அப்போ மீத்தேன் இப்போ ஹைட்ரோ கார்பன்?

2010 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார்.
அப்போ மீத்தேன் இப்போ ஹைட்ரோ கார்பன்?

மீத்தேன் திட்டம்?

2010 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அப்போது அவர், "இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார். அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிக அளவில்  இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.

யார் இந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்?

YKM ஹோல்டிங்ஸ் இண்டர்னேஷனல் லிமிடெட் (YKM Holdings International Limited) என்ற லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனத்தின் துணை நிறுவனமான மேற்கு வங்காளத்தில் பதிவு செய்யப்பட்டு, ஹரியானா குருகிராமில் தலைமையிடமாக கொண்டு இயங்குவதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) (GEECL)  என்ற நிறுவனம் ஆகும். லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டில் இடம் பெற்ற முதல் இந்திய கம்பெனி என்ற பெருமையும் இந்நிறுவனத்திற்கு உண்டு. இதன் தலைவர் யோகேந்திர குமார் மோடி மற்றும் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் மோடி

மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச்சில் ஏற்கனவே ஒரு திட்டத்தை இந்நிறுவனம் செய்து கொண்டுள்ளது தற்போது, 2010 ஆம் வருடத்தில் மன்னார்குடி ப்ளாக் என்ற திட்டத்தில்  0.98 tcf (Trillion Cubic Feet) 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிய இருக்கும் திட்டம் அது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.

காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள்.இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது.அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

மீத்தேன் எடுக்கும் முறை:

மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது. இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் 'நீரியல் விரிசல்' முறையை பயன்படுத்துவார்கள். முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள். பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள். பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள். பின்னர் அந்த வேதிப் பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள். மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.

காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால், அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும். நிலம் உள்வாங்கும். பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும். மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும். இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது.

விளைவு என்னாவாக இருக்கலாம்?

35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள்.

மீத்தேன் திட்டத்துக்கு தமிழக அரசு தடை

மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் கடித எண் .F.No.J.11011/615/2010-1A11(1) இல் கடந்த 12, செப்டம்பர், 2012 அன்று அனுமதி அளித்தது. ஆனால் மக்களின் போராடத்திற்கு பின் நன்கு ஆராய்ந்த தமிழக அரசு அரசாணை G.O (D) No.186 Industries (MMA.1) Department நாள் 08.10.2015 மூலம் அனுமதியை மறுத்து விட்டது.

வெளிநாட்டில் மீத்தேன்/ஹைட்ரோ கார்பன் எவ்வாறு எடுக்கின்றனர்?

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில்  ஊரும்  வயல்வெளியும்  இணைந்தே இருக்கின்றன. ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை  அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.

அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.

நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால் தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரமும் சரிந்து விழும் வாய்ப்பு கூட உள்ளது..

முதலில் செய்தது அமெரிக்காதான்

1947-ல், அமெரிக்காவில் இருக்கும் கன்ஸாஸ் என்ற இடத்தில்தான் முதல்முதலில் இந்த முறை செயல்படுத்தப்பட்டது. அப்போது எண்ணெயை பயன்படுத்திதான் ஃப்ராக்ச்சரிங் செய்திருக்கிறார்கள். 1953ல் தான் நீருடன் சில கெமிக்கல்களை சேர்த்து பயன்படுத்தலாம் என கண்டுப்பிடிக்கப்பட்டது. ஹைட்ராலிக் ஃப்ராக்கசரிங் செய்யப்பட்ட கிணற்றில் இருந்து 90% அதிகமான வாயுவை எடுக்க முடியும் என்பதால் பெரும்பாலான இடங்களில் இதை பயன்படுத்துகிறார்கள்.

முதன் முதலில் ஸ்டானோலிண்ட் என்ற எண்ணெய் நிறுவனம் தான் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையை பயன்படுத்தினார்கள். ஆனால், இதன் பேடண்ட் உரிமை Halliburton Oil Well Cementing Company என்ற நிறுவனத்திடம்தான் இன்னமும் இருக்கிறது.

இதற்குத் தேவையான அதிக அளவிலான நீரை அங்கிருந்துதான் எடுப்பார்கள். பிராசஸ் முடிந்ததும் வெளியாகும் நீர், கெமிக்கல் கலந்தது. விஷத்தன்மை வாய்ந்தது. அதை வெளியேற்றுவதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. மேலும், பூமியை இப்படி செயற்கையாக வெடிக்கச் செய்வதும் ஆபத்தில் முடியலாம் என உலக விஞ்ஞானிகள் இந்த முறைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

நிலநடுக்கங்களுக்கு காரணம் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்தான்... தடை செய்த அமெரிக்க மாகாணங்கள்!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையை தடை செய்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஓக்லஹாமா, நியூயார்க் போன்ற அமெரிக்க மாகாணங்கள் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறைக்கு தடை விதித்திருக்கின்றன. அந்தத் தடைக்கான காரணம் என்ன தெரியுமா? அந்தப் பகுதிகளில் வந்த நில நடுக்கங்கள்.

2016ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கேன்ஸஸ், ஓக்லஹாமா உள்ளிட்ட பல பகுதிகள் நிலநடுக்கங்களை சந்தித்தன. அதற்கான காரணங்களை ஆராய்ந்த குழு, இயற்கை வாயு எடுக்க ட்ரில்லிங் செய்ததும், ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையும் தான் காரணம் என அறிக்கை தந்தது. அதன் அடிப்படையில் ஓக்லஹாமா மாகாணத்தில் இயங்கி வந்த 37 எண்ணெய் கிணறுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த 37 கிணறுகளிலும் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மத்திய மற்று கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் அதிகரித்திருக்கின்றன. 1970 முதல் 2000 வரை ஆண்டொன்றுக்கு 20 சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. 2010-2013 வரை எடுத்த அறிக்கையில் அந்த சராசரி 100ஐ தாண்டியிருக்கிறது. இதற்கு காரணங்களை ஆராய்ந்த இன்னொரு குழுவும் கைகாட்டியிருப்பது இயற்கை வாயு கிணறுகளைதான்.

நெடுவாசலில் எடுக்க திட்டமிட்டிருப்பது ஹைட்ரோ கார்பனோ, மீத்தேனோ.. அவை இயற்கை வாயுதான். அதற்கு இவர்கள் பயன்படுத்தப் போவதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றும் முறைகளைதான். அதில் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையும் அடங்கும்.

இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்து வைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!

மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்! 

"நரகத்தின் நுழைவாயில்" என்றழைக்கப்படும் துர்க்மென்ஸ்தானின் அணைக்க இயலா எரிவாயு பகுதி இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் என்ன நடந்தது ..!

அமெரிக்காவின் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த லா டோன்னா பிரேவ் என்கிற முதியவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் மிசோரி கடற்கரையை ஒட்டி தன் கூடாரத்தை அமைக்கிறார். அமெரிக்க அரசிற்கும், அது கொண்டு வந்திருக்கும் டகோடா பைப்லைன் திட்டத்திற்கும் எதிரான பதாகைகளை கூடாரத்தைச் சுற்றி அமைக்கிறார்.

"பல்லாயிரம் ஆண்டுகளாய், பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த நாட்டைப் பிடுங்கினீர்கள். இனத்தை அழித்தீர்கள். இன்று, எங்கோ ஒதுங்கி வாழும் இடத்தையும், நாங்கள் குடிக்கும் நீரையும் அழிக்க முயல்கிறீர்கள். இதற்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம்..." என்ற அவரின் போராட்டக் குரலைக் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. கூடாரம் அமைக்கிறது. ஒரு கட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவிலான அந்த நிலத்தில் பத்தாயிரம் பூர்வகுடிகள் கூடாரங்கள் அமைத்துப் போராடத் துவங்கினார்கள். "தி ஸ்டாண்டிங் ராக் ப்ரொடஸ்ட்" (The Standing Rock Protest) என்றழைக்கப்படும் இந்தப் போராட்டம் அமெரிக்க வரலாற்றின் முக்கியப் போராட்டங்களில் ஒன்று.

"இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவிலான எரிவாயு கடத்தப்படும். சிறிதளவேனும் சிந்தினால் கூட 5 நொடிகளில் ஒரு பள்ளிக்கூடமே தரைமட்டமாகிவிடும். 50 நிமிடங்களில் மிசோரி ஆறு முற்றிலும் நாசமாகிவிடும்." என்று இதை எதிர்க்கும் பூர்வகுடிகள் சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட 10 மாதங்களாக கொட்டும் பனியில் தொடர்ந்து போராடி வந்தார்கள் பூர்வகுடிகள். குறிப்பிட்ட அளவிலான அமெரிக்க வெள்ளையர்களும் இவர்களுக்கான ஆதரவைத் தந்தனர். பலர் மிஸோரி ஆற்றில், படகுகளில் இருந்தபடியே நாட்கணக்கில் போராடினார்கள். பூர்வகுடிகள் மீதான கோபத்தில் அவர்களின் புனித ஸ்தலங்களை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியது அமெரிக்க அரசாங்கம். ஹாலிவுட் நடிகை ஷெயிலின் உட்லி இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான போது, அது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இப்படியான தொடர் போராட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தை லேசாக அசைத்துப் பார்த்தது.

டிசம்பர் மாதம், ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்னர், பைப்லைன் கட்டுமானத்திற்கான இடைக்காலத் தடையை விதித்தார். மேலும், அமெரிக்க ராணுவத்தின் பொறியியல் வல்லுநர்கள் இந்தத் திட்டத்தில் இருக்கும் குறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். சிலர் போராட்டத்தைக் கைவிட்டாலும் கூட, பலர் திட்டம் நிரந்தரமாகக் கைவிடப்பட வேண்டும் என்று உறுதியாகப் போராடினார்கள்.

ஜனவரி 20 ஆம் தேதி, அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப், நான்கே நாட்களில் இந்தத் திட்டத்தின் மீதிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். அப்படி அவர் செய்ததற்கு, இந்தப் போராட்டத்தின் வீச்சு காரணம் அல்ல. அதில் அவருக்கு இருந்த பொருளாதார லாபமே காரணம். 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களில் (Energy Transfer Partners)  ட்ரம்ப் முக்கியமான பங்குதாரர்.

'ஹைட்ரோ கார்பன்'

கடந்த 15-ம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் 'ஹைட்ரோ கார்பன்' எனும் 'இயற்கை எரிவாயு' எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சுற்றியுள்ள 13 இடங்களில் 'ஹைட்ரோ கார்பன்' எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கிற கோரிக்கையோடு கடந்த 16-ம்தேதி நெடுவாசலில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை துவங்கினர்.

10 வருடங்களுக்கு முன், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு, வடகாடு, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில், மண்ணெண்ணெய் எடுப்பதாக நிலங்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குத்தகைக்கு வாங்கினார்கள். அதில் சில இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, ஆய்வு செய்ததுடன், அந்த நிலங்களில் எண்ணெய், எரிவாயு சோதனை செய்து வந்தனர்.  இப்படிப்பட்ட நிலையில்தான், மண்ணெண்ணெய் எடுப்பதாக வாங்கிய நிலங்களில், 'ஹைட்ரோ கார்பன்' எரிவாயு எடுக்க உள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இப்போதைய ஒப்பந்ததாரர்கள் யார்?

இப்பொதைய ஒப்பந்ததாரர்கள் அதானி நெல்ஸ்பர்ன் எக்ஸ்ப்ளோரேஷன் லிட் (Adani Welspun Exploration Limited). அதாவது நம் பிரதமரின் நண்பர் கௌதம் அதானியின் நிறுவனம் Adani Gas Ltd ஆகும். இவர்களுக்கு கேஸ் விநியோகம் மட்டுமே தெரியும். அதனால் WELSPUN ENTERPRISES LTD கம்பெனியின் சந்தீப் கார்குடன் சேர்ந்து அதானி நெல்ஸ்பர்ன் எக்ஸ்ப்ளோரேஷன் லிட் தொடங்கினர்.

அவர்களுடன் பெங்களூரைச் சேர்ந்த gem laboratories pvt. Ltd இணைந்து இந்த ஒப்பந்தங்களை செய்துள்ளனர். இந்நிறுவனம் 12, ஜூலை, 2016 வரை மத்திய கனரக அமைச்சராக இருந்த G. M. சித்தேஸ்வராவுக்கு சொந்தமானது..

நியமகிரி மலைத்தொடர் மக்களின் செயல்பாடுகளைப் பின்பற்றலாமே..!

ஒரிஸா மாநிலம்,  ராயகாடா மற்றும் கலாஹஸ்தி மாவட்டங்களில் இருக்கிறது நியமகிரி மலைப்பகுதி, இங்கு  டோங்கிரியா கோண்ட் என்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதி. கடந்த     2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த டோங்கிரியா கோண்ட் பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெறும் 7952 பேர் மட்டுமே. இவர்கள் சட்டப்படி பாதுகாக்கப்படவேண்டிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மக்களுக்கு நீரானது உற்பத்தியாகிச்செல்லும் நீரோடைகளும், மலையிலுள்ள மரங்களும்தான் கடவுள். வனப்பகுதியில் உள்ள சூழ்நிலையை இவர்கள் ஒருபோதும் சீண்ட நினைத்தது இல்லை. இதனால்தான் அடர்ந்த சோலையாகவும், பசுமையான வனமாகவும் காட்சியளிக்கிறது, இம்மலைத்தொடர். ஆந்திராவில் பாயும் வம்ஷதாரா நதியும் இம்மலையில் இருந்தே உற்பத்தியாகிறது. 

கடந்த 2000-ம் ஆண்டு ஒரிஸாவின் கனிம வளத்துறை நிறுவனம் நியமகிரி மலைத்தொடரில் 150 மில்லியன் பாக்சைட் இருப்பதாகக் கண்டறிந்தது. அதன்பின்னர், 2003-ம் ஆண்டு கலாஹந்தி மாவட்டம், லஞ்சிகார்க் என்ற இடத்தில் அலுமினியம் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக வேதாந்தா எனும் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அலுமினியத்தைச் சுத்திகரிப்பதற்கான முக்கியமான கனிமப்பொருள் 'பாக்சைட்'. இதன் காரணமாக மிகப்பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை வேதாந்தா நிறுவனம் நிறுவியது. அதன்பின்னர் இந்நிறுவனம் நியமகிரி மலைப்பகுதியில் பாக்சைட் வெட்டி எடுப்பதற்கான திறந்தவெளி சுரங்கம் அமைப்பதற்காக அனுமதியை ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களோடு இணைந்து விண்ணப்பித்தபோது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதோடு நின்றுவிடாமல் பாக்சைட்டை திறந்தவெளி சுரங்கம் அமைத்து வேதாந்தா நிறுவனம் எடுத்தது.

அலுமினியம் சுத்திகரித்த கழிவுகள்  ஆற்றங்கரையின் ஒரங்களிலும், நீரோடைகளிலும் கொட்டப்பட்டது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அங்கிருந்த நீரோடைகள் அனைத்தும் செந்நீரோடைகளாக மாறியது. இதனால் உச்ச நீதிமன்றம் 2005-ம் ஆண்டு நியமகிரி பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைத்தது. அந்தக் குழு வேதாந்தா நிறுவன ஆலையால் வெளியேறும் கழிவுகளால் நியமகிரி மலைத்தொடரின் இயற்கை வள பாதிப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் நியமகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆலையால் வாழும் மக்களின் உடை, உணவு மற்றும் வம்ஷதாரா ஆறு ஆகியவற்றில் தூசு மற்றும் மாசுக்கள் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழு ஒருவருடம் ஆய்வு நடத்தி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியை விரட்டும் விதமாக 'நாட்டின் வளர்ச்சி கருதி' என்ற பெயரில் மலைவாழ் மக்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. 

பாதிக்கப்பட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் 2013-ம் ஆண்டு கிராமசபைக்கூட்டங்களை கூட்டினர். இதில் உச்ச நீதிமன்றம், கூட்டங்களை கண்காணிக்கக் குழுவினை அனுப்பியது. கிராமசபைக் கூட்டத்தில் வாக்களித்த டோங்கிரியா கோண்ட் பழங்குடி மக்கள் வேதாந்தா பாக்சைட் சுரங்கத்துக்கு எதிராகவே வாக்களித்து தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது கண்காணிப்புக்குழு. இதனையடுத்து மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது, அதனுடன் பாக்சைட் எடுக்கும் பணியும் தீவிரமடைந்தது. இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கிராமசபைக் கூட்டத்தின் முடிவே இறுதியானது எனத் தீர்ப்பளித்து, நியமகிரி மலையில் பாக்சைட் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. 

கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?

கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 73-வது சட்டத்திருத்தத்தின் படி 11-வது அட்டவணையில் பஞ்சாயத்துகளின் ஆற்றல் என்னென்ன வென்று விளக்கப்பட்டுள்ளது அதன்படி கிராமசபா கூட்டத்தில், 'விவசாயம் பாதிக்கப்படுவதால் எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!

C.P.சரவணன், வழக்கறிஞர், 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com