திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தீர்ப்பல்ல, முன்னேற்றத்துக்கான உரிமை!

கர்நாடக உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு குறித்த நடுப்பக்கக் கட்டுரை....

நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

அனந்தபத்மநாபன்

பணிபுரியும் பெண்களின் தொழில்சார் லட்சியங்களுக்கும் குடும்ப எதிர்பார்ப்புகளுக்கும் இடையே நிலவும் மெளனமான போராட்டம் குறித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒரு முக்கிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

குழந்தையின் பராமரிப்பு உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லலிதா கன்னேகந்தி, பிரிந்து வாழும் தனது மனைவி மகனுடன் வெளிநாடு செல்வதைத் தடுக்கக் கோரிய கணவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார். திருமணமும் தாய்மையும் ஒரு பெண்ணை ஒரே இடத்துக்குள் முடக்கி வைக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தன் குழந்தையின் எதிர்காலத்தை வளமாக்கும் தாயின் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டு முதல் கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மருத்துவரான அந்தத் தாய், மகனின் முதன்மைப் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். பிரிட்டனில் சிறந்த மருத்துவப் பணி வாய்ப்பு கிடைத்தபோது, மகனின் கடவுச்சிட்டை மற்றும் நுழைவு இசைவு பெறுவதற்காகக் கணவரின் சம்மதத்தைக் கோரினார். மும்பையில் வசிக்கும் அவரது கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தனது மகனை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லும் தாயின் முயற்சிகளை எதிர்த்து, குழந்தையின் இடைக்காலப் பராமரிப்பு உரிமையைத் தன்னிடம் வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினார்.

இதனால் அந்தப் பெண் தனக்கும், தனது மகனின் பயணத்துக்கும் தேவையான கடவுச்சிட்டை, நுழைவு இசைவு நடைமுறைகளை நிறைவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டார். குழந்தையின் தற்காலிகப் பராமரிப்பு தாய்வழி உறவினர்களிடம் இருந்த சூழலில், தந்தை தனது பராமரிப்பு உரிமையைக் கோரி நீதிமன்றத்தை அணுகினார். வெளிநாடு செல்வதால் குழந்தைக்குச் சிறந்த பொருளாதாரப் பாதுகாப்பும் உயர்ந்த கல்வி வாய்ப்புகளும் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டிய பெங்களூரு குடும்ப நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும், தந்தையின் கோரிக்கையை நிராகரித்தன.

அதே நேரத்தில், குழந்தைக்குத் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரின் அன்பும் கிடைக்க வேண்டும் என்பதிலும் நீதிமன்றம் மிகுந்த அக்கறை காட்டியது. குழந்தையின் பராமரிப்பு உரிமை தொடர்பான வழக்குகளில், பெற்றோருடனும் அதன் உறவு தொடர்ந்து பேணப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய நீதித் துறை படிப்படியாகச் சமநிலையான அணுகுமுறையை வளர்த்தெடுத்து வருகிறது.

குறிப்பாக, ரித்திகா சரண் எதிர் சுஜோய் கோஷ் (2020) வழக்கில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தாயுடன் குழந்தை வசிப்பதற்கு அனுமதி வழங்கியபோதும், தந்தையின் சந்திப்பு மற்றும் தொடர்பு உரிமைகளைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

பெற்றோர் இருவருடனும் இருக்கும் பாதுகாப்பான பிணைப்பு குழந்தைக்கு மன உறுதியை அளிக்கிறது என்பதையும், ஒரே இடத்தில் வசிப்பதைவிடப் பூசலற்ற தொடர்ச்சியான தொடர்பே மிக முக்கியமானது என்பதையும் நீதிமன்றங்களும் குடும்ப நல வல்லுநர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.

தந்தையும் மகனும் தினமும் குறைந்தபட்சம் 20 நிமிஷங்கள் தொலைபேசி அல்லது காணொலி மூலம் பேசுவதையும், பள்ளி விடுமுறை நாள்களில் எழுபத்தைந்து சதவீத நேரத்தைத் தந்தையுடன் செலவிடுவதையும் உறுதி செய்யும் நடைமுறை வழிமுறையை நீதிமன்றம் வகுத்துள்ளது.

சட்டபூர்வமான தீர்ப்பு தெளிவாக இருந்தாலும், அது வெளிப்படுத்தும் சமூக எதார்த்தம் மிகவும் சிக்கலானது. நகர்ப்புற மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் சில பிரிவுகளில் இன்றும் ஆண்கள் குடும்பத்தை நடத்துபவர்களாகவும், பெண்கள் வீட்டைப் பராமரிப்பவர்களாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இந்த எழுதப்படாத எல்லையைத் தாண்டி ஒரு பெண் செயல்படும்போது அதாவது கூடுதல் நேரம் பணிபுரியும்போதோ அல்லது கணவரைவிட அதிகம் சம்பாதிக்கும்போதோ அவர் மறைமுகமான எதிர்ப்பையும் குற்ற உணர்வையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பெண்களின் சாதனைகளை அணுகுவதில் நமது குடும்பங்களிடம் ஒரு விசித்திரமான முரண்பாடு காணப்படுகிறது. இந்தச் சூழலை மாற்ற நிறுவனங்களும் குடும்பங்களும் இணைந்து செயல்பட வேண்டும். அதேசமயம், பணிபுரிவதற்கான ஒரு பெற்றோரின் உரிமையையும், குழந்தையின் நலனைத் தீர்மானிக்கும் நீதிமன்றத்தின் சுதந்திரமான பொறுப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை என்றாலும், ஒன்று மற்றொன்றைத் தன்னிச்சையாக மீறிவிட முடியாது. பணிபுரியும் தம்பதியருக்கு ஆதரவாகப் பணியிடங்கள் நெகிழ்வான கொள்கைகள், இடமாற்ற உதவிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு வசதிகளை வழங்க வேண்டும். குறிப்பாக, தம்பதியர் பிரிந்து வாழும் சூழலில், ஒருவருக்கொருவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, குழந்தையின் நீண்டகால நலனுக்கு முன்னுரிமை அளிக்கும்போதுதான் கூட்டுப் பெற்றோர் பொறுப்பு வெற்றி பெறும்.

ஒரு தாய் தனது தொழில்சார் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னிறைவு பெறும்போது, அது குழந்தையின் வளர்ப்பிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பெண்களின் தொழில் முன்னேற்றத்தைத் தியாகம் செய்யச் சொல்வதற்குப் பதிலாக, மாறிவரும் காலத்துக்கேற்ப குடும்ப அமைப்புகளும் சமூக மனநிலையும் தங்களைத் தகவமைத்துக் கொள்வதே ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.

ஒரு தாயின் தொழில்சார் முன்னேற்றத்துக்கான உரிமையையும், குழந்தையுடன் இணைந்திருக்கும் தந்தையின் உரிமையையும் சமநிலையில் நிறுத்தி, நவீன பெற்றோர் பொறுப்புக்கு நீதிமன்றம் ஒரு சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. பெண்ணின் தொழில் வளர்ச்சியைப் போட்டியாகப் பார்க்காமல் குடும்பத்தின் பலமாகப் பார்க்க குடும்பங்கள் கற்றுக்கொள்ளும்போது, பெற்றோரும் குழந்தைகளும் இணைந்து செழிப்பார்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.