கைதியை துரத்திய மரணம், போலீஸ் கஸ்டடி ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறை!

இந்த விவகாரத்தில் மரணத்திற்கு காரணமாக கைதியின் உடற்கூறு பரிசோதனை தெளிவாகச் சுட்டுவது ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறையைத் தான்.
கைதியை துரத்திய மரணம், போலீஸ் கஸ்டடி ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறை!

போலீஸ் கஸ்டடி விசாரணையில் ‘ஃபலாங்கா டார்ச்சர்’ என்றொரு விசாரணை முறை உண்டு. அது மரணம் வரை இட்டுச் செல்லும் என்பது அதிர வைக்கும் நிஜம். 

கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த வாரம் சிறைக்கைதி ஒருவர் போலீஸ் கஸ்டடி விசாரணையின் போது பலத்த காயங்களுக்குட்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மறுநாளே மரணமடைந்தார். காரணம் போலீஸ் கஸ்டடியில் அவருக்கு நிகழ்ந்த ஃபலாங்கா டார்ச்சர் விசாரணை முறையே என்று அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

கேரள மாநிலம் வாகமன், கோலஹலமேடு பகுதியைச் சேர்ந்த 49 வயது ராஜ்குமார் எனும் நபர்  கடந்த ஜூன் 12 ஆம் தேதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுங்கண்டம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழைத்துச் செல்லப்பட்டது 12 ஆம் தேதி ஆனால் அவரைக் கைது செய்தது ஜூன் 16 ஆம் தேதி என போலீஸ் ரெக்கார்டுகளில் பதிவாகியுள்ளது. அதாவது அவர் அழைத்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் கழித்து தான் கைதாகியுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இடைப்பட்ட நாட்களில் ராஜ்குமாருக்கு நேர்ந்தது என்ன? போலீஸ் கஸ்டடியில் இருந்த நான்கு நாட்களில் ராஜ்குமார் எவ்விதமாக விசாரிக்கப்பட்டார் எனப் பல ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆயினும் ராஜ்குமார் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவர் போலீஸ் விசாரணை வளையத்தில் இருக்கையில் அவரது உறவினர்கள் அறிந்து கொள்ள முயன்ற போதெல்லாம் அவர்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஜூன் 16 ஆம் தேதியின் பின் ராஜ்குமாரைக் காணச் சென்ற உறவினர் ஒருவர், அப்போது ராஜ்குமார் இருந்த நிலையை விவரிக்கையில், கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ராஜ்குமார் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு தவித்திருக்கிறார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அவரது கெஞ்சலை அலட்சியப்படுத்தி இப்போது உனக்குத் தண்ணீர் அவசியமில்லை எனத் தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருந்தார்கள் என்கிறார் அந்த உறவினர். இதற்கு ராஜ்குமாருடன் அப்போது சிறையில் இருந்த மற்றொரு கைதியும் சாட்சி. அந்தக் கைதி இது குறித்து ஊடகங்களிடம் கூட பதிவு செய்திருக்கிறார் என்கிறார் ராஜ்குமாரின் உறவினர்களில் ஒருவரான ஆண்டனி.

அதுமட்டுமல்ல, ராஜ்குமாரை அவரது வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன்பும் தொடர்ந்து பலமணி நேரம் அடித்துச் சித்ரவதை செய்து போலீஸ்  அராஜகம் செய்ததையும் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் ராஜ்குமாரின் உறவினர்கள். நடுவில் ஜூன் 15 ஆம் தேதி நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக நெடுங்கண்டம் மருத்துவமனைக்கு ராஜ்குமார் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர், ராஜ்குமாரின் உடலில் இருந்த பலத்த காயங்களைக் கண்டு அதிர்ந்து, அவரை உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்குமாறு போலீஸாருக்குப் பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் டாக்டரின் பரிந்துரையைப் புறக்கணித்த போலீஸார் அவரை அவசரகதியில் மாஜிஸ்த்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டி பீர்மேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இப்படியாக ஒரு விசாரணைக் கைதியை மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டு இன்று அவரது துர்மரணத்திற்கும் காரணமாகி இருக்கிறது கேரள மாநில போலீஸ்.

இந்த விவகாரத்தில் மரணத்திற்கு காரணமாக கைதியின் உடற்கூறு பரிசோதனை தெளிவாகச் சுட்டுவது ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறையைத் தான்.

அதிகம் அறியப்படாத இந்த வகை விசாரணை முறை மிகவும் கொடூரமானது என்கிறார்கள். போலீஸ் கஸ்டடியில் ‘ஃபலாங்கா டார்ச்சர் விசாரணையால் கைதி ராஜ்குமாரின் உடலில் மொத்தம் 22 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மார்பு எலும்பு தவிர நான்கு விலா எலும்புகளும் முறிந்த நிலையில் இருந்தன. ராஜ்குமாரின் கால் பாதங்களில் தொடர்ந்து இடைவெளியின்றி பலமணி நேரங்களுக்கு போலீஸார் அடித்துச் சித்ரவதை செய்திருப்பதும் உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. கைதியின் கால் பாதங்களில் இருக்கும் நரம்புகள் சிதையும் வண்ணம் தொடர்ந்து அடித்து கால்களை முறிக்கும் சிகிச்சை முறைக்கு ஃபலாங்கா சித்ரவதை எனப் பெயரிட்டுள்ளனர். இந்த வகை விசாரணை முறை பல சமயங்களில் லாக் அப் டெத்களுக்கு காரணமாகலாம் என்பதற்கு ராஜ்குமாரின் கஸ்டடி மரணம் ஒரு உதாரணம்.

ராஜ்குமாரின் கஸ்டடி மரணத்தை ஒட்டி இதுவரை 8 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். கஸ்டடி மரணம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com