பெண்ணியம் பேசுவோம்: பெண்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பது எது?

பெண்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக பெண்களே குரல் எழுப்ப வேண்டும் என்பதே பெண்ணிய இயக்கத்தின் அடிப்படை சாராம்சம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத் தன்னிறைவை அடையும் நிலையே  பெண் விடுதலை.
பெண்ணியம் பேசுவோம்: பெண்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பது எது?

பெண்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக பெண்களே குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் பெண்ணிய இயக்கத்தின் அடிப்படை சாராம்சம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத் தன்னிறைவை அடையும் நிலையே  பெண் விடுதலை ஆகும். சமதர்ம சமுதாயம் ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு ஆண் வர்க்கமும் ஒத்துழைக்க வேண்டும்.  பெண் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் இன்னல்களை எதிர்த்து குரல் கொடுக்கவும், அதற்குத் தீர்வு காணவுமே பெண்ணிய இயக்கங்கள் தோன்றின.

பெண்கள் கல்வி கற்றதனால் பெண்ணியம் தோன்றியது எனலாம்; பெண்ணியம் தோன்றியதனால் பெண்கள் கல்வி கற்றனர் எனலாம். மொத்தத்தில், பெண் விடுதலைக்கு அடித்தளமே பெண் கல்விதான். 

பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு சமூகத்தையே வாழ வைப்பதற்கு சமம் என்று கூறுவர். பெண் கல்வி கற்பதன் மூலமாக புதுமை சிந்தனைகளை பெறுகிறாள். உலக அறிவை வளர்த்துக்கொள்வதோடு, எதையும் தாங்கிக்கொள்ள கூடிய ஒரு மனோபாவம், எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் ஒரு துணிவு பெண்களுக்கு கல்வி மூலமாகவே வந்தடைகிறது. 

வேத காலத்தில் இருந்தே பெண் கல்வி அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் பூலே, பிரிட்டிஷ் ஆண்ட காலத்திலேயே தனது கணவர் ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து புனேவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கியதுடன் பெண் கல்விக்காக பாடுபட்டார். 

1849ஆம் ஆண்டு ஈஸ்வர சந்திர வித்யாசாகர் கொல்கத்தாவில் முதல் பெண்கள் பாடசாலையை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 40 பெண்கள் பள்ளிகளை ஆரம்பித்தார். இதன்பின்னர், சமூக இயக்கங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் பிரம்ம சமாஜம் ஆரிய சமாஜம், அன்னிபெசன்ட் அம்மையாரின் தியோசபிகல் சொசைட்டி உள்ளிட்டவை ஆண், பெண்ணுக்கு சம உரிமை, பெண்களுக்கு கல்வி அளிப்பதை வலியறுத்தியது. சுதந்திரத்திற்கு முன்னதாகவே, பல அமைப்புகள் பெண் கல்விக்காக படுபட்டுள்ளதை மறுக்க முடியாது. 

1917ம் ஆண்டில் உருவான இந்திய பெண்கள் கூட்டமைப்பு, 1925 ஆம் ஆண்டு இந்திய தேசிய பெண்கள் குழு, 1976ஆம் ஆண்டு அகில இந்திய பெண்கள் மாநாடு பெண் கல்விக்காக பல்வேறு கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளனர். 

இதன் காரணமாகவே ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்ட வந்த பெண்கள் தற்போது பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெறுகின்றனர். இதற்கு அரசின் பல திட்டங்களும் முக்கியக் காரணமே. தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனைத்து துறைகளிலும் சரிசமமாக பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு முன்னதாக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்திலும், இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவானார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 

அந்தக் காலத்தில் ஆண் மருத்துவர்கள் மட்டுமே அதிகம் சூழ்ந்திருந்த ஒரு சூழலில் அச்சப்படும் உச்சகட்டம் பல பெண்கள் மகப்பேறுக்காக மருத்துவமனைக்குச் செல்ல தயங்கி உள்ளனர். இதன் காரணமாகவே கர்ப்பிணி பெண்கள் அதிகளவு உயிரிழக்கும் ஒரு சூழல் தற்போது நிலவி வந்தது. இதன் பின்னரே மருத்துவமனைகளில் செவிலியர்கள் அதிகளவு நியமிக்கப்பட்டனர். தற்போது மருத்துவரை காட்டிலும் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று தற்போது பெண் மருத்துவர்களும் அதிகம் உருவாகி வருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு உச்ச பதவிகளில் ஜொலித்து வருகின்றனர் பாரதியின் புதுமைப்பெண்கள். 

இன்றைய காலகட்டத்தில் பெண்ணிய சிந்தனை மிகவும் உச்ச நிலையில் காணப்படுவதற்கு முதன்மையான காரணம் கல்வி மட்டுமே. பெண்ணுரிமை, பெண்ணியம், பெண்களுக்கு பாதுகாப்பு என பல தலைப்புகளில் விவாதித்து வரும் நாம் இதற்கு அடிப்படையான பெண்கல்வியை மற்றும் பற்றியும் சிந்திக்க வேண்டியது இங்கு அவசியமாகிறது. 

பெண் ஒருத்தி பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்றால், சமூகத்தில் ஒரு முக்கிய அங்கமாக வகிக்க வேண்டும் என்றால் அவளுக்கு கல்வி அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இன்று பெண்ணியம் பேசும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தலைவர்கள் அனைவருமே கல்வியில் சிறந்து விளங்கியவர்கள்தான். ஏன் பெண் அடிமைத்தனத்தை பெண்ணுக்கே புரிய வைத்ததும் கல்வியின் மூலமாகத்தான்.  எனவே, கல்வியே பெண்களுக்கு அடிப்படை சுதந்திரத்தை அளிக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. 

'கல்வியில்லா பெண்கள் களர்நிலம்; அங்கு புட்கள் முளைத்திடலாம்; நல்ல புதல்வர்கள் முளைப்பதில்லை' என்று பெண்களின் கல்வியில்லா நிலை பற்றியும், பெண் கல்வியின் அவசியத்தையும் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார். பெண்ணிய சிந்தனைகளுக்கு பெண்கள் அனைவருமே கல்வி கற்க வேண்டும். கல்வியால் மட்டுமே பெண்ணுக்கு இவை அனைத்தும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

பெண்களின் நிலை உயர்ந்தாலும், அவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில் தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக பொது வெளியில் கூறி, சட்ட ரீதியாகவும் நாடி குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகின்றனர். முன்னதொரு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் பெண்கள் இன்று தைரியமாக எந்த ஒரு எதிர்மறையான சூழலையும் எதிர்த்து போராட முடிகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்னவாக இருக்க முடியும்? இன்று வரதட்சணை கொடுமையும், குழந்தைத் திருமணமும் ஓரளவு ஒழிக்கப்பட்டுள்ளது. விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது ஒரு குடும்பத்தை முழுவதுமாக வழிநடத்திச் செல்லும் பொறுப்பு பெண்களுக்கும் இருக்கிறது. பெண்கள் தானாகவே போராடி அவர்களுக்கான உரிமைகளைப் பெறுகிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இந்தியப் பொருளாதாரத்திலும் பெண்களின் பங்கு இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு சாத்தியக்கூறுகள் இருந்தும், மற்ற நாடுகளைவிட பெண்களின் பொருளாதார நிலை குறைவாகவே இருக்கிறது என்பது வருத்தமான விஷயம்தான். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், பெண்கள் இடஒதுக்கீடுக்காக போராடும் நிலையில்தான் இருக்கிறோம். 

கல்வியறிவின்மை, பொருளாதார நிலை, சமூக கட்டுப்பாடுகள் ஆகிவையே பெண் சுதந்திரத்திற்கு தடை கற்களாகப் பார்க்கப்படுகிறது. இதில் கல்வியறிவு பெற்று விட்டாலே மற்ற இரண்டு தடைகளும் தானாக ஒதுங்கிவிடும். ஆனால், பெண்களே சில சமயங்களில், 'இவ்வளவு தடைகளைத் தாண்டி தங்களால் எவ்வாறு முடியும்?' என்று செயல்களில் பின்வாங்குகின்றனர். எனவே, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பெண் கல்விக்காகவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை அவர்கள் உபயோகித்துக்கொள்ள முன்வர வேண்டும். என்னதான் பெண்கள் பல்வேறு துறைகளில் ஜொலித்தாலும், அடிப்படையில் ஆண்- பெண் பாகுபாடு குடும்பத்தில் இருந்து பொதுவெளிகள் வரை அனைத்து இடங்களிலும் பார்க்கப்படுகிறது.

பெண்களே! வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கல்வியறிவின்மையே. எனவே அந்தத் தடையை தகர்த்தெறியுங்கள்.  உங்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களது தனிப்பட்ட சுதந்திரம் உங்கள் கையில் தான் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் அவலங்களை எதிர்த்து கேள்வி எழுப்புங்கள்.

இன்று நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு பெண்களும் அடிப்படை காரணமாக இருந்துள்ளார்கள். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று கேட்ட காலத்தில் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை சந்தித்த சவால்களை விடவா இப்போது உங்களுக்கு கல்வி கற்பதில் தடை இருக்கப் போகிறது? நமக்கான சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காக நாம்தான் போராட வேண்டும். துணிந்து போராடுங்கள். போராடுவதற்கான வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள். நீங்களும் பாரதியின் புதுமைப்பெண்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com