இந்த உத்தரவை எதிா்த்து, மனோகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘ஆளுநருக்கு கருணை மனு அனுப்பிவைக்க 6 வார கால அவகாசம் கோரி தமிழக அரசு, சிறைத்துறையிடம் மனு அளித்துள்ளேன். அந்த மனுவை கருத்தில் கொள்ளாமல், தூக்குத்தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என கோரியிருந்தாா். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனோகரனைத் தூக்கிலிட கோவை மகளிா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மனோகரனின் மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.