‘பிறமொழி கற்றலில்’ பாரதி சொல்லுக்கு மதிப்பில்லையா?!

தொழில்நுட்ப வளர்ச்சிகள் அசுர வேகத்தில் மறுமலர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலத்தில் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரிந்தவர்களாக இனி நம்மால் காலம் தள்ளி விட முடியுமா?!
பிற மொழி கற்றல்
பிற மொழி கற்றல்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவது எங்கும் காணோம். 

- எனும் பாரதி பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது. யாரேனும் இந்தப் பாடலை இதுவரை அறிந்திருக்கவில்லை எனில், தயவுசெய்து முழுமையாக ஒருமுறை அந்த முண்டாசுக் கவிஞன் இந்தப் பாடல் வழியாக அப்படி எதைக் கடத்த முனைந்திருக்கிறார் என்று பார்த்து விடுவது உத்தமம். ஏனெனில், நாம் பாரதியைக் கொண்டாடும் மனநிலையில் இருக்கையில் அவரது கருதுகோள்களுக்கும் செவி சாய்க்கக் கடமைப்பட்டவர்கள் தானே!

பிற மொழிகளைக் கற்றல் குறித்து பாரதியின் புரிதல்..

மகாகவி
மகாகவி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவது எங்கும் காணோம். 
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் 

இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு 
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு 
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் 
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தின் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல்
கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின் 
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் 
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

ஆம், பாரதியின் கூற்றுப்படி ‘நாம் தமிழர்கள்’,‘நமது மொழி தேமதுரத் தமிழ்’ என்ற பெருமையோடு தலை நிமர்ந்து வாழும் உரிமை நமக்குண்டு. அதே வேளையில் அரசியல் உள்நோக்கங்களுடன் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டும், கிணற்றுத்தவளைகளாகவும் சொந்தப் பெருமை பேசிக் கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் காலம் தள்ள முடியும்? 

எந்த ஒரு அரசியல் போராட்டமும் மக்கள் முன்னேற்றத்துக்கான, சமுதாய மறுமலர்ச்சிக்கான தூண்டுகோலாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, ஒரு தலைமுறை மக்களின் ‘புதியன கற்கும் திறனையும், முயற்சிகளையும்’தடை செய்யக்கூடியதாக இருந்து விடக்கூடாது என்பதற்கு நமக்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. நமது மூத்த தலைமுறையினரைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். தமிழகத்தின் திராவிடக் கழகம் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களைப் பற்றி. போராட்டம் நடந்த காலகட்டத்தில் அன்றிருந்த அரசியல் சூழல் காரணமாக அது நியாயமான நோக்கத்திற்காகவே இருந்திருக்கலாம். ஆனால், இன்று காலம் மாறி விட்டது. அன்று இந்தியை எதிர்த்தவர்களே கூட பின்னாளில் தங்களது அடுத்த தலைமுறையினர் இந்தி கற்க நினைத்த போது தடுத்து விட்டார்களா என்ன? கிடையாது.

ஆக, இங்கே பிற மொழி கற்றல் என்பது தனிமனித சுதந்திரம் என்பதை அவர்கள் மிக நன்றாகவே உணர்ந்து கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இங்கே பலிகடாக்கள் ஆக்கப்பட்டவர்கள் கட்சி சார்ந்த கொள்கை வெறியோடு தன் எதிர்காலத் தேவைகளை உணர மறந்த அப்பாவி பொது ஜனம் தான்.

இன்று காலை நாளேட்டில் கண்ட செய்திகளில் ஒன்று... உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் ஏன்? என்பது;

இந்தக் கேள்வியே கேள்விக்குரியதுதான். ஏனெனில், சர்வதேச அளவில் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டுமெனில் நாம் தமிழில் மட்டுமே முழங்கிக் கொண்டிருந்தால் போதுமா என்ன? அந்த மகாகவியின் கவிதை வரிகளுக்கேற்ப, தமிழ்மொழியின் பெருமையை உலகோர்க்கு எடுத்தியம்ப நாம் பிற மொழிகளையும் அறிந்தவர்களாய் அல்லவா இருந்திட வேண்டும்?! அந்த வாய்ப்பை அரசே இலவசமாக தமிழ் கற்கும் ஆய்வு மாணவர்களுக்கு உண்டாக்கித் தருகிறது எனும் போது அந்த முயற்சியை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை தடுக்காமல் இருக்க வேண்டுமா இல்லையா?

இங்கே பிற மொழி கற்றல் என்பது நம் தாய்மொழிக்கான ஆபத்தாக ஏன் கருதப்பட வேண்டும்?

அது நமது சிந்தனை தடுமாற்றமே அன்றி வேறென்ன? ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.  மொழி சார்ந்த ஈடுபாடு, அதைத் தடையின்றிப் பேசவும், எழுதவும் மேற்கொள்ள வேண்டிய இடைவிடாத பயிற்சிகள் என்று கற்றலுக்கும் அதைக் கைக்கொள்ளலுக்கும் நடுவே பல படிகள் இருக்கின்றன. இன்று நம்மிடையே ஆரம்பப் பாடசாலையில் இருந்து மேல்நிலைக்கல்வி வரை இந்தியையும், பிரெஞ்சையும், சமஸ்கிருதத்தையும் இரண்டாம், மூன்றாம் மொழியாகக் கொண்ட எத்தனை மாணவர்கள் பிற்காலத்தில் தங்கு தடையின்றி அந்தந்த மொழிகளில் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் முக்கால்வாசிப் பேருக்கு முறையாக அந்தந்த மொழிகளைப் பேசத்தெரிந்திருக்காது, எழுதத் தெரிந்திருக்காது என்பதே நிதர்சனம். ஆக, கடமைக்கு ஒரு மொழியைக் கற்பதற்கும், விரும்பி ஒரு மொழியைக் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

விரும்பிக் கற்பவர்களால் நிச்சயம் தம் தாய்மொழிக்கு எந்தக் குந்தகமும் விளைவித்துவிட முடியாது. அவர்கள் இங்கிருக்கும் நல்ல விஷயங்களை தாம் கற்றுக் கொண்ட புதிய மொழியிலும் கடத்த விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அதற்கு நமது மகாகவி பாரதி, ஜி.யு.போப். கால்டுவெல், வீரமாமுனிவர் என்று நம்மிடையே பல உதாரணர்கள் இருக்கிறார்கள்.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பித்தல் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்தி பிரச்சார சபா குறித்தது. அவர்கள் என்ன நமக்கு கற்பிப்பது? என்ற நோக்கில் இதை எதிர்கட்சிகள் கையாளுகின்றனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் எனும் சொல்வழக்குக்கு ஏற்றார் போலிருக்கிறது. சில அரசியல் கட்சிகள் இந்தி பிரச்சார சபா மீது கொண்ட ஒவ்வாமையானது தற்போது அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் மீதான வெறுப்பாக மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றைய மாணவர்களின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று தரமான ஆசிரியர்கள் கிடைப்பதென்பது. அப்படி தரமான ஆசிரியர்கள் கிடைத்து, அவர்களை அரசே ஏழை மாணவர்களுக்கு பிற மொழி கற்றுக் கொள்ள நியமிக்கிறது என்றால் அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியமென்ன?

தொழில்நுட்ப வளர்ச்சிகள் அசுர வேகத்தில் மறுமலர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலத்தில் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரிந்தவர்களாக இனி நம்மால் காலம் தள்ளி விட முடியுமா?!

நீங்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கேயே சொற்ப சம்பளத்தில் ஏதோ கையடக்கமாய் ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து முடித்து விடத் தீர்மானித்தவர்கள் எனில் உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம். ஆனால், எதிர்காலத் தலைமுறையினர் நிச்சயம் உங்களை கேள்வி கேட்பார்கள். அதிலிருந்து உங்களால் தப்பவே முடியாது.

இன்று எந்தத்துறையாக இருந்தாலும் பிறமொழி தெரிந்தவர்கள் எனில் உங்களுக்கான வேலை வாய்ப்பில் 30% முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்பதை நினைவில் வையுங்கள். அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.

பன்மொழி கற்றல்
பன்மொழி கற்றல்

இந்தி வடமொழி, சமஸ்கிருதம் பார்ப்பண மொழி என்று மொழி சார்ந்த வெறுப்பை உமிழ்பவர்கள் கூட தம் பிள்ளைகளின் பள்ளிக்கூட பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்புகளில் தத்தமது பிள்ளைகளின் ஆசிரியப் பெருமக்களிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடிக் களிக்கிறார்கள். அதனால் அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதில்லை. இன்னும் கேளுங்கள்... இரு நண்பர்கள் குடும்பத்துடன் பீச்சிலோ, பார்க்கிலோ, இல்லை ஹோட்டல்களிலோ அகஸ்மாத்தாய் சந்தித்துக் கொள்ள நேரும் போது கூட நாம் உரையாடலுக்கு உடனடியாகத் தேர்ந்தெடுப்பது ஆங்கிலத்தைத் தான் என்பதை எவரேனும் மறுக்க முடியுமா? இதில், இன்னும் வேடிக்கை என்னவென்றால், சிலருக்கு ஆங்கிலம் இலக்கண சுத்தமாக பேசத் தெரிந்திராத போதும், எதிரிலிருக்கும் நபருக்கு தமிழ் மிக நன்றாகத் தெரியும் என்ற போதும் கூட நமது உரையாடல் மொழியாகப் பல நேரங்களில் ஆங்கிலமே முதலிடம் பெறுகிறது என்பது தான்.

இப்படியெல்லாம் நம்மைச் சுற்றி  மொழி சார்ந்த வேடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அரசியல் கட்சிகள் எதை ஆதாரமாகக் கொண்டு பிற மொழி கற்றலை எதிர்க்கின்றன என்று புரியவில்லை. யாரை முட்டாளாக்கும் எதிர்ப்பு இது?!

அதனால் பாதிக்கப்படவிருப்பது மாணவர்கள் மட்டுமே! இதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com