ரோஸ்டர்... ரோஸ்டர்...ரோஸ்டர்!
இந்தியா, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தபோது, அதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த ஏனைய நாடுகளில் ஒன்று ஜனநாயகம் இல்லை அல்லது அறுபது எழுபது ஆண்டுகள்


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
இந்தியா, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தபோது, அதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த ஏனைய நாடுகளில் ஒன்று ஜனநாயகம் இல்லை அல்லது அறுபது எழுபது ஆண்டுகள் கழித்து ஜனநாயகம் மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறது.
இந்திய ஜனநாயகம் இந்திய அரசியல் சட்டம் என்கிற அச்சாணியின் கீழ் சுழன்று கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் தலைமையில் நிர்வாகம், பிரதமரின் தலைமையில் நாடாளுமன்றம், தலைமை நீதிபதி தலைமையில் நீதித்துறை என மூன்று அங்கங்களாகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளுடன் இயங்கி வருகிறது.
பொதுவாக நிர்வாகத் துறை என்பது, கண்ணுக்குத் தெரியாத "ஆக்டோபஸ்'சாக நாடாளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் வளைய வந்திருந்தாலும், வெளிப்படையாக நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டு, நிர்வாகத் துறை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ளது. பொதுவாக நிர்வாகத் துறை மற்ற இரு துறைகளுடன் வெளிப்படையாக மோதுவதில்லை.
இந்தியாவில் மட்டுமல்ல ஜனநாயகம் தழைத்தோங்கும் எல்லா நாடுகளிலும் நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் மோதல் ஏற்படுவது சாதாரண விஷயம். அப்படி மோதல் ஏற்படும்போது, இரு பக்கமும் அமைதி காத்து, பிரச்னையை வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்வார்கள். நீயா, நானா என்ற அதிகாரப் போட்டியிலும் தன்மானப் பிரச்னையிலும் ஈடுபடுவதில்லை.
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின்போது, நிர்வாகத் துறை விஸ்வரூபம் எடுத்துத் தன் இரும்புக் கரங்களால் இந்தியாவையே ஆட்டிப் படைத்தது. இதற்கு நீதித் துறையும் தப்பவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நிர்வாகம் நியமித்தாலும், அத்துறையில் பணி மூப்பு மிக பரிசுத்தமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது இரண்டாவதாக இருப்பவருக்கு ஒரு மாத காலமே பதவி என்றாலும்கூட அவர் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது மரபு.
இந்திய ராணுவத் தளபதி, மாநில காவல் துறை தலைவர் போன்ற முக்கியப் பதவிக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் இரண்டாண்டு பதவியில் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை தலைமை நீதிபதி விஷயத்தில் பின்பற்றப்படுவதில்லை.
நெருக்கடி நிலையின்போது வழக்கத்திற்கு மாறாக, தலைமை நீதிபதி ஓய்வு பெற்றபோது, அடுத்த மூத்த நீதிபதியையே தலைமை நீதிபதியாக நியமனம் செய்யாமல் வரிசையில் நான்காவதாக இருந்த நீதிபதி, தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். மூத்த நீதிபதிகள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். அடிபட்ட புலியாக நீதித் துறை காத்திருந்தது.
"இந்திய அரசியல் நிர்ணய சட்டம்' உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்பது பற்றி விரிவான விதிகளும் விளக்கங்களும் தன்னுள் கொண்டுள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன்னால் வந்த, நீதிபதிகள் தொடர்பான வழக்கில், நீதிபதிகளை நியமிக்கும் உரிமை தனக்கே உண்டு என்று சொல்லி, அந்த உரிமையைத் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய "கொலீஜியம்' என்ற அமைப்பிடம் கொடுத்தது.
இந்த கொலீஜியம் இந்திய நீதித் துறையின் முடிசூடா மன்னனானது. நிர்வாக அரசும், நாடாளுமன்றமும் கையைப் பிசைந்து கொண்டு இதை வேடிக்கைப் பார்க்க முடிந்ததே தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் நீதித் துறையில் பின்பற்றப்படும் நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்தபோது, நெருக்கடி நிலை ஞாபகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
விக்கிரமாதித்தன் சிம்மாசனம் புதைந்திருந்த மேட்டில் இருந்த விவசாயியைப் போல அது ஆட்சிக்கட்டிலுக்கு வந்த பிறகுதான் அதற்கு நீதித் துறையின் தாக்கமும் வீச்சும் தெரிந்தது.
நீதிபதிகளின் நியமனங்களைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்து, புதிதாக நீதிபதிகள் நியமன சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லி, நீதித் துறையின் மீதுள்ள தன் பிடிப்பை மேலும் இறுக்கிக் கொண்டது.
காலம் உருண்டோடியது. இப்போது பிரச்னை புதிய வடிவம் எடுத்திருக்கிறது.
இப்போதைய கலகம் நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையேயானதல்ல. பிரச்னை உச்ச நீதிமன்றம் நியமித்த கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகளுக்கிடையே - அதாவது தலைமை நீதிபதி தனியாகவும், ஏனைய நால்வர் தனியாகவும் "எரிந்த கட்சி, எரியாத கட்சி' எனப் பிளவுபட்டு நிற்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் அவரவர் நிலையில் சம அதிகாரம் படைத்தவர்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அனைவரும் சமம் என்றாலும், தலைமை ஆசிரியருக்குப் பணியின் காரணமாகக் கூடுதல் நிர்வாக அதிகாரம் உண்டு.
அதில் முக்கியமான அதிகாரம் எந்தெந்த நீதிபதிகள் எந்தெந்த வழக்கை விசாரிக்கலாம் என்கிற "ரோஸ்டர்' ஆகும். இதுவும் பொதுவாக தலைமை நீதிபதியால் நேரடியாகச் செய்யப்படுவதில்லை. இதற்கென்று விரிவான விதிமுறைகளும் நடைமுறைகளும் உண்டு. இதிலும் கூட, தலைமை நீதிபதியின் ஒப்புதலோடு உச்ச நீதிமன்ற நீதித் துறை பதிவாளர் செயல்படுவார்.
இங்கேதான் பிரச்னை ஆரம்பமாகிறது. தலைமை நீதிபதி தங்களைப் புறந்தள்ளி, தங்களைவிட இளம் நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை நடத்தத் தருகிறார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர் கொலீஜியத்தில் உள்ள ஏனைய நான்கு மூத்த நீதிபதிகள். "யாருக்கு என்ன வழக்கை விசாரிக்கத் தருவது என்பது எனது தனிப்பட்ட அதிகாரம். அதை நீங்கள் கேள்வி கேட்க முடியாது' என்கிறார் தலைமை நீதிபதி.
இந்த நால்வர் அணி நீதிபதிகள் தாங்கள் பல முறை நீதிபதியைச் சந்தித்து, தங்களுடைய ஆட்சேபனைகளைத் தெரிவித்தும், அவர் ஒற்றை மனிதனாகத் தாங்கள் சொல்வதற்கு செவி சாய்க்காமல் வரம்பு மீறிச் செயல்படுகிறார் எனப் பொதுவெளியில் இதுவரை இல்லாத அளவு குற்றச்சாட்டை வைத்து அனைவரையும் அதிர வைத்தனர்.
இது முறையா என்ற கேள்வி எழும்பொழுது அவர்கள் குடியரசுத் தலைவரிடமோ அல்லது பிரதமரிடமோ செல்ல முடியாது என்பதுதான் உண்மை. இவர்களின் குறை தீர்க்கும் மந்திரக்கோல் அவர்களிடம் இல்லை. இன்னும் ஆழ்ந்து நோக்கினால் இவர்களின் குற்றச்சாட்டு மறைமுகமாக ஆளும் அதிகாரத்தை நோக்கி நீள்கிறது. நம்முள் உள்ள கேள்வி இதுதான்:
உச்ச நீதிமன்றமே சகல அதிகாரம் படைத்த கொலீஜியம் என்ற அமைப்பை ஏற்பாடு செய்த பிறகு, தலைமை நீதிபதி அதற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா?
நீதிபதிகளை நியமிக்கும் உரிமை தலைமை நீதிபதிக்குக் கிடையாது, கொலீஜியத்துக்குதான் எனும்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் கொலீஜியம் வழிநடத்துவதுதானே சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.
அந்தக் கூட்டமைப்பு கூடிக் கலைவதில் பயன் என்ன? ஊரையெல்லாம் ""சமரச தீர்வு செய்து கொள்ளுங்கள்'' என்று வாய் கிழிய சொல்லிவிட்டு, ஐந்து நீதிபதிகளுக்குள் சமரசம் ஏற்படவில்லை என்றால் நாடு கை கொட்டிச் சிரிக்காதா?
அண்ணல் அம்பேத்கர் அன்றே எச்சரித்தார்: ""நாங்கள் சிறந்த அரசியல் நிர்ணய சட்டத்தைத் தருவதால் மட்டும் எந்தப் பலனுமில்லை. பின்னாளில் இதன் கீழ் செயலாற்ற வருபவர்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தால் அரசியல் நிர்ணய சட்டம் என்ன செய்யும்?''
இது எழுபது ஆண்டுகளில் பலித்துவிட்டது என்பதுதான் நம் ஜனநாயகத்தின் சோகம்.
கட்டுரையாளர்:
மூத்த வழக்குரைஞர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...