அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

சிந்திக்க மறக்கும் தலைமுறை...!

நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் அவசரத்தில், குழந்தைகளின் வசந்தகாலமான குழந்தைப் பருவத்தை அவர்களுக்கு அளிக்காமல் இருப்பது பெற்றோர் மட்டுமல்ல, சமுதாயத்தின் பிழையாகவும் கருதப்படுகிறது.

கோப்புப் படம்

Published On :

புத்தகத்தைத் திறந்து ஒரு கேள்விக்கான விடையைத் தேடிய காலம் மாறிவிட்டது. இன்று குழந்தையின் கையில் அறிதிறன்பேசி இருக்கிறது; அதன் திரையில் இணையம் இருக்கிறது; ஒரு சில விநாடிகளில் விடை சொல்ல செயற்கை நுண்ணறிவும் தயாராக இருக்கிறது. பள்ளிகளும் தொழில்நுட்பத் திறன்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளன.

2026-ஆம் ஆண்டுக்கான "இப்சோஸ்' ஆய்வின்படி, இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என 78 சதவீதம் பேரும், பள்ளிகளில் அறிதிறன்பேசிகளைத் தடை செய்ய வேண்டும் என 57 சதவீதம் பேரும் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தத் தடை தேவையில்லை என 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பத்தை முற்றிலும் மறுப்பதற்குப் பதிலாக, அதன் பயன்பாட்டை எவ்வாறு வரையறுப்பது என்பதே சமூகத்தின் அடுத்த கவலையாக மாறியிருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இந்தியா முழுவதும் 12,500 குடும்பங்களில் நடத்தப்பட்ட "பாரத் எக்டேட்' ஆய்வும் மற்றொரு முரண்பாட்டை வெளிச்ச மாக்கியுள்ளது. அறிதிறன்பேசிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளில் 94 சதவீதத்துக்கும் அதிகமானோர் சமூகவலைதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கல்வி சார்ந்த செயலிகளைப் பயன்படுத்துவோர் வெறும் 6 சதவீதம் மட்டுமே என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப் 2026 ஜூன் மாதம் வெளியிட்ட உலகளாவிய அறிக்கையின்படி, 10 நாடுகளில் சுமார் இரண்டு கோடி குழந்தைகள் செயற்கை நுண்ணறிவைத் தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். பெரியவர்களைவிட மூன்று மடங்கு வேகத்தில் குழந்தைகள் இந்தத் தொழில்நுட்பத்தை உள்வாங்கி வருவதாகவும், கல்வி மற்றும் வீட்டுப்பாடங்களுக்காக சுமார் 1.30 கோடி குழந்தைகள் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இன்றைய குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத ஒரு தொழில்நுட்பச் சூழலுக்குள் வளர்ந்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு "எப்படிச் சிந்திக்க வேண்டும்' என்பதை கற்றுக் கொடுப்பதற்குப் பயன்பட வேண்டுமே தவிர, "எதைச் சிந்திக்க வேண்டும்' என்பதைத் தீர்மானிக்கும் கருவியாக மாறிவிடக் கூடாது. தொழில்நுட்பம் குழந்தையின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்; அந்தப் படைப்பாற்றலுக்கு மாற்றாக அமைந்துவிடக் கூடாது என்பதே கல்வியாளர்களின் பெரும் கவலையாக உள்ளது.

கடினமான கேள்வி எழும்போது அதற்கான விடையைத் தேடி, முயன்று, தவறி, மீண்டும் சிந்திப்பதற்குப் பதிலாக, உடனடியாகச் செயற்கை நுண்ணறிவிடம் விடையைப் பெறும் பழக்கம் உருவானால், சுயமாக முடிவெடுக்கும் திறனும், தன்னம்பிக்கையும் குழந்தைகளிடம் குறைந்துவிடும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

புத்தகத்துக்கு ஓர் எல்லை இருக்கிறது. ஆனால், இணையத் திரைக்கு முடிவே இல்லை. ஒரு காணொலி முடிந்ததும் அடுத்தது ஒரு பதிவு} இப்படி ஒரு தேடலுக்குப் பிறகு மற்றொரு தேடல் எனச் சுழற்சியாகக் குழந்தையின் கவனம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறது.

