காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதால், அந்நாட்டின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என்று மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தன. பதில் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட்டில் இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியதும், அதற்கு பதிலடியாக காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனைச் சிறை பிடித்ததும், அவரை மீண்டும் ஒப்படைத்ததும் நடந்தேறின.
ஆனால், இந்தச் செய்திகள் வெளிவந்ததுமே, அறிவுஜீவித்தனமாகக் கேட்பதாக எண்ணி நமது வீரர்களைச் சிலர் கொச்சைப்படுத்த ஆரம்பித்தனர். ராணுவத்தின் நடவடிக்கைகளில் அரசியல் கலந்து அவர்களின் தியாகத்தை விமர்சித்தனர்.
இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், நமது ராணுவ வீரர்களை நம்ப முடியாது. பாகிஸ்தான் அரசு அறிவித்ததுதான் உண்மையாக இருக்கும் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். நமது ராணுவம் நடத்திய பதில் தாக்குதலை புல்வாமாவில் கொல்லப்பட்ட துணை ராணுவத்தினரின் குடும்பத்தினர் வரவேற்றனர். ஆனால், இதுபோன்ற பதில் நடவடிக்கைகளால்தான் ராணுவத்தினர் கொல்லப்படுவதாக அறிவுஜீவிகள் நீலிக் கண்ணீர் வடித்தனர்.
பாகிஸ்தான் பிரதமரின் பேச்சை அந்நாட்டு ராணுவத்தின் சார்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை அடைந்தனர். பயங்கரவாதத்தையும் நிகழ்த்திவிட்டு கொஞ்சமும் கூச்சமில்லாமல் சமாதானக் கொடியும் காட்டினார் இம்ரான் கான். அவரது வலையில் நமது அறிவுஜீவிகள் விழுந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நம் ராணுவத்தினரின் உயிர்த் தியாகங்கள்தான் நாட்டை வலிமையாக வைத்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
உள்நாட்டு பயங்கரவாதத்தாலும், ராணுவத்தின் தலையீடுகளாலும் பாகிஸ்தான் சின்னாபின்னமாகிக் கிடப்பதையும், இந்தியாவில் ஜனநாயகம் தழைத்திருப்பதால்தான் தங்களால் இப்படி சுதந்திரமாகத் திரிய முடிகிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
அதேபோல, இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருப்பதாகத் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தி, அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருவது சில அரசியல் பிரமுகர்களின் வாடிக்கையாகி விட்டது.
ஜம்மு-காஷ்மீர் எந்த நிபந்தனையுமின்றி 1947 அக்டோபர் 26-ஆம் தேதி இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட வரலாறு அவர்களுக்குத் தெரியாதா?
பொது வாக்கெடுப்பு தேவையென்றே வைத்துக் கொள்வோம். 1989-இல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் சொத்துகளை இழந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டார்களே, அதற்கு முன்னால் பொது வாக்கெடுப்பு பற்றி யாருமே ஏன் பேசவில்லை? ஒரு குறிப்பிட்ட சாராரைப் புறக்கணித்துவிட்டு, அங்கிருந்து விரட்டி அடித்த பிறகு வாக்கெடுப்பு குறித்து இனியும் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
காஷ்மீரில் வறுமை இருப்பதுதான் பயங்கரவாதத்துக்குக் காரணம் என்பது ஒருசாராரின் கண்டுபிடிப்பு. கடந்த 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் சராசரி விகிதம் 21.92 சதவீதம். ஏழ்மையான முதல் பத்து மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் இடம்பெறவில்லை. அந்த மாநிலத்தின் சராசரி 10.35 சதவீதம் மட்டுமே. அதோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் ஏழைகளின் எண்ணிக்கை (11.28 சதவீதம்) அதிகம்.
தவிர, காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் பயங்கரவாதத்தின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களிலும் அந்தந்தப் பகுதிகளின் உற்பத்திதான் வருவாய் ஈட்டித் தருகிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலோ நாட்டின் பிற மாநிலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் காஷ்மீர் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்லப்படுவது, உண்மையை மறைப்பதல்லாமல் வேறென்ன?
இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்திருக்கும் வரையில்தான் இத்தகைய வசதிகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதும், பாகிஸ்தானோடு சேர்ந்தால் ஏழ்மை குடிகொண்டு விடும் என்ற யதார்த்தம் அங்குள்ள மக்களுக்கும் புரிந்திருக்கிறது. காஷ்மீருக்கு வெளியே இருக்கும் அறிவுஜீவிகளுக்குத்தான் புரியவில்லை.
ஒருபுறம் நமது விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்த அதேநேரத்தில், மறுபுறம் சமாதானம் பேசும் தந்திரத்தையும் கையாண்டது.
இம்ரான் கான் கூறியபடி போர் தேவையில்லை என்பது உண்மைதான்.
ஆனால், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடாமல் சமாதானம் எப்படி சாத்தியமாகும்? அதேபோல, அபிநந்தனை விடுதலை செய்ததைக் கொண்டாடுவது சரியே. ஆனால், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரையும் இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து குரல் எழுப்புவது அவசியமல்லவா?
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்படுவது பெருமிதம் அளிக்கக்கூடியது. ஆனால், அதன் பெயரால் வேண்டுமென்றே உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதையும், தேச பாதுகாப்புக்கே சவால் விடுப்பதையும் சுதந்திரமாகக் கருத முடியவில்லை. கருத்து பயங்கரவாதமாக வேண்டுமானால் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்கள்: தேடுதல் பணி தீவிரம்

திருவண்ணாமலையில் விற்பனைக்காக மதுப்புட்டிகள் பதுக்கல்: 8 பெண்கள் உள்பட10 போ் கைது!

தூத்துக்குடி அருகே கடலில் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சேதம்






