கடனை அடைக்க முடியாததால் இவர்கள் நிரந்தர கொத்தடிமைகளா?

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மண்ணில் பஞ்சம் பிழைக்க பல பேர் வருகிறார்கள்.
கடனை அடைக்க முடியாததால் இவர்கள் நிரந்தர கொத்தடிமைகளா?

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மண்ணில் பஞ்சம் பிழைக்க பல பேர் வருகிறார்கள். ஆனால், வளம் கொழிக்கும் இதே மண்ணில் வறுமையின் காரணமாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பசியோடும் பட்டினியோடும் பலவித இன்னல்களுக்கு ஆளாகி அல்லாடிக்கொண்டிருக்கும்  பிஞ்சுக் குழந்தைகள் கொத்தடிமைகளாய் இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாத உண்மைகளாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் என்பது 9 தாலுக்காக்களையும் 14 ஊராட்சி ஒன்றியங்களையும் 906 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்ட மாவட்டமாகும்.

விவசாயமும் அது சார்ந்த ஆடு மாடு வளர்ப்பும் சார்புத்தொழிலாக இருக்கிறது.

விவசாய அறுவடைக்கு பின்னுள்ள கோடைகால நாட்களில் நிலங்களில் ஆடுகளையும், மாடுகளையும் பகலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இரவு நேரத்தில் கால்நடைகளை நிலத்துச் சொந்தக்காரரின் வேண்டுகோளுக்கிணங்க மந்தையாக தங்கவைப்பது (கிடை போடுவது) என்பது ஒரு தொழில். இப்படி தங்க வைப்பதால் கால்நடைகளின் உரிமையாளருக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயமும் அது சார்ந்த உப தொழில்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விவசாயம், விளைச்சல், அறுவடை என்பது ஒருவித தொழிலாகவும், ஆடுமாடுகள் மேய்ப்பது அவற்றை பராமரிப்பது என்பது மற்றொரு வகையான தொழிலாகவும் இருக்கிறது.

கீழத்தஞ்சை பகுதியில் விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரமாக கடைமடைப் பகுதி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 10 கிராமங்களிலிருந்து மாடுகளை சேகரித்து ஒருவர் பாதுகாப்பில் மேய்ச்சலுக்கும், கிடை மடக்கவும் பயன்படுத்திவிட்டு விவசாயம் தொடங்கும்போது மாடுகளை அவரவர் வீடுகளில் கொண்டுபோய் சேர்த்து விடுவார்கள். இதன் மூலம் மாடுகளின்  உரிமையாளர்களுக்கு இலவசமாய் மாடுகள் மேய்ச்சலுடன் பாதுகாப்பாய் இருப்பதுடன், பசுமாடுகளின் இனச் சேர்க்கையும் இலவசமாய் நடந்துவிடுகிறது. மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றவருக்கு ஆங்காங்கு கிடைமடக்கிய வருமானமும் கிடைத்துவிடுகிறது. இது ஒரு தொழில். அதே போல ஆடுகளை கிடை மடக்கவும் செய்து வருமானம் ஈட்டுவார்கள். அதன் பின் ஆடுகளை கறிக்காக விற்று விடுவார்கள். இது ஒரு வகையான தொழில்.

காலச்சூழலில் விவசாயம் பொய்த்துப் போனதால் அதுசார்ந்த கால்நடை வளர்ப்பும் குறைந்துவிட்ட நிலையில், இயற்கை உரமான கிடைமடக்கும் சூழலும் இல்லாமல் போகிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக தஞ்சை பகுதிக்கு வருகிறார்கள். இங்குள்ள சில விவசாயிகள் இந்த செம்மறி ஆடுகளை கிடை மடக்கச்செய்து விவசாயத்திற்காக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதே போன்று கரும்பு வெட்டவும், கருவேலமரங்கள் வெட்டவும் அவற்றை எரித்து கரிக்கொட்டையாகவும், செங்கல் சூளை வேலைக்காகவும் ஆட்களை அழைத்து வந்து தங்க வைத்து வேலை வாங்குவார்கள்.

இப்படி வருவோர்கள் பெரும்பாலும் இருளர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வகுப்பினரே அதிகமாக இருக்கிறார்கள். 

இவர்களின் வறுமையின் காரணமாகவும் குடும்ப தேவையின் காரணமாகவும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலும் ஏஜெண்டுகள் மூலமாக முன்பணம் பெற்றுக் கொண்டு ஆண், பெண் குழந்தைகள் என குடும்பமாகவோ, அல்லது குழந்தைகளை மட்டுமாவது அனுப்பிவைத்து வேலை செய்து கடனை அடைக்க வைப்பார்கள்.

இவ்வாறு வேலைக்கு வருவோர் யாருமே வாங்கிய முன் பணத்திற்கு வட்டிக்காக மட்டும் வேலை செய்வார்கள். முதலில் வாங்கிய முதலீடு அது நிரந்தரக் கடனாகவே இருக்கும்.

கடனை அடைக்க முடியாததால் இவர்கள் நிரந்தர கொத்தடிமைகளாக உழைப்பை மட்டுமே வழங்கி கொண்டிருப்பார்கள். 

இவர்களுக்கு சரியாக உணவு கொடுக்க மாட்டார்கள். அப்படி கஞ்சியோ கூழோ கொடுத்தால் அதையும் கணக்கில் ஏற்றி கடனை பெருக்கி கொள்வார்கள்.

காலை முதல் இரவு வரை வேலை செய்துக் கொண்டே இருக்க வேண்டும். தங்குவதற்கு பாதுகாப்பான இடம் கிடையாது. வேலை செய்யும் இடத்திலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

திருவிழாக்கள், குடும்ப விழாக்களுக்கு, திருமணம், இறப்பு ஆகியவற்றுக்கு கூட சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கிடையாது.

  • ஓய்வெடுக்கக் கூடாது,
  • ஊர் கதை எதுவும் பேசக் கூடாது,
  • யாராவது புதிய நபர்கள் வந்தால் அவர்களோடு பேசக் கூடாது,
  • கேள்வி கேட்கக் கூடாது,
  • கணக்கு கேட்கக் கூடாது,
  • கூலி கேட்கக் கூடாது,
  • வேலைச் சூழலை விட்டு வெளியில் செல்லக் கூடாது,
  • இதில் எது மீறினாலும் அடி உதைகள் தான் கிடைக்கும்.
  • இதுதான் தஞ்சை மாவட்டத்தில் மறைந்திருக்கும் இன்னொரு முகமாகும்.

நிர்வாகக் கட்டமைப்பு:

செம்மறி ஆட்டின் உரிமையாளரை ‘கீதாரி’ என்றும் நிலத்தின் உரிமையாளரை ‘நிலச்சுவான்தார்’ ‘மிராசுதார்’ என்றும் மரம் வெட்டச் செய்து அதை கரிக்கொட்டையாக்குபவரையும், செங்கல் சூளை நடத்துபவரையும் ‘முதலாளி’ என்றும் ‘எஜமான்’ என்றும் ‘ஓனர்’ என்றும் அழைக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு வேலைக்கு ஆட்களைத் தேடிப் பிடித்து சேகரித்துக் கொடுப்பவர்களை ‘ஏஜென்ட்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.  இவர்கள் திருவண்ணாமலை, பண்ருட்டி, ராமநாதபுரம், விழுப்புரம், காஞ்சிபுரம்  போன்ற பகுதிகளில் இருக்கிறார்கள். முன் பணம் வாங்கிக் கொண்டு வேலைக்கு வருவோரையும் அந்தக் கடனை அடைக்க முடியாமல் மீள முடியாதோரை ‘அடிமை’ என்றோ, ‘கொத்தடிமை’ என்றோ ஆடையாளம் காட்டாமல் ‘விசுவாசமான செல்லப் பிராணிகள்’ போல் பேசவைத்து ‘எங்கள் முதலாளி நல்லவர்’ என்ற நல்ல விசுவாசமுள்ளவர்களாக பழக்கி வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏஜெண்டுகளால் அழைத்துவரப்பட்டு அடிமைகளாக்கப் பட்டவர்களாவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வேலை வாங்கவும், தப்பிச் செல்லாத வகையிலும்,  முதலாளிகளின் சட்டத்திட்டங்களை நடைமுறைப் படுத்துபவர்களாகவும் இருப்பவர்களை ‘கங்காணி’(கண்காணிப்பவர்) என்றும் இவர்களுக்கு துணை செய்பவர்களை ‘ஏவலர்’ ‘காவலர்’ ‘அடியாள்’ என்றும் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

மீட்பு நடவடிக்கைகள்:

இப்படிப்பட்ட பின்னனியிலிருந்துதான் கடந்த 1999 ஆண்டு முதல் ‘மண்ணின் கலைவழி மக்கள் விடுதலை’ எனும் முழக்கத்துடன் ஒரு தொண்டு நிறுவனம் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மூலம் களப்பணியும் ஆற்றி வருகிறது.

இந்நிறுவனத்தின் மனித உரிமை மீட்புப் பணிகளின் மூலமாக தஞ்சை மாவட்டத்திலும் அதையொட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொத்தடிமைகள் மீட்பு பணிகளும், குறிப்பாக கொத்தடிமைக் குழந்தைகள் மீட்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது.

குழந்தைகள் பாதுகாப்பிற்கும், குழந்தைகள் உரிமைகளுக்கும் சர்வதேச நாடுகளும், அதன் உறுப்பு நாடாக இருக்கும் இந்தியாவும், இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திலும் மனித உரிமை மீறல்களும், கொத்தடிமைக் கொடுமைகளும், குழந்தைக் கொத்தடிமைத் தொழில் முறைகளும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது 2018 மே மாதம் வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியிலுள்ள சோழபுரம் என்ற ஊரைச் சேர்ந்த 21 நபர்களைக் கொண்ட 4 குடும்பங்களும் அவர்களில் 13 குழந்தைகளையும் கரிக்கொட்டை தயாரிக்கும் வேலையில் மூன்று தலைமுறைகளாக குறைந்த பணத்தை முன் பணமாகப் பெற்றுக் கொண்டு அதன் வட்டியை அடைக்க நிரந்தரக் கொத்தடிமைகளாக துன்பப்பட்டுக் கொண்டிருந்தவர்களை மீட்டிருக்கிறார்கள் என்பதை (4.12.2014 நாளிட்ட நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்ப் பகுதிகளிலிருந்து 8 குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுடன் 16 குழந்தைகளையும் கரும்பு வெட்டும் தொழிலில் குறைந்த முன் பணத்தைக் கொடுத்து நிரந்தரக் கொத்தடிமைகளாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக  கொடுமை அனுபவித்தவர்களை மீட்டிருக்கிறார்கள் (4.2.2014 தேதியிட்ட தமிழ் நாளிதழ்கள் 5.02.2014 தேதியிட்ட தினமணி, தினத்தந்தி).

திருவண்ணாமலை, விழுப்புரம், பன்ருட்டி மற்றும் இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து குழந்தைக் கொத்தடிமைகளாக்கி  பெற்றோர்களுக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை முன் பணமாக கொடுத்து பாண்டு எழுதி வாங்கிக்கொண்டு வருவார்கள். அந்தக் கடனின் வட்டியை அடைப்பதற்காக, ஒரு குழந்தை 100 முதல் 300 ஆடுகளை மேய்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், இரவில் கிடை போடவும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு இடங்களில் ஆடுமேய்த்து கொடுமைகளை அனுபவித்த 18 குழந்தைகளை மீட்கப்பட்டிருக்கிறார்கள். (29.06.2014 தினமணி, 1.08.2014 தினமணி, 12.01.2017 ஐனெயைn நுஒpசநளளஇ தினகரன், 05.09.2017 தினமணி, தினத்தந்தி, தினகரன், தினமலர்) 8 வயது முதல் 16 வயது  வரையிலுள்ள குழந்தைகள் ஆடுகளை மேய்க்க பயன்படுத்துகிறார்கள்.  இவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை அனுப்பப்படுகிறார்கள்.  ஒரு குழந்தை 100 முதல் 300 ஆடுகளை மேய்க்க வேண்டும்.  ஆடுகள் வயிறு நிறைய மேய்க்க வேண்டும், மேய்ச்சலுக்கு போகுமுன் பழைய கஞ்சோ கூழோ காலை உணவாகக் கொடுக்கப்படும். மதிய உணவோ, தண்ணீரோ கொடுப்பதில்லை. மழைக்கும் வெய்யிலுக்கும் எந்த பாதுகாப்பு பொருளும் கொடுப்பதில்லை. அந்தக்குழந்தையும், அதன் கைத்தடியும் மட்டுமே அத்தனை ஆடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். உடலை மறைக்க போதுமான ஆடை கிடையாது, பகலில் உறங்க முடியாது, இரவில் உறங்குவதற்கு தனி இடம் கிடையாது, ஆடுகளின் மத்தியில்தான் உறங்க வேண்டும்.

ஆடுகள் குட்டி ஈன்றாலோ, நோய்வாய்ப்பட்டாலோ, இறை எடுக்காமல் இருந்தாலோ, ஆடுமேய்க்கும் குழந்தைதான் பராமரிக்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும்.

ஆடுகள் இறந்தாலோ, காணாமல் போனாலோ அந்தக் குழந்தைதான் பொருப்பேற்க வேண்டும். அதற்காக ஆட்டு உரிமையாளரின் ஏவுதலின் பேரில் அடியும் உதையும் வாங்கிக் கொண்டு, இறந்த ஆட்டின் விலையை நிர்ணயித்து அந்த தொகையை இந்தக் குழந்தையின் கடனில் சேர்க்கப்படும்.

தங்கள் ஊரில், வீட்டில், நல்ல நாட்கள், விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், இறப்பு, திருமணம் என எந்த நிகழ்வுக்கும் குழந்தையை அனுப்ப மாட்டார்கள்.

குழந்தை நோய் வாய்ப்பட்டாலோ காயம் பட்டாலோ தானே ஏதாவது வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டுமே தவிர, மருத்துவ மனைக்கோ அல்லது ஓய்வெடுக்கவோ அனுமதிப்பதில்லை.

கோடைக்காலங்களில் ஆட்டுக்கிடை மடக்க வெளியூர்களுக்கு ஆடுகளுடன் சென்று அங்கேயே தங்கி, ஆடுகளை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை ஆடுகளின் உரிமையாளர்களே வாங்கிச் சென்று விடுவார்கள். சில நேரங்களில் இக் கொத்தடிமைக் குழந்தையை ஊக்கப் படுத்துவதற்காக எப்போதாவது பீடி, சாராயம், போதைப்பாக்கு இதில் ஏதாவது ஒன்று மட்டும் கொடுப்பார்கள். இவற்றைப் பயன்படுத்தும் குழந்தை தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். ஆடுகள் சிதறி ஓடினாலோ, அடுத்தவர் விளைச்சலில் ஓடிப்போய் மேய்ந்தாலோ இந்தக் குழந்தை கடுமையாக அடி உதையுடன் கூடிய தண்டணையை அனுபவிக்க வேண்டும்.

இவ்வளவு கொடுமைகளின் மத்தியில் உழலும் கொத்தடிமைக் குழந்தையின் பெற்றோர்களோ உறவினர்களோ குழந்தையைக் காண வரும்போது அவர்களுக்கு உணவும், பயணச் செலவுக்கு பணமும் கொடுத்தனுப்பினால் அந்தக் கணக்கை ஏற்கெனவே உள்ள கடனில் சேர்த்து கொள்ளப்படும். இவையில்லாமல் குழந்தையை பார்க்க வந்தவர்கள் தங்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு, அல்லது திருமணம், அல்லது வளைகாப்பு, அல்லது அண்ணணின் படிப்பு செலவு, அல்லது அண்ணன் பட்ட கடனை அடைக்க இப்படி எதாவது ஒரு செலவிற்காக கடன் கேட்டு வருவார்கள். அதையும் தாராளமாகக் கொடுத்து விட்டு இந்தக் குழந்தையின் முன் பணக் கணக்கிலேயே இதையும் சேர்த்து எழுதிக் கொள்வார்கள்.

குழந்தைகளின் பிரச்னைகள்:

உணவு / உடை:

சரியான சத்தான உணவு கொடுக்கப்படுவதில்லை

எஞ்சிய பழைய உணவுகளே வழங்கப்படுகிறது.

சுகாதாரமற்ற உணவும், அதற்கான தட்டும், குவளையும் சுகாதாரமற்றதாகவே இருக்கின்றன.

இப்படிப்பட்ட உணவுகளால் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறுகள் மற்றும் உடலுக்கு வேண்டிய அனிமியா போன்ற சத்துக்கள் குறைபாட்டு நோய்களும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

எப்போதாவது தங்களை ஊக்கப்படுத்துவதற்காக கொடுக்கப்படுகின்ற பீடி, சாராயம், புகையிலை, போதைப் பாக்கு இவைகளால் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதோடு அதன் மூலம் பலவித நோய்களும் வருகின்றது.

இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் அரை நிர்வாணக் கோலத்தோடு இருக்கிறார்கள். மற்று உடை கொடுக்கப் படுவதில்லை.

ஒரே ஆடையை அணிந்துக் கொண்டிருப்பதால் அழுக்குகள் சேர்ந்து சுகாதாரக் கேடுகளும் தோல் நோய்களும் பரவுகிறது

மழையாலும் வெய்யிலாலும், பணியிலும் பாதுகாப்பு ஏதுமின்றி வேலை செய்வதால் உடலில் தோல் வெடிப்புகள். புண்கள் தோல் தடித்துப்போவது ஆகியவை ஏற்படுகின்றன.

ஆடுகளோடு உண்பது, ஆடுகளோடு உறங்குவது, ஆடுகளோடு புழங்குவது என்பதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.

இருப்பிடம்:

பாதுகாப்பான இடத்தில் உறங்குவதற்குக் கூட அனுமதிக்கப் படுவதில்லை.

வயல் வெளியிலும், காடுகளிலும், ஆடுகளின் கிடைமடக்கும் இடங்களிலும் வெட்ட வெளியில் புழங்க வேண்டியதால் உறக்கமின்மை, உடல் அழற்சி, உடல் தளர்ச்சி, கண்பார்வைக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.

வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லாமல் போகிறது.

பொழுதுபோக்கு இன்மை:

கொடுக்கப்பட்ட வேலையிலேயே கவனமாக இருக்க வைக்க வேண்டியதால் மன இறுக்கம் அதிகமாகிறது.

பிற குழந்தைகளோடு கலந்துறையாடவும் விளையாடவும் முடியாத நிலையில் தனிமையிலேயே காலந்தள்ள வேண்டியுள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட ஊடக பயன்பாடுகளை அனுபவிக்க முடிவதில்லை.

ஊடல் மன ஆரோக்கயத்திற்கான எந்தவிதமான விளையாட்டிலும் ஈடுபடமுடியாது.

சுதந்திரமாக கருத்துக்களைக் கூற அனுமதிக்கப்படுவதில்லை.

பள்ளிக்கூடம் செல்லவோ அல்லது கல்வி தொடபர்பான எந்த சூழ்நிலையையும் மறுக்கப்படுகிறது.

மனநலம்:

தாய் தந்தை உறவினரோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் தனிமைப் படுத்தப்படுகிறது.

குழந்தை விற்பனைப் பொருளாக்கப் பட்டிருக்கிறது.

குழந்தைப் பருவத்திலேயே குடும்ப வறுமைக்காக நிரந்தர அடிமையாக்கப்பட்டிருப்பது.

குடும்பத்தார்க்கு பணத் தேவை ஏற்படும் போதெல்லாம் அந்தக் கடன் சுமையை குழந்தையின் தலையிலேயே சுமர்த்தி அடக்குமுறைக்கு ஆளாவது

அன்பு, பாசம், பரிவு, கனிவு என எந்த விதமான சந்தோசமும் கிடைக்காமல் ஏங்குவது.

எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் போன்றவைகள் தீர்க்கப்படாத நிலையில் மன அழுத்தம் அதிகமாவது.

3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் அடிமை வாழ்வே பழகிப் போனதால் எதிர்காலம் குறித்த கனவே இல்லாமல் போவது, இவ்வாறாக குழந்தைக் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.

ஏமாற்றப்படும் ஏழைகள்:

இத்தகைய குழந்தைக் கொத்தடிமைகளை வறுமையும், ஏழ்மையும், இயலாமையும் நிரந்தரமாக இருக்கும் சமூதாயத்தில், மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் இருளர் சமுதாய மக்களும், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களையுமே குறிவைத்து, பெற்றோர்களின் சம்மதத்தோடு கடத்தப்படுகிறார்கள்.

இவர்களைக் கண்டுபிடித்து விற்பனைப் பொருட்களாக்குவதற்கென்று தமிழகத்தில் அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை, பன்ருட்டி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தரகர்கள் (ஏஜென்ட்) இருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வாறு குழந்தைகளைக் கண்டு பிடித்து வேலைக்கு அனுப்பி வைத்தால் முதலாளியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பணமும், கொத்தடிமையாக குழந்தையை அனுப்பும் குடும்பத்தாரிடம் கொடுக்கப்படும் தொகையிலிருந்து ஒரு பகுதி பணமும் ஏஜென்ட் கூலியாகவும் பெறப்படுகிறது.  இவ்வாறாகத்தான் ஏஜென்டுகளின் தொழிலும், கொத்தடிமைகளின் நிலையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

என்னதான் அரசுகள் கடுமையான சட்டங்கள் மூலம் குழந்தைகள் கடத்தபடுவதற்கும் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவதற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டங்களை வகுத்தாலும் அதை மீறுகின்ற சிலரின் பணபலம், சாதிபலம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் துணையோடு அநீதிகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் கொத்தடிமைகள் மீட்புப் பணிகளும், குழந்தைக் கொத்தடிமைகள் மீட்புப் பணிகளும் செய்ய வேண்டியுள்ளது.

களப்பணியாளர்களுக்கு அச்சுறுத்தல்கள்:

கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதும், குழந்தைக் கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினமாக இருக்கின்றன.

என்னதான் அரசு நிறுவனங்களோடும் தொண்டு நிறுவனங்களோடும் நெருக்கமான உறவுகளும் துணையும் இருந்தாலும் கொத்தடிமைகளை கண்டுபிடிக்கவே பலவித அச்சுறுத்தல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

கொத்தடிமைத் தொழிலாளர்களையும் குழந்தைகளையும் எளிதாக அணுகமுடியாது.

களப்பணியாளர்கள் ஊருக்குப் புதியவர்கள் என்பதால் ‘குழந்தை பிடிப்பவர்கள்’என சந்தேகப்பட்டு, பலவித இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

முதலாளிகளாலும், அவர்களது கைக் கூலிகளாலும் மிரட்டப்படவும் சில இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப் படவும் நேர்கிறது.

உள்ளூரில் சில நல்ல உள்ளங்களை தொடர்ந்து நாம் நட்பில் வைத்துக் கொள்வதால் ரகசிய தகவல் பரிமாற்றங்களைக் கொண்டு கொத்தடிமை மீட்புப் பணியில் ஈடுபட முடிகிறது.

நமக்கான தகவலாளிகள் யாரென்று முதலாளிகளுக்கு தெரிய வரும் போது அவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

எப்படியோ கொத்தடிமைகளையும் கொத்தடிமைக் குழந்தைகளையும் கண்டுபிடித்து மீட்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் ஒத்துழைப்புகள் நமக்கு அதிகமாக கிடைத்தாலும் ஒரு சில இடங்களில் ஒரு சில அதிகாரிகளால் நமக்கு ஒத்துழைப்பு கிடைக்காமலும் கடினமான நடவடிக்கை எடுக்கப் படாமல் தவிர்ப்பதாலும்  அந்த இடத்தில் நாம் மேற்கொள்ளும் மீட்பு நடவடிக்கை நிறைவேறாமல் போன அனுபவமும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.

இறுதியாக:

கொத்தடிமை மீட்பு, குழந்தைக் கொத்தடிமை மீட்பு என்பதில் சட்டம் நமக்கு சாதகமாக இருந்தாலும் கத்தி மீது நடக்கும் அபாயச் சூழலே அதிகமாக இருக்கிறது. ஆயினும் உரிமை மீட்புப் பணிகளில் அதிக ஈடுபாடும் அனுபவமும் நிறைந்திருப்பதாலும், கடந்த 2014 ஆண்டு முதல் ‘இன்டர் நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்’நிறுவனத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் எங்களால் மிகவும் சிறப்பாக செயல்பட முடிகிறது. இவர்கள் தரும் ஊக்கமும் ஆக்கமும் எங்களை களப்பணியில் முழு வீச்சில் ஈடுபட பெரிதும் காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் கொத்தடிமைச் சூழலிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருவாய் கோட்டாட்சியரின் கொத்தடிமை மீட்புச் சான்றிதழும் உடனடி நிவாரணத் தொகையும் மருத்துவ உதவியும் அவர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளின் வயது மற்றும் சூழ்நிலைக்கேற்ப அரசு குழந்தைகள் இல்லங்களில் சேர்ப்பதும், பெற்றோருடன் இருந்து கல்வி கற்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எங்களது இத்தகைய மீட்புப் பணிகளின் மூலமாக குழந்தைகளும்  அவர்களது பெற்றோர்களும் சமுதாயத்தில் மாண்புடன் வாழ்வதற்கான அனைத்து அம்சங்களையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் கோட்டாட்சியர் அவர்களும் வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலாளர்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், சைல்டுலைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழுமம், தன்னார்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் எமக்கு பெரிதும் உறுதுணையாக ஒருந்து சிறப்பாக ஒத்துழைப்பதால் எமது பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபட வாய்ப்பாக இருக்கிறது.

சட்டங்களும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அதிகாரிகளும் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உழைக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் இவை எல்லாவற்றிற்கும் சவாலாக இருந்து வரும் கொத்தடிமைத் தனத்திலிருந்து ஏழைகளையும் குழந்தைகளையும் தொடர்ந்து ஈடுபடுத்தி வரும் முதலாளிகள், மிராசுதாரர்கள், பண்ணையாளர்கள், கீதாரிகள் அவர்களது ஆதரவாளர்களான ஏஜென்டுகள் ஆகியோரை எதிர்த்து, வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழைகள், ஏழைக் குழந்தைகளின் ஒத்துழைப்பும் இல்லையென்றால் இத்தகைய கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கைகளை, குழந்தைக் கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் ஒழிப்பு என்பதும் வெறும் கனவாகவும் பெறும் சவாலாகவுமே இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கொத்தடிமை ஒழிப்புச்சட்டங்களை இன்னும் கடுமையாக்கப்படுவதோடு, கொத்தடிமையாக வைத்துக்கொள்ளும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கி, தண்டித்தால் மட்டுமே இந்த கொத்தடிமை முறையை ஒழிக்க முடியும்.

- பெ. பாத்திமாராஜ், நிர்வாக இயக்குனர், செட் இன்டியா, தஞ்சாவூர், தமிழ்நாடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com