குழந்தைகளின் இணையப் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடு அவசியமாகியுள்ளது. "ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் திரையைப் பார்க்கிறாய்' என்ற கேள்வியுடன் மட்டும் அது முடிந்துவிடக் கூடாது. "எதைப் பார்க்கிறாய், ஏன் பார்க்கிறாய், பார்த்த பிறகு எப்படி உணர்கிறாய், அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டாய்' என்று கேட்பது பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியர்களின் கடமையாகவும் மாற வேண்டும்.

பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவைக் கற்றுக் கொடுப்பதுடன் கல்வி முடிந்துவிடக் கூடாது. செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவலைச் சரிபார்ப்பது எப்படி? அதில் உள்ள பிழைகளைக் கண்டறிவது எப்படி? ஒரு பதிலை ஏன் நம்ப வேண்டும் அல்லது ஏன் சந்தேகிக்க வேண்டும்? சொந்தமாகச் சிந்தித்த பிறகே தொழில்நுட்பத்தின் உதவியை எப்போது நாட வேண்டும்? என்பதையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். "எப்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்?' என்பதுடன் "எப்போது பயன்படுத்தக் கூடாது?' என்பதும் கல்வியின் ஒரு பகுதியாக வேண்டும்.

மண்ணில் விளையாடும்போதுதான் ஒரு குழந்தை உலகத்தைத் தன் சொந்த அனுபவத்தின் வழியாகக் கற்றுக்கொள்கிறது. நண்பர்களுடன் சண்டையிட்டு, மீண்டும் சமாதானமாகும்போதுதான் உறவுகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்கிறது. தோல்வியடைந்து, காத்திருந்து, மீண்டும் முயன்று வெற்றிபெறும்போதுதான் பொறுமையும் தன்னம்பிக்கையும் உருவாகின்றன. இத்தகைய ஆழமான வாழ்க்கை அனுபவங்களுக்கு எந்தவொரு செயற்கை நுண்ணறிவுக் கருவியும் முழுமையான மாற்றாக இருக்க முடியாது.

நாளைய உலகில் எந்த வேலை இருக்கும்?, எந்தத் திறனுக்கு அதிக மதிப்பு இருக்கும்? என்பதை இன்றே துல்லியமாகக் கணிக்க முடியாது. செயற்கை நுண்ணறிவு பல பணிகளை மாற்றலாம்; புதிய பணிகளையும் உருவாக்கலாம். ஆனால், எந்தத் தொழில்நுட்ப மாற்றத்திலும் மாறாத சில அடிப்படை மனிதத் திறன்கள் உள்ளன. கேள்வி கேட்பது, சந்தேகிப்பது, சிந்திப்பது, கற்பனை செய்வது, பிறரைப் புரிந்துகொள்வது, தோல்வியிலிருந்து மீள்வது, புதிய தீர்வுகளை உருவாக்குவது ஆகியவை அவற்றில் அடங்கும்.

குழந்தைகளை இணையத்திலிருந்து முழுமையாகப் பிரிப்பது தீர்வல்ல. அதேபோல, அவர்களை இணையத்தின் கைகளில் முழுமையாக ஒப்படைப்பதும் தீர்வல்ல. தொழில்நுட்பம் குழந்தையின் வாழ்க்கையில் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும்; குழந்தையின் வாழ்க்கையையே தீர்மானிக்கும் சக்தியாக அது மாறிவிடக் கூடாது.

நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் அவசரத்தில், குழந்தைகளின் வசந்தகாலமான குழந்தைப் பருவத்தை அவர்களுக்கு அளிக்காமல் இருப்பது பெற்றோர் மட்டுமல்ல, சமுதாயத்தின் பிழையாகவும் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.