வீதியா? பாலமா?

யாழ்ப்பாணம் போயிருந்தேன். பழைய தஞ்சை மாவட்டம் போல ஆங்காங்கே வானுயர்ந்த கோபுரங்களோடு கோயில்கள் தெரிந்தன.
வீதியா? பாலமா?
Updated on
3 min read

யாழ்ப்பாணம் போயிருந்தேன். பழைய தஞ்சை மாவட்டம் போல ஆங்காங்கே வானுயர்ந்த கோபுரங்களோடு கோயில்கள் தெரிந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தனர். 
ஆயுதம் தாங்கிய போராட்ட மண்ணில் உண்ணாவிரதப் போராட்டம். மாணவர்கள் கல்லூரிக் கட்டண உயர்வுக்கோ, விடுதி உணவுத் தரத்துக்கோ உண்ணாவிரதம் இருக்கவில்லை. 
இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யச் சொல்கிறார்கள். நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கச் சொல்கிறார்கள். 2009-இல் நடந்த இறுதி யுத்தம் முடிந்த பிறகும் இன்னும் மாணவர்களை விடுவிக்கவில்லையாம். கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்களாம். 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொலிவிழந்து காணப்பட்டது. ஓடு வேய்ந்த ஒரு பழைய கூடத்திலிருந்த படங்களைப் பேராசிரியர் மெளனகுரு காட்டினார். வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி என்று ஈழத் தமிழ் ஆளுமைகளின் படங்கள் கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்றன. பேராசிரியர் கா. சிவத்தம்பி, வடகிழக்கு மாகாணத்துக்கு முதல்வராக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டவர். 
நினைவுகள் வல்வெட்டித்துறைக்கு இழுத்துச் சென்றன. கடற்கரைச் சாலையில் பருத்தித்துறை கடந்து பயணிக்கிற போதே வல்வெட்டித்துறை உணர்வு அதிர்வுகள் மனதுக்குள் படர்ந்தன. கடற்கரையில் நின்றிருந்த படகுகள் காலத்தில் உறைந்து கிடந்தன. 
பிரபாகரன் சிறுவயதில் கடற்கரையில் விளையாடிய உதயசூரியன் விளையாட்டுத்திடல் இப்போதும் இருக்கிறது. அங்கு ஒருவர் காற்றாடி விட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் வல்வெட்டித்துறைக்கே சிறப்பான தின்பண்டம் ரவா லட்டுபோல எள்ளில் செய்யப்பட்ட இனிப்புகளை விற்றுக் கொண்டிருந்தனர். புண்ணாக்கு உருண்டை என்று பெயர் சொன்னார்கள். ஆறாத போர்க்காயங்களோடு ஆங்காங்கே சில வீடுகள் இடிந்து கிடந்தன. 
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வழிபட்ட வைத்தீசுவரன் கோயிலை வாகனத்தில் கடந்து போக இப்போதும் விடவில்லை. இறங்கித்தான் போகவேண்டும். கருவறையை வாகனத்தில் கடக்கக் கூடாதாம். இறங்கிக் கேட்டதில் பிரபாகரன் மூதாதையர் காலத்திய நடைமுறை என்றார்கள். அந்தக் கோயில் பிரபாகரன் குடும்பக் கோயிலாம். 
தெருவிலிருந்து ஒரு சந்துக்குள் போனால் பிரபாகரன் வீடு. வீடு இருந்த இடம் இப்போது தரைமட்டமாகிக் கிடக்கிறது. சந்தும் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு அரச மரம். மரத்தடியில்தான் அவரது சிறுவயதின் பெரும் காலம் கழிந்திருக்கிறது. அங்கிருந்துதான் அவர் நண்பர்களுடன் கதைப்பாராம். அந்த மரத்தைச் சுற்றிலும் வட்டமாகத் திண்டு இருக்கிறது. அந்த மரத்தின் முகத்தில் எம்.ஜி.ஆர். சுவரொட்டி, ஆள் உயரத்துக்கு ஒட்டப்பட்டிருந்தது. 
அங்கிருந்து தமிழகம் அரைமணி நேரப் பயணம் என்றார்கள். புதிய திரைப்படங்கள் வெளியாகிற நாளில் அன்றே தமிழகம் வந்து படம் பார்த்துச் செல்கிற வாழ்க்கை இருந்ததாம். தமிழ்நாட்டிலிருந்தும் தனுஷ்கோடி வரை தொடர்வண்டியிலும் அதன்பின் படகிலும் பயணம் செய்திருக்கிறார்கள். 
