Enable Javscript for better performance
How to rescue children from |குழந்தைகளை ஸ்மார்ட் ஃபோன் மற்றும் டி.வி போதையிலிருந்து மீட்பது எப்படி?- Dinamani

சுடச்சுட

  

  குழந்தைகளை ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டிவி அடிக்‌ஷனிலிருந்து மீட்க உதவும் எளிய மாற்று வழிமுறைகள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 09th April 2018 02:15 PM  |   அ+அ அ-   |    |  

  child-with-tablet

   

  பத்தாண்டுகளுக்கு முன்பு பள்ளி ஆண்டுவிழாக்களுக்கோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்புகளிலோ கலந்து கொண்டால் தவறாமல் அங்கே பேசப்படுகிற ஒரு விஷயமாக டி.வி அடிக்‌ஷன் இருந்தது. பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் மகனோ, மகளோ  புத்தகங்களைக் காட்டிலும் டிவிக்களின் முன் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்ற மனக்குறை இருந்தது. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக முன்பு டி.வி இருந்தது. இப்போது அந்த இடத்தை ஸ்மார்ட் ஃபோன்களும், ப்ளே ஸ்டேஷன்களும், வீடியோ கேம்களும் ஆக்ரமித்துக் கொண்டுள்ளன. 

  சமீபத்தில் குழந்தையின் பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பக்கத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. பாட்டி, அம்மா, அப்பா, அத்தை, இரண்டு குழந்தைகள் என்று மொத்தக் குடும்பமும் அங்கே இருந்தது. அதில் ஒரு குழந்தைக்கு வயது  இரண்டறையில் இருந்து மூன்றுக்குள் இருக்கலாம். இன்னும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகத் தோன்றவில்லை. ஒருவேளை மாண்டிசோரி சென்று வரும் குழந்தையாக இருக்க வாய்ப்புண்டு. அந்தக் குழந்தையின் கையில் அழகாக செல்ஃபோனைக் கொடுத்து விட்டு அப்பாவும், அம்மாவும் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் ஆழ்ந்திருந்தார்கள். பாட்டி சிறிது நேரம் அந்தக் குழந்தையின் கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனைப் பறித்து கைப்பையில் போட்டு விட்டு அதன் பின்னேயே அலைந்து பார்த்தார். அந்த வாண்டு கையில் செல்ஃபோன் இல்லையென்றால் ஓரிடத்தில் நிலைத்து அமர்வதாக இல்லை. விட்டால் பள்ளி மைதானத்தையே அளந்து விடும் போல அத்தனை துறுதுறு. பாட்டிக்கும் வயதாகிறதே குறைந்த பட்சம் 1/2 மணி நேரத்துக்குள் அவர் ஓய்ந்து போய் மீண்டும் குழந்தையின் கையில் செல்ஃபோனைத் திணித்து விட்டு அக்காடாவென நாற்காலியில் சாய்ந்து விட்டார். இப்படித்தான் பல குழந்தைகளின் துறுதுறுப்பைச் சமாளிக்க முடியாமல், அவர்கள் தரும் குழந்தைத்தனமான இயல்பான குறும்புத் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் ஃபோன் எனும் அங்குசத்தால் அவர்களைக் கட்டுப்படுத்தி ஓரிடத்தில் அமர வைத்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறு என்பது அவர்களுக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. ஆனாலும் அதைச் செய்கிறார்கள் எனில் நாம் யாரைத்தான் குற்றம் சாட்ட முடியும். உண்மையில் இது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டத்தக்க விஷயமும் அல்ல. பெற்றோர்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று.

  சில வாரங்களுக்கு முன் வாட்ஸ் அப் குழுமம் ஒன்றில் கிண்டர் கார்டன் ஆசிரியை ஒருவர் வாய்ஸ் ரெகார்டரில் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருந்தார். இன்றைய குழந்தைகளிடையே வீடியோ கேம்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவு என்னவென்பதைப் பற்றி, கேட்கும் ஒவ்வொரு பெற்றோரையும் குற்ற உணர்வில் ஆழ்த்தி விடக்கூடிய பதிவு அது; அந்தப் பதிவின் சாராம்சம் என்னவெனில்;

  அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லக்கூடிய வீடு ஒன்றில் 2 வயதுக் குழந்தையொன்று தாத்தா, பாட்டி வளர்ப்பில் விடப்படுகிறது. தாத்தா, பாட்டி இருவரும் ஓய்வு பெற்றவர்கள். முன்பு அவர்கள் பணியில் இருந்தபோது அவர்களுக்குக் கிடைக்காத டிவி சுதந்திரம் இப்போது கிடைத்த படியால் அவர்களுக்கு தொடர்ச்சியாக டி.வியில் வரும் அனைத்து மெகா சீரியல்களையும் காணும் பழக்கம் இருந்தது. வீட்டில் குழந்தைகள் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும் 2 வயதுக் குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சுட்டி டிவி, போகோ டிவி, இதர கார்டூன் நெட் நொர்க் சேனல்கள் தான் பார்க்க விரும்புகின்றன. பெரியவர்களது அபிலாஷைகள் எல்லாம் குழந்தைகளின் விருப்பத்துக்கு முன்பு கால் தூசு கணக்கு தான். அவர்கள் அடம்பிடிக்கத் தொடங்கி விட்டால் நாம் அவர்களுக்காக விட்டுத்தரத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த தாத்தா பாட்டிகள் அப்படி விட்டுத் தந்ததில் தங்களது விருப்பங்கள் அடிபடுகின்றனவே என்றெண்ணி அதற்கு மாற்றுத் தேடியிருக்கிறார்கள். கிடைத்தது ஒரு ஸ்மார்ட் ஃபோன். வெளிநாட்டிலிருக்கும் மகள் விடுமுறையில் பெற்றோருக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோன் பரிசளிக்க. அதில் யூ டியூபில் கார்ட்டூன் சீரியல்களை ஆன் செய்து குழந்தை கையில் திணித்து விட அவன் அதில் பயங்கரக் குஷியாகி விட்டான். இப்போது டிவி தாத்தா, பாட்டி மெகா சீரியல் பார்க்க ஃபீரி ஆகக் கிடைத்து விட்டது. பேரனோ ஸ்மார்ட் ஃபோனில் சின் சான், கெனாச்சி, ஹட்டோரி, ரஃபேஞ்சல், சிண்ட்ரெல்லா, என்று பிஸியோ பிஸி. ஸ்மார்ட் ஃபோன் பார்த்துக் கொண்டே பாட்டி சாதம் ஊட்டும் போது சமர்த்தாகச் சாப்பிட்டு விடுவான். அம்மா, அப்பா அலுவலகத்தில் இருந்து ஓய்ந்து போய் வீடு திரும்பினால் இவன் உடனே போய் அவர்களைத் தொல்லை செய்வது கூட இல்லை. சமர்த்தாக ஜாக்கி ஷான், ஜூலி பார்த்துக் கொண்டிருப்பான். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தால் எப்படி? இப்போது அந்தக் குழந்தைக்கு சின் சான் தவிர வேறு எந்த கார்ட்டூனும் பிடிக்கவில்லை. படையப்பாவில் நீலாம்பரி ஆறுபடையப்பனின் திருமண வீடியோவையே தொடர்ச்சியாக சுமார் 18 வருடங்கள் ஒரு இருட்டு அறைக்குள் அடைந்து கொண்டு ஓட்டப் பார்ப்பாரே அந்த அளவுக்கு வெறி கொண்டு அந்தக் குழந்தை சின் சான் மட்டுமே பார்ப்பது என்று முடிவெடுத்துப் பார்க்கத் தொடங்கியது. அந்த கார்ட்டூனில் குழந்தையை ஈர்த்த அம்சம் எதுவாக இருக்கக் கூடும் என அதன் பெற்றோர்களால் இன்னமும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இறுதியில் அந்தக் குழந்தை இப்போது கிட்டத்தட்ட முக்கால் சின்சானாகவே மாறி விட்டது. சின்சானைப் போலவே o சைஸில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டே தான் பேச முயல்கிறதாம். அதனுடைய பேச்சும் அப்படியே சின் சான் போலவே தெனாவட்டாக மாறி விட்டது. இப்போது அந்தப் பையனை எப்படி அந்த ஸ்மார்ட் ஃபோன் அடிக்‌ஷனில் இருந்து மீட்பது என்று தெரியாமல் என்னை அணுகி இருக்கிறார்கள். தயவு செய்து உங்கள் குழந்தைகள் கைகளில் செல்ஃபோன் கொடுப்பதை இனியாவது தவிருங்கள் எனும் கோரிக்கையோடு அந்த ஆசிரியை தனது  சொந்தக்குரலில் அந்தச் செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

  இன்றைக்குப் பல வீடுகளில் குழந்தைகளின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது. வேலைக்குப் போகும் பெற்றோர்கள் என்றில்லை. எல்லாப் பெற்றோருக்குமே வர வர இந்த மனக்குறை மிகப்பெரிய மன உளைச்சலாக மாறிக் கொண்டு தான் வருகிறது. இதற்கு என்ன தான் தீர்வு? எப்படி நமது குழந்தைகளை ஸ்மார்ட் ஃபோன் அடிக்‌ஷனில் இருந்து மீட்பது?

  இதோ அதற்கான தீர்வு;

  முகநூலில் ஃபிண்டூபாக்ஸ்காரர்கள் சர்வே பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். சும்மா விளையாட்டுத்தனமாக அதை கிளிக்கினேன். உள்ளே சில கேள்விகள் கேட்டு முடித்தார்கள். முடிவில் ஸ்மார்ட்ஃபோன் அடிக்‌ஷனில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வித்யா ரகு எனும் பிரபல மனநல ஆலோசகர் ஒருவர் வந்து குழந்தைகளை எங்கேஜ்டாக வைத்துக் கொள்ள சில பாயிண்டுகளை முன் வைக்கிறார். அந்தப் பாயிண்டுகள் அர்த்தம் பொதிந்தவை மட்டுமல்ல, பெற்றோருக்குப் பலனளிக்கக் கூடியவையாகவும் இருந்ததால் அதைப் பற்றி எழுதத் தோன்றியது;

  குழந்தைகளை ஸ்மார்ட் ஃபோன் அடிக்‌ஷனில் இருந்து மீட்க வேண்டுமெனில்; நாம் 4 விஷயங்களைப் பற்றிப் போதுமான புரிதலோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது.
  அவை முறையே;

  1. அலுப்பு (BOREDOM)
  2. மாற்று (ALTERNATIVES)
  3. நேரம் (TIME)
  4. ஆதரவு மற்றும் சூழல் (SUPPORT & SURROUNDINGS)

  அலுப்பு...

  குழந்தைகள் எப்போதெல்லாம் அலுப்பாக உணர்கிறார்கள் என்று கவனிக்க வேண்டியது பெற்றோர்களான நமது கடமை. உண்மையில் குழந்தைகள் போர் அடிக்கிறது என்று நம்மை அணுகும் போது நாம் நமது வேலைகளை முன்னிட்டோ, அல்லது அவர்களுடன் நம்மால் நேரத்தைப் பங்கிட முடியாத வேறு காரணங்களாலோ அவர்களுக்குப் போர் அடிக்காமல் இருக்க உதவும் என்று சற்றும் யோசிக்காமல் எலட்ரானிக்ஸ் உபகரணங்களை அறிமுகப்படுத்துகிறோம். எப்போதாவட்ஜ்ஹு இப்படிச் செய்கிறோம் என்றால் அதில் தவறில்லை. ஆனால் எப்போதும் நாம் இப்படித்தான் செய்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம் என்றால் நிச்சயம் இது கவனித்துச் சரி செய்தே ஆக வேண்டிய பிரச்னைகளில் ஒன்று. உதாரணமாக குழந்தை அலுப்பாக உணர்ந்தால் உடனடியாக அதன் அலுப்பை மாற்ற உடனடி நிவாரணம் என ஸ்மார்ட் ஃபோன்களையோ, டி.வி சேனல்களையோ பரிந்துரைக்கத் தேவையில்லை. ஒரு குழந்தை அலுப்பாக உணர்கிறதென்றால் அதன் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேறு எதையோ எதிர்பார்க்கிறதென்று பொருள். இதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தைக்கு கிரியேட்டிவ்வாக செய்யத்தக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பெற்றோர்களான நாம் பொறுமையாகக் கண்டறிய வேண்டும். அதற்கு நாம் நமது குழந்தைகளை அவதானிக்க வேண்டும். அவர்களுக்குப் போர் அடிக்கிறது ஆனால் அதற்கு ஸ்மார்ட் ஃபோன் அல்ல தீர்வு அதைத் தாண்டி குழந்தைகளை உற்சாகமாக வைத்துக் கொள்ள என்ன இருக்கிறது என்று பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு நீச்சல் அடிப்பது குதூகலமான பொழுதுபோக்காக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு ஸ்கிப்பிங். சில குழந்தைகளுக்கு பார்க்கில் மண் அள்ளி விளையாடப் பிடிக்கலா, சில குழந்தைகளுக்கு சைக்கிளிங், சில குழந்தைகளுக்கு சுற்றிலும் விளையாட்டுச் சாமான்களை இரைத்து வைத்து விளையாடப் பிடிக்கலாம். தனியாக அல்ல பெற்றோருடனோ அல்லது தாத்தா பாட்டிகளுடனோ அல்லது நண்பர்களுடனோ. அதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர்களே! ஆக குழந்தைகளின் அலுப்பு அல்லது போரிங் எனும் சொல்லுக்கான பொருளை சரியாக உணர்ந்து அதற்கான ஆரோக்யமான தீர்வுகளான மேற்கண்டவற்றை பெற்றோர் கண்டறிய வேண்டும். அதைச் சரியாகப் பின்பற்றும் பெற்றோர்களுக்குத் தெரியும் தங்கள் குழந்தை முழுவதுமாக அதற்குப் பிடித்த விளையாட்டுகளில் எங்கேஜ்டாக அல்லது ஆழ்ந்து போயிருக்கிறது அதற்கு ஸ்மார்ட் ஃபோன் எல்லாம் தேவை இல்லை என்பது.

  மாற்று...

  கிண்டர் கார்ட்டன் குழந்தைகள் என்றால் சரி ஒருவேளை பெரிய குழந்தைகள் என்றால் என்ன செய்வது என்கிறீர்களா? இருக்கவே இருக்கின்றன மாற்று வழிகள். அவற்றை பெற்றோர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ பள்ளிகள் மிக நன்றாக உணர்ந்துள்ளதால் அவற்றையும் விற்பனைக்குரியவையாக்கி இப்போது கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. வருடம் தோறும் பள்ளிக் கல்விக்கட்டணம் தனி. அவை தவிர; மாணவர்கள் இசை கற்றுக் கொள்ள வேண்டுமா? இசைக்கருவிகள் கற்க வேண்டுமா? செஸ், கேரம், பேட்மிண்ட்டன், அத்தலெட்டிக்ஸ், கிரிக்கெட், யோகா, பரதம், வெஸ்டர்ன் டான்ஸ், ரோபாட்டிக்ஸ்,  மூலிகைச் செடி வளர்ப்பு, தியேட்டர் ஆர்ட்ஸ், என்று டஜன் கணக்காக மாற்றுச் சாய்ஸ்கள் வைத்திருக்கிறார்கள். இவற்றில் ஏதாவதொன்றில் நம் குழந்தைகளை நாம் அனுமதிக்கலாம். சில பள்ளிகள் காசுக்கால இந்த கோர்ஸ்களைத் தொடங்கி கல்லா கட்டினாலும் கூட மிக நன்றாகவே கற்றுத் தருகிறார்கள். கற்றுத் தருவதிலோ அல்லது ஆசிரியர்களின் திறமையிலோ, அர்ப்பணிப்புடன் கற்றுத் தரும் விஷயத்திலோ நாம் எந்தக் குறையும் காண முடியாது. விருப்பப்பட்டு அந்தந்த கோர்ஸ்களில் இணையும் மாணவ, மாணவிகள் மிக அருமையாகக் கற்றுத் தேர்கிறார்கள். இதிலும் கூட பெற்றோரின் திணிப்பு இருக்கக் கூடாது. குழந்தைகளின் தனித்திறமை தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்... குழந்தைகள் வளரும் போதே அவர்களது தனித்திறன் என்னவென பெற்றோர் கவனித்துக் கண்டறிய வேண்டும். உங்களது கண்டறிதல் மிகத் துல்லியமானதாக இருந்தால் நாளை உங்களாலும் ஒரு செஸ் விஸ்வநாதன் ஆனந்தையோ, பேட்மிண்ட்டன் பி.வி சிந்துவையோ, நீச்சல் குற்றாலீஸ்வரைனையோ, இசையில் ரஹ்மானையோ, அனிருத்தையோ, ஜி.வி பிரகாஷையோ உருவாக்க முடியும் என்று பொருள். மொத்தத்தில் குழந்தைகள் தங்களை மறந்து ஆழ்ந்து போய் விளையாட்டுத் தனமாகக் கற்றுக் கொள்ளத் தக்க வகையிலான மாற்று சாய்ஸ் ஒன்றை நாம் அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். அதில் குழந்தைகள் ஆழ்ந்து விட்டார்கள் எனில் அவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்களோ டி.விக்களோ தேவைப்படாது.

  நேரம்...

  குழந்தைகள் எந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் ஸ்மார்ட் ஃபோன்களையும், டிவிக்களையும் நாடுகிறார்கள் என்று கவனியுங்கள். அந்த நேரங்களில் அவர்களை மேற்சொன்ன வழிமுறைகள் எதிலாவது ஆழ்ந்து போகச் செய்யுங்கள். மிகக் குறைந்த நேரம் தானே... குழந்தைகளுக்கு காலை முதல் மாலை வரை பள்ளி இருக்கும். அங்கிருந்து அலுத்துப் போய் சோர்வுடன் வீடு திரும்பும் போது உடனடியாக அவர்களை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் அருகிலிருக்கும் பார்க், அல்லது நண்பர்கள் வீடு, வாக்கிங், ஜாகிங், உடற்பயிற்சி, அந்தாக்‌ஷரி, குழு நடனம், பறவைகள் மற்றும் விலங்குகள் போல மிமிக்ரி செய்தல், மாடியில் பூச்செடி வளர்ப்பு, சமையலறையில் பெரியவர்களின் அருகாமை மற்றும் கவனிப்புடன் காய்கறிகளின் மற்றும் பழங்களின் தோலை உறித்து மறுநாளைய ஸ்னாக்ஸ்களுக்குத் தயார் செய்வது என ஏதாவதொன்றில் குழந்தைகளின் விருப்பம் சார்ந்து அவர்களைப் பழக்கப்படுத்தி எங்கேஜ்டாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இருக்கவே இருக்கின்றன ஹோம் வொர்க் மற்றும் படிப்பு நேரங்கள். அதனால் குழந்தைகள் வெட்டியாக ஸ்மார்ட் ஃபோன்களை அணுகும் நேரங்களை நாம் இப்படி முறைப்படுத்தி இன்னின்ன விஷயங்களில் அவர்களுக்கு ஒருவிதமான உற்சாகத்தையும், பழக்கத்தையும் கொண்டு வந்து விட்டோமெனில் பிறகு அவர்கள் ஸ்மார்ட் ஃபோன்களை மறந்து விடுவார்கள்.

  ஆதரவு மற்றும் சூழல்:

  குழந்தைகள் பெரும்பாலான நேரங்களைப் பள்ளியில் கழிக்கிறார்கள். பெற்றோருடன் அவர்கள் இணைந்திருப்பது மாலை அல்லது இரவு நேரங்களிலும் காலையில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தயாராகும் பரபரப்பான நேரங்களிலும் மட்டுமே. மற்றபடி விடுமுறை நாட்கள் என பெற்றோரும், குழந்தைகளும் ஒன்றிணைவது ஆண்டுக்கு சில வாரங்கள் மட்டுமே என அபூர்வமாகத்தான். எனவே பெற்றோரின் அருகாமைக்காக ஏங்கும் குழந்தைகள் இப்போது அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகள் தாங்கள் விரும்பிய அல்லது தங்களுக்குத் தேவையான நேரங்களில் பெற்றோரின் அருகாமை கிடைக்காத பட்சத்தில் அந்த ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும் மறக்கவோ அல்லது ஈடு செய்யவோ கூட ஸ்மார்ட் ஃபோன்களையும், டிவிக்களையும் நாடலாம். இது எங்கே போய் முடியுமெனில் காலப்போக்கில் பெற்றோர் தமது பொறுப்பை உணர்ந்து... குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி காத்திருக்கும் சூழல் வரும் போது கூட அது முக்கியத்துவமிழந்ததாக ஆகி விடுகிறது. நாளடைவில் குழந்தைகள் பெற்றோரைக் காட்டிலும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கும், டிவிக்களுக்குமே முன்னுரிமை அளிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமெனில் பெற்றோர் தங்களுக்கு எத்தனை வேலைப்பளு இருந்தாலும் குழந்தைகளுக்காகவும் நேரம் ஒதுக்கியே தீர வேண்டும். வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்திருக்கும் நேரங்களை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும். காலை மற்றும் இரவு உணவை அனைவரும் இணைந்து சாப்பிடுவது, மாலை நேரங்களில் தங்களது நண்பர்கள் அல்லது குழந்தைகளின் நண்பர்களது வீடுகளுக்கு விசிட் அடித்து நட்பைப் பரிமாறிக் கொள்வது இப்படி குழந்தைகளுக்கு ஆதரவாக தங்களது மனநிலையையும், வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக சேர்ந்திருக்கும் நேரங்களில் தான் பெற்றோர்களான நாம் நமது குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம், உணவுமுறைகள், ஆடை அணியும் விதம் குறித்து ஒருவருக்கொருவர் வேறுபடும் முறைகள் எனப் பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசி அலசிக் காயப் போட முடியும். உண்மையில் பெற்றோர் குழந்தைகளுடன் இணைந்திருக்கும் நேரங்கள் வாழ்க்கையில் சில வருடங்கள் மட்டுமே பிறகு அவர்கள் வளர்ந்து விட்டால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்க்கை என்றாகி விடும், பிறகு நாம் நினைத்தாலும் நாம் பெற்ற குழந்தைகளிடமே கூட நேரம் கேட்டு அவர்களுக்குத் தோதான நேரங்களில் மட்டுமே சம்பாஷிக்க வேண்டியவர்களாகி விடுவோம். எனவே இன்றைய நம் குழந்தைகள் நாளைய இந்தியாவின் தூண்கள் அவர்களை வலிவுள்ளவர்களாக கட்டமைக்க உடனடியாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்கு ஸ்மார்ட் ஃபோன் & டிவி அடிக்‌ஷன் நிச்சயம் எதிரிகளே. எனவே அவற்றின் பிடியிலிருந்து நம் குழந்தைகளை மீட்க நாம் மேற்சொன்ன முறைகளில் முயன்று பார்ப்போம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai