Enable Javscript for better performance
History and facts about Lok Adalat- Dinamani

சுடச்சுட

  

  மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 14th December 2019 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lok_adalat

  lok adalat

   

  ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானம் அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகள்  மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகின்றது.

  லோக் அதாலத் செயல்படும் முறை

  சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19 ன் படி, மக்கள் நீதிமன்றம் என்பது 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர் எனும் வரிசையில் இதற்கான நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  இவர்களின் பணி;

  • நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல்.
  • நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல்
  • வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்

  என்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

  நீதிமன்றங்கள் இருக்க தனியாக லோக் அதாலத் எதற்கு?

  1980-இல் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் பி. என். பகவதி அவர்கள் தலைமையில் தேசிய அளவில் சட்ட உதவிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்  குழுவுக்கு “CILAS “(Committee for Implementing Legal Aid Schemes) என்று பெயர். அதன் பரிந்துரையின் பேரில் 1987 இல் Legal Services Authorities Act என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்ட உதவி மையங்கள் ஒரே வடிவங்களில் செயல்பட வழிவகுத்தது. இந்தச் சட்டம் இறுதியாக 1995 நவம்பர் ஒரு சில திருத்தங்களுக்குப் பின் செயல்பாட்டிற்கு வந்தது. அதன்படி National Legal Services Authority (NALSA) – என்ற ஆணையம் தேசிய அளவில் நிறுவப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்காக சட்ட உதவி வழங்கிடவும், விரைவாக நீதி வழங்கும் லோக் அதாலத் (Lok  Adalat) ஏற்படுத்தவும் செயல்படுகின்றது.

  பொதுமக்களிடையே நிலவும் பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதில் நீதிமன்றங்களைத் தவிர்த்து இது ஒரு சிறந்த மாற்றுமுறையாகக் கையாளப்பட்டு வருகிறது. இதில் லோக் என்பது மக்களையும், அதாலத் என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். இவ்வகையான மக்கள் நீதிமன்ற முறையை முன்மொழிந்ததில் இந்திய உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதிக்கு முக்கியமான பங்கு உண்டு.

  முதல் மக்கள் நீதிமன்றம் எங்கு  நடைமுறைப்படுத்தப்பட்டது?

  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில் மார்ச் 14, 1982 அன்று ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதி மன்றம் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

  லோக் அதாலத்தின் சிறப்பு

  இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் நீதிமன்றத்திற்கு இனிமேல் வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வு காணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது என்பது இதற்கான்ன சிறப்புகளில் ஒன்று.

  லோக் அதாலத்தில் தீர்க்கப்படும் வழக்கு வகைகள்

  காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பலவகையான வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலமாகத் தீர்வுகள் காணப்படுகின்றன.

  லோக் அதாலத்தின் கடந்த கால வரலாறு

  2013 இல் நடைபெற்ற மெகா லோக் அதாலத்

  இந்தியாவில் நவம்பர் 23, 2013 அன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் ‘மெகா லோக் அதாலத்’ நாடு முழுவதும் நடைபெற்றது. வட்டார அளவிலான கீழமை நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த அதாலத் நடத்தப்பட்டது. அப்போது ஒரே நாளில் இந்தியா முழுவதிலும் 35 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன என்பது இதற்குரிய சாதனைகளில் ஒன்று.

  2014 இல் நடைபெற்ற மெகா லோக் அதாலத்

  டிசம்பர் 6, 2014 ல் சேலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய லோக் அதாலத்தில், சுமார் ஐம்பதாயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில், 42,695 வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் சமரச தீர்வுகள் காணப்பட்டன. இந்த வழக்குகளில் ஏற்பட்ட தீர்வுகள் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.31 கோடியே 10 லட்சம் வழங்கப்பட்டது.

  நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முடிவில் ஒரு தரப்புக்கு வெற்றியும் மறு தரப்புக்கு தோல்வியும் என இருக்கும் சூழல் மக்கள் நீதிமன்ற முடிவுகளில் எழுவதில்லை என்பது மக்கள் நீதிமன்றத்துக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது.

  தமிழகத்தில் இன்று லோக் அதாலத்

  பொது மக்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு காண உதவும் லோக் அதாலத் தமிழகத்தில் இன்றுநடைபெறுகிறது. இம்முறை இதில் 502 அமர்வுகளில் 2.36 லட்சம் வழக்குகள் தீர்க்கப்பட உள்ளன.

  தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2019-ஆம் ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. 

  இந்த வகையில் சனிக்கிழமை, தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. நிலுவை மற்றும் சட்ட மையத்தில் தாக்கலான, வழக்குகளை விசாரிக்க லோக் அதாலத் விசாரணை இன்று நடக்கிறது.

  இந்த விசாரணையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பு வழக்குகள், வாரிசு உரிமை கேட்பு வழக்குகள், வங்கி வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் மற்றும் கோர்ட்களில் பதிவு செய்யாத வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

  தமிழகம் முழுவதும் 502 அமர்வுகளில் நடைபெறும் இந்த விசாரணையில் சுமார் 2 லட்சத்து 36 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்க்கப்பட உள்ளதாகத் தகவல்.

  TAGS
  Lok Adalat
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai