலவுள்ள பயிர்களையும், குறைவாக ரிசார்ஜ் ஆகியிருந்தால் புஞ்சைப் பயிர்கள் என்றும் தீர்மானித்து சாகுபடித் திட்டம் போட்டுப் பயிரேற்ற வேண்டுமென்று ஊர் கூட்டி முடிவு எடுக்கப்பட்டதே, ஹிவரே பாஜாரின் சிறப்பு. குறிப்பாக, கரும்பு, கோதுமை, பருத்தி சாகுபடி தவிர்க்கப்பட்டதால் ஹிவரே பாஜார் வென்றது.
தண்ணீர் பட்ஜெட் போடாமல் கரும்பு, பருத்தி சாகுபடி செய்ததால் ராலேகான் சித்தி தோற்றது. ஆனால், இந்த இரு கிராமங்களுமே எவ்வாறு காடு வளர்த்து, குட்டைகள் கட்டி மழைநீர் சேமித்து மேல்மட்ட ஊற்றுகளைப் பெருக்கினர் என்பதற்குரிய நல்ல உதாரணங்கள்.
கடைப்பிடிக்கப்பட்ட உழவியல் உத்திகளில் ராலேகான் சித்தி இரண்டாவது இடமே தவிர, மழைநீர் சேமித்து விவசாயம் செய்யும் நெறிமுறையில் இரண்டு ஊர்களுமே சமநிலையில் செயல்படுகின்றன.
உதாரணத்திற்கு ஹிவரே பாஜார் கிராமம் ஒரு காலத்தில் வெறுமை நிரம்பிய பொட்டலாயிருந்தது. மானாவாரி விவசாயம் மழை இல்லாமல் பாழானதால், விவசாயிகள் மும்பைக்குச் சென்று விவசாயத்தையே கைவிட்டனர்.
தக்காணப் பீடபூமியின் வறண்ட பகுதி அகமத் நகர், சராசரி ஆண்டு மழைப் பொழிவு 800 மி.மீ. இந்த ஊரைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால் வெப்பம் கடுமையாகிப் பஞ்சம் ஏற்பட்டது. இம்மலைப் பகுதியில் ஏராளமான இலுப்பை மரங்கள் இருந்தன. இலுப்பைப் பூ உணவும் பறி போனது.
மரங்கள் வெட்டப்பட்டு மண் அரிப்பு ஏற்பட்டது. மழை பெய்தபோது விளைநிலங்களில் தூர் படிந்து விளைச்சல் குன்றியது. தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்தாடியது. 12 சதவீத விளைநிலங்களில் மட்டுமே சாகுபடி நிகழ்ந்தது.
விவசாயிகளில் பலர் வேறு பிழைப்பை நாடி மும்பைக்குச் சென்று கொண்டிருந்த வேளையில் ஹிவரே பாஜாரின் சர்பஞ்ச் -- அதாவது கிராமத் தலைவர் பாப்பட் ராவ் பாவார், அண்ணா ஹசாரேயின் செயல்பாடுகளால் உயர்ந்து வந்த ராலேகான் சித்தியைப்போல் தனது கிராமத்தை உயர்த்தும் எண்ணம் கொண்டு திட்டமிட்டார்.
1989-இல் நிகழ்ந்த பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்
கப்பட்ட இவர், படிப்படியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். முதலாவதாக ஊர் எல்லையிலிருந்த மலைப் பகுதியில் வனப் புனர்வாழ்வு திட்டத்தை, மாவட்ட சமூகக் காடு வளர்ப்புத் திட்ட அலுவலர்களுடன் இணைந்து பேசி கிராம மக்களைக் கொண்டு ஏராளமாக மரங்களை நட்டார்.
இரண்டாவதாக, நீர்நிலை மேம்பாட்டுத் திட்டம்(Watershed Development Programme) உதவியுடன் இணைந்து, மலைச் சரிவுள்ள இடங்களில் ஆயிரக்கணக்கான நீர்க்கட்டிப் பள்ளக் கால்வாய்களை(Cantour Trenches) வெட்டி மழை நீர் சேமிப்புச் செய்தார்.
குளம், குட்டைகளை மராமத்து செய்து மழைநீர் சேமிக்கச் செய்தார். பத்து ஆண்டுகளில் பலன் கிடைத்தது. மலைப் பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பசுமையானது. மண்ணரிப்பு தடுக்கப்பட்டது. மலைப் பகுதிகளில் பசுமைப் புற்கள் வளர்ந்து மேய்ச்சலுக்கு வழி காணப்பட்டது.
வற்றிய கிணறுகளில் ஊற்றுகள் பெருகின. இப்படிப்பட்ட அதிசயங்களைக் கண்டு மும்பைக்குச் சென்ற விவசாயிகள் திரும்பி வந்து கறவை மாடுகள் வாங்கி வளர்க்கத் தொடங்கினர். மேல்மட்டக் கிணற்றில் ஊறிய நீர் கொண்டு புஞ்சை தானியங்கள், பருப்பு - எண்ணெய் வித்துப் பயிர்கள், வெங்காயம், தீவனப் பயிர்கள் சாகுபடி செய்தனர்.
கிடைத்த நீர்வளத்தைத் தொடர்ந்து காப்பாற்ற விவசாயிகள் பாப்பட் ராவ் பாவாரின் தலைமையில் ஒன்றுகூடி மழைநீர் வரத்து அடிப்படையில் ரிசார்ஜ் பட்ஜெட் போட்டுத் தமக்குத் தாமே பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெற்றிக்கனிகளைப் பறித்தனர்.
அண்ணா ஹசாரே, ஹிவரே பாஜார் கிராமத்தின் செயல்பாட்டை வியந்து, ராலேகான் சித்தி கிராமத்து விவசாயிகளுக்கு நீர்ச் சிக்கனப் பயிர்களான புஞ்சை தானியங்களைத் தேர்வு செய்து நீர்த் தேவைக்கும் நீர் வரவுக்குப் பொருத்தமான வழிகளைப் பின்பற்ற அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.
ஹிவரே பாஜாரை அடுத்துள்ள ஒரு கிராமம், பிம்பால் காவோன் கவுடா. இந்த கிராமமும் ஹிவரே பாஜாரை முன்னுதாரணமாகக் கொண்டு செயலில் இறங்கிவிட்டது.
ஹிவரே பாஜாரின் செயல்பாட்டை வியந்த மாநில அரசு, 'ஜல்யுக்த் ஷிவர் யோஜனா' என்ற திட்டத்தை 2014-இல் உருவாக்கி, நீர் பட்ஜெட் திட்டத்திற்கு அகமத் நகரின் கட்டுபாட்டுக்குள் உள்ள 279 கிராமங்களிலும் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியரை முடுக்கிவிட்டுள்ளது. ஹிவாரே பாஜாரின் பசுமை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் படர்ந்து வருகிறது.
ஹிவரே பாஜாரின் அடுத்தகட்ட நடவடிக்கை அவர்கள் விளைவித்த தானியங்களையும், பருப்பு வகைகளையும் எண்ணெய் வித்துகளையும் பாக்கட் போட்டு சந்தைப்படுத்தி 'ஹிவரே பாஜார்' என்ற வர்த்தக அடையாளத்தை உருவாக்குவது என்று பாப்பட் ராவ் பாவார் கூறியுள்ளார்.
'தண்ணீர் இருந்தால் நஞ்சைப் பயிர், தண்ணீர் இல்லாவிட்டால் புஞ்சைப் பயிர்' என்ற நிலை மாறி 'என்றுமே புஞ்சைதான்' என்று வாழும் ஹிவரே பாஜார் 'புஞ்சையில் பூத்த புதுமலராக' இந்தியாவுக்கு வழிகாட்டுவதை வாழ்த்தி வரவேற்போம்.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...