ஜெ ஜெயலலிதா என்னும் நான்...!

கோமளவல்லி என்ற இயற்பெயர் கொண்ட ஜெயலலிதா ஃபிப்ரவரி 24 ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். உறுதியாகச் சொல்வதென்றால் இந்தியா விடுதலை பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு கோமளவல்லி பிறந்தார்.
Jayalalitha an  incredible story
Jayalalitha an incredible story

ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய தருணங்கள்!

கோமளவல்லி என்ற இயற்பெயர் கொண்ட ஜெயலலிதா ஃபிப்ரவரி 24 ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். உறுதியாகச் சொல்வதென்றால் இந்தியா விடுதலை பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு கோமளவல்லி பிறந்தார். அவருக்கு இரண்டு வயதாயிருக்கையில் அவரது தந்தை ஜெயராம் மறைந்தார். தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்காக தாயார் வேதவல்லி, சந்தியா என்ற பெயரில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். திரைப்பட வாய்ப்புகளுக்காக சந்தியா தனது சகோதரி வித்யாவுடன் சென்னைக்கு இடம்பெயர குழந்தைகள் தாய்வழிப் பாட்டனார் பொறுப்பில் வளர்ந்தனர். ஜெயலலிதா சில காலம் பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் பயின்று வந்தார்.

சில காலத்துக்குப் பின் சந்தியா தனது குழந்தைகளைத் தன்னுடனே சென்னைக்கு அழைத்துக் கொள்ள; ஜெயலலிதா சென்னை பிரசண்டேஷன் கான்வெண்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1964 ல் மெட்ரிகுலேஷன் படிப்பை முடிக்கையில் பள்ளியின் முதல் மாணவியாக மேற்படிப்புக்கான அரசு உதவித் தொகையுடன் வெளிவந்த ஜெயலலிதாவால் குடும்பச் சூழல் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமலானது. பொருளாதாரச் சுமை காரணமாக அம்மா சந்தியாவின் வற்புறுத்தலால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

15 வயதில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிக்க வந்து விட்டார் ஜெயலலிதா. அவரது முதல் திரைப்படம் 1966 ல் வெளிவந்த ‘எபிஸ்டில்’ எனும் ஆங்கிலத் திரைப்படம், ஆனால் திரைப்படமாக வெளிவந்த வகையில் 1964 ல் வெளிவந்த கன்னடப் படமான ‘சின்னட கொம்பே’ தான் முதல் திரைப்படமாகக் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘வெண்ணிற ஆடை’ 1965 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அவரது தெலுங்கு அறிமுகப்படமாக ‘மனசுலு மமதலு’ வெளிவந்தது. ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் ஜெயலலிதாவின் நடிப்பை பார்த்து விட்டு ‘ஆயிரத்தில் ஒருவனில்’ எம்ஜிஆர் தனது ஜோடியாக நடிக்க வைத்தார். 1965 ல் வெளிவந்த அத்திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த ஜோடி தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத காதல் ஜோடியாக வலம் வந்தது. ஆனால் 1970 க்குப் பிறகு எம்ஜிஆர் தனக்கு ஜோடியாகப் புதிய கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியதும் இந்த இணைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அந்த இடைவெளியில் ஜெயலலிதாவுடன் நட்பானவரே தெலுங்கு நடிகர் சோபன் பாபு. தெலுங்கில் அப்போது அவர் பிரபலமான காதல் நாயகனென கொண்டாடப்பட்டவர்.

மீண்டும் 1981 ல் எம்ஜிஆருடனான உறவு புதுப்பிக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்த வேளை அது. முதலில் அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஐக்கியப்படுத்தியவராக இருந்த எம்ஜிஆர், 1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைந்து மூன்றாண்டுகள் கடந்த பின் கருணாநிதியுடனான பிணக்கினால் தனியாகப் பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அந்தச் சமயம் பார்த்து ஜெயலலிதாவின் உறவும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் அரசியல் ஈடுப்பாட்டை ஏற்படுத்தி தனது கட்சியில் இணைத்துக் கொண்டார் எம்ஜிஆர்.

1983 ஆம் வருடம் ஜெயலலிதாவை அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர். அதையடுத்த ஒரு மாதத்தில் திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொறுப்பு ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அனல் கிளப்பும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து அந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமானார் ஜெயலலிதா. அதற்கு அளிக்கப்பட்ட பரிசு போல ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினராக்கி டெல்லி பாராளுமன்றத்துக்கு அனுப்பினார் எம்ஜிஆர். 1989 ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகும் வரை ஜெயலலிதா அப்பதவியில் தொடர்ந்தார்.

1984 ல் எம்ஜிஆர் தொடர்ச்சியான சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரழிவு நோயால் அவதியுற்று வந்தார். அவரால் அந்த உபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபட முடியாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதானது. ஆனால் மக்கள் எம்ஜிஆரின் மீதும் அதிமுகவின் மீதும் இரட்டை இலையின் மீதும் கொண்ட நம்பிக்கை மற்றும் அபிமானத்தால் மீண்டும் தங்களது அபிரிமிதமான வாக்குகளை எம்ஜிஆருக்கே அளித்து அவரை முதல்வராக்கி அழகு பார்த்தார்கள். பதிவியேற்ற மூன்றே மாதங்களில் எம்ஜிஆர் மீண்டும் மருத்துவமனை சிகிச்சையில் ஆழ்ந்து போனார். நியூயார்க் புரூக்ளின் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும் இந்தியா திரும்பிய பின் 1987 டிசம்பர் 24 ஆம் நாள் உடல்நலக் குறைபாடு காரணமாக இவ்வுலகை விட்டு மறைந்தார். 

அவரது மறைவையொட்டி தமிழகமெங்கும் கலவரம் வெடித்தது. இறுதி ஊர்வலத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியாகினர்.

எம்ஜிஆர் மரணத்தின் போது ஜெயலலிதாவின் நிலை வெளிப்பார்வைக்கு சாந்தமாக இருந்தாலும் அவரது மனதில் கடும்புயல் வீசிக் கொண்டிருந்தது. ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட்டிருந்த எம்ஜிஆர் உடலுக்கு அருகே தலைமாட்டில் தொடர்ந்து 21 மணி நேரங்கள் நின்று கொண்டே இருந்த ஜெயலலிதாவுக்கு அங்கிருந்த ஜானகி ஆதரவாளர்களால் சொல்லவொண்ணாத அவமானங்கள் நேர்ந்தன. ஆனாலும் மனமுடையாது தனது அரசியல் குருவின் சடலத்தின் அருகே அசையாச் சிலையென நின்றிருந்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடல் இறுதிப் பயணத்துக்காக ராணுவ வாகனத்தில் ஏற்றப்படுகையில் ஜெயலலிதாவும் உடன் செல்ல விரும்பி வாகனத்தில் ஏற முயற்சித்தார். அப்போது ஜானகியின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை நோக்கி காலால் உதைத்து மிக மோசமான வசைச் சொல் ஒன்றை அவரை நோக்கி உதிர்த்தார். அதை கண்டு ஜெயலலிதா திகைத்து நிற்க, கலவரமான சூழலை சமாளிக்க ஜெயலலிதாவை அங்கிருந்து அப்புறப்படுத்தி வீட்டுக்கன்னுப்ப வீடு வரை துணை வந்தனர் காவலர்கள்.

எம்ஜிஆர் மறைவின் பின் ஜானகி இடைக்கால முதல்வரானார். ஆனால் அந்த வெற்றிக்கு ஆயுள் குறைவு. ஜானகி அரசை எதிர்த்து ‘ஜனநாயகப் படுகொலை’ என ஜெயலலிதா ஆளுநரிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட நிலவரம் கலவரமாகி ஜானகி அரசு கலைக்கப்பட்டது. காரணம் அரசியல் ரீதியாக ஜானகி வலுவானவராக இல்லாததே. அவருக்கு அரசியல் அனுபவம் போதாது என்பதோடு அரசியலில் ஆர்வமற்றவராகவும் ஜானகி இருந்தார். அதன் காரணமாகவே ஜெயலலிதாவின் தேர்ந்த அரசியல் காய்நகர்த்தல்களின் முன் அவர் தோற்றுப் போனார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபட்டது. ‘ஜெ’ தலைமையில் ஓரணியும்,  ‘ஜா’ தலைமையில் ஓரணியுமாக  இரு அணியினரும் கட்டிப் புரண்டு சண்டையிடாத குறை. இம்முறை ஜா அணியை பின்னுக்குத்தள்ளி மக்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்றது ஜெ அணி. போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவியாக சட்ட சபைக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. 

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் அமர்வது அதுவே முதல்முறை. அந்த வெற்றி மட்டுமல்ல, ஒரே மாதத்தில் தனக்கு எதிராக இருந்த ஜானகி அணியையும் சாம, பேத, தான, தண்ட முறைகளில் ஒன்றிணைத்து தனது தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினார் ஜெயலலிதா. பிரிவினையின் போது முடக்கப்பட்ட கட்சியின் இரட்டை இலைச் சின்னமும் திரும்பப் பெறப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் கூட இப்போது ஜெயலலிதாவைப் பார்த்து மிரண்டனர்.

ஜெயலலிதாவுக்கு 6 முறை முதல்வர் பதவியைத் தேடித் தந்த தேர்தல் வெற்றிகள்...

  • 24-06-1991 முதல் 12-05-1996 வரை முதல்முறை முதல்வராகப் பதவி வகித்தார்.
  • 14-05-2001 முதல் 21-09-2001 (இரண்டாம் முறை முதல்வரான போது டான்ஸி வழக்கில் பதவியிழக்க அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வம் 21-09-2001 முதல் 01-03-2002 வரையிலுமான காலகட்டத்தில் முதல்முறை முதல்வரானார்)
  • 02-03-2002 முதல் 12.05-2006 மூன்றாவது முறை முதல்வரானார்.
  • 16-05-2011 முதல் 27-09-2014 நான்காவது முறை முதல்வரானார் ( சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை செல்ல நேர்ந்ததால் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் 29-09-2014 முதல் 22-05-2015 வரை இரண்டாம் முறை தமிழக முதல்வரானார்.
  • 23.-05-2015 முதல் 23-05-2016 வரை ஐந்தாம் முறை தமிழக முதல்வரானார்
  • 23-05-2016 முதல் 05-12-2016 வரையிலான காலகட்டத்துக்கு மீண்டும் ஆறாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு முதல்வராக ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை ஊழல் குற்றச்சாட்டுகள், சொத்துக்குவிப்பு வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், பிற மாநிலங்களும் பாராட்டும் படியான ஏழை எளிய மக்களுக்கான உதவித் திட்டங்கள என பாராட்டும், தூற்றுதலுமாகப் பல்வேறு மேடு பள்ளங்களைக் கொண்டதாக இருந்த போதிலும், ஜெயலலிதா அமுல்படுத்திய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அம்மா உணவகங்கள், தொட்டில் குழந்தை திட்டம், உள்ளிட்டவை அரசியல் நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தவை என்பதை மறுக்க முடியாது. அதோடு மட்டுமல்ல ஜெயலலிதாவின் ஆட்சியின் கீழ் தமிழகம் மோட்டார் வாகன உற்பத்தி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுத்துறையின் மையமாக விளங்கியது.

அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பின்னும் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் கூட மக்கள் குறிப்பாக பெண்கள் ஜெயலலிதாவை மன்னித்து அவரை ஆதரிக்கும் எண்ணத்துடனே இருந்தார்கள். இதை அவரது மரணச் செய்து கேட்டு அவர்கள் வெளிப்படுத்திய கட்டுக்கடங்காத அழுகையொலி உறுதிப்படுத்தியது.

தன்னைச் சுற்றி எப்போதும் பகைமை இருந்தபோதிலும் தனி ஒரு நபராய் அவற்றைக் கண்டு அஞ்சாமல் தான் வாழ்ந்த காலம் முழுதும் துணிச்சலான சாதனைப் பெண்ணாக, நிகரற்ற அரசியல் தலைவியாக, பெண்களுக்கு ரோல் மாடலாக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவர் ஒரு சகாப்தம் மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கு அவர் ஒரு வழிகாட்டி. ஜெவின் வசீகரத்தை காலத்தால் மறைக்கமுடியாது. அவரது பூத உடல் மறைந்தாலும் புகழ் சந்திர சூரியர் உள்ள வரை நிலைத்திருக்கும்.

இன்று ஜெயலலிதா மறைந்திருக்கலாம் ஆனால் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com