மகாபாரதத்தில், விதுரரின் பேச்சுக்கு மதிப்பு இருந்தவரை விதிகள் மீறப்படவில்லை. தவறான விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எப்போது விதுரரின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதோ, அன்றே கெளரவர்களின் அழிவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்கனியும், முன்பு கசக்கும், பின்பு இனிக்கும். மகாவிஷ்ணு தனக்களித்த ‘கோதண்டம்’ என்ற வில்லானது கெளரவர்களுக்கு உபயோகப்படக் கூடாது என்று உடைத்தெறிந்தார். அதர்மத்துக்கு இவரது பலமும், வரமும் பயன்படாமல் போனது. ஒருவேளை, விதுரர் கோதண்டத்தை உடைக்காமல், பாண்டவர் தரப்பில் போரிட முடிவு செய்திருந்தால், வில்லின் பலமறிந்த கெளவர்கள் யுத்தத்தை தேர்ந்தெடுக்காமல் போயிருக்கலாம். அல்லது, கெளரவர் தரப்பு பதினெட்டு நாட்கள்வரை தாக்குப்பிடிக்காமல் சீக்கிரமே போர் முடிவுக்கு வந்திருக்கும். விதுரரின் வில்லுக்குப் பயந்து, கெளரவர்கள் தர்மத்தின் பாதையில் பயணித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் பேரழிவை தவிர்த்திருக்கலாம். தர்மம் நிலைநாட்டப்பட்டிருக்கும். தர்மத்தை நன்கறிந்த, தர்மதேவதையின் அம்சமாகிய விதுரர், போரில் கலந்துகொள்ளாமல் இருந்ததால், தர்மம் தன்னை காத்துக்கொள்ள பேரழிவை ஏற்படுத்திவிட்டது என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.