பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

‘தி போஸ்ட்’ திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதமே முடித்து விட்டார் என்று பார்த்துக் கொள்ளுங்கள் அவரது வேகத்தையும், ஆற்றலையும். அது தான் ஸ்பீல்பெர்க்.
Happy birthday Steven Speilberg
Happy birthday Steven Speilberg

அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஒரு திரைப்படத்தை இயக்குவதில் அவருக்குண்டான திறமைக்காக மட்டுமல்ல அவரது பல்துறை திறனுக்காகவும் அவர் தேசம் மற்றும் மொழி வித்தியாசமின்றி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களாலும், திரைத்துறை வித்தகர்களாலும் பலமுறை கொண்டாடப்பட்டிருக்கிறார். அந்தத் திறமை தான் சிறந்த இயக்குனருக்கான அகாதெமி விருதை இரண்டு முறை அவருக்குப் பெற்றுத்தந்தது. அவர் இயக்கிய திரைப்படங்களில் பல காலம் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அவை இன்று வெளியிடப்பட்டாலும் கூட அதிக வசூலை ஈட்டித் தரும் திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதிக்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.300 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹாலிவுட்டில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை.

ஸ்டீவனின் இளமைக்காலம்

டிசம்பர் 18, 1946 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் அமைந்துள்ள சின்சினாட்டி நகரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பிறந்தார். ஸ்பீல்பெர்க்கின் அம்மா லியா ஒரு உணவகம் நடத்தி வந்ததோடு கச்சேரிகளில் பியானோ வாசிப்பவராகவும் இருந்து வந்தார். அப்பா ஒரு எலெக்ட்ரிக்கல் இஞ்சினியர். அடிப்படையில் மிக ஆசாரமான யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களான இத்தம்பதிகள் தங்களது குழந்தைகளையும் அதே கட்டுப்பாடுகளுடனே வளர்த்தார்கள். தாத்தா வழியில் இவருக்கு உக்ரேனியப் பின்புலமும் உண்டு. குழந்தைப் பருவத்தில் தனது யூதப் பின்புலம் அத்தனை ரசிக்கத்தக்க அனுபவங்களைத் தரவில்லை என்கிறார் ஸ்பீல்பெர்க். உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த போது தான் ஒரு கட்டிப்பாடு மிக்க ஆர்த்தோடாக்ஸ் யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற ஒரே  காரணத்துக்காக இரண்டு முறை சக மாணவர்கள் என் மூக்கை உடைத்து அனுப்பிய காட்சிகளும் என் வாழ்வில் அரங்கேறி இருக்கின்றன என்று ஒரு சந்தர்பத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதில் ஆறுதலான விஷயம் என்றால், உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்த காலத்திலேயே ஸ்பீல்பெர்க் தனது அமெச்சூர் ஃபிலிம் மேக்கிங் பணியைத் தொடங்கி விட்டது மட்டுமே எனலாம். அப்போதெல்லாம் அமெரிக்கப் பள்ளி மாணவர்களிடையே அட்வெஞ்சர் திரைப்படங்களின் பால் அதீத மோகம் இருந்தது. ஸ்பீல்பெர்க்கின் அதில் தான். ஆகவே, அவர் அப்போதிருந்தே அமெச்சூர் 8 mm அட்வெஞ்சர் திரைப்படங்களை எடுக்கத் தொடங்கி விட்டார்.

முதல் அமெச்சூர் திரைப்பட முயற்சி

1958 ஆம் ஆண்டில் சாரணர் இயக்க மாணவராக இருந்த போது, திடீரென ஒருநாள் ஸ்பீல்பெர்க்கின் அப்பாவுடைய ஸ்டில் கேமரா உடைந்து விடுகிறது. அதைப் பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஸ்பீல்பெர்க், அதை வைத்து தனது ஃபோட்டோகிராபி மெரிட் பேட்ஜ் பெறுவதற்கான தேவைக்கு ஒரு கதையைத் தயார் செய்ய முடியுமா? என்று தன்னுடைய ஸ்கெளட் ஆசிரியரைக் கேட்கிறார். அதற்கு அவர் முடியும் என்று பதிலளிக்கவே, அதையே தனக்கான உந்துசக்தியாகக் கொண்டு தி லாஸ்ட் கன் ஃபைட் என்ற தலைப்பில் 9 நிமிட 8mm திரைப்படமொன்றைத் தயாரித்து புகைப்படம் எடுத்தல் தகுதியில் வென்று பேட்ஜ் பெறுகிறார். தான் ஒரு வெற்றிகரமான இயக்குனராகிப் பின் பரபரப்பாக ஊடகங்களில் நேர்காணல்கள் அளிக்கத் தொடங்கிய சமயத்தில் ஸ்டீவன் இந்த சம்பவத்தை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டீவனின் 13 வயதில் அவரது குடும்பம் ஃபீனிக்ஸ் நகருக்கு குடி பெயர்ந்தது. அங்கு வசிக்கையில் தனது உயர்நிலைப்பள்ளி நண்பர்களையே நடிகர்களாகக் கொண்டு எஸ்கேப் டு நோவேர் (Escape to Nowhere) என்ற தலைப்பில் 40 நிமிட யுத்தப் படமொன்றை எடுத்தார். இந்த முயற்சியே அடுத்து அவரை தொடர்ச்சியாகப் 15 அமெச்சூர் 8 mm திரைப்படங்களை எடுக்கத் தூண்டியது என்கிறார் ஸ்பீல்பெர்க்.

தனது ஆரம்ப காலத் திரைப்படங்களில் பலவும் குழந்தைப் பருவத்தில் தான் கண்டுகளித்த காட்ஸில்லா, கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ் போன்ற பலவிதமான அட்வெஞ்சர் திரைப்படங்களின் கதைக்கருக்களின் தாக்கத்தில் உருவானவையே என ஒப்புக் கொள்ளும் ஸ்டீவன்... அந்தப் படங்களெல்லாம் நிஜமாகவே நடந்ததைப் போல பிரமிக்கத் தக்க விதத்தில் படமாக்கப்பட்டிருந்ததாக சிலாகிக்கிறார். அத்துடன் இத்திரைப்படங்களைத் தொடர்ந்து 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த கேப்டன்ஸ் கரேஜியஸ், 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த பினோச்சியோ, குறிப்பிட்டுச் சொல்வதென்றால் 1962 ல் வெளிவந்த லாரன்ஸ் ஆப் அரேபியா உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள் தான் ஒரு இயக்குனராகும் கனவுடனிருந்த தனது திரைப்பயணத்தை செதுக்கிய மிக முக்கியமான திரைப்படங்கள் என்கிறார் ஸ்டீவன். 

தனது 16 வது வயதில் ஸ்டீவன் சுமார் 500 அமெரிக்க டாலர்களைச் செலவிட்டு சொந்தத் தயாரிப்பில் ‘ஃபையர் லைட்’ என்றொரு திரைப்படத்தை எடுத்து முடித்தார். படத்திற்கு அவரது தந்தை பண உதவி செய்தார். அத்திரைப்படம் உள்ளூர் சினிமாவின் இடையே மாலை நேரத்தில் திரையிடப்பட்டு அதற்காகச் செலவிட்ட தொகையை ஈட்டிக் கொண்டது.

டாப் 30 திரைப்படப் பட்டியல்

ஸ்பீல்பெர்க் ஒரு தயாரிப்பாளராக, நிர்வாகத் தயாரிப்பாளராக, இயக்குநராக எனப் பல்வேறு பரிமாணங்களில் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அவற்றில் அவரது சொந்தப் படங்கள் தவிர்த்து பிறவற்றில் அவர் தனக்கான பங்களிப்பைக் கூட குறிப்பிட்டதில்லை.

அவற்றில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படங்களென இவற்றைப் பட்டியலிடலாம்.

  1. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆப் கிரிஸ்டல் ஸ்கல் (2008) 
  2. தி லாஸ்ட் வேர்ல்டு: ஜுராஸிக் பார்க் (1997)
  3. A.I.ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்ஸ் (2001)
  4. கேட்ச் மீ இஃப் யூ கேன் (2002)
  5. அமிஸ்டட் (1997)
  6. தி கலர் பர்ப்பிள் (1985)
  7.  
  8. ஹூக் (1991)
  9. தி சுகர்லேண்ட் எக்ஸ்பிரஸ் (1974)
  10. 1941 (1979)
  11. தி டெர்மினல் (2004)
  12. வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ் (2005)
  13. மைனாரிட்டி ரிப்போர்ட் (2002)
  14. தி அட்வெஞ்சர்ஸ் ஆஃப் டின் டின் (2011)
  15. லிங்கன் (2012)
  16. தி பி எஃப் ஜி (2016)
  17. பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் (2015)
  18. முனிச் (2005)
  19. வார் ஹார்ஸ் (2011)
  20. இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி லாஸ்ட் குருசேட் (1989)
  21. எம்பையர் ஆப் தி சன் (1987)
  22. இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி டெம்பிள் ஆப் டூம் (1984)
  23. ஜுராஸிக் பார்க் (1993)
  24. சேவிங் பிரைவேட் ரையான் (1998)
  25. டூயல் (1971)
  26. ரெய்டர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க் (1981)
  27. E.T. தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் ( 1982)
  28. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1993)
  29. குளோஸ் என்கவுன் டர்ஸ் ஆப் தி தேர்டு கைண்ட் (1977)
  30. ஜாவ்ஸ் (1975)


ஸ்பீல்பெர்க் நடிகராகத் திரையில் பங்களித்த படங்கள்

தி ப்ளூஸ் பிரதர்ஸ், கிரெம்லின்ஸ், வெனிலா ஸ்கை, மற்றும் கோல்ட்மெம்பரில் ஆஸ்டின் பவர்ஸ் போன்ற திரைப்படங்களில் கேமியோ வேடங்களில் நடித்தார், அதே போல் ஜாஸ்ஸில் ஒரு லைஃப்-ஸ்டேஷன் தொழிலாளி போன்ற மிகச்சிறிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அவர் தயாரித்த வார்னர் பிரதர்ஸ் கார்ட்டூன்களில் அனிமேனியாக்ஸ் போன்ற ஏராளமான திரைப்படங்களில் கேமியோ வேடங்களில் நடித்ததோடு, பால் படத்திலும், டைனி டூன் அட்வென்ச்சர்ஸ் பஸ்டர் அண்ட் பாப்ஸ் கோ ஹவாய் என்ற திரைப்படங்களிலும் அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்பீல்பெர்க் பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2017 ஆம் ஆண்டில், ஸ்பீல்பெர்க், சக இயக்குனர்களான பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா, கில்லர்மோ டெல் டோரோ, பால் கிரீன்கிராஸ் மற்றும் லாரன்ஸ் காஸ்டன் ஆகியோருடன் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத் தொடரான ஃபைவ் கேம் பேக்கை தயாரித்தார்.

திருமணங்களும் குழந்தைகளும்

இயக்குனர் பிரையன் டி பால்மாவின் யோசனையின் பேரில் 1976 ஆம் ஆண்டில் முதன்முதலாக நடிகை ஆமி இர்விங்கை ஸ்பீல்பெர்க் சந்தித்தார், அப்போது அவர் தனது குளோஸ் என்கவுன்டர்ஸ் திரைப்படத்தில்  நடிக்க ஒரு பொருத்தமான நடிகையைத் தேடிக் கொண்டிருந்தார். அவளைச் சந்தித்தபின், ஸ்பீல்பெர்க் தனது இணை தயாரிப்பாளரான ஜூலியா பிலிப்ஸிடம், "நேற்றிரவு நான் ஒரு உண்மையான இதய துடிப்பாளரைச் சந்தித்தேன்" என்று கூறினார். அதற்குப் பின் ஆமி இர்விங்குடனான ஸ்டீவனின் உறவு பலப்பட்டது. அவர்கள் நான்கு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர், ஆனால் அவர்களின் தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தங்கள் அவர்களின் உறவை பாதித்தன. நடிகை ஆமியைப் பொருத்தவரை, ‘ஒரு நடிகையாக அவர் அடைந்த எந்த வெற்றியும் அவருடையது மட்டுமே அதில் ஸ்டீவனின் அடையாளமோ, தாக்கமோ இருக்கவே கூடாது என அவர் விரும்பினார் சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘ஸ்டீவனின் காதலி என்று தான் அறியப்படுவதை ஆமி விரும்பவில்லை," எனவே தான், ஸ்டீவனுடன் சேர்ந்து வாழ்ந்த அந்த நான்கு ஆண்டுகளில் அவரது எந்த படத்திலும் தான் இருக்கவே கூடாது என்று ஆமி முடிவு செய்தார்.

இதன் விளைவாக அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர்கள் 1979 இல் பிரிந்தனர், பிரிவின் பின்னரும் கூட  நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். பிறகு பார்த்தால் அவர்கள் வாழ்வில்  ஒரு மேஜிக் நடந்தது. ஆம், 1984 ஆம் ஆண்டில் அவர்கள் தங்கள் காதலை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர், தொடர்ந்து நவம்பர் 1985 ல், திருமணமும் செய்து கொண்டனர், இருவருக்கும் மேக்ஸ் சாமுவேல் என்ற மகன் பிறந்தான். எவ்வாறாயினும், தங்களது திருமண வாழ்வின் மூன்றரை ஆண்டுகளின் பின், அவர்களது தொழில் வாழ்க்கையில் நிலவிய அதே போட்டி அழுத்தம் காரணமாக 1989 ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிவதென முடிவெடுத்தனர். மகன் மீதான பொறுப்புகள் மற்றும் அவனது பாதுகாப்பை முன்னிட்டு இருவருமே அருகருகே இருப்பிடங்களை அமைத்துக் கொண்டு அவனை வளர்க்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்வது என தங்களுக்குள் ஒரு இணக்கமான முடிவை எடுக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி பெருமளவிலான இழப்பீட்டுத் தொகையுடன் அவர்களின் விவாகரத்து நடந்து முடிந்தது. அதன் காரணமாகவே வரலாற்றில் மூன்றாவது மிக விலையுயர்ந்த பிரபல விவாகரத்து என அதைக் குறித்து பதிவு செய்யப்பட்டது.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின், ஸ்பீல்பெர்க் நடிகை கேட் காப்ஷாவுடன் ஒரு உறவை வளர்த்துக் கொண்டார், கேட்,  இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது ஸ்டீவன் அவரைச் சந்தித்தார். பின்னர் தொடர்ந்த நட்பு மற்றும் காதலை முன்னிட்டு அவர்கள் அக்டோபர் 12, 1991 இல் திருமணம் செய்து கொண்டனர். கேட் கேப்ஷா யூத மதத்திற்கு மாறினார். அவர்கள் தற்போது கலிபோர்னியாவின் பசிபிக் பாலிசேட்ஸில் உள்ள குவெல் ஃபார்ம், நியூயார்க்கின் ஈஸ்ட் ஹாம்ப்டனில் உள்ள ஜார்ஜிகா பாண்ட், நியூயார்க் நகரம் மற்றும் நேபிள்ஸ், புளோரிடா எனத் தங்களது நான்கு வீடுகளில் தங்களது 7 குழந்தைகளுடன் மாற்றி மாற்றி வசித்து வருகின்றனர்.

ஸ்பீல்பெர்க்-கேப்ஷா குடும்ப வாரிசுகள்

  1. ஜெசிகா காப்ஷா (பிறப்பு ஆகஸ்ட் 9, 1976) - இவர் கேட் காப்ஷாவின் முதல் திருமணத்தின் போது முன்னாள் கணவர் ராபர்ட் கேப்ஷாவுக்குப் பிறந்த மகள்
  2. மேக்ஸ் சாமுவேல் ஸ்பீல்பெர்க் (பிறப்பு ஜூன் 13, 1985) - நடிகை ஆமி இர்விங்குடனான திருமணத்தில் ஸ்பீல்பெர்க்குக்குப் பிறந்த மகன்
  3. தியோ ஸ்பீல்பெர்க் (பிறப்பு ஆகஸ்ட் 21, 1988) - ஸ்பீல்பெர்க்குடனான திருமணத்திற்கு முன்பு கேட் காப்ஷாவால் தத்தெடுக்கப்பட்ட மகன், பின்னர் ஸ்பீல் பெர்க்கும் முறைப்படி இவனைத் தத்தெடுத்துக் கொண்டார்.
  4. சாஷா ரெபேக்கா ஸ்பீல்பெர்க் (பிறப்பு: மே 14, 1990, லாஸ் ஏஞ்சல்ஸ்)
  5. சாயர் அவேரி ஸ்பீல்பெர்க் (பிறப்பு மார்ச் 10, 1992, லாஸ் ஏஞ்சல்ஸ்)
  6. மைக்கேலா ஜார்ஜ் (பிறப்பு: பிப்ரவரி 28, 1996) - கேட் கேப்ஷாவால் தத்தெடுக்கப்பட்டவர்
  7. டெஸ்ட்ரி அல்லின் ஸ்பீல்பெர்க் (பிறப்பு டிசம்பர் 1, 1996)

இப்படி முதல் கணவர், முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஸ்டீவன், கேட் தம்பதிக்குப் பிறந்த குழந்தைகள் என மொத்தம் 7 வாரிசுகள் தற்போது ஸ்டீவன், கேட் தம்பதிக்கு உண்டு.

சொத்து மதிப்பு

ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஸ்பீல்பெர்க்கின் தனிப்பட்ட நிகர மதிப்பு 7 3.7 பில்லியன் எனச் சுட்டுகிறது. நம்மூர் பணத்திற்கு 370 கோடி ரூபாய். 2009 ஆம் ஆண்டில் மடோஃப் போன்ஸி திட்ட விசாரணையின் போது தெரிய வந்த செய்தி இது. பெர்னி மடோஃப் மோசடி செய்த முதலீட்டாளர்களில் ஸ்பீல்பெர்க் மற்றும் கேப்ஷா தம்பதியினரும் அடக்கம்.

ஸ்பீல்பெர்க்கின் படகு சவாரி (Yachting) ஆர்வம்

2013 ஆம் ஆண்டில், ஸ்பீல்பெர்க் 282 அடியிலான (86 மீ) மெகா படகான செவன் சீஸ் (Seven seas) ஐ 182 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். பின்னர் அவர் அதை விற்பனைக்கும் வைத்துள்ளார், இதற்கிடையில் அதை தனியாருக்கு வாடகைக்கு விடும் வழக்கத்தையும் அவர் கொண்டிருக்கிறார். அதன் வாடகை மாதத்திற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டாலர், இது சந்தையில் மிகவும் விலையுயர்ந்த சார்ட்டர் படகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமல்ல, இப்போது புதிதாக 250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஒரு புதிய 300 அடி (91 மீ) படகு ஒன்றை வாங்கவும் கூட ஸ்டீவன் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்.

ஸ்பீல்பெர்க்கின் கனவுத் திரைப்படம்

ஸ்பீல்பெர்க் தனது கனவுத் திரைப்படமாக கருதுவது ரோபோபோகலிப்ஸ் என்கிற நாவலின் கதையைத்தான். ஆனால், அது பலமுறை படப்பிடிப்பு துவக்கப்படுவதாக அறிவித்த பின்னரும் கூட பட்ஜெட் பற்றாக்குறை, தொழில்நுட்ப சவால்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு முறையும் தடைப்பட்டுக் கொண்டே தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. 

ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா அளவில் பார்க்கும் போது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஒரு மாபெரும் படைப்பாளியாகவும், திரை ஆளுமையாகவும் கருதப்படுகிறார். அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று கதை எழுதுவது மட்டுமல்ல, அந்தக் கதையை எப்படித் திரைப்படமாக்கி, எவ்விதமாகவெல்லாம் வியாபாரம் செய்ய வேண்டும் எனும் மார்கெட்டிங் உத்தியில் மிக வல்லவர் ஸ்டீவன். அத்துடன் ஒரு சிறு பொறியை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மக்கள் ரசிக்கக் கூடிய மிக அருமையான திரைப்படமாக மாற்றித்தரும் வித்தை தெரிந்தவர் ஸ்பீல்பெர்க். படம் இயக்குவது மட்டுமே தன்னுடைய வேலை என்று ஒதுங்காமல் திரைப்பட உருவாக்கத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் வெற்றிகரமாகப் புகுந்து புறப்படத் தயங்காதவர் ஸ்டீவன் என்பதே அவருக்கான சாதனைகளின் மூலம். 

ஹேப்பி பெர்த்டே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

இன்று 74 வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இன்றும் கூட ஒரு துடிப்பான இளம் இயக்குனருக்குண்டான ஆர்வத்துடனும், துடிப்புடனும் திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். 

74 வயது இளைஞர்

‘தி போஸ்ட்’ திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதமே முடித்து விட்டார் என்று பார்த்துக் கொள்ளுங்கள் அவரது வேகத்தையும், ஆற்றலையும். அது தான் ஸ்பீல்பெர்க்.

அவரது மிக முக்கியமான கூற்றுக்களில் ஒன்று ‘சயின்ஸ் பிக்ஸன் என்று தனியாக திரைப்படங்கள் எதுவும் இல்லை,எல்லாத் திரைப்படங்களிலுமே சயின்ஸ் இருக்கிறது’ என்பது. அவர் சொன்னபடியே அவர் தனது திரைப்படங்களில் எடுத்தாண்ட சில அறிவியல் பூர்வமான விஷயங்கள் இன்று நிஜமாகவே சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன என்பது.

உலகின் பணக்கார திரைப்பட இயக்குனர் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார் இந்த 74 வயது இளைஞர்.

அவருக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வோம்.

ஹேப்பி பெர்த் டே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com