ஆனால், முதலாளியால் கொடுக்கப்பட்ட முன் பணம் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் தொடர்ந்து அங்கேயே வேலை செய்தாக வேண்டும், தொடர்ந்து வேலைக்கு வர வேண்டும், விடுமுறை எடுக்கக்கூடாது, கொடுக்கும் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மறுத்துப் பேசினால் அடி, உதை நிச்சயம் அல்லது பொய்யான புகாரின் பேரில் தண்டிக்கப்பட நேரிடும். இதற்கு உறுதுணையாக வெற்று புரோநோட்டு, வெற்று பத்திரங்கள் ஆகியவற்றில் குடும்ப தலைவன், மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று ஒரு கூட்டத்திடமே கையெழுத்து வாங்கி வைத்திருப்பார்கள். தொழிலாளி எப்போது எதிர்க்க நினைகிறானோ அப்போது அந்த ஆவணங்கள் பேசும். இப்படி கையொப்பம் பெற்ற வெற்று புரோ நோட்டுக்களைப் பயன்படுத்தி வழக்கு தொடர்ந்து தொழிலாளிக்குச் சொந்தமாக இருக்கும் மூதாதையர்களால் வழங்கப்பட்ட நிலம், வீடு போன்ற சொத்துக்கள் கைப்பற்றப்படும். வெற்று பத்திரங்களில் இட்ட கையெழுத்துக்களை பயன்படுத்தி சொத்துக்களை எழுதித் தந்ததாகவும், அடகு வைத்ததாகவும், ஆவணங்கள் தயாரித்து சொத்துக்கள் அபகரிக்கப்படும். இறந்து போன கணவன் பட்ட கடனுக்காக மனைவி அடிமையாகி கட்டாய உழைப்பிற்கு ஆளாவது உண்டு. அது போல தகப்பன் பட்ட கடனுக்காகப் பிள்ளைகள் அடிமையாக உழைக்க நேர்வதும் உண்டு. இது இந்தக்கால கொத்தடிமை முறை.