முல்லைத்தீவுக்கு மனம் ஓடியது. நாவல்குடி தாண்டிய பிறகு போர்ச் சுவடே தெரியாமல் சீனர்கள் போட்ட சாலைகள் பளபளத்தன. சாலை ஓரங்களில் புதிதாய் வைத்து வளர்க்கப்படும் பூவரசு மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. சாலைப் பக்கவாட்டிலும் தூரங்களிலும் எரிந்து கரிந்து நிற்கிற பனைமரங்கள் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 
கருவேல முள்ளுக் காடாக இருக்கும் முள்ளிவாய்க்காலின் பதுங்குக் குழிகளில் இப்போதும் கிடக்கும் கிழிந்து நைந்து போன உடைகள் அங்கே மண்ணுக்குள் இருக்கும் குழந்தைகளையும் பெண்களையும் காட்டிக் கொண்டிருக்கின்றன. மரங்களில் பல இப்போதும் தோட்டாக்களையும் வெடித்த குண்டுகளையும் தாங்கிக் கொண்டு நிற்கின்றன. இப்போதும் போராளிகள் சிலர் உடலில் போர் நினை வுக் காயங்களோடும் உடம்புக்குள் இன்னும் எடுக்க முடியாத வெடிகுண்டுச் சிதறல்களுடனும் தென்பட்டனர். 
பொதுமக்கள் யார்? புலிகள் யார்? என்று அடையாளம் காணமுடியாமல் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் இது என்றார்கள். யார் என்று அடையாளம் தெரிந்துகொள்வதற்கு வசதியாக அங்கே பொதுச் சந்தைக் கூடத்தில் இறந்த போராளிகளைப் பார்வைக்கு வைப்பார்களாம்.
புலிகளுக்கு வந்த எல்லா உதவிகளும் பன்னாட்டு ஆதரவுடன் தடுக்கப்பட்ட பிறகு அரிசிக் கஞ்சி உணவோடு போராடினார்களாம். அந்த அரிசிக் கிடங்கைக் காப்பாற்ற நடந்த சண்டையில் அரிசியிலும் இரத்தம் கலந்ததாம். எவ்வளவு கழுவினாலும் கஞ்சியில் இரத்த வாடை போகவில்லையாம். கஞ்சி குடிப்பதில் சிலர் கடைசியாகப் போவார்களாம்; அப்போதுதான் கஞ்சியில் அடியில் தங்கியிருக்கும் சோறு கிடைக்குமாம். 
"நான் தமிழ் ஈழமும் பெற்றுத்தரவில்லை; களத்தில் வீரமரணமும் பெறவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்" என்று இறுதி நாள்களில் ஒருநாள், பிரபாகரன் தன்னுடன் இருந்தவர்களிடம் சொன்னாராம். 
இறுதிக் கடன் நடத்திய நந்திக் கடல் வற்றிக் கிடக்கிறது. தரைமட்டமாகிக் கிடந்த வல்வெட்டித்துறை வீட்டின் சிறு கல்லோடும் கூரை ஓட்டின் துண்டோடும், முள்ளிவாய்க்கால் சிதலங்களோடும் புறப்பட்டு வந்தபோது, கொழும்பு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி, செய்தனர். 
இலங்கையின் பாதுகாப்புக்கோ, பொருளாதாரத்துக்கோ கேடு தருகிற வகையிலான செயற்பாடு ஏதும் இல்லை என்பதை ஏற்க மறுத்தனர். சிங்கள நாட்டின் நற்பெயரைக் கெடுக்க ஆதாரம் எடுத்துச் செல்வதாகவும் தமிழகத் தலைவர்களிடம் கொடுக்க எடுத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டும் குரலில் அச்சம் இருந்தது. 
இலங்கையின் முக்கியமான நான்கு கோயில்களில் ஒன்று கீரிமலையில் உள்ள கோயில் என்றார்கள். நகுலாம்பிகை தேவியும் நகுலேசுவரரும் உடனிருந்து சாபம் தீர்ப்பதாக நம்புகிறார்கள். இந்தியாவில் காசி போல இலங்கைக்குக் கீரிமலை: இறந்தவர்களுக்கு நினைவுக் கடன்கள் செய்கிற இடமாக இருக்கிறது. கடற்கரையில் இருக்கிறது. கீரிமலைக் கேணிக்குக் கடல் நீர் நேரடியாக வந்து செல்கிறது. இந்தியாவிலிருந்து வந்தும் சாப விமோசனம் பெற்றிருக்கிறார்களாம். 
பல நூற்றாண்டுகளுக்கும் முன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த விஜயன் எனும் அரசனால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதாம். அங்குள்ள கீரிமலை கேணி, கண்டகி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானால் சாபம் பெற்ற யமதக்கினி முனிவர் இங்கே நீராடி, தனது கீரி முகத்தை மாற்றிக் கொண்டாராம். 
சோழ மன்னனின் மகள் மாருதபுரவீகவல்லி, தன் குதிரை முகத்தை மாற்றிக் கொண்டாராம். இருவரும் இந்தியாவிலிருந்து இலங்கை சென்று நீராடி, சாபம் நீங்கி, முகம்மாறி இருக்கிறார்கள். இந்தியர்களும் சாபவிமோசனம் பெற இலங்கையில் இடமிருக்கிறது. இதில் இராமரும் இராவணனும் நீராடி சாபவிமோசனம் பெற்றனர் என்று அங்கிருக்கும் அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள். 
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் இராவணன் தன் தாய்க்கு இறுதிக்கடன் ஆற்றுவதற்காக வெட்டியதாகச் சொல்லப்படும் சுடுநீர்க் கிணறு இருக்கிறது. பக்கத்தில் தண்ணீர் இயல்பாக இருக்க இந்தக் கேணியிலிருந்து மட்டும் சுடுநீர் வந்துகொண்டிருக்கிறது. இப்போதும் தண்ணீரில் சூடு இருக்கிறது. 
விழிப்புலன், செவிப்புலன், பேச்சுத்திறன் குன்றிய சிறுவர்களுக்காக இனிய வாழ்வு இல்லம் ஒன்று 19.9.1997-இல் புலிகளின் ஆதரவோடு தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போதும், தன்னார்வத் தொண்டு நிறுவனமும் ஆசிரியர்களும் ஈடுபாட்டோடு பணியாற்றித் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 
முல்லைத்தீவில் அரசின் வெற்றிச் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. சுற்றிலும் சிங்கங்கள் காவல் காக்க, கையில் தூக்கிய துப்பாக்கியுடன் சிலை நிற்கிறது. 
பிரதமர் மோடி இலங்கை நாடாளுமன்றத்தில், "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்ற பாரதியின் கவிதை வரிகளைச் சொல்லியிருக்கிறார்.
நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று உலகுடன் இணக்கமுற வாழ, சிங்களத் தீவுக்கு இப்போது பாலம் தேவைதான். நடந்தவற்றுக்கு யார் பொறுப்பேற்பது? 
குறுந்தொகை சொல்கிறது, 
யாருமில்லை தானே கள்வன் 
தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ? 

அது சரி, பாரதி ஏன் சிங்களத் தீவு என்று சொன்னார்? 
ஈழத்துப் பூதனார் என்று சங்க காலத்திலேயே ஈழத்தைப் பெயரோடு சேர்த்துக்கொண்ட புலவர் இருந்திருக்கிறார். பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டினத்தில் ஈழத்து உணவு என்று ஈழத்தின் பெயரோடு உணவு இருந்திருக்கிறது. இராமாயணத்தில் இலங்கை இருக்கிறது. அப்படியிருக்க ஈழத்தையும் இலங்கையையும் விட்டுவிட்டு, பாரதியார் சிங்களத் தீவினுக்குப் பாலம் அமைக்கச் சொன்னது ஏன்? 
விமானத்தில் பயணிக்கும்போது பாரதியின் அடுத்த வரியும் நினைவுக்கு வந்தது. 
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" .
ஒரே நாட்டுக்கு வீதியும் பாலமும் ஏன்? தமிழுக்கு வீதி; சிங்களத்துக்குப் பாலமா? உறவுக்கு வீதி; ஒற்றுமைக்குப் பாலமா? வீதிக்கும் பாலத்துக்கும் பாரதியார் வேறுபாடு காட்டிப் பாடியிருப்பது புரிந்தது.

கட்டுரையாளர்:
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com