இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேர்தல்: ஒரு திருவிழா... பல கோணங்கள்...

இந்தத் தேர்தலில் யாரும் தயாராவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தேசிய, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைத் தேடி ஓடி வரும் புதுக் கலாச்சாரம் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

News image
பிரசாரம் ஸ்டார்ட்ஸ்!
Updated On :6 பிப்ரவரி 2021, 1:02 pm

தேர்தலுக்கான தேதியே அறிவிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாகவே தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தமிழகம் இதுவரை காணாத அதிசயமும் ஆச்சரியமுமாக இருக்கிறது.

கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரங்களில் - நாள்களில் அவசர அவசரமாக மக்களைச் சந்தித்துத் தங்கள் சின்னத்திற்கும் கட்சிக்கும் வாக்கு சேகரிப்பதுதான் வழக்கமானதாக இருந்து வந்தது.

ஆனால் இந்தத் தேர்தலில் யாரும் தயாராவதற்குப் பல மாதங்களுக்கு முன்னதாகவே தேசிய, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைத் தேடி வரும் புதுக் கலாசாரம் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

ஆளுங்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி,  அகில இந்திய காங்கிரஸ் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,  தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், புத்தம் புதிதாக கட்சி தொடங்கி முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம், அதிமுக அணியில் இருப்பதாகக் கூறும் சரத்குமார் தலைமையிலான  சமத்துவ மக்கள் கட்சி, தேர்தலுக்கு முன்னதாகவே தங்களது முக்கியத்துவத்தைக் காட்ட முனையும் பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய கட்சிகள் என அனைவரும் தங்களது பாணியில் வெவ்வேறு வடிவங்களில் தங்கள் கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாகவே கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரத்தின்போது தாங்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர்களைப் பார்ப்பதற்கும் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைக் கேட்பதற்கும் பல மணி நேரம் கட்சித் தொண்டர்கள் காத்துக் கிடந்தது அந்தக் காலம்.

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை தன்னெழுச்சியாக வந்து நீண்ட நெடிய நேரம் காத்திருந்து பார்த்து “தலைவரைப் பார்த்தாலே புதுத் தெம்பு வருது, அவர் பேச்சைக் கேட்டாலே தைரியம் வருது” என்று பெருமைப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். கட்சித் தொண்டர்களுடன் சாதாரண பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்ப்பதற்கும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்கும் ஆர்வமாக இருந்தனர்.

தேர்தல் காலங்களில் எம்.ஜி.ஆரைக் காண்பதற்காக ஒரு நாள், இரு நாள் எனக் காத்திருந்து பொதுக்கூட்ட திடல்களிலேயே படுத்துத் தூங்கிக் கிடந்து ”வாத்தியார் வருவார், வருவார்” என்றிருந்து பார்த்து நிம்மதியடைந்த அதிமுக தொண்டர்கள் இன்றும் உள்ளனர்.

கடந்த காலங்களில் தங்கள் தலைவர்களைக் காண்பதற்கு கட்சியினர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் என தங்கள் குடும்பத்துடன் சென்று பார்ப்பது வழக்கமானதாக இருந்தது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது அதிசயமாகவும் ஆச்சரியமானதாகவும் மாறியுள்ளது. தனது கணவர், தனது அப்பா, தனது சகோதரர் கட்சியில் இருப்பது தனக்குப் பெருமை, தனக்கு மரியாதை என்று இருந்த ஒரு காலம் போய் தற்போது அதைக் குடும்பத்தினரே விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றம் தமிழகம்  முழுவதும் குடும்பங்களுக்குள்  கடந்த சில ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது. ஆனால் இதனையெல்லாம் தாண்டி கட்சியினருக்கும் மக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் ஆர்வம் குறைந்திருக்கிறது என்கிற மாற்றம் மட்டும்  உண்மையாக உருமாறியுள்ளதைக் காண முடிகிறது.

வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி  அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைச் சந்தித்த பிரசாரக் கூட்டத்தின்போது மக்கள் கூட்டம் ஏற்படுத்திய உணர்வுகள் வித்தியாசமானதுதான். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய முதல்வருமான பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தின்போது வழியெங்கும் மக்கள் கூட்டங்கள் இருக்கும் வகையில் தனது சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்.

தற்போது புது மெருகுடன் அவருடைய பேச்சு பாணி மிளிரத் தொடங்கியுள்ளது. சவால்கள் விடுவதும் ஆதாரங்கள், புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டுப் பேசுவதும் கட்சியினரிடையேயும் பொதுவானவர்களிடையேயும் சிறப்பானதாக அமைந்துள்ளதென்கிற பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

குறிப்பாக மக்களிடம் நெருக்கம் கொள்ளும் வகையில் கூடியுள்ளவர்களிடம் சிரித்துக்கொண்டே பேசியும், கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெறுவதும் அவரிடம் இயல்பாகவே மக்களை நெருங்கிச் செல்லும் பாங்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடித்தமானதாக அமைந்திருக்கிறது.

திமுகவில் முதன்முதலாக பிரசாரத்தைத் தொடங்கி அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தது கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி. மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தினசரிச் சந்தை வியாபாரிகள், வெற்றிலை வியாபாரிகள், குடிசைமாற்று குடியிருப்பு மக்கள், திருநங்கைகள், மலைவாழ் பூர்வகுடிகள் என அனைத்துத் தரப்பினரையும் எளிதாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தது திமுகவினரைக் காட்டிலும் மக்களையும் ரசிக்கச் செய்துள்ளது.

கட்சித் தலைவரின் வருகைக்கு முன்னோட்டமாக வழக்கத்தை விடவும் பெண்கள் அதிகளவில் கனிமொழியின் பிரசாரத்தில் கூடியது புதிதாக இருந்ததாகக் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது பிரசார பாணியை மாற்றிக்கொண்டு மக்களை மிகவும் அருகில் சந்திக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

மக்களின் உள்ளூர் பிரச்னைகளில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு  திமுக நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கள் பகுதியின் பிரச்னைகளை நேரடியாக திமுக தலைவரிடம் தெரிவிப்பதை நல்வாய்ப்பாக ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர்.

காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி மிகவும் எளிமையாக அகில இந்தியத் தலைவர் என்கிற எந்தக் கெடுபிடிகளும் இல்லாமல் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி மக்களைச் சந்தித்தார்.

அவரது பேச்சில் பிரசாரப் பகுதியின் பிரச்னைகள் அதிகம் சார்ந்ததாக இருப்பதும், செல்கிற இடங்களில் நெசவாளர்கள், விவசாயிகள், வியாபாரிகளைச் சந்தித்து அவர்களது பிரச்னைகளை மிகவும் ஆர்வமாகக் கேட்பதும் காங்கிரஸ் கட்சியினருக்கே வித்தியாசமானதாக இருந்து வருகிறது.

அவரது கலந்துரையாடல் கூட்டங்களில் மொழி ஒரு பிரச்னையாக இருந்தாலும் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருந்ததால் மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிவதும் அதற்கான பதில்களை அளிப்பதும் தடையாக இருக்கவில்லை. ராகுல் காந்தியும், பிரச்னையைத் தெரிவிப்பவரும் நேருக்கு நேர் பேசிக் கொள்வது போல்தான் அந்தக் கலந்துரையாடல் கூட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

உணவருந்தும்போது தன்னருகில் இருப்பவர்களிடம் தொடர்ந்து உரையாடுவதும் அவர்களுடன் செல்பிகளை எடுத்துக் கொள்வதும் ஒரு தேசியத் தலைவரை இவ்வளவு அருகில் பார்ப்பது தமிழகத்திற்கு புதிதாகவே அமைந்திருந்தது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தற்போதுதான் தங்களது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். தேசியத் தலைவர் நட்டாவும் இன்னபிற தமிழகத் தலைவர்களும் மக்களைச் சந்தித்து தங்களது கட்சியின் நிலைப்பாட்டையும் கூட்டