Enable Javscript for better performance
சமுதாயத்தின் தாழ்ந்த நிலைக்கு மதம் காரணமல்ல; மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் வீழ்ச்சிக்கான க- Dinamani

சுடச்சுட

  

  சமுதாயத்தின் தாழ்ந்த நிலைக்கு மதம் காரணமல்ல; மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் வீழ்ச்சிக்கான காரணம்: சுவாமி விவேகானந்தர்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 12th January 2018 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vivekananthar

   

  சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இந்நாள், இந்தியா முழுதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்த ஆன்மீக அடையாளங்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவர்.

  ‘நாட்டுப்பற்று மிக்க 100 சிறந்த இளைஞர்களைத் தாருங்கள், நான் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்’

  - என்று சூளுரைத்தவர் விவேகானந்தர். 

  ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்...

  1881 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ராமகிருஷ்ணரின் சீடராகச் சென்று சேர்ந்த விவேகானந்தருக்கு ஆரம்பத்தில் ராமகிருஷ்ணரின் ஆன்மீகக் கருத்துகளின் பால் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பின்னர் படிப்படியாக அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது பிரதம சீடராக ஆனார்.

  தமிழக வருகையும், குமரித் தவமும்...

  1886 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணர் இயற்கை எய்திய பின் விவேகானந்தரும், ராமகிருஷ்ணரின் பிரதம சீடர்கள் சிலரும் துறவிகளாகினர். அதன்பின்பு 4 முழு ஆண்டுகளை சுவாமி, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்ப்பதில் செலவிட்டார். தமது பயணத்தின் போது இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் காண நேர்ந்த சுவாமிக்கு இந்திய மக்கள் அன்று எய்தியிருந்த கீழான நிலைகண்டு நெஞ்சு கொதித்தது. தமது 4 ஆண்டுப் பயணத்தின் இறுதியில் தமிழகத்தில் இருக்கும் கன்யாகுமரிக்கு வந்து கடல் நடுவே நீந்திச் சென்று பாறை ஒன்றின் மீது மூன்று நாட்கள் இடைவிடாத தவத்தில் அமர்ந்து விட்டார் விவேகானந்தர். அன்று தியானத்தின் போது அவரது சிந்தை முழுதையும் நிறைத்திருந்தது இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் மூன்று அம்சங்கள் மட்டுமே!

  விவேகானந்தர் அமர்ந்து தவத்தில் ஈடுபட்ட காரணத்தால் இன்றும் கன்யாகுமரிக்குச் செல்வோர் அங்கே சென்று பாறை மீதேறிஒருமுறை சுவாமி தவம் செய்ய அமர்ந்த இடத்தைப் பார்வையிடாமல் சென்றதில்லை.

  உலகப்புகழ் சிகாகோ உலக சமய மாநாட்டு உரைக்கான தூண்டுதல்...

  மீண்டும் கன்யாகுமரியில் இருந்து சென்னை வழியாக கல்கத்தா செல்லும் சந்தர்பத்தில் சுவாமி சென்னையில் சில நாட்கள் தங்க நேரிடுகிறது. அப்போது சென்னை வாழ் இளைஞர்களின் தூண்டுதலின் பேரிலும், அன்பின் பேரிலும் அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெறவிருந்த ‘உலக சமய மாநாட்டில்’ கலந்து கொண்டு இந்து மதத்தின் அருமை பெருமைகளைப் பற்றி பேச வேண்டுகோள் விடுக்கப்பட்டார். விவேகானந்தரின் வாழ்வில் மட்டுமல்ல உலக அரங்கில் இந்து மதத்துக்கான பெருமையையும் நிலைநாட்டிய பெருமை இந்த மாநாட்டுக்கு உண்டு.

  சுவாமியின் சிகாகோ உரையின் பெருமை...

  அந்த மாநாட்டில், சுவாமி தமது உரையை, அன்பார்ந்த அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று தொடங்கிய போதே அமெரிக்கர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து விட்டார். பொதுவாக அன்பார்ந்த கனவான்களே, கனவதிகளே என்று துவங்கக் கூடிய மேற்கத்திய நாகரீகப் பேச்சுக்களைத் தவிர்த்து விவேகானந்தர் சகோதர, சகோதரிகளே என்று துவங்கியதை அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் வெகுவாக ரசித்தனர். அவரது வித்யாசமான துவக்கமே மொத்த உரையையும் பேரமைதியுடன் கேட்கும் சாத்தியத்தை அம்மக்களிடையே உண்டாக்கியது எனலாம். அந்த மாநாட்டில் சுவாமியின் உரைக்குக் கிடைத்த மரியாதையும் வரவேற்பும் அவரை மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி பேச வைத்தது. சுவாமி தொடர்ந்து... நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் வேதாந்த மடங்களை நிறுவி இந்து மதப் பெருமைகளைப் பறைசாற்றும் பணிகளை செவ்வனே மேற்கொண்டார்.

  இந்தியாவில் ராமகிருஷ்ண மடங்களின் தோற்றம்...

  பின்னர், 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

  முதல்முறை மேலைநாடு சென்று திரும்பிய பின் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். அதன்பின் 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். முதல்முறையைப் போலவே இப்போதும் அவரது பேச்சைக் கேட்கும் ஆர்வம் அங்கத்திய மக்களுக்கு நிறையவே இருந்தது. இரண்டாம் முறை விவேகானந்தர் தமது மேலைநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின் இந்தியாவில் பல இடங்களில் ராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்டது. இன்று வரையிலும் அதன் எண்ணிக்கையும், சேவையும் பெருகிக் கொண்டே வருவது தான் விவேகானந்தரின் ஆன்மீக வெற்றிகளுக்கான முழுச்சான்று.

  இன்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பொன்மொழிகளில் சிலவற்றை நினைவுகூர்வோம்.

  விவேகானந்தரின் மதிப்பு மிக்க பொன்மொழிகளில் சில...

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
  • நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
  • வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.
  • நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
  • வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
  • உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.*
  • அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.
  • இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
  • அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.
  • அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai