Enable Javscript for better performance
உடனடி தேவை  மனிதநேயம் கூடிய பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு!- Dinamani

சுடச்சுட

  

  உடனடி தேவை  மனிதநேயம் கூடிய பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு!

  By - டிவைன் ஒலிவா, சமூக சேவகர்  |   Published on : 26th September 2018 01:44 PM  |   அ+அ அ-   |    |  

  476690-childlabour-1354903031-617-640x480

   

  இந்திய திருநாட்டின் 72-வது சுதந்திர தின மகிழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடினோம். கொடியேற்றங்கள், கோலாகலங்கள், முப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு வர்த்தக நிறுவனங்களின் சிறப்பு தள்ளுபடி விற்பனை இத்யாதி இத்யாதி நிகழ்வுகளுடன் சுதந்திர இந்தியா 73-வது ஆண்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானும் அந்நாட்டின் சிறையில் வாடிய 30 இந்திய கைதிகளை விடுதலை செய்து, தனது மனிதாபிமானத்தை பிரகடனம் செய்து கொண்டது.

  ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் பற்றி எதுவும் அறியாமல், இதுவும் வழக்கம் போல் கடந்து போகிற ஒரு சாதாரண நாள் என்கிற உணர்வோடு கொத்தடிமைகளாக ‘இருட்டு வாழ்க்கை’ வாழும் ஏழை சக இந்தியனை குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பள்ளிக்கு செல்லும் வயதில் செங்கற்சூளையில் ‘சுமக்கும்’ பணி செய்யும் சிறார்கள், மரம் வெட்டும் பணியில் சிறுவர்கள்,  முதலாளியிடம் அடி வாங்கும் கணவனை பார்த்து கதறும் மனைவி, இரக்கமற்ற முதலாளியிடம் சிக்கி தவிக்கும் மனைவியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் கணவன்! உயிர் வாழ மட்டுமே உதவும் சொற்ப ஊதியம் விடுமுறை இல்லாத வேலை, ஒய்வு மறுக்கப்படும் உழைப்பு, பண்டிகை, கொண்டாட்டம், என்று எதுவுமே இல்லாத திண்டாட்ட வாழ்க்கை இவைகளெல்லாம் கொத்தடிமைத்தனத்தின் கோர முகங்கள்.

  சுதந்திர இந்திய ஜனநாயக குடியரசில், இன்னுமா கொத்தடிமைத்தனம் இருக்கிறது? என்று வியப்போருக்கு சதீஷின் கதை அதிர்ச்சியை தரும்.

  தங்கையின் திருமணத்திற்காக கடனாக பெற்ற 5,000 ரூபாய்க்கு வட்டியோடு சேர்த்து இருபதாயிரமாக (என்ன கணக்கோ?) தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட போது நொறுங்கியே போனார் சதிஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர் நிலைமைக்கு இருபதாயிரம் என்பது மிகப் பெரிய தொகை. விளைவு? பணம் கொடுத்த முதலாளியின் செங்கற்சூளையில் வேலை செய்து கடனை தீர்க்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏழ்மையும் அறியாமையும் துரத்த தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் செங்கற்சூளை வேலையில் சிக்கினார் சதிஷ்.

  அடி, உதை, அவமானம், அச்சுறுத்தலோடு 5 ஆண்டுகள் ஆகியும், கடன் தீரவில்லை மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து வார சம்பளம் 200 ரூபாய் இந்த சொற்ப பணத்தில் உண்டு, உடுத்து, வேலையும் செய்ய வேண்டும். இதில் கடனை எங்கிருந்து அடைப்பது? இனி இதுதான் வாழ்க்கையோ என விரக்தியின் விளிம்பில் இருந்த சதீஷின் குடும்பத்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மீட்டெடுத்த பிறகே அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்தது.

  சதீஷின் கதை (அல்ல நிஜம்) ஒரு சிறு துளிதான். மீட்கப்பட்ட பல நூறு கொத்தடிமைகளின் கண்ணீர் தோய்ந்த அனுபவங்கள் நம்மை அதிரவைக்கும். திரைப்படங்களில் கூட ‘கொத்தடிமைகள்’ என்னும் பதம் ஏதோ பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு ‘வர்க்கம்’ போலவே சித்தரிக்கப்படுகிறது ‘பரதேசி’ மற்றும் 12 Years a Slave போன்ற திரைப்படங்களில் இதை காணலாம். ஆனால் கொத்தடிமை கொடுமை இன்றும் தொடரும் துயரம் என்பதே உண்மை. கொத்தடிமைப் படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றாலும் இந்த கொடுமை தொடர்வது எப்படி சாத்தியமாகிறது?

  அறியாமையில் உழலும் ஏழை மக்கள் தான்  இந்த வஞ்சக வலையில் எளிதாக சிக்கிக் கொள்கிறார்கள். வாங்கிய கடனை செலுத்த ‘இங்கு’ வேலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்கிற அறியாமையை ‘முதலாளிகள்’ பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்பாவி மக்களின் உழைப்பு அநியாயமாக, கொடூரமாக சுரண்டப்படுகிறது. மொத்தத்தில் அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடையது அல்ல. வறுமை அதனால் ஏற்படும் அச்சம் இவைகளை ஈவு இரக்கமற்ற சுயநல – சூது மதியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஏழை மக்களின் வியர்வையையும்,  ரத்தத்தையும், குடித்து கொழுக்கிறார்கள்.

  வேலூர் அருகே உள்ள ஒரு செங்கற்சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஏழு வயது சிறுமி தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே செங்கற்சூளையில் ஒன்பது ஆண்டுகள் கொத்தடிமைகளாக வேலை செய்த பெற்றோருக்கு பிறந்த தியா, மூணு வயதில் இருந்தே செங்கல் அடுக்குவது தார்பாய் சுருட்டுவது போன்ற வேலைகளை தனது சகோதரியோடு சேர்ந்து செய்து வந்தாள். அவள் மீட்கப்பட்டபோது எடுத்த படம் இது. (ஏப்ரல் 2015)

  கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் O.பன்னீர் செல்வம் அவர்கள், ‘தமிழகத்தை கொத்தடிமைகள் இல்லா மாநிலம் ஆக்குவோம்’ என சூளுரைத்தார்.

  கொத்தடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கமும் சட்டமும் சாதகமாக இருக்கும் போது தடுப்பது எது?

  உடனடி தேவை - மனிதநேயத்தோடு கூடிய பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வுதான்.

  - டிவைன் ஒலிவா, சமூக சேவகர்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai