Enable Javscript for better performance
Fiery freedom fighter V.O.Chidambaram pillai Death anniversay- Dinamani

சுடச்சுட

  

  வரலாற்றில் இந்நாளில்.. இறுதி மூச்சு வரை தீரா சுதந்திர தாகத்துடன் உயிர் நீத்தார் வ.உ.சி!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 18th November 2019 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  d12a0862_00a6_408d_a72e_18b8a33b5cd1

  V. O. Chidambaram Pillai

   

  கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 83 வது நினைவு தினம் இன்று.

  1936 ஆம் ஆண்டில் இதே நவம்பர் மாதம் 18 ஆம் நாள் அவர் உயிர் நீத்தார். 

  வ உ சி யைப் பற்றி பள்ளி மாணவர்களிடம் கேட்டால், உடனே சட்டென நினைவுக்கு வருவது அவர் சுதேசிக் கப்பல் நடத்திய வரலாறு தான். 

  அவர், நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5–ம் தேதி புகழ்பெற்ற வழக்கறிஞரான உலகநாத பிள்ளைக்கும், பரமாயி அம்மையாருக்கும் மகனாப் பிறந்தார். பள்ளிக்கல்வியை ஒட்டப்பிடாரம் மற்றும் நெல்லையில் முடித்து விட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்பு தந்தையைப் போலவே வழக்கறிஞர் ஆனார். அப்போதே அவரது மனம் ஏழைகளுக்காகத்தான் சிந்தித்தது. நீதிமன்றத்தில் ஏழைகளுக்காகவே வாதாடினார்.

  1905 ஆம் ஆண்டு வ.உ.சி காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பொருத்தவரை தன்னுடைய தலைவர்களாக வ.உ.சி ஏற்றுக்கொண்டது தீரமுடன் சுதந்திரப் போராட்டங்களுக்கு வழி நடத்துபவர்களாக இருந்த லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்றோரைத்தான்.

  அவர்களது வழியிலேயே மிகத்துணிச்சலாக தமிழகத்தில் ஒரு மாபெரும் முடிவெடுத்தார் வ.உ.சி. அந்த முடிவு தான் சுத்த இந்திய நிறுவனமாக சுதேசிக் கப்பல் நடத்துவது எனும் முடிவு.

  ஆங்கிலேயரின் ‘பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ இந்தியாவின் பொருளாதாரத்தை சுரண்டி இங்கிலாந்தை வளப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து 1906 ல் உருவானது தான் சுதேசி கப்பல் கம்பெனி. இதன் செயலாளராக வ.உ.சி. இயங்கினார். இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் வ.உ.சிக்கு உதவிய பிற தனியார் கப்பல் கம்பெனியினர் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராக வ.உ.சியின் கப்பல் கம்பெனிக்கு வாடகைக்கு கப்பல்களை அனுப்பத் தயங்கின.. அரசைக் கண்டு அஞ்சி அச்சத்தில் பின்வாங்கின. ஆனாலும் அசரவில்லை வ.உ.சி. அவர், இலங்கை சென்று கொழும்பில் இருந்து வாடகைக்கு கப்பல்கள் கொண்டு வந்து ஓட்டிக் காண்பித்தார். ஆயினும் இனி வரும் காலத்தில் வாடகைக் கப்பல்கள் பயன் தராது. இடையூறின்றி சுதேசி கப்பல் நிறுவனம் இயங்க வேண்டுமென்றால் சொந்தமாக கப்பல் வாங்கினால் தான் ஆயிற்று என்று முடிவு செய்து ’காலியா’ என்றொரு கப்பலை விலைக்கு வாங்கி வந்து இயக்கினார். இதனால் ஆங்கிலேயரின் கப்பல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இப்படி இந்தியாவின் பாரம்பரியமிக்க பலப்பல தொழில்களை அழித்து தங்களுடைய தொழில்களைப் பெருக்கிய ஆங்கிலேயருக்கு சுதேசி கப்பல் இயக்கத்தின் மூலம் பாடம் கற்பித்தவர் வ.உ.சி.

  அது மட்டுமல்ல,

  தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பு அத்தகையதொரு போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர் வ.உ.சி. தூத்துக்குடி, கோரல் நூற்பாலையில் தொடர்ந்து 12 மணி நேரம் ஓய்வின்றி உழைத்துக் களைத்து சோர்ந்து போன நூற்பாலைத் தொழிலாளர்களின் பிரச்னையை கேட்டறிந்து அவர்களுக்காக ஆங்கில அரசை எதிர்த்து தீரமுடன் முன்னின்று போராடி அவர்களது வேலை நேரத்தைக் குறைத்து விடுமுறைக் காலத்தை நீட்டித்து தந்தார் வ.உ.சி. அவரது இந்த வெற்றி நெல்லைச்சீமை முழுவதும் பரவியது. இதனால் வ.உ.சி மீது மிதமிஞ்சிய கோபத்தில் ஆழ்ந்து அவரைப் பழிவாங்கத் துடித்தது வெள்ளை அரசு.

  இந்நிலையில் புரட்சியாளர் பிபின் சந்திர பால் மார்ச் 9 ஐ விடுதலை தினமாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அச்சூழலை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேய அரசு. எப்படியெனில், அப்போது ஆங்கிலேய போலீஸாரின் தடை உத்தரவுகளை மீறி வ.உ.சி., சுப்ரமண்ய சிவா இருவரும் பொதுக் கூட்டங்களில் பிரசங்கம் செய்ததாக கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு இருவருக்கும் தலா இரண்டு ஆயுள் தண்டனை (அதாவது 40 ஆண்டுகள்) விதித்தது ஆங்கில அரசு.

  வ.உ.சி க்கு எதிராக அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே இப்படி எழுதினார்;

  ‘பாரதியின் பாட்டையும், சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் கேட்டால் போதும், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும், அடிமைப்பட்ட நாடு 5 நிமிடங்களில் விடுதலை பெறும்’

  - என்று எழுதியதாகக் கூறுவார்கள். 

  வ.உ.சி இழுத்த செக்கு சென்னை அருங்காட்சியகத்தில்..

  அத்துணை தீரமிக்க பிரசங்கியான வ.உ.சி. தன்னுடைய தண்டனை காலத்தை கோயமுத்தூர், கண்ணனூர் சிறைகளில் கழித்தார். அவருக்கு கால்களில் விலங்கிடப்பட்டது. வ.உ.சி.யைச் செக்கிழுக்க வைத்தார்கள். இன்று நாம் செக்கிழுத்த செம்மல் என்று அடைமொழியிட்டுக் கொண்டாடுகிறோமே. அது நிகழ்ந்தது கோவை சிறையில் தான். அங்கு கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு எல்லையற்ற துயரங்களை அனுபவித்தார். இவரைப் போலவே விடுதலை வீரர் சுப்ரமண்ய சிவாக்கு சிறையில் சுண்ணாம்பு கலவையில் ஊற வைக்கப்பட்ட ஆட்டுத் தோல்களை வெறும் கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமையான வேலை அளிக்கப்பட்டது. இதனாலேயே திடகாத்திரமான அவரது உடல் தொழுநோய் கண்டு உருக்குலைந்தது.

  வ.உ.சியை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தபோது அவருடைய நெருங்கிய நண்பர் மகாகவி பாரதி உள்ளக்குமுறலோடு ஓர் வாழ்த்துப்பாவை தம் கவிதையில் தீட்டினார்..

  அது, 

  ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? 
  என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? 
  என்றெமதன்னை கை விலங்குகள் போகும்? என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? 

  - என கவிதையில் குமுறினார் பாரதி.
  அவரது அனல் தெறிக்கும் கவிதைகளால் மக்கள் உள்ளங்களில் தேசிய உணர்வும், சுதந்திர தாகமும் மேலோங்கின.

  வ.உ.சி க்கு 40 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. பின்னர் ஒருவாறு அந்தத் தண்டனை வெறும் 6 ஆண்டு காலமாகக் குறைக்கப்பட்டது. 

  ஆனால், அந்த 6 ஆண்டுகளில் தமது செல்வமெல்லாம் போன இடம் அறியாது போய் வளம் குன்றி ஏழ்மைப்பட்டுப் போனார் வ.உ.சி. அவர் விடுதலை பெற்று வீடு திரும்பும்போது அவரை எதிர்கொண்டு அழைத்துச் செல்ல ஒருவர் கூட எஞ்சாத அளவுக்கு கொடும் பஞ்சைப் பராரியாகிப் போனார் வ.உ.சி. ஆங்கில அரசால் அவரது வழக்கறிஞர் பட்டமும் பறிக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்து மண்ணென்ணெய் விற்று பிழைப்பு நடத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளானார். இந்நிலையில் எப்பாடு பட்டாவது சிதம்பரம் பிள்ளையின் வழக்கறிஞர் பட்டத்தையாவது திரும்பப் பெற்றுத் தந்தே தீருவது என அவருக்காகப் போராடிய வெள்ளை அதிகாரிகளில் ஒருவரான வாலஸ் துரையின் நினைவாக தம் மகனுக்கு வாலேஸ்வரன் எனப் பெயரிட்டார் வ.உ.சி. ஒருவழியாகத் தமது வழக்கறிஞர் பட்டத்தை திரும்பப் பெற்றார் என்ற போதும் வ.உ.சியின் வறுமை தீர்ந்தபாடில்லை. இறப்பு வரை வறுமையில் உழன்று மீண்டும் பழைய நிலைக்கு மீள முடியாத துயரத்துடனே மறைந்தார் அந்தத் தியாகி.

  நெல்லையில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து சீரோடும், சிறப்போடும் வாழ்க்கைத் துவங்கிய சிதம்பரம் பிள்ளையின் கடைசிக் காலம் பெரும் வறுமையில் முடிந்தது காலத்தின் கோலம்.

  1936ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் நாள் ‘சுதந்திரமே எங்கள் உயிர் மூச்சு’ என்று தொடர்ந்து போராடிய அவரின் மூச்சு நின்று விட்டது.

  உயிர் பிரியும் வேளையிலும் கூட பாரதியின் ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்னும் பாடலையும் ‘என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்’ என்னும் பாடலையும் கேட்டுக் கொண்டே தம் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் என்பார்கள்.

  கப்பலோட்டிய தமிழன் எனும் அடைமொழி மக்களின் மனதின் நிலைபெற்ற வரலாறு..

  சிதம்பரனாருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற அடைமொழி மா.பொ.சி வாயிலாக நிலை நிறுத்தப்பட்டது. வ.உ.சி குறித்து மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் ம.பொ.சி. முதல் புத்தகத்தின் தலைப்பே ‘கப்பலோட்டிய தமிழன்’ தான். அந்தப் பெயரே பின்னர் சரித்திரத்தில் நிலை பெற்றது. இவரது புத்தகத்தை அடிப்படையாக வைத்தே பின்னர் பி.ஆர் பந்துலு ‘கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து இயக்கினார். அந்தப் படத்தின் வாயிலாகவே பள்ளிக் குழந்தைகள் முதல் சகலரும் வெகு எளிதில் செக்கிழுத்த செம்மலின் வரலாற்றை அறிய நேர்ந்தது.

  இவரது வாழ்க்கையும், போராட்டமும், இறப்பும் கூட  சுதேசிப் பற்றாளர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுமே அறிந்து கொள்ள வேண்டிய கதை தான்.

  இப்படிப்பட்ட தியாகிகளின் ரத்தத்தில் விளைந்தது தான் இன்று நாம் அனுபவிக்கும் பூரண சுதந்திரம்.

  அந்த நன்றிக்கடன் என்றும் நம் நெஞ்சில் உறையட்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai