Enable Javscript for better performance
Delhi Nirbahaya Telangana Nirbhaya when where this list will end- Dinamani

சுடச்சுட

  

  தொடரும் நிர்பயாக்கள்.. துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய ‘துர்க்கைகள்’தைரியம் பெறுவது எப்போது!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 02nd December 2019 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  durga

  துஷ்ட நிக்ரஹி துர்கா தேவி..

    

   

  டெல்லி, பொள்ளாச்சி, தெலங்கானா எனத் தொடர்கிறதே  நிர்பயாக்களின் துயரக் கதைகள்..

  நம் தேசப்பிதா காந்தி கண்ட கனவென்ன? பெருகி வரும் நிர்பயாக்களின் நிலை என்ன? என்று தணியும் இந்த பாலியல் வன்கொடுமை வேட்கைகள்?!

  ஹைதராபாத், ரங்காரெட்டி மாவட்டத்து பெண் கால்நடை மருத்துவருக்கு இரவில் நேர்ந்த பயங்கரத்தை எண்ணிப் பார்க்கையில் பெண்களுக்கு மட்டுமல்ல மென்மையான இதயம் கொண்ட ஆண்களுக்கும், மகள்களைப் பெற்ற தகப்பன்மார்களுக்கும் நெஞ்சம் சொல்லொணாத் துயரத்திலும், சஞ்சலத்திலும் சிக்கித் தவிப்பது நிஜம்.

  இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் காந்தி மகாத்மா இப்படிச் சொன்னார். 

  ‘இது உண்மையான சுதந்திரம் அல்ல. ஒரு பெண்ணால் நட்டநடு இரவில் உடல் நிறைய தங்க நகைகளுடன் தன்னந்தனியாக இந்தியத் தெருக்களில் நடமாட முடிந்ததென்றால் அப்போது தான் நம் நாடு நிஜமான சுதந்திரம் பெற்றுள்ளதாக நான் நம்புவேன்’

  - என்று; அவரது நம்பிக்கையைக் காப்பாற்றுவதெல்லாம் நம்முடைய வேலை இல்லை என்று சுற்றித் திரிகின்றன சில தன்னிலை மறந்த மிருகக் கூட்டங்கள்.

  இன்றெல்லாம், இரவுகளில் பெண்களுக்கு நகைகள் மட்டுமல்ல, அவள் பெண்ணாக இருப்பதே ஒரு பாதுகாப்பற்ற அம்சமாகத்தான் தான் மாறி விட்டது.

  2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ‘நிர்பயா வழக்கு’ என அதன் கொடூரத் தன்மை மொத்த இந்தியாவையும் உலுக்கியது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்குமே தூக்குத் தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையைக் குறைக்கச் சொல்லி கருணை மனு அளித்திருந்தான். ஆனால், கடந்த வாரம் தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி மீது நிகழ்த்தப்பட்ட கொடூர பாலியல் வன்முறைக் கொலையைப் பற்றி தெரிய வந்ததை அடுத்து டெல்லி மாநில அரசு வினய் சர்மாவின் கருணை மனுவை ஒரு மனதாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதை டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை உறுதி செய்கிறது.

  டெல்லி உள்துறை அமைச்சரின் அறிக்கை

  இதைப்பற்றி தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ரெட்டி பேசுகையில்;

  தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்..

  ‘திட்டமிட்டு பெண்களை பாலியல் வன்முறை செய்வதையே தொழிலாகக் கொண்டு துஷ்டக் கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. ரங்காரெட்டி மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு பெண் கால்நடை மருத்துவரை ஒரு துன்மார்க்க கூட்டம் அப்படித்தான் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டது. இப்படிப்பட்ட சாடிஸம் இங்கு நிலவுகிறது. எனவே, அதிலிருந்து நம் பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை. தயவு செய்து பெண்களை இரவு ஷிஃப்டில் வேலைக்கு அமர்துவதைத் தவிருங்கள். இரவு 7 அல்லது 8 மணிக்கு உள்ளாக பெண்களை அவர்களது வீடுகளுக்குத் திரும்பச் செய்யுங்கள். அப்படியான வேலை நேரத்தை பெண்களுக்கு அமைத்துத் தாருங்கள்’.

  - என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டதோடு பிரதமர் மோடியிடமும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கத்தக்க வகையிலான நடவடிக்கைகளை முடுக்கி விடச் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

  தெலங்கானா முதல்வர் வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது இரவு நேரங்களில் பெண்களை வேலை இடங்களில் நிறுத்தி வைக்காமல் இருக்கப் பாருங்கள் என்பது.

  இது முற்றிலும் சாத்தியமானது தானா என்பது கேள்விக்குறி!

  இதற்குப் பதிலாக பெண்களே! நீங்கள் ஆண்களுக்கு நிகராகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டு உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் கேட்டுக்கொண்டிருந்தால் உத்தமம் என்று தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய பெண்கள் இரவிலும் அலுவல் நிமித்தம் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட பயணிக்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள். அவர்களிடம், இப்படியொரு வேண்டுகோள் விடுப்பதற்கும், வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கச் சொன்ன அந்தக்கால மனிதர்களின் கட்டுப்பாடுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

  இன்றைய பெண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதெல்லாம், தங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே தவிர, பாதுகாப்பாக உணர்கிறோம் என்று வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருப்பது அல்ல. அதை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், சட்ட நிபுணர்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகளும், நாட்டின் பிரதமரும்.. ஏன், பெண் குழந்தைகளைப் பெற்று வேலைக்கென்று வெளியில் அனுப்புகிறார்களே பெற்றோர் அவர்களும் கூட நிச்சயம் உணர்ந்திருப்பது நலம்.

  இத்தகைய கொடூரமான பாலியல் வன்முறை வழக்குகளை உற்று நோக்கும் போது ஒரு  விஷயம் நமக்குத் தெள்ளத் தெளிவாகிறது.

  தனிமையில் சிக்கிக் கொள்ளும் பெண்களின் பயமும், பதற்றமும் தான் அவர்களை காமப்பார்வையுடன் சுற்றி வளைக்கும் தறிகெட்ட ஆண்களின் முதல் வெற்றியாக அமைந்து விடுகிறது.

  எங்கும் எப்போதும் தைரியத்துடன் தலை நிமிர்ந்து நின்று, தன்னம்பிக்கையுடன், துணிகரமாக எச்சூழலையும் எதிர்கொண்டு மீளும் ஆற்றலை நம் பெண்களுக்குக் கற்றுத்தர வேண்டியது யாருடைய கடமை?!

  பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது. நம் பெண்களுக்கு நாம் மிக மிக முக்கியமாகக் கற்றுத்தர வேண்டியது தற்காப்புக் கலைகளைத் தான் என்பதை இப்போதாவது நாம் உணரத்தான் வேண்டும். 

  அடடா! பெண்களுக்கு வலு போதாது. அதெல்லாம் எந்த விதமான தற்காப்புக் கலைகள் கற்றாலுமே, பாலியல் இச்சை கொண்ட மிருகங்களுடன் போராடும் போது பெண் தோற்பது நிச்சயம் என்று நாமே அச்சத்தில் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு அதைப்பற்றி யோசிக்காமலே இருந்து விட வேண்டியது இல்லை.

  நம் சட்டம் என்ன சொல்கிறது என்றால் பாலியல் வன்முறை போராட்டங்களின் போது ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள எதிர்தாக்குதல் நடத்துகையில்  எதிர்தரப்பில் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த நினைக்கும் ஆண்கள் மரணமடைய நேரிட்டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணால் உரிய விளக்கம் அளித்து கொலைப்பழியில் இருந்து மீள முடியும் என்கிறது. சட்டம். இது, பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கான மிகப்பெரிய பாதுகாப்பு அரண். அந்த அரண் இருக்கும் தைரியத்தில் பெண்கள் எதிர்த்துப் போராடி வெல்லும் தைரியத்தை தமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றங்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறதே தவிர, படிப்படியாகக் குறைவதற்கான எந்த வழியையுமே காணோம். அப்படி இருக்கையில் பெண்கள், தங்களுக்கான பாதுகாவலர்களைத் தேடி ஏமாறுவதைக் காட்டிலும் தாமே தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான மார்க்கங்களைக் கண்டறிவது தானே நியாயமான தீர்வாக இருக்க முடியும்.

  அப்பட்டமாகச் சொல்வதென்றால், பாலியல் வன்முறைகள் எப்படியெல்லாம் நிகழ்த்தப்பட வாய்ப்புண்டு என்பதையும் அதிலிருந்து எப்படியெல்லாம் மீள வேண்டும் என்பதையும்  வயது வந்த ஒவ்வொரு பெண்ணுக்குமே இன்று நாம் கற்பித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை உணரத்தான் வேண்டும். 

  பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில், தெலங்கானா முதல்வரின் கூற்று பச்சிளம் குழந்தைகளுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஏனெனில், பச்சிளம் குழந்தைகளையும் பாலியல் பண்டங்களாகப் பார்க்கத் துணிந்த  கேடு கெட்டவர்களும் இந்த சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள் என்பதை அடிக்கடி ஊடகச் செய்திகள் அடையாளம் காட்டுகின்றனவே!

  இப்படித் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே நாம் மனதில் நிறுத்திக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அவ்வப்போது சில நம்பிக்கை நட்சத்திரங்களும் நம் கண்ணெதிரே மின்னி மறைகிறார்கள். அவர்களையும் கணக்கில் கொண்டே நாம் இந்த சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

  நாம் வாழும் சமூகம் கொடியவர்களால் மட்டுமல்ல நல்லவர்களாலும் நிறைந்தது தான் என்பதை சமீபத்தில் நடந்த கேரள சம்பவமொன்று  நமக்கு உணர்த்துகிறது.

  கேரள மாநிலத்தில் உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக ‘கோவை டு கொல்லம்’ அரசுப் பேருந்தில் ஏறிய அதிரா ஜெயின் எனும் இளம்பெண் தனது நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்து எட்டிப்பார்த்தார். சங்கரமங்கலம் எனும் அந்த பேருந்து நிறுத்தம் பாலைவனம் போல ஹோவென வெறிச்சோடியிருந்தது. நேரம் அதிகாலை 1.30 மணி. அப்போது பலத்த மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல வருவதாக இருந்த உறவினரைக் காணோம். எனவே இளம்பெண்ணைத் தனியாக அந்த நேரத்தில் அவ்விடத்தில் இறக்கி விட்டுச் செல்வது அவருக்குப் பாதுகாப்பானதில்லை என்று கருதி பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் உறவினர் வரும் வரை காத்திருந்து அப்பெண்ணைஅவரிடத்தில் ஒப்படைத்து விட்டு பிறகே தங்கள் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தி இருக்கிறார்கள். கேரள அரசுப் பேருந்து பணியாளர்களான அவர்களின் இந்த பொறுப்பு மிக்க பரிவான செயலை அதன்பின்னர் ஊடகங்கள் அனைத்தும் பாராட்டித் தள்ளின. ஆக, ஊரார் வீட்டுப் பெண் மீது இப்படிப்பட்ட அக்கறை கொண்ட பொறுப்பான நபர்களும் நம் சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  நமது இந்த உலகம் ஹைதராபாத் துஷ்டர்களால் மட்டுமே நிறைந்தது இல்லை. கேரளத்தின் அரசுப் பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற நல்லவர்களாலும் நிறைந்தது தான்.

  ஆகவே பெண்கள் அச்சம் கொண்டு தம்மை முடக்கிக் கொள்ளத் தேவையில்லை. தேவையெனில் சம்ஹாரம் நடத்தத் துணியும் துர்க்கைகளாக தம்மை மாற்றிக் கொள்ளத் துணிந்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமே தவிர வீட்டுக்குள் முடங்குவதைப் பற்றியெல்லாம் ஆழமாக யோசிக்கத் தலைப்பட்டு விடக்கூடாது என்பதே இங்கு முக்கியமானது!

  Image Courtesy: Youtube

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai