பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை. பலரது திறமைகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பாராட்டுவது நடைமுறை வழக்கமாக உள்ளது. மற்றவர்கள் நம் பணிகளை, செயல் நேர்த்தியைப் பாராட்டும்போது மனம் குளிர்ந்து போகிறது.
தொடர்ந்து அந்தப் பாராட்டை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம். குறிப்பாக, மாணவர்கள் தாங்கள் பாராட்டப்படுவதையும், புகழப்படுவதையும் பெரிதும் விரும்புகிறார்கள். ஆசிரியர்கள் பாராட்டும்போது மனதில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.
தன்னம்பிக்கையூட்டும் சொற்கள் நம் மனதை எழுச்சியுறச் செய்வது இயல்புதான் என்றாலும், எப்போதுமே எல்லோருமே பாராட்டிக் கொண்டே இருப்பார்கள் என்றோ, "உன்னால் முடியும் தம்பி. துணிச்சலாக களத்தில் இறங்கு; வெற்றி உனக்குத்தான்' என்று உற்சாக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே இருப்பார்கள் என்றோ எப்படி எதிர்பார்க்க முடியும்?
அப்படி ஊக்கப்படுத்த யாருமே இல்லாதபோது, ஊதப்பட்ட பலூனில் ஊசி குத்தியதைப்போல பலரும் உற்சாகம் வடிந்து போகிறார்கள்.
சாதனையாளர்கள், சான்றோர்களின் சுய முன்னேற்றப் பேச்சுகளைக் கேட்கும்போது, "நாமும் சாதிக்க வேண்டும்' என்று நீரூற்றுப்போல் பீறிட்டெழும் உற்சாகம், இரண்டொரு நாள்களிலேயே வடிந்து போய்விடுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நாம் செய்யும் செயல்களை யாராவது ஒருவர் பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும், நம் முதுகை தட்டிக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், நம்மை செயல்புரியத் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே இயலாமையின் வெளிப்பாடு அல்லவா?
"உனக்கு நீயே ஒளியாக இரு' என்றார் புத்தர். நமக்குள் இருக்கும் ஒளிதான் நம்மை வழிநடத்துகிறது. சமூகத்துக்குப் பயன்படும் வகையில் அல்லது நம் திறமைகளைப் பறைசாற்றும் வகையில் நம் செயல்பாடுகளை நாம்தான் வகுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் பாராட்டுகளையும், அறிஞர்களின்
உத்வேகமூட்டும் பேச்சுக்களையும் மனத்துக்குள் பொக்கிஷமாகச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளம் சோர்வடையும்போது, அந்த உத்வேகப் பேச்சுகளைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து நெஞ்சில் உரமேற்றிக்கொள்ள வேண்டும். எப்போதும் உயர்வான எண்ணங்களையே நம் மனத்தில் பதிய வேண்டும். எடுத்துக்கொண்ட செயலை குறித்த நேரத்தில் முடித்தே தீர வேண்டும் என்று சபதமேற்பது நல்லது. சிறந்த நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வது விரும்பத்தக்கது.
மனம் சோர்வுற்றிருக்கும் போதெல்லாம் நமக்கு நாமே புத்துணர்வூட்டிக் கொள்ள வேண்டும். காலார நடப்பது, இனிய இசையை செவிமடுப்பது, உடற்பயிற்சி செய்வது, இயற்கை அழகு மிளிரும் இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நல்ல நூல்களைப் படிப்பது என நமக்குப் பிடித்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர் மறையான எண்ணங்கள் மனத்தில் தோன்றும்போது, உடனடியாக ஒரு நேர்மறையான சிந்தனையை அதில் இட்டு நிரப்புவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கையே வாழ்க்கை; முதலில் நம் மீதே நமக்கு நம்பிக்கை வேண்டும். கட்டுப்பாடான வாழ்க்கை முறை, அன்றாடச் செயல்களை திட்டமிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பது, படிப்படியாக முன்னேறுவது, திறமைகளை கூர்தீட்டிக்கொள்ளும் பண்பு, உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொண்டால், சோர்வும் விரக்தியும் அவநம்பிக்கையும் நம் அருகேகூட நெருங்காது.
இரவு பகல், உயர்வு தாழ்வு, மேடு பள்ளம் என்பதுபோல நல்லதும் கெட்டதும் நிறைந்ததே வாழ்வு. எப்போதுமே கடும் வெயிலாக இருப்பதில்லை. அதேபோல, எப்போதுமே பலத்த மழையும் பெய்வதில்லை. எல்லாவற்றையும் சமமாகப்
பாவிக்கும் மனம் வாய்த்தால், அங்கு ஊக்கக் குறைவுக்கு வாய்ப்பே இல்லை. "மற்றவர்கள் பாராட்டினால்தான் உத்வேகம் கிடைக்கிறது; அறிஞர்களின் தன்னம்பிக்கை பேச்சுக்களைக் கேட்டால் மட்டுமே உற்சாகம் தூண்டப்படுகிறது' என்பவர்கள், தங்கள் மனத்தை பிறரிடம் அடகு வைத்தவர்களாகிறார்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், எதையும் உங்களால் சாதிக்க முடியாது. மனம் என்னும் "லகானை' உங்கள் கைப்பிடிக்குள் அடக்கி வைத்தால் மட்டுமே, எதைக் கண்டும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்குவது சாத்தியமாகும்.
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள்
கைவசமாவது வேண்டும்
என்றார் மகாகவி பாரதியார்.
செயலில் உறுதியும், விடாப்பிடியும் நிறைந்த மனத்தால் மட்டுமே விரும்பிய லட்சியங்களை எட்ட முடியும். அதற்கு மனத்தை எப்போதும் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். யார் திட்டினாலும், யார் வாழ்த்தினாலும், என் கடமையை நான் செய்வேன் என்ற உறுதிமொழியைப் பின்பற்றினால் மட்டுமே உயர் நிலையை எட்ட முடியும்.
இதைத்தான் வள்ளுவரும்,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
என்கிறார். எடுத்த செயலை முடிப்பதில் உறுதியான மன வலிமை மிக்கவர்களாக இருப்பவர்கள், தங்கள் எண்ணப்படியே அந்த இலக்கை எட்டிப் பிடிப்பர்.
உடற்பயிற்சி, தியானம் போன்றவை மன வலிமையை அதிகரிக்க உதவும் அற்புதப் பயிற்சிகள். இயன்றபோதெல்லாம் சாதனையாளர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பாருங்கள். இக்கட்டான தருணங்களில் அவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களில் நமக்கான பாடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் நம் மன வலிமையை அதிகரிப்பதற்கான மந்திரச் சொற்கள் ஏதேனும் கிடைக்கலாம்.
வெளிச்சத்தை வெளியே தேடாதீர்கள். அது உங்களுக்குள்ளேயே உறைந்து கிடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

நிதானமே பிரதானம்...

அறிவை வளா்க்கும் தரமானக் கல்வி, உயிரைக் காக்கும் மருத்துவம்: சீமான்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


