ஒரு நாட்டின் ரூபாய் மதிப்பு என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது வலிமையானதாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் சொல்லி வருகின்றன. அதேசமயம் ரூபாயின் மதிப்பு இறங்குமுகமாக இருக்கிறது என்பது கவலைக்குரிய செய்தி. 2018 முதல் இந்தச் சரிவு தொடர்கிறது. 1971-இல் முதன்முதலாக என்னை நாடாளுமன்றத்திலிருந்து அமெரிக்கா அனுப்பியது இந்திய அரசு. அப்போது ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 7.50 காசு. இப்போது நான் அமெரிக்கா செல்கிறேன். ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 97 ருபாய். ஆண்டுதோறும் தொடர்ந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், ராணுவத் தளவாடங்கள், தங்கம், மின்னணு சாதனங்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே இருப்பது டாலர் விலையேற்றத்துக்கு மிக முக்கிய காரணம்.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் சில நன்மைகளும் உண்டு. ஏற்றுமதி அதிகரிக்கும்; அந்நிய முதலீடு வரும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கூடும்; வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவோர் அதிக ருபாய் பெறுவதால் மகிழ்ச்சி அடைவர். இந்தியர்கள் அனுப்பும் பணத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு அவர்கள் அனுப்பும் ஒவ்வொரு டாலருக்கும் அதிக ரூபாய் கிடைக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகமாகிறது.
உலகில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு பணத்தைப் பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நம் நாட்டுக்கு 135 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 13 லட்சம் கோடி) அதிகமான தொகையை அனுப்பி இருக்கிறார்கள். ஆனாலும், இந்திய ரூபாயின் நிலை இந்திய பொருளாதாரத்துக்கு நிச்சயம் கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 97-ஆகக் குறைந்திருக்கிறது. 2026-ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்களுக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.04% வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு இதுவரை இந்தியா மேற்கொண்ட எந்த முயற்சியும் பெரிய அளவு பலன் அளிக்கவில்லை. உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு பொருளாதார நிபுணர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.
அதே சமயம் ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதன் பலன்கள் இன்னும் பெரிய அளவு நமக்கு வந்து சேரவில்லை. தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை அரசு இரு மடங்குக்கு மேலாக உயர்த்தி இருக்கிறது. அண்மைக்காலமாக நான்கு முறை பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது. அடுத்ததாக, சமையல் எண்ணெய் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் யோசித்து வருகிறது. இது போதாது என்று ரிசர்வ் வங்கி உள்நாட்டு நாணய சந்தையில் அவ்வப்போது டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் நிலைமையை சரி செய்ய முடியுமா என்று பார்க்கிறது.
6.06.1966 அன்று பிரதமர் இந்திரா காந்தி ரூபாயின் மதிப்பைக் குறைத்தார். இதன் விளைவாக ஒரு டாலரின் மதிப்பு 4.76 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக உயர்ந்தது. ரூபாயின் மதிப்பு 36.50% சரிந்தது. அதே வேளையில், ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு 57.40 % என உயர்ந்தது.
பிரதமர் இந்திரா காந்தியின் இந்த முடிவு நாடு முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதை முக்கியமாக எதிர்த்தவர் அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் மனுபாய் ஷா ஆவார்.
அமைச்சரவைக் கூட்டத்திலேயே தனது எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்தார். ரூபாயின் மதிப்பை வெறுமனே குறைப்பது மட்டும் ஏற்றுமதியில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு வழிவகுக்காது என்பது அவர் வாதமாக இருந்தது. ஆனால், நாணய மதிப்பிறக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏற்றுமதிகள் முன்னிருப்பதைவிட விரைவாக அதிகரிக்கத் தொடங்கின. அதே வேளையில் இறக்குமதிகள் குறைந்தன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய-நடத்தும் தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாதான் கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகத்தில் முதலிடம். கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 80 முதல் 85 சதவீதம் இறக்குமதியை நம் நாடு நம்பி இருக்கிறது. ஆண்டுதோறும் அதிகரிக்கும் இறக்குமதியின் விளைவால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது.
உதாரணமாக, வர்த்தகப் பற்றாக்குறை 2024-25-இல் 94 பில்லியன் டாலர் (ரூ. 9 லட்சம் கோடி), 2025-26-இல் 119 பில்லியன் டாலர் (ரூ. 12 லட்சம் கோடி). இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இதைத் தடுத்து நிறுத்துவது மிக அவசியம், அவசரமும்கூட.
தற்போதைய இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறைக்கு இது ஒரு முக்கியக் காரணம். இதனால், பங்குச் சந்தையில் ரூபாய் மதிப்பு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகழாண்டில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து 23 பில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். ரூபாயின் மதிப்பு சரிந்தது இதற்கு முக்கியக் காரணம். இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு டாலரில் கிடைக்கும் வருமானம் குறைகிறது. எனவே, அவர்கள் டாலருக்கு எதிராக அதிக நிலைத்தன்மை கொண்ட நாணயங்கள் கொண்ட நாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ரூபாய் மதிப்பு சரிவுக்கு உண்மையான காரணம் வெளிப்புற காரணிகள் மட்டுமல்ல, உள்நாட்டுக் கட்டமைப்புச் சரியாக இல்லாதது முக்கியக் காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள இந்த அரசு என்ன செய்தது என்று கேள்வி கேட்கிறார்கள்.
2025-ஆம் ஆண்டில் ஆசியாவில் மிக மோசமாகச் செயல்பட்ட நாணயம் இந்திய கரன்சிதான். 2026-லிலும் அதே நிலைமைதான். இந்தியாவின் இறக்குமதிச் செலவு ஒவ்வொரு மாதமும் ஐந்து பில்லியன் டாலர் அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள். இதுக்குக் காரணம் கச்சா எண்ணெய் எரிவாயு விலை அதிகரிக்கக் கூடிய நிலைமை என்பதுதான் என்கிறார்கள். அதே சமயம், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் 700 பில்லியன் டாலர். நிச்சயம் மிகப் பெரிய இருப்புதான். ஆனால், அது அளவுக்கு அதிகமான நம்பிக்கைக்கு வழியாகாது.
இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு. அதேசமயம் அதிநவீன தொழில்நுட்பத் துறையில் நமது பங்கு குறைவுதான். இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத் தயங்க கூடாது. அதேபோல், இறக்குமதிச் செலவு அதிகரிக்கும் போது அதிக டாலர்கள் செலவிடப்படுகின்றன. அதாவது, இந்தியா இன்னமும் ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்கிறது. இறக்குமதியை குறைத்து ஏற்றுமதிக்கான திட்டங்களை நாம் யோசிக்க வேண்டும்.
இந்திய ரூபாயின் மதிப்பு 100 என்ற அளவை எட்டக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பொருளாதாரம் செழிப்பாக இருக்கிறது என்று சொல்லும்போது ரூபாய் ஏன் வீழ்ச்சியடைகிறது என்ற கேள்விக்கு இந்திய அரசு சரியான விளக்கம் சொல்வதில்லை.
சமீபத்திய புள்ளிவிவரங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவைவிட அதிகமாக இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அப்படியிருந்தும், சில ஆண்டுகளாக ரூபாயின் மதிப்பு மட்டும் பலவீனம் அடைந்து வருகிறது. அமெரிக்கா புதிதாக இந்தியாவில் இருந்து வரும் பொருள்களுக்குக் கடுமையான இறக்குமதி வரி விதித்தது, வளைகுடா போர் போன்றவை அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பொருளாதார நிபுணர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் பல எடுத்துக்காட்டுகளைக் கூறுகின்றனர். மலேசியாவின் நாணயமான ரிங்கிட் கடந்த ஆண்டு 9.25% வலுவடைந்தது. அப்போது, இந்திய ரூபாயின் மதிப்பு 4.40% பலவீனம் அடைந்தது. இதேபோல் சீன நாணயமும் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான நிலையை எட்டி இருக்கிறது. சிங்கப்பூர் டாலரும் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவாக உள்ளது.
ஒரு அமெரிக்க டாலர் 1.28 சிங்கப்பூர்டாலருக்குச் சமம். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைச் சிங்கப்பூர் அரசு சரியாகப் பயன்படுத்தித் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை எல்லாமும் இந்திய அரசு கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் உற்பத்திச் செலவு குறைவு. இதைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் எல்லா உற்பத்திகளையும் பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். முடிந்த அளவு இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் ரூபாயின் மதிப்பு உயர்ந்தால்தான் இந்தியாவின் மதிப்பும் உயரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ. 95.38 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ. 95.21 ஆக நிறைவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.74! 56 காசுகள் சரிவு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



