லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

மருமகளும் தன்னைப்போல ஒரு பெண் என்பதை மாமியார்கள் உணர வேண்டும். வீடு, கார், வர்த்தக விரிவாக்கம் போன்ற பெயர்களில் வரதட்சிணை பெறுவது அவமானம் என்பதை இளைஞர்களும் உணர வேண்டும்.

News image

ட்விஷா சர்மா

Updated On :2 ஜூன் 2026, 2:55 am IST

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு "மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர மாடலாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த வழக்குரைஞர் சமர்த் சிங்கை கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது கணவரின் வீட்டில் கடந்த மே 12-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருமணத்தின்போதே கணவர் வீட்டார் சில லட்சம் ரூபாய் வரதட்சிணை வாங்கியதும் ட்விஷாவின் பெயரில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பங்குகளைத் தங்கள் பெயர்களுக்கு மாற்றித் தர கணவர் வீட்டார் வற்புறுத்தியதும், இறந்தபோது அவரது உடலில் 6 இடங்களில் காயம் இருந்ததும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ட்விஷாவின் கணவர் வழக்குரைஞர் என்பதாலும், அவரது மாமியார் கிரிபாலா சிங் போபால் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் என்பதாலும் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக ட்விஷாவின் பெற்றோர் கூறியது ஊடக வெளிச்சத்துக்கு வந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

புது தில்லியின் புறநகர்ப் பகுதியான கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தீபிகா நாகர் (25) கடந்த மே 17-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது திருமணத்தின்போது ரூ. 11 லட்சம் ரொக்கம், ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கம், ஸ்கார்பியோ கார் கொடுத்ததாகவும், அது போதாதென்று ரூ. 51 லட்சமும் ஃபார்ச்சூனர் கார் வேண்டும் என்றும் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி தனது மகளை வீட்டின் மாடியிலிருந்து கடந்த மே 17-ஆம் தேதி தள்ளிவிட்டு கொன்றுவிட்டனர் என்றும் கூறுகிறார் தீபிகாவின் தந்தை சஞ்சய் நாகர்.

இந்த வழக்கில் தீபிகாவின் கணவர் ரிதிக், மாமனார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றால், ட்விஷாவின் கணவர் சமர்த் சிங்கும், மாமியார் கிரிபாலா சிங்கும் பல நாள்களுக்குப் பிறகு அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, தமிழகத்தின் அவிநாசியிலும் 500 பவுன் தருவதாகக் கூறி 300 பவுன் போட்டதுடன் ரூ. 70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் அளித்து ரூ. 2.5 கோடி செலவு செய்து திருமணம் செய்த நிலையில் 200 பவுன் கேட்டு சித்திரவதை செய்ததால் திருமணமான 78 நாள்களிலேயே ரிதன்யா (27) கடந்த 2025 ஜூன் 28-ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேறினாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 2015-ஆம் ஆண்டில் 7,634-ஆக இருந்த வரதட்சிணை மரணங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது என்பது புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது. இப்போதும்கூட நாளொன்றுக்கு சராசரியாக 15 பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆர்பி) தரவுகளின்படி நாடு முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் 5,737 வரதட்சிணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் 2,038 பேரும், பிகாரில் 1,078 பேரும், மத்திய பிரதேசத்தில் 450 பேரும் உயிரிழந்துள்ளனர்.

என்சிஆர்பி தரவுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 163 படுகொலைகளும், ஒடிஸôவில் 161 படுகொலைகளும், ராஜஸ்தானில் 75 படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. ஒருசில வழக்குகள் மட்டுமே ஊடக வெளிச்சம் பெறுகின்றன.

வரதட்சிணைக் கொடுமையால் தினந்தோறும் தாக்கப்படும் பெண்கள் குறித்த தகவல்கள் வெளியே தெரிவதில்லை. பல லட்சக்கணக்கான பெண்கள் இன்னும் வரதட்சிணைக் கொடுமையையும் சித்திரவதையையும் அனுபவித்து வருகின்றனர்.

மருமகளிடம் வரதட்சிணை கேட்பவர்கள் பெரும்பாலும் மாமியார்களே என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. வரதட்சிணை என்ற பெயரைக் கூறாமல் உங்கள் பெண்ணின் எதிர்காலத்துக்காகவே கேட்கிறோம் என்றும் தனது மகன் வர்த்தகத்தை விரிவாக்கினால் தங்கள் மகளுக்குத்தானே நல்லது என்ற வகையிலும் மாமியார்கள்தான் பேரம் பேசுகின்றனர்.

திருமணத்தின்போது, எதிர்காலத்தில் கூடுதலாக இவ்வளவு நகை போடுகிறோம், கார் வாங்கித் தருகிறோம், வீடு கட்ட உதவுகிறோம் என்றெல்லாம் மணமகள் வீட்டார் அளிக்கும் வாக்குறுதிகளை பல நேரங்களில் கடும் நிதிச் சுமை காரணமாக நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது. இது புகுந்த வீட்டில் "வெறும் வாயை மெல்ல கிடைத்த அவலாக' மாறி சொற்களாலேயே இளம் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள்.

மருமகளும் தன்னைப்போல ஒரு பெண் என்பதை மாமியார்கள் உணர வேண்டும். வீடு, கார், வர்த்தக விரிவாக்கம் போன்ற பெயர்களில் வரதட்சிணை பெறுவது அவமானம் என்பதை இளைஞர்களும் உணர வேண்டும். இந்த சமூக அவலத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதுவே முன்னேறிய சமூகத்தின் அடையாளம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.