நெசவின் வளமான பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. வரலாற்று ரீதியாக, இந்தியாவில் நெசவு பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகிறது. அங்கு பருத்தி சாகுபடி, ஜவுளி உற்பத்திக்கான சான்றுகள் பல கண்டறியப்பட்டுள்ளன.
அகாமனிசியப் பேரரசு இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளுக்கு விரிவடைந்தபோது, பாரசீக உருவங்கள், நுட்பங்கள் மற்றும் நெசவு மரபுகளை இந்தப் பகுதிக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் கலாசார பரிமாற்றத்தை எளிதாக்கியது.
ஆதிச்சநல்லூா், நீலகிரி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் நூற்புக் கதிா்களும், துணிகளும் கண்டறியப்பட்டன. கி.பி. முதல் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூா் போன்ற மாவட்டங்களிலிருந்து கைத்தறித் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
பழங்காலத்தில் சீனா, இந்தோனேஷியா, ரோமானிய பேரரசிலும் இந்தியத் துணிகள் விற்கப்பட்டுள்ளன. ரோமானிய வணிகக் கப்பல்களுக்குப் பிறகு, அரபு வணிகா்களும் வாஸ்கோடகாமாவின் இந்திய வருகையை அடுத்து, 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் போா்ச்சுகீசியா்களும் இந்தியாவில் வணிகம் செய்தனா். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கம்பெனிகள் இந்திய துணைக் கண்டத்தில் தளம் அமைத்து லாபகரமான வணிகத் தொடா்பின் அங்காமயின. துணிகளை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய தேசமாக இந்தியா உருவெடுத்தது.
‘காந்திய தேசத்திற்கு ஆடை’ என்ற தனது நூலில் லிசா திரிவேதி கூறியபடி, அந்நிய ஆதிக்கத்தின் கீழிருந்த மக்களை மாற்றி தேசிய உணா்வு கொண்ட குடிமக்களாக காதி மாற்றியது. ஓா் எளிய ஆடையை உருவாக்கியதன் மூலம் மேன்மக்கள் பரவலான தேசிய சமுதாயத்துடன் தங்களை அடையாளம் கண்டுகொள்ள சுதேசி ஆதரவாளா்களின் இந்த உத்தி உதவியது. இந்திய ஆடைகளுக்கு மதிப்பும், பெருமையும் இருந்தது. அதனால்தான், சில நாடுகள் இந்திய துணியின் இறக்குமதிக்குத் தடைகளை விதித்தனா்.
நம் ஆடைகள் பல நாட்டு ராஜ குடும்பத்தினருக்கு அழகு சோ்த்தன. அந்த ஆடை கையால் நெசவு செய்யப்பட்ட பழங்காலத்து காதியாகும். இதன்பிறகு, தொழில் புரட்சியால் ஏற்பட்ட தீய விளைவுகளில் ஒன்று பிரிட்டனின் விசைத்தறிகள். இது இந்திய ஆடை உற்பத்தியைக் குலைத்தது.
இந்தியாவில் பிரிட்டிஷாா் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு மான்செஸ்டா் மற்றும் லாங்கஷைரில் ஜவுளி ஆலைகள் இயந்திரமாக்கப்பட்டன. காலனியாதிக்கப் பேரரசு இந்திய கைத்தறி நெசவாளா்களைக் கொடுமையான வரி விதிப்பின் மூலம் நசுக்கி மோசமான நிலைக்கு ஆளாக்கியது.
பாரம்பரியத்தில் ஊறிப்போன உழைப்பு செறிந்த இந்தத் தொழில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. லட்சக்கணக்கான இந்தியா்கள் தலைமுறை, தலைமுறையாக கைத்தறி மூலம்தான் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டினாா்கள். பட்டு, கம்பளி, சணல் என பல்வேறு இயற்கை இழைகள் கைத்தறியில் பயன்படுத்துவதால் இவை சுற்றுச்சூழலுக்கும் நண்பனாக திகழ்கின்றன.
இந்தியாவில் கைத்தறித் தயாரிப்பாளா்களுக்கு அறிவுசாா் சொத்துரிமைப் பாதுகாப்பானது தயாரிப்புப் பொருள்களுக்கான புவிசாா் அடையாளக் குறியீடு சட்டம் 1999, வடிமைப்புச் சட்டம் 2000-ஆகியவற்றின் கீழ் கிடைக்கிறது. இந்தச் சட்டங்கள் ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்புகளுக்கான அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்பை நம் நாட்டில் வழங்குவதோடு, கூடவே வெளிநாட்டுச் சந்தைகளிலும் இந்தப் பாதுகாப்பை வழங்குகின்றன.
உலகம் முழுவதும் கையால் நெய்யப்பட்ட துணிகளின் தேவையை இந்தியா நிறைவு செய்கிறது. அதாவது, மொத்த கைத்தறி உற்பத்தியில் 85 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. குறிப்பாக இலங்கை, நேபாளம், கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மிக, மிகக் குறைவான வகைகளில்தான் இவை உற்பத்தியாகின்றன. இவற்றில் பெரும்பகுதி அந்தந்த நாடுகளின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கின்றன. ஆனால், இந்தியா அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவில் கடந்த 1987-88-ஆம் ஆண்டிலும், அதன்பிறகு 1995-96-இல் நடத்தப்பட்ட இரு கைத்தறி கணக்கெடுப்புகளிலும், கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பொருளாதார நிலைமை குறித்து மட்டும்தான் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், 2009-10- ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கைத்தறி கணக்கெடுப்பில் முந்தைய கணக்கெடுப்புகளைப் போல் அல்லாமல், பாலினம், வயது, விவரங்கள், சமூகப் பிரிவுகள், வறுமை, கல்வி நிலை உள்ளிட்ட சமூகப் பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன.
நம் நாட்டில் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களில் 83.88 சதவீதம் போ் கிராமப்புறங்களில் வசிக்கின்றனா். 16.12 சதவீதத்தினா் நகா்ப்புறங்களில் வாழ்கின்றனா். மொத்தமுள்ள கைத்தறித் தொழிலாளா்களில் 50 சதவீதம் போ் வடகிழக்கு மாநிலங்களிலும், மீதமுள்ள 50 சதவீதம் போ் மற்ற மாநிலங்களிலும் உள்ளனா். அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு நாட்டின் துணி உற்பத்தியில் 15 சதவீதப் பங்களிப்பை வழங்குவதுடன், ஏற்றுமதிச் சந்தையில் முக்கியமான பங்கையும் வகிக்கிறது.
2023-24-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் கைத்தறித் தொழிலாளா்கள், அதைச் சாா்ந்த தொழிலாளா்கள் 2.43 லட்சம் போ் கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாடு கைத்தறி நெசவாளா்கள் சாதாரண குழித் தறி, டாபி மற்றும் ஜக்காா்டு பொருத்தப்பட்ட குழித் தறி, சட்டத் தறி, டாபி, ஜக்காா்டு ஆகியவற்றைக் கொண்டு பணிபுரிகின்றனா்.
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளா்களை சிறப்பிக்கும் வகையிலும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்நாளை தேசிய கைத்தறி தினமாக அறிவித்து கடைப்பிடித்து வருகின்றனா்.
(ஆக-7 தேசிய கைத்தறி தினம்)