Enable Javscript for better performance
மீ டூ மட்டும் போதாது, ஹீ டூ-வும் வேணும்!- Dinamani

சுடச்சுட

  

  மீ டூ மட்டும் போதாது, ஹீ டூ-வும் வேணும்!

  By - சாது ஸ்ரீராம்  |   Published on : 26th October 2018 11:37 AM  |   அ+அ அ-   |    |  

  metoo

   

  ‘என் மீது தவறிருந்தால் வழக்கு போடட்டும். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன', ‘மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை', ‘ நான் தவறு செய்தேன் என்பதற்கு என்ன ஆதாராம்?' இப்படி பல வசனங்கள் சில வாரங்களாக நம் காது துவாரங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

  ‘பெரிய யோக்யன் மாதிரி பேசினாங்களே! இப்ப பாருங்க ஊரே சிரிக்குது', என்று மற்றொரு தரப்பு கிசுகிசுக்களை உரத்த குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இவையெல்லாம் “மீ டூ' விதையில் முளைத்த விருட்சங்கள். திரைப்படத் துறை, அரசியல்வாதிகள் என்று எல்லோரிடமும் ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆழக் குழிதோண்டி புதைத்த அத்துமீறல்கள், விதைகளாய் நிலத்தை பிளந்துகொண்டு பலரின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது.

  ‘தவறு நடந்தவுடனே சொல்லாம இத்தனை வருஷம் கழிச்சு ஏன் சொல்லறாங்க? இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க. இவங்களை யாரோ இயக்குறாங்க!' என்று பேசும் அதிபுத்திசாலிகளையும் பார்க்க முடிகிறது.

  ‘இப்படி குற்றம் சொல்பவர்கள் நியாயமான முறையில் தங்கள் குறைகளை சொல்ல வேண்டும். குற்றச்சாட்டு நியாயமானதாக இருக்க வேண்டும்', என்று ஒரு புதிய அரசியல்வாதி கருத்து சொல்லியிருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது நியாயமான குற்றச்சாட்டா அல்லது போலியான குற்றச்சாட்டா என்பது தெரியும். ‘நடந்தது என்னவோ தவறுதான், ஆனால் அதை நிரூபிக்க முடியாது', என்ற நிலை இருந்தால், அது நியாயமான குற்றச்சாட்டாக இருக்காதே! அப்படிப்பார்த்தால் ஒரு குற்றச்சாட்டு நியாயமானதா என்பதை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் தீர்ப்புதான். முதலில் வருவது ‘குற்றச்சாட்டு', அதனைத் தொடர்ந்து வருவது ‘தீர்ப்பு'. குற்றம் சாட்டாமல் தீர்ப்பு வரை ஒரு பிரச்னையை எப்படி கொண்டு செல்வது? எதையாவது சொல்லி பாதிக்கப்பட்டவருக்கு மறைமுகமாக ஆதரிப்பதுதான் இதுபோன்ற அபத்தப் பேச்சு ஆசாமிகளின் முயற்சி.

  ‘இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்”. . . . “தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா?” என்று நக்கலாக ஒரு டிவிட் செய்திருக்கிறார் மரியாதைக்குறிய நாத்திகர் சுப வீரபாண்டியன். பாதிக்கப்பட்டது இவருக்கு தெரிந்த பெண்கள் இல்லை அல்லவா! அதனால் இவர் எப்படி வேண்டுமானாலும் பேசுவார். ஏன் தாமதமாக குற்றம் சாட்டக்கூடாதா? ‘குற்றம் சாட்டப்பட்டவர் அப்படிப்பட்டவர் அல்ல. ஒழுக்க சீலர்' என்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசுங்கள். அதில் தவறில்லை. அப்படியில்லாமல் அடுத்தவரின் பாதிப்பை கொண்டாடாதீர்கள். குறிப்பிட்ட காலத்துக்குப் பின் காலாவதியாவதற்கு ‘தவறு' என்ன மெடிக்கல் ஷாப்பில் வாங்குகிற மாத்திரைகளா? குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாட்களில் இது போன்ற சோஷியல் மீடியாக்கல் இல்லையே! அப்படியே சோஷியல் மீடியாக்கள் இருந்தாலும், குற்றம் சுமத்த காலவரையறை வரையறுக்க யாருக்கும் உரிமை இல்லை.

  சிலருக்கு பின்னால் ஒளிந்து கொள்ளலாம், சில கொள்கைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே பல பிரபலங்களுக்கு தவறு செய்யும் தைரியத்தை அளிக்கிறது. இந்த சிந்தனைகள் மட்டுமே இன்றுவரை அத்துமீறுபவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சுதந்திரமாக நடமாட வைக்கிறது. காலம் கடந்த தவறுகளை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால், குற்றத்தை நிரூபிக்க முடியுமா? ஒருவேளை நிரூபிக்க முடியாமல் போனால், நிரூபிக்க முடியாத தவறு குற்றமல்லவே! நடந்தது தவறே அல்ல என்று சொல்ல முடியுமா!

  இதை சற்று ஒதுக்கி வைப்போம்.

  ஒரு நிறுவனம். அதில் பணிபுரியும் ஒரு பெண்மணிக்கு குறிவைக்கிறார் மிஸ்டர் அப்பாத்துறை. அலுவலக தொலைபேசியிலிருந்து அந்த பெண்மணி அழைத்தார். ‘ நம்ம உச்ச அதிகாரிக்கு உங்க மேல தனிப்பட்ட பிரியம். கொஞ்சம் ஒத்துழைத்தால் . . . . ‘, என்று பேச்சை தொடர்ந்தார். அந்தப் பெண்மணி பிடிகொடுக்கவில்லை. பல யுக்திகளை கையாண்டார், பலனளிக்கவில்லை. இனி நிறுவனத்தில் தொடர்ந்தால் அதிகாரியை எதிர்த்துக் கொண்டு நாட்களை நகர்த்த முடியாது என்று நினைத்தார் அந்தப் பெண்மணி. ஒரு நாள் அந்த பெண்மணி நிறுவனத்திற்கு ‘குட் பை' சொல்லிவிட்டு வெளியேறினார். யாரிடமும் நடந்த விவரங்களை சொல்லவில்லை. வெளியில் சொன்னால் தனக்கே அசிங்கம் என்று நினைத்தார். ஆனால் பிரச்னை நிறுவனத்தின் மேலிடத்திற்கு தெரிந்துவிட்டது. அப்பாத்துறையின் மீதும், உச்ச அதிகாரியின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும்' என்று நினைத்தது நிறுவனம். அதனால் பிரச்னை மூடி மறைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்மணி குற்றம் சாட்டினால் அது “மீ டூ”. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஆனால் வேடிக்கை பார்த்தவர்கள் குற்றம் சாட்டலாமே! வேண்டுமானல் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை “ஹீ டூ” என்ற தலைப்பில் பதியலாமா!

  தனியார் நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லாத் தவறுகளும் பெரிதுபடுத்தப்படுவதில்லை, தண்டிக்கப்படுவதில்லை. தவறு செய்தவனை தண்டிப்பதால் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போகுமா அல்லது தவறு செய்தவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போகுமா? விசாரணைக்கு உட்படுத்தப்படாத தவறுகள் குற்றங்களாக கருதப்படுவதில்லை. சட்டத்தாலும் தண்டிக்கப்படுவதில்லை.

  தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

  ஒரு அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள். இருவரையும் அழைத்துக் கொண்டு சாதுவின் ஆசிரமத்திற்கு வந்தான்.

  ‘சாதுவே! என்னுடைய இரண்டு மகன்களையும் ஆசீர்வதியுங்கள். இவர்கள் இருவரும் உலகை தெரிந்து கொள்வதற்காக வெவ்வேறு திசைகளில் பயணிக்க இருக்கிறார்கள். பதினைந்து நாட்களுக்கு பிறகு நாடு திரும்புவார்கள்', என்றான் அரசன்.

  இருவரையும் ஆசீர்வதித்தார் சாது. தனது சீடனை அழைத்து ஆசிரமத்திலிருந்து இரண்டு மூட்டைகளை எடுத்து வரச்சொன்னார்.

  ‘இந்த மூட்டை பயணத்தின் போது உங்களுக்கு உதவும்', என்று சொல்லி ஆளுக்கொரு சிறிய மூட்டையை கொடுத்தார். இருவரும் புறப்பட்டனர். அரசர் நாடு திரும்பினார்.

  ஆசிரமத்தில் இருந்த சீடன் ஓடி வந்தான்.

  ‘குருவே! ஒரு பெரிய தவறு நடந்துவிட்டது. நீங்கள் விபூதி மூட்டையை எடுத்து வரச் சொன்னீர்கள். நான் தவறுதலாக குப்பைத் தொட்டியில் போடுவதற்காக மூட்டையாக கட்டி வைத்திருந்த குப்பை மூட்டைகளை கொடுத்துவிட்டேன்', என்றான் சீடன்.

  எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் சாது.

  பதினைந்து நாட்களுக்குப் பிறகு இளவரசர்கள் சாதுவின் ஆசிரமத்திற்கு வந்தனர். அரசன் சாதுவிடம் பேசினான்.

  ‘ஐயா! இவர்கள் இருவரில் யார் சிறந்தவன் என்பதை சொல்லுங்கள்', என்று கேட்டுக்கொண்டான் அரசன்.

  முதலாம் இளவரசன் சாதுவிடம் பேசினான்.

  ‘ஐயா! நீங்கள் கொடுத்த மூட்டையில் குப்பை இருந்தது. அதிலிருந்து துர் நாற்றம் வீசியது. ஆனால் அதை தூக்கியெறியவில்லை. அது நீங்கள் கொடுத்ததல்லவா! அதை எப்படி தூக்கியெறிய முடியும்? ஆகையால், துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு நாட்களை நகர்த்தினேன்', என்றான்.

  கேட்டுக்கொண்டிருந்த அரசருக்கு பெருமை. முதலாம் இளவரசனை பாராட்டினார். 
  அடுத்ததாக இரண்டாம் இளவரசன் சாதுவை வணங்கினான்.

  ‘ஐயா! பயணம் தொடங்கி சில நிமிடங்களிலேயே இந்த மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பிரித்துப் பார்த்தேன். இதில் குப்பை இருந்தது. அதை வீசியெறிந்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்', என்றான்.

  அரசருக்கு கோபம்.

  ‘ நீ செய்தது தவறு. சாது எதைச் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அவரது அனுபவமும் அறிவும் அப்படிப்பட்டது. அவர் கொடுத்த மூட்டையை தூக்கியெறிந்துவிட்டதால், நீ அவரது அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டாய். அவரை அவமதித்துவிட்டாய். அந்த மூட்டை உன் பயணத்திற்கு உதவாமல் போய்விட்டது', என்றார் கோபத்தோடு.

  சிரித்தான் இரண்டாம் இளவரசன்.

  ‘தந்தையே! யார் கொடுத்தாலும் சரி, எவ்வளவு விலையுயர்ந்த பாத்திரத்தில் கொடுத்தாலும் சரி, குப்பை குப்பைதானே! அதை ஏன் நான் சுமக்க வேண்டும்?', என்றான் அவன்.

  அரசனின் கோபம் தலைக்கேறியது. சாது பேசினார்.

  ‘அரசே! யாரிடமாவது மரியாதையும், அன்பும் வைத்திருப்போமேயானால், அதை அவர்களிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் வீட்டு குப்பைகளிடம் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. குப்பையை குருவாக நினைத்தாலும் தவறு. குருவை குப்பையாக நினைத்தாலும் தவறு. கொடுக்க வேண்டியவனுக்கு மறுக்கப்படும் மரியாதையும், கொடுக்கக் கூடாதவனுக்கு கொடுக்கப்படும் மரியாதையும் பயனற்றுப் போகும். இதை உணர்ந்தவன் சிறந்தவன். உணராதவன் உணர்ந்தபின் சிறந்தவன்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

  சொல்ல வந்த விஷயம் ரொம்ப சிம்பிள். கலைத்துறையை நமக்கு பிடிக்கலாம், ஆனால் அதில் நடக்கும் தவறுகளையும், தவறு செய்பவர்களையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளக்கூடாது. அலுவலகமோ, அரசியலோ அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளலாம், அதோடு சேர்த்து தவறுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

  இன்னும் சில இடங்களில் நூலுக்கு ஊசியே இடம் கொடுக்கிறது. இருதரப்பும் ஏற்றுக் கொண்டதால், தவறு சரியாகிவிடாது. சட்ட புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும் ஒழுங்கீனமான விஷயங்கள் தவறுதான். சட்டத்தால் தண்டிக்க முடியாதவற்றை செய்பவர்களை சாதாரண மக்களாகிய நாம் அஹிம்சை வழியில் தண்டிக்க வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக் கொள்ளட்டும். நம் பங்கிற்கு அத்தகையவர்களை பொது வாழ்க்கையிலிருந்தும், உயர் பதவியிலிருந்தும் அகற்றும் வகையில் அவர்களை புறக்கணிப்போம். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம். இவர்களுடனான தனிப்பட்ட உறவுகளையும் உதறுவோம்.

  சட்டம் என்பது “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” திரைப்படத்தில் வரும் குகை மாதிரிதான். குகையின் பாஸ்வேர்ட் தெரிந்தவர்களுக்கு உள்ளே சென்று வெளிவருவதில் எந்த பிரச்னையும் இருப்பதில்லை. பாஸ்வேர்ட் மறந்தவர்கள் உள்ளே மாட்டிக்கொண்டால் தலையில்லாமல் தலைகீழாக தொங்க வேண்டியதுதான். அப்பாத்துறைக்கும், அலிபாபாவுக்கும் பாஸ்வேர்டு பிரச்னைகள் வருவதில்லை. மற்றவர்கள் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டியதுதான்.

  ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

  ‘கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?' என்று கேட்டார் அந்த பத்திரிக்கையாளர்.

  ‘நான் மீண்டும் குழந்தையாக மாற வேண்டும். எந்த தவறுமே செய்யாத ஒரு புதிய வாழ்க்கையை மறுபடியும் வாழ வேண்டும்', என்று வரம் கேட்பேன் என்று பதிலாகச் சொன்னார். இது அனுபவம் தந்த பதில். இந்த பதிலால் அந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றது என்றுகூட சொல்லலாம். நேர்மையான, ஒழுக்கமான வாழ்க்கை தரும் சுகங்களை உணர்ந்த பேச்சு இது. இவையெல்லாம் நமக்கெல்லாம் தெரிந்த விஷயங்கள்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு செயல்படுத்திவிட்டால் போதும். வாழ்க்கை சொர்க்கமாகிவிடும். ஒழுக்கமில்லாதவனுக்கு இதன் அருமை புரியும், ஒழுக்கமானவனுக்கு இதன் பெருமை தெரியும். ஒழுக்கமில்லாதவனை புறக்கணிப்போம், ஒழுக்கத்தை நோக்கி நம் நகர்வை தொடர்வோம். ஒழுக்கமில்லாதவர்களை அதிகாரத்திலிருந்தும், பொது வாழ்க்கையிலிருந்தும் அகற்றும் சிந்தனையை வளர்த்துக் கொள்வோம்.

  - சாது ஸ்ரீராம்
  saadhusriram@gmail.com
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai