ரத்தன் மஞ்சரி.. இமாச்சலப் பிரதேசத்தின் வொண்டர் வுமனாக அப்படி என்ன சாதித்து விட்டார்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

பிரச்சினை என்னவென்றால், எங்களது போராட்டத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு இங்குள்ள மக்கள் கூட எங்களை ஆதரிக்கிறார்கள். ஆனால், இந்த அரசியல்வாதிகள் தான் வெளிப்படையாக ஆதரிக்க மாட்டேனென்கிறார்கள். ஏனெனில்
Himachal Tribal Women
Himachal Tribal Women

ரத்தன் மஞ்சரி... 

இந்தப் பெண்ணைப் பற்றி அறியாதவர்களும் இனி அறிந்து கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அவர் தன் சிரமேற்கொண்டு வெற்றி கண்ட போராட்டம் அத்தகையது.

கரடுமுரடான, குளிர் நிறைந்த, விருந்தோம்பலுக்குச் சற்றும் பொருத்தமற்ற இமாச்சலப் பிரதேசத்தின் உறைந்த நிலப்பரப்பில் சுவையான சுவையான ஆப்பிள்களை வளர்த்து சாகுபடி செய்பவர் எனும் அடையாளம் கொண்டவரான ரத்தன் மஞ்சரிக்கு இன்னொரு முகமும் உண்டு. ஆம், அவர் ஆப்பிள் சாகுபடியாளர்  மட்டுமல்ல, மிகச்சிறந்த போராளியும் கூட. அதனால் தான் இமாச்சலப் பிரதேசத்தின் நூற்றாண்டு பழமை கொண்ட ஆணாதிக்க சட்டத்திற்கு எதிராக பாலின புரட்சிக்கு இவர் தலைமை தாங்குகிறார், இந்தச் சட்டமானது  இமாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி இனங்களில் மூதாதையரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை ஆண்களுக்கு மட்டுமே வழங்க அனுமதிக்கிறது, ஆனால் அது பெண்களுக்கு வழங்கப்படாவிட்டால் எப்படி?! என அந்தச் சட்டத்தின் பாரபட்சத் தன்மையை எதிர்த்துப் போராடி வென்றிருக்கிறார் மஞ்சரி. 

ரத்தன் மஞ்சரிக்கு வயது 66. இந்த வயதில் ஓய்ந்து போய் விடாமல் போராட்டக் களத்துக்கு வரவேண்டுமெனில் அந்தச் சட்டம் இவரை எந்த அளவுக்கு வருத்தி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!

இன்று நேற்று அல்ல, இவர் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கி ஒரு தசாப்தமாகிறது.

66 வயதில், சமூக ஆர்வலரும், அறியப்பட்ட ஆப்பிள் வளர்ப்பாளருமான ரத்தன் மஞ்சரி, ஒரு சில பெண்களுடன் இணைந்து வாஜிப் உல் உர்ஜ் வழக்கமான சட்டத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஒரு நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பிட்ட அந்த ஆணாதிக்கச் சட்டம் 1926 ஆம் ஆண்டில் இமாச்சல பிரதேசத்தின் கின்னார் மற்றும் லஹெளல் ஸ்பிதி மாவட்டங்களிலும், சம்பா மாவட்டத்தில் சில பழங்குடி இனப் பகுதிகளிலும்  நடைமுறைக்கு வந்தது.

இப்படி ஆண்களுக்கு மட்டுமே தனி உடமை ஆக்கப்பட்ட சொத்துரிமைப் பாரம்பரியத்தின் தோற்றமானது இந்த வளமான நிலத்தின் பற்றாக்குறை என்று அங்கு வாழும் மூத்த குடிமக்களும் சென்ற தலைமுறையினரும் நம்புகிறார்கள். பெண்களுக்குப் பரம்பரை உரிமைகளை வழங்குவது என்பது, ஒருவேளை இந்த நிலத்தின் பெண்கள் வெளிநாட்டவர்கள் அல்லது வெளி இனத்தவரை தங்களது சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்தால் அந்நியர்களையும் இந்த நிலத்திற்கு உரிமையாளர்களாக ஆக்கி விடுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்ற கண்ணோட்டத்தில் இந்த நம்பிக்கை உருவாகியிருக்கலாம்.

மூதாதையர் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கும் இந்து வாரிசு சட்டம் எங்களுக்கும் பொருந்தும் என்றாலும், எங்கள் சமூகத்தில் வேரூன்றியிருந்த ஆணாதிக்க மனப்பான்மை இத்தனை காலமாகியும் மாறவே இல்லை. என்கிறார் மஞ்சரி. அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக மஹிளா கல்யாண் பரிஷத் எனும் வலதுசாரி போராட்ட அமைப்பொன்றை நிறுவி அதன் மூலமாக இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த பெண்களுக்கும் தங்கள் குடும்பத்தின் ஆண்களைப் போலவே மூதாதையர்களின் சொத்துக்களில் சம உரிமை உண்டு எனும் விழிப்புணர்வை  ஏற்படுத்தி போராடி வருவதாகத் தெரிவிக்கிறார் மஞ்சரி.

ஆச்சர்யப்படத் தக்க வகையில் எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் மெத்தப் படித்து இணையத்தில் உலவுகிறார்கள், லக்ஸூரி கார்களில் வலம் வருகிறார்கள். அனைத்து வசதிகளும் நிறைந்த சுகபோக வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஏனோ தங்களுக்கான உரிமைகள் குறித்த தெளிவான எண்ணங்கள் மட்டும் உருவாகவே இல்லை. அதனால் தான், அந்த மனநிலையை மாற்றுவதற்காகத் தான், ஆண்களை மையமாகக் கொண்ட மனநிலையை மாற்றுவதற்கான வேகத்தை இங்குள்ள பெண்களின் மனதில் பதிய வைக்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். என்கிறார் மஞ்சரி.

இங்கே பிரச்சினை என்னவென்றால், எங்களது போராட்டத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு இங்குள்ள மக்கள் கூட எங்களை ஆதரிக்கிறார்கள். ஆனால், இந்த அரசியல்வாதிகள் தான் வெளிப்படையாக ஆதரிக்க மாட்டேனென்கிறார்கள். ஏனெனில், வீரபத்ர சிங் முதல் பிரேம்குமார் துமால், இன்றையை ஜெய்ராம் தாக்கூர்  வரையிலான அனைத்து முதல்வர்களையும்  நாங்கள் சந்தித்து எங்களது போராட்டத்தைப் பற்றி விளக்கி விட்டோம்.  இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த பெண்களை பாரபட்சமாக நடத்தும் இந்த ஆணாதிக்கச் சொத்துரிமைச் சட்டம் வேண்டாம், இனியாவது இதை முடக்கும் விதத்திலான சட்டமொன்றை கொண்டு வாருங்கள் என அனைத்து மந்திரிகளிடமும் நாங்கள் கோரிக்கை வைத்து விட்டோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

விளைவு, இந்த பாகுபாடான சட்டத்தின் காரணமாக கின்னார் மற்றும் லஹெளல் ஸ்பிதி மாவட்டங்களில் விதவைகள் மற்றும் திருமணமாகாத அனாதைப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும் மஞ்சரி கூறுகிறார். அதுமட்டுமல்ல, இங்கு பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காரணத்தால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்களை குடும்பத்தின் பிற ஆண்கள் அடிமைகளைப்போல நடத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது எனவும் மஞ்சரி கூறுகிறார்.

இந்த விஷயத்தில் மஞ்சரி சற்று அதிர்ஷ்டசாலி எனலாம். ஏனெனில், இன்று அவருக்குச் சொந்தமாக அவரது ரிப்பா கிராமத்தில் ஆப்பிள் தோட்டத்திற்கு நடுவே கட்டப்பட்ட ஒரு மரவீடு உண்டு. அங்கிருந்து தலைநகர் சிம்லாவுக்கு 250 கிலோமீட்டர் தொலைவு தான். மஞ்சரிக்கு உடன்பிறந்த சகோதரர் ஒருவர் இருந்த போதும் இந்தச் சொத்துக்கு மஞ்சரியே உரியவர் என அவரது அம்மா முடிவு செய்தார். மஞ்சரியின் அம்மாவுக்கு இருந்த விழிப்புணர்வும், தெளிவும் மாநிலத்தின் பிற பெண்களுக்கும் வேண்டும் என்பதே இப்போது மஞ்சரியின் ஒரே குறிக்கோள்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கின்னாரில் பாலின விகிதம் 2001 ல் 857 ஆக இருந்தது, 2011 ல் 818 ஆக குறைந்துள்ளது. முழு மாநிலத்தோடு ஒப்பிடும் போது இது மிகப் பின் தங்கிய இடமாகக் கருதப்படுகிறது.
 84,298  பேர்கள் கொண்ட கின்னார் மக்கள் தொகையில் மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் என்பது ஆண்களுக்கு 80.77 சதவீதமாகவும், பெண்களுக்கு 88.37 ஆகவும் இருக்கிறது

மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்களின் உதவியுடன், மஞ்சரி ஆணாதிக்கச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  பஞ்சாயத்து கூட்டங்கள் மற்றும் கையெழுத்து பிரச்சாரங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.

ஜூன் 2015 ல், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தீர்ப்பொன்று பழங்குடியினப் பெண்களுக்கு பரம்பரை நில உரிமைகளை வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விடுவது போல அம்மாநில மக்கள் நடந்து கொண்டனர், எனவே இந்த விவகாரம் இப்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

"பழங்குடிப் பகுதிகளில் உள்ள மகள்கள் 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசு சட்டத்தின்படி சொத்துக்களைப் பெறுவார்கள், ஆனால் பழக்கவழக்கங்களின்படி அல்ல. பெண்கள் சமூக அநீதி மற்றும் அனைத்து வகையான சுரண்டல்களையும் எதிர்கொள்வதைத் தடுப்பதற்காக இப்படியொரு தீர்ப்பை அளிக்கிறேன்" என்று உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சர்மா குறிப்பிட்டார்.

இவ்வாறு பெண்களுக்கு சட்டபூர்வமான சொத்துரிமைகளை வழங்க சம்பா மாவட்ட நீதிபதி 2002 ல் பிறப்பித்த உத்தரவை அவர் உறுதி செய்திருந்தார்.

நீதிபதி சர்மா தமது 60 பக்க தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்: "பழங்குடி பகுதிகள் காலப்போக்கில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அவற்றின் கலாச்சாரம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் பழக்கவழக்கங்கள் அரசியலமைப்பு தத்துவத்திற்கு இணங்க வேண்டும் ... சமூகங்கள் முன்னேற வேண்டுமானால் சட்டங்கள் உருவாக வேண்டும்."

நீதிபதிகளின் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்ட சொத்துரிமை வரம்புகளில் ஒரு பெண் ஒரு வெளிநாட்டவரை மணந்தால், மூதாதையரின் சொத்து மீதான தனது உரிமையை அவள் பெற்றே ஆக வேண்டும் என்ற நிபந்தனையையும் சேர்க்க மஞ்சரி தயங்கவில்லை. "ஆனால் மற்றெல்லா விதமான கோரிக்கைகளைக் காட்டிலும் முதன்மையானதும் முக்கியமானதுமாக முதலில்  இந்த ஆணாதிக்க பாரபட்சமான சட்டம் முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இமாச்சலப் பிரதேசத்துப் பழங்குடி இனப்பெண்களின் முதல் தேவையாக இருக்கிறது என்பதையும் அவர் மறுக்கவில்லை.

500 உறுப்பினர்களைக் கொண்ட மஹிலா கல்யாண் பரிஷத், பிப்ரவரி 2, 2020 அன்று ரெக்காங் பியோவில் தனது கூட்டத்தை நடத்துகிறது, அந்தக் கூட்டத்தில் அதன் எதிர்கால நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சமர்ப்பிப்பையும் அது  உள்ளடக்கியுள்ளது.

ரத்தன் மஞ்சரியின் லஹெளல் ஸ்பிதி பிராந்தியத்தைப் பற்றிய மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இங்கு பரம்பரை நில உரிமை என்பது முதலில் குடும்பத்தின் மூத்த வாரிசுக்கு மட்டுமே என்பது, அதாவது ஒருவேளை மூத்தவர் ஆண் வாரிசாக இல்லாத பட்சத்தில் பரம்பரை நிலத்தின் மீதான உரிமை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நேரடி வாரிசுகளுக்கு அல்லாது வயது மூப்பு அடிப்படையில் உறவினர்களுக்குச் சென்று சேர்கிறத். அதாவது ஆண்களிலும் மூத்த வாரிசாகப் பிறந்தால் மட்டுமே நில உரிமை நேரடியாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது அன்றியேல் காத்திருப்பில் வைக்கப்படுவார்கள் அல்லது சொத்துரிமை மறுக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்றொரு சட்டமும் அங்கு நடைமுறையில் இருக்கிறதாம். 

ஆக, 'என் நிலம், என் உரிமை' என்பது சரி தான் ஆனால், நீதி எப்போது மேலோங்கும் என்பதை காலம் மட்டுமே சொல்லும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com