/

விவசாயத்தை அழிக்கும் பூச்சிகள்

புத்தியுள்ள மனிதன் வெற்றி காண்பதில்லை என்ற கருத்தின் இலக்கணமாக வாழ்ந்த அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா, இந்தியாவுக்கு வீரிய ரக நெல் 'ஐ.ஆர்.8' மற்றும் 'தைச்சுங்' ரகமும் தேவையற்றவை என்று எச்சரித்தார்.

News image
Updated On :19 ஜனவரி 2018, 8:02 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

புத்தியுள்ள மனிதன் வெற்றி காண்பதில்லை என்ற கருத்தின் இலக்கணமாக வாழ்ந்த அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா, இந்தியாவுக்கு வீரிய ரக நெல் 'ஐ.ஆர்.8' மற்றும் 'தைச்சுங்' ரகமும் தேவையற்றவை என்று எச்சரித்தார். 1959-இல் ஒடிசா மாநிலம், கட்டக்கில் இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இவர் இருந்தபோது, பசுமைப் புரட்சியின் தொடக்கமாக, சர்வதேச மணிலா அரிசி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து மேற்படி வீரிய ரக விதைகளை இறக்குமதி செய்து இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்று அப்போதைய மைய அரசு ஆணையிட்டது.
நம்மிடம் இப்படிப்பட்ட வீரிய ரகங்களுக்கு இணையான பல பாரம்பரிய நெல் ரகங்களை தான் கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும், இறக்குமதியாகும் 'ஐ.ஆர். 8', 'தைச்சுங்கு' வைரஸ் நோய்க்கு இரையாகும் என்றும், இந்தியாவுக்கு இவை தேவையில்லை என்றும் ரிச்சாரியா கூறினார். மேலும், மணிலா ஆராய்ச்சி நிறுவனத்தின் அன்றைய தலைவர் ராபர்ட் சாண்ட்லர் நெல்லைப் பற்றிய அறிவு இல்லாதவர் என்று கூறினார். வீரிய ரக நெல் விதை இறக்குமதிக்கு அனுமதி தர மறுத்துவிட்டதால், ரிச்சாரியா பதவியை இழந்தார். கட்டக் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா வெளியேற்றப்பட்டார். அந்தப் பதவி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
துங்க்ரோ வைரஸுடனும், டிரான்சிட்டர் வைரஸுடனும் இறக்குமதியான ஐ.ஆர்.8, தைச்சுங்-1 ரகங்கள் மூலம் உருவான உள்ளுர் கலப்பினங்களும், ஒரிஜினல் ஐ.ஆர்.8-உம் ஒரு பக்கம் அரிசி உற்பத்தியை உயர்த்தினாலும், மறுபக்கம் புகையான் நோயால் பாதிப்புற்றன.
இதுவரை பூச்சி மருந்து அடித்துப் பழகாத இந்திய விவசாயிகள், ஒவ்வொரு கிராமத்திலும் கழுத்தில் ஒரு பவர் ஸ்ப்ரேயரை மாட்டிக் கொண்டு,“பயிர் பாதுகாப்பு என்ற பெயரில், பல தரப்பட்ட விஷங்களை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கும் ஒரு புதிய பண்பாட்டை பசுமைப்புரட்சி உருவாக்கியது. இன்று பூச்சி மருந்து தெளிப்பு ஒரு தனித் தொழிலாகவே மாறிவிட்டது. 
எவ்வளவு பூச்சி மருந்துகள் தெளித்தாலும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி வளர்ந்து, பூச்சிகள் பெருகிவிட்டன. பூச்சிகளின் முக்கிய உணவு இலைகளே. அன்று ரிச்சாரியா எச்சரித்தார். உலகம் கேட்கவில்லை. இன்று பூச்சிகளும் விஷமான பூச்சிக்கொல்லிகளும் போடும் போட்டாப் போட்டியில் பூச்சிகளே வெற்றி பெற்றுவருகின்றன. பயிர்கள் அழிந்த வண்ணம் உள்ளன.
மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசாவுடன், நெல் மட்டுமே விளையும் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநில விவசாயிகள் பூச்சிகளின் பயிர் அழிப்பை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேற்படி மாநிலங்களில் கடுமையான வறட்சிக்குப் பின் பருவமழை முழுமையாகப் பெய்யாமல் குறைவாகவே பெய்துள்ளதால் பூச்சிகள் குதூகலத்துடன் பன்மடங்கு பெருகி நெற்பயிரை மேய்ந்து வருகின்றன. கோதுமைப் பயிரும் இரையாகிறது.
ஒடிசாவை எடுத்துக்கொண்டால், பழுப்பு நிறத் தத்துப் பூச்சிகள் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் நெல் வயல்களைத் தாக்கியுள்ளன. நவம்பர் இறுதியில் திடீர் மழை காரணமாக முழுமையாகப் பயிர் முற்றும் முன்பே அறுவடை நிகழ்ந்துவிட்டது. பலர் நெல் வயல்களை எரித்துவிட்டனர். தெலங்கானாவில் 1000 ஹெக்டேர் பாதிப்புற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளைமாவுப் பூச்சியின் தாக்குதல் கரும்பு, நிலக்கடலை, சோயா மொச்சை ஆகியவற்றை விட்டுவைக்கவில்லை. வெள்ளை ஈக்கள் வெங்காயத்தையும் நெல்லையும் அழித்தன. பச்சைக்கொம்புப் புழு கேழ்வரகைத் தாக்கியுள்ளது.
பல மாநிலங்களில் 'தூத்தா அப்சல்யூட்டா' என்ற புழு தாக்குகிறதாம்! நமது முன்னோர் வாழ்ந்த காலத்தில் இல்லாத பூச்சிகள் இன்றைய தலைமுறையில் புதிது புதிதாக அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்து காணப்படுவதால், ஒவ்வொன்றுக்கும் தமிழ்மொழியில் பெயர் சூட்ட முடியாமல் லத்தீன் விஞ்ஞானப் பெயரில் குறிப்பிட வேண்டியுள்ளது! தூத்தூ! இந்தத் தூத்தாவை அழிக்கும் மார்க்கம் தெரியவில்லையே!
தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரி, மிளகாயில் தூத்தா தூரெடுக்கிறது. தண்டுத் துளைப்பான், காய்ப்புழுக்களுக்கு மேல் தூத்தாவாம் தூத்தா. மேற்கு வங்கத்தில் பெயர், இனம் தெரியாத பல்வகைப் பூச்சிகள், நெல், கடுகு, பருப்பு வகைப் பயிர்களைத் தாக்கியவண்ணம் உள்ளன.
இன்றைய இந்தியாவில் வேளாண்மையில் உற்பத்தி குறைவதற்கு முக்கியக் காரணம், பூச்சிகளின் தாக்குதல் என்றால் மிகையில்லை. ஒரே வார்த்தையில் 'பசுமைப்புரட்சியின் விளைவு' என்று ஒரு பதில் சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிடுவதா? பூச்சியின் தாக்குதலால் அழிவது விவசாயம் மட்டுமல்ல; கூடவே விவசாயியும் அழிகிறான்! ரசாயன மனோபாவத்திலிருந்து விவசாயிகளை மீட்கும் நடவடிக்கை பற்றி சிந்திக்க வேண்டும். மருந்துக்குமேல் மருந்து, புதிய மருந்து என்ற பூச்சி மருந்து நிறுவனங்களின் விளம்பரங்களையே மதித்து விவசாய அலுவலர்களும் புதிய புதிய பூச்சி மருந்துகளை சிபாரிசு செய்கிறார்களே தவிர, விவசாயியை விடுவிக்கும் வழிகளை ஆராய்ந்து பார்ப்பது இல்லை.
'ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்' என்று வேளாண் வல்லுநர்கள் வகுத்தளித்த கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, உர மானியம், பூச்சி மருந்து மானியம், சொட்டு நீர்ப்பாசன மானியம், விதை மானியம் போன்றவற்றில் கவனம் செலுத்தி, எவ்வளவு கமிஷன் கறக்கலாம் என்றே வேளாண்மைத் துறை சிந்திக்கிறது. விவசாயத்துறையில் அலுவலர் வேலை வாங்குவதற்காக அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட லட்சங்களை எப்படி சம்பாதிப்பது என்று வேளாண்மை அலுவலர்களும், அரைத்த மாவையே அரைத்து, அரைத்துக் காலத்தை ஓட்டுகிறார்கள். இந்த நேரத்தில் மறந்து போன விஷயத்தை ஞாபகப்படுத்தி வைப்பது நமது கடமை.
வயல்வெளிப் பயிற்சி என்று ஒன்றுள்ளது. வட்டார அளவில் ஒரு விவசாய அலுவலர் பூச்சியியல் வல்லுநர் உதவியுடன் நேராகக் களத்துக்குச் சென்று, பயிரை நாசம் செய்யும் பூச்சிகள் எவை என்று விவசாயிகளுக்குப் பாடம் எடுத்து, அப்படி நாசம் செய்யும் பூச்சிகளைத் தின்று வாழும் அசைவப் பூச்சிகள் எவை என்றும் கண்டறிந்து, பயிரை நாசம் செய்யும் பூச்சிகளை ஆட்களைக் கொண்டு கையால் அழிக்கலாம். 
இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி ஆகியவற்றை அமைத்து சைவப் பூச்சிகளை அழிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளின் எதிரிகள் எண்ணிக்கை பெருகும் வண்ணம் ஒட்டுண்ணி அட்டைகளை வழங்கி வயல்களில் கட்ட வேண்டும்.
இவ்வாறு திட்டமிட்டுக் கண்காணித்தல் அவசியம். பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளான குருத்துப் புழு, குருத்து ஈ, தண்டுப் புழு , செம்பேன், கதிர்ப் புழு, கதிர் ஈ, கதிர் நாவாய்ப் பூச்சி, காய்ப்புழு, ஆகியவற்றை ஒழிக்கக் கூடிய பலதரப்பட்ட ஒட்டுண்ணிகள், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், நீள் கொம்பு வெட்டுக்கிளிகள் போன்றவற்றைப் பெருக்க வேண்டும். 
பூச்சி மருந்துகளைக் கையாளும்போது தீமை செய்யும் பூச்சிகளுடன் நன்மை செய்யும் பூச்சிகள் அதிக அளவில் அழிகின்றன. நன்மை செய்யும் பூச்சிகள், அதாவது தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழும் பூச்சிகளை ஆய்வகங்களில் வளர்த்து வயல்வெளிகளில் விடுவது நல்லது.
காலம் செல்லச் செல்ல பருவநிலை மாற்றம் கடுமையாவதாலும் வான வீதிகளில் நச்சு வாயுக்களின் கனம் கூடி வருவதாலும், குறிப்பாக, கார்பன்-டை-ஆக்ஸைடின் தாக்கத்தால் இலைகளில் இனிப்புச் சத்து கூடி நைட்ரஜன், அதாவது தழைச்சத்து, அளவு குன்றிவிடுகிறதாம். இலைகளில் தழைச் சத்து குன்றுவதால் தழைச்சத்தை நம்பி வாழும் பூச்சிகள் கூடுதலாக இலைகளையும் கொழுந்துகளையும் தின்கின்றனவாம். கூடுதலான வெப்பத்தைத் தொடர்ந்து, குறைவான மழைப் பொழிவு ஏற்படும்போது வெள்ளைப்பூச்சிகளின் (அஃபிடைட்) தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகமாகிறது. 
முடிவாக, இவ்வாறு காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பூச்சித் தாக்குதலுக்குரிய நிவாரணங்கள் எவை என்று கவனித்து, பின்வரும் யோசனைகளைச் செயல்படுத்தலாம்.
1. ஒரே நிலத்தில் ஒரே மாதிரியான ரகங்களைத் தொடராமல் மாற்று ரகங்களைத் தேர்வு செய்தல். குறுகிய கால பாரம்பரிய நெல் வகைகளைத் தேர்வு செய்யலாம். இன்று ஒடிசா, மேற்குவங்கம் பாரம்பரிய நெல் தேர்வில் இறங்கியுள்ளன. 
2. பயிர் சுழற்சி முறை, கலப்புப் பயிர், வலைப் பயிர் முறைகளைக் கையாளலாம்.
3. மண்ணில் நைட்ரஜனை சேமிக்கும் பருப்பு வகைப் பயிர்களைப் பயன்படுத்திப் பயிர் சுழற்சி செய்யலாம்.
4. மிகவும் முக்கியமாக ரசாயனப் பூச்சி மருந்துகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கம் தந்து, அப்படிப்பட்ட விவசாயிகளையே விரிவாக்கப் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும். 
மத்திய - மாநில அரசுகள், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உகந்த அளவில் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கூறியபடி மேற்கொள்ள வேண்டும். தவறினால் விவசாயம் தவறிவிடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.