/

பசுமையான பொன் நினைவுகள்

சினிமா, மற்றும் இசைத் துறைகளில் "ஓல்டு இஸ் கோல்ட்' என்று சொல்வது பிரபலமாகி வருகிறது.

News image
Updated On :4 பிப்ரவரி 2018, 9:26 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

சினிமா, மற்றும் இசைத் துறைகளில் "ஓல்டு இஸ் கோல்ட்' என்று சொல்வது பிரபலமாகி வருகிறது. கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, ஜி.ராமநாதன், போன்றோர் அமைத்த சினிமாப் பாட்டுகள், பட்டுக்கோட்டையார், உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன், கண்ணதாசன் இயற்றிய பாடல் வரிகள், கருப்பு-வெள்ளையில் வெளிவந்த படங்கள் என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். இவ்வாறே விவசாயத்திலும், நமது உணவு முறையிலும் பசுமையான பொன் நினைவுகளை எண்ணிப் பார்ப்போமா? பசுமைப் புரட்சி தோன்றுவதற்கு முன் நாம் செய்த விவசாயம், நாம் உண்ட உணவு பற்றி தங்கமான எண்ணங்களை மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கும்போது, அடடா, நமது இழப்புகள் எத்தகையவை என்று தெரியும்.
1942-ஆம் ஆண்டு மன்னார்குடியில் எனது தந்தை அமரர் ஆனபோது வீட்டில் வறுமை. துக்கம் மறக்க மாற்றுவீடு செல்வது மரபு. மூன்று வயது நிரம்பிய நானும் எனது தாயாரும் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ள ஒரு பட்டிக்காட்டில் கட்டிக் கொடுத்திருந்த ஒரு தமக்கையார் வீட்டுக்குச் சென்றோம். என்னை அந்தப் பட்டிக்காட்டில் விட்டு விட்டு தாயார் மட்டும் மன்னார்குடி திரும்பினார். மன்னார்குடியில் சோற்றுக்குக் கஷ்டம். நானாவது வயிறார சாப்பிடட்டும் என்ற எண்ணம். என்னுடன் பிறந்த மூன்று அண்ணன்மார்களும் ஒரு தமக்கையாரும் அம்மாவும் மன்னை நகரில். நான் மட்டும் ஒரு பட்டிக்காட்டு கிராமத்தில். எனக்கு அது ஒரு சுகமான அனுபவம்!
என்னுடைய அக்காள் கணவர் பெரிய மிராசுதார் அல்ல. ஐந்து ஏக்கர் நஞ்சை, வீட்டைச் சுற்றிய புஞ்சை நிலத்தில் ஏராளமான பனை மரங்கள், பலவகையான மரங்கள் காடுகளாயிருந்தன. 50 சென்ட் இடத்தில் வாழை, கத்திரி, வெண்டை, தக்காளி, புடலங்காய், அவரை, பூசணி எல்லாம் காய்த்துத் தொங்கும். வண்டிமாடு, 10,15 பசுமாடுகள். பணப்புழக்கம் இல்லை. வயலிலிருந்து நெல் வந்துவிடும். பால் வழங்கப் பசு. நெல் அரவை மில் கிடையாது. வீடு மண் வீடுதான். இந்தப் பட்டிக்காட்டில் ஓட்டு வீடு அன்று மருந்துக்குச் கூட இல்லை. மண்வீடாக இருந்தாலும் திண்ணை, வெளி வாசல் சிமெண்டு போல் கரிப்பொடி கலந்த சாணியால் மொழுகப்பட்டுப் பளபளவென்று மின்னும். நெல் குத்த உரல் இல்லை, குந்தாணிதான். குந்தாணி என்பது தரையிலேயே உரல் போல் குழி எடுத்துப் பூசியிருப்பார்கள். வாரம் ஒரு முறை குந்தாணியில் நெல்லைக் குத்துவார்கள். உரலைவிட குந்தாணியில் நெல் குத்துவது குறைந்த சிரமம். வயலில் தங்கச் சம்பாவும், குதிரைவால் சம்பாவும் மாறி மாறி சாகுபடி. மண் குதிர்களில் சேமிக்கப்பட்ட பழைய நெல்லைக் குத்திப் புடைத்துத் தீட்டிய அரிசியில் தவிடு ஒட்டியிருக்கும். அப்பேர்ப்பட்ட கைக்குத்தல் அரிசியை சாதம் வடிக்கும்போது இளஞ்சூட்டில் வடித்த கஞ்சியை விரும்பினால் நாம் குடிக்கலாம். அப்படிப்பட்ட "வடிச்சகஞ்சி' அரை டம்ளர் தருவார்கள். ஹார்லிக்ஸ்களில் என்ன சத்து? கைக்குத்தல் அரிசி சாத-வடிச்ச கஞ்சிக்கு ஈடாகுமா? வடிச்ச கஞ்சி மதியம் 12 மணிக்குத்தான் கிடைக்கும்.
காலைச் சாப்பாடு மணக்கும் பழைய சோறு. இரவு மிகுந்த சாதத்தை நீர் ஊற்றி வைத்திருப்பார்கள். அரைத் தட்டுப் பழையதில் 2 கரண்டி கெட்டித்தயிர், உம்பளச்சேரி மாட்டில் கறந்த பாலில் தயாரான தயிரில் வெண்ணெய் மிதக்கப் பழைய சாதத்துடன் தளரப் பிசைந்து வடுக்கென வடுமாங்காயும் நறுக்கென மாகாணி ஊறுகாயும் தொட்டு, தொண்டையின் கீழ் இறங்கிய பழையமுது, மதியம் வரை தாங்குமே! மந்தை மந்தையாக மாடுகளை மேய்க்க இடையர்கள் ஓட்டிச் சென்றுவிடுவார்கள். அப்படிப் பசும்புல் இருந்தது. வயல்காடு 4-5 மைல் தூரம். மாடுகள் தினமும் 10 மைல் தெம்பாக நடக்குமே. மாட்டுக்கும் மனிதனுக்கும் நோய் நொடி வராத காலமாயிற்றே!
கொல்லைப் புறத்தில் எவ்வளவு பெரிய வைக்கோல் போர்! இன்றுள்ள நெல்லின் கதிர் 2 அடி கூட வளர்வதில்லை. அன்று ஐந்தடி உயரம்! பகலில் பசுக்கள் மேயப் போய்விடுவதால் 10 மாடுகளுக்கும் இரவுத் தேவைக்குப் போதுமான வைக்கோல் இருந்தது.
வீட்டிலிருந்து நெல் வயல் வெகுதூரம். ஆடி பிறந்தால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். முன்கூட்டியே வைகாசி-ஆனியில் விவசாய வேலை ஆயத்தமாகும். அந்தக் காலத்தில் நீண்ட காலப் பயிர் செய்வார்கள். பொங்கல் அறுவடைக்கு ஏற்ப ஆனி மாதமே நாற்றங்கால் தயாராகும். எங்கள் வயலுக்கு குளம்-ஆறு இரண்டு பாசனமும் உண்டு. ஆற்று நீர் குளத்தில் பாய்ந்து குளத்திலிருந்து வயலுக்குப் பாயும். பொங்கல் அறுவடை முடிந்ததும், வீட்டுப் பகுதியில் சேமித்து வைத்திருந்த தொழுஉரம்-மக்கிய மர இலைக்குப்பை, வீட்டுச் சாம்பல் கலந்த அக்கால என்.பி.கே. அதாவது நைட்ரஜன் - பாஸ்பரஸ்-பொட்டாஷ் பாக்கேஜ் மாட்டுவண்டியில் பயணமாகும். 10,15 நாட்கள் வரை தொடர்ந்து வண்டியில் கொண்டு செல்லப்பட்ட குப்பை உரம் வயலில் குவியல் குவியமாகத் கொட்டியிருப்பார்கள். அடுத்த கட்டமாக, காய்ந்துள்ள குளப் பகுதியிலிருந்து சில வண்டி வண்டல் அடிப்பார்கள். அடுத்த கட்டமாகப் புழுதிபட உழுவது. விவசாயத்திற்கு அடிப்படையான ஒரு தொழில்நுட்பத்தை வள்ளுவர் ஈரடியில் வாக்கு வழங்கியதை அப்படியே என் அக்கா கணவர் கடைப்பிடிப்பார்.
தொடிப் புழுதி கஃசா உணக்கின் 
பிடித் தெருவும் 
வேண்டாது சாலப் படும்.
இவ்வாறு கோடையில் உழுதுவிட்டு நாற்றங்கால் தயாராகும். நாற்றுப்பாவ இவ்வாறு உழுத வயலில் ஒரு பகுதியைத் தேர்வு செய்து பச்சை இலை, குலைகளை (எருக்கு, காட்டாமணக்கு, வாதாமடக்கி, பூவரசு, வாகை, கொன்றை என்று பலவாறாக) வெட்டிப்போட்டுக் குலை மிதித்துத் தண்ணீர் கட்டி அமிழ்த்திவிடுவார்கள். ஒரு வாரத்தில் குலைகள் அழுகிய பின் நீரும் இறங்கிவிடும். மீண்டும் உழவு செய்து பரம்படித்துப் பின் நெல் விதைப்பார்கள். நாற்று முற்றியதும் உழுது நடுவார்கள். 
பசுமைப் புரட்சி வந்ததும் நம் மரபுகள் மாறிவிட்டன. மாட்டு உழவு நின்றது. டிராக்டர் - டில்லர் உழவு. தொழு உரம், குப்பை குறைந்து, யூரியா, காம்ப்ளக்ஸ் கலப்பு உரம், டை-அம்மோனியம் பாஸ்பேட் பயன் மேலோங்கியது. எனக்கும் வயது கூடி, படிப்புக்காக நகர வாழ்க்கை, உத்தியோகம் என்று அலைந்து திரிந்து மனிதனானதும் எல்லோரையும் போல், ஆகா ஓகோ என்று பசுமைப் புரட்சியை வரவேற்று வாழ்க்கையை ஓட்டிவந்தேன்.
1990-க்குப் பின்னர்தான் பசுமைப் புரட்சி பற்றிய விமர்சனங்கள் நிறைய வந்தன. வந்தனா சிவா, கிளாட் ஆல்வாரிஸ், ஃபுக்குவோக்காவின் "ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூலும், ஹோவார்டின் "வேளாண்மை உயில்' என்ற நூலும் மிகச் சிறப்பானவை. இந்த இரண்டில் என்னை மிகவும் பாதித்தவர் சர் ஆல்பர்ட் ஹோவார்டு.
பசுமைப் புரட்சி தோன்றுவதற்கு முன்பே விவசாயத்தில் ரசாயனம் அறிமுகமானது. விவசாயத்தில் ரசாயன அறிமுகத்தை எதிர்த்துப் போராடியவர் ஹோவார்டு. இவர் 1906 முதல் 1920 வரை விவசாய ஆலோசகராகப் பணியாற்றிய விஞ்ஞானி. இந்தியாவில் விவசாயத்தில் அப்போது புதுமை என்ற பெயரில் ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் அறிமுகம் செய்ய அனுப்பப்பட்டவர், அவற்றை எதிர்த்துப் போராடிய புரட்சியாளராக மாறிய ஹோவார்டு கதையைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. ரசாயன விவசாயம் மண்ணை வளமிழக்க வைத்து மலடாக்கிவிடுமென்றும், பூச்சி மருந்துகள் விளைபொருளையும், மண்ணையும் விஷமாக்கிவிடும் என்று எச்சரித்ததோடு நில்லாமல், "விவசாயத்தை இந்தியர்களுக்கு கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை. மாறாக பிரிட்டிஷாராகிய நாம்தான் இந்தியர்களிடம் விவசாயத்தைக் கற்கவேண்டும்' என்றார்.
இந்தியாவின் பாரம்பரிய விவசாய நெறிமுறைகளைக் கூர்ந்து கவனித்து, நல்ல மகசூல் தரும் கம்போஸ்டிங் முறையை இந்தூரில் உருவாக்கி, இந்தூர் கம்போஸ்டிங் முறை என்ற பெயரில் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இயற்கை விவசாயத்தை பரவச் செய்தார். "உலக இயற்கை விவசாயத்தின் தந்தை' என்ற புகழுடன் அமரரானார். இவர் இந்தியாவில் மைய அரசுப் பணியிலிருந்தபடி அரசுக் கொள்கையை விமர்சித்ததால் பதவி பறிபோனது. எனினும், மத்திய இந்தியாவின் பருத்திக் குழு இவரை அரவணைத்துக் கொண்டது. தன்னுடைய கம்போஸ்டிங் ஆராய்ச்சிக்காக அன்று இந்தூர் மகாராஜா 100 ஏக்கர் நிலம் வழங்கினார். பல நூற்றுக்கணக்கான பசுமாடுகளை வளர்த்து ஊட்டமிக்க தொழுஉரம் தயாரித்தார். இத்தொழு உரத்தில் தழைச்சத்து அதிகம். கார்பன் குறைபாட்டை ஈடு செய்ய வைக்கோல், சோளம், கம்பு போன்ற தானியங்களின் தட்டை, பருப்பு வகைப் பயிர்களின் அறுவடைக் கழிவுகளின் உலர்ந்த சருகுகளுடன், ராக்பாஸ்பேட், எலும்புத்தூள் கலந்து உருவாக்கிய இந்தூர் கம்போஸ்ட்இவர் கண்டுபிடிப்பு. என்.பி.கே ரசாயன பேக்கேஜைவிட இந்தூர் கம்போஸ்ட் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று நிரூபித்தார்.
பசுமைப் புரட்சி மூலம் மண்வளம் வேகமாகச் சுரண்டப்படுவதை எடுத்துக்காட்டிய ஃபுக்குவோக்காவின் வைக்கோல் புரட்சித் தத்துவமும் இயற்கை விவசாயிகளைக் கவர்ந்தது. ஜப்பானிய காந்தி என்ற பெயரில் இந்திய விடுதலைக்குப் பின் இயற்கை விவசாயப் புரட்சிக்கு ஃபுக்குவோக்கா அடிகோலினார்.
இருப்பினும் விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய உழவியல் நுட்பங்களை விவசாய அதிகாரிகள் கற்றுத் தேறவேண்டும்"என்ற ஹோவார்டின் கருத்து என்னை மிகவும் கவர்ந்த ஒரே காரணம், அன்று என் அக்காவின் கணவர் செய்த உழவியல் நுட்பத்தை அப்படியே அவர் பதிவு செய்ததே. அவர் உதாரணமே. தமிழ்நாட்டு விவசாயிகளின் பாரம்பரிய முறையும் அதுவே. குறிப்பாக நெல் விவசாயத்தில் மண்வளத்தைக் காப்பாற்றக் குப்பை அடித்தல், வண்டல் அடித்தல், ஆரம்ப காலப் புழுதி உழவு, சேற்று உழவு, குலை மிதித்துப் பரம்பு அடித்தல், நடவு அவ்வளவுதான். நடவு செய்த பிறகு எந்த கவனிப்பையும் செய்வதில்லை.
பயிருக்கு வழங்க வேண்டிய உரங்களை ஆரம்பகட்டத்தில் கனமாக வழங்குவதை அவர் கவனித்துள்ளார். பூச்சி மருந்து எதுவும் அடிப்பதில்லை. அவ்வப்பொழுது நீர்க்கட்டி எனப்படுவோர் வயலுக்கு நீர்கட்டியும் வடித்தும் விடுவார்கள். இவ்வாறு அன்று களத்திலிருந்து எங்கள் பண்ணை வீட்டில் நெல் வந்து சேர்ந்தது. இன்று ஏகப்பட்ட செலவில் ரசாயன உரம் வாங்கி, பல தடவை பூச்சி மருந்து, களைக்கொல்லி எல்லாம் அடித்து முக்கி முக்கி ஏக்கருக்கு 20 மூட்டை நெல் அறுத்துப் போர் போட்டால் 50 கட்டுக்கு 5 அடி உயரம் கூட வைக்கோல் போர் இருக்காது. மாடுகளின் மாதத் தேவை கூடப் பூர்த்தியாகாது. அன்று தங்கச் சம்பா பயிரிட்டு ஏக்கருக்கு 30 மூட்டை நெல்லுடன், போர் போட்டால் 100 கட்டு வைக்கோல் மூலம் 15 அடி உயரத்துக்குப் போர் போட்டு ஆண்டு முழுவதும் பசுக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றினோமே! இப்படித் தங்கமாய் விளைந்த காலம் எல்லாம் இன்றும் பசுமையான பொன் நினைவுகளாக நிழலாடும் காட்சிகளை ஒரு தமிழனாகப் பெருமையுடன் நினைவுகூர்வதைத் தவிர, வேறு என்ன 
செய்ய முடியும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.