Enable Javscript for better performance
Jayalalitha three years have passed since her disappearance- Dinamani

சுடச்சுட

  
  jayalalithaa

  Jayalalitha

   

  ஜெயலலிதா ஜெயராம்...

  இவரை விதியின் குழந்தை என்பதா? அல்லது தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத காவிய நாயகி என்பதா? 

  எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் வாழ்க்கை சூறாவளியில் சிக்கிய சிறு துரும்பெனச் சுழற்றி வீசியும் கூட மீண்டும் முளைத்துக் கிளைக்கும் திண்ணிய நெஞ்சுரம் கொண்டிருந்த வைராக்கியப் பெண்மணி! நெஞ்சு முழுக்கப் படிக்கும் ஆர்வம் மட்டுமே நிரம்பித் தளும்பிய போதும் வீட்டின் பொருளாதாரச் சுமை மூச்சுத் திணறச் செய்ய, அதிலிருந்து விடுபடுவதற்காக தாயின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க வந்தார். 

  ஆரம்பமே அமர்க்களம்... வெண்ணிற ஆடையில் அறிமுகமானாலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என அடுத்த படமே எம்ஜிஆருடன்! திரையிலும், திரைக்கு அப்பாலும் எம்ஜிஆருடன் ஜெயலலிதாவுக்கு இருந்த அந்நியோன்யமே பின்னாட்களில் அரசியல் பிரவேசத்துக்கும் வித்திட்டது. சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஜெயலலிதாவின் குருவாகத் திகழ்ந்த எம்ஜிஆர் 1987 ல் உயிர் நீத்த போது தொடர்ந்து 21 மணி நேரங்கள் துயருற்று வெளுத்த முகத்துடன் ராஜாஜி அரங்கில் கிடத்தப்பட்டிருந்த எம்ஜிஆரின் தலைமாட்டில் அநாதரவாக நின்ற ஜெயலலிதாவை அத்தனை எளிதில் யாரும் மறந்து விட முடியாது. 

  துப்பாக்கி ஏந்திய ராணுவ வாகனத்தில் எம்ஜிஆரின் உடல் ஏற்றப்படுகையில் உடன்செல்ல வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை ஜானகியின் உறவினர் ஒருவர் அடித்து உதைத்துக் கீழே தள்ளிய காட்சியே பொது  வெளியில் ஜெயலலிதா அடைந்த முதல் பெரிய அவமதிப்பு!. 

  பின்னாளைய அவரது அரசியல் எழுச்சிக்கு உரமிட்டு வலுச்சேர்க்க அந்த அவமானமும் முக்கியப் பங்கானது. அம்மா சந்தியாவும் இல்லை, எம்ஜிஆரும் இல்லை... இந்த அவமதிப்பின் பின் இனி ஜெயலலிதாவும் இருக்கப் போவதில்லை என ஜெயலலிதாவை மிக லேசாக எண்ணி இறுமாந்திருந்தவர்கள் பின்னர் இவரது அரசியல் விஸ்வரூபம் கண்டு அதிர்ந்து தான் போனார்கள். 

  ஆம், தேர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கருணாநிதியின் அவையில் முதலில் எதிர்க்கட்சித் தலைவியாக அமர்ந்தார். அங்கேயும் அவருக்கான அவமானங்கள் மிச்சமிருந்தன. 1989 ல் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போதான விவாதம் கலவரமாக மாறியதில் ஜெயலலிதா துகிலுரியப்பட்ட பஞ்சாலியாகி தலை விரிகோலமாக பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தியானார். அன்று துளிர்த்த வைராக்யம்... மீண்டும் இந்த சட்டசபையில் காலெடுத்து வைப்பதென்றால் அது முதல்வராக மட்டுமே! என்ற திடமான நம்பிக்கையானது. 

  ஜெயலலிதாவின் வைராக்யம் வென்றது. 1991 ல் முதல் முறை முதல்வரான பின்பே மீண்டும் தமிழக சட்டசபையில் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல் போற்றப்பட்ட போதும் சரி, தூற்றப்பட்ட போதும் சரி ஒரு ஏகபோக மகாராணி போலத்தான் ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்ட போதும் அவரை அம்மாவென அரவணைத்து ஆதரவளிக்க அவரது தொண்டரகள் என்றும் தயங்கினார்களில்லை. இதுவரை தமிழகம் இப்படி ஒரு திடமான முதல்வரைக் கண்டதில்லை. இத்தனை சர்வாதிகாரத் தன்மையுடன் செயல்படும் ஒரு பெண்மணியை சாமானிய மக்கள் தங்களது குலதெய்வமாக வழிபாடு செய்து ஒருமுறையல்ல இருமுறையல்ல அவர் இறக்கும் வரையிலுமாக மொத்தம் 6 முறை தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வராக்கி அழகு பார்த்தார்கள்! இது ஜெவின் ஆளுமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

  பார்ப்பனப் பெண்ணாகப் பிறந்த போதும் பார்ப்பணீயத்தை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட திராவிடக் கட்சியொன்றின் தலைவியாகத் திகழ்ந்து தன்னைச் சதா சர்வ காலமும் சூழ்ந்து கொண்டு பதம் பார்க்கக் காத்திருந்த அத்தனை விமரிசனங்களையும் மிகத் திடமாக எதிர்கொண்டு புறக்கணித்துச் செயலிழக்கச் செய்த வகையில் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிகள் பிற்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு சரித்திரம்.

  இன்றுடன் அவர் மறைந்து மூன்று ஆண்டுகளாகின்றன.

  தேர்ந்த அரசியல் பார்வையாளர்களின் கருத்துக்கிணங்கச் சொல்வதென்றால், ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’எனும் வாசகத்தின் முழுமையான அர்த்தம் உணர்ந்து தமது அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் அவர் முழுமனதாக மக்கள் தொண்டாற்றத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே காலன் அவரை அழைத்துக் கொண்டான். ஆயினும் என்றென்றைக்குமாக தமிழக மக்களின் இதயத்தில் அவருக்கேன நீங்காத ஒரு இடம் உண்டு என்பதை அவரை வெறுப்பவர்களாலும் மறுக்க முடியாது.

  ‘தெய்வமாய் வானில் நின்று 
  தீர்க்கமாய் ஒளிவீசி
  வழிகாட்டும் தாயே!’

  ‘மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு என்றும் மறையாத அம்மா அவர்களே!’

  - என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ‘அம்மா’ மீதான தங்களது அபிமானத்தை ஆடம்பரமாகப் பறைசாற்ற முயன்றாலும் அத்தனையையும் புறம் தள்ளி இப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது‘அந்த மகராசி போயிட்டாளே!’ எனும் அப்பாவி ஏழைத்தாய்மார்களின் ஆதங்கக் குரலில் வழியும் பாசமிகு ஏக்கம் தான்! ஆம், ஒரு முதல்வராக மட்டுமல்ல, இந்த ஆண்மைய உலகில் தங்களைப் போன்ற ஒரு பெண் இனப்பிரதிநிதியாக வயது வித்தியாசமின்றி பெண்கள் என்றென்றைன்றுக்குமாக ஜெயலலிதாவை நேசித்தார்கள். நேசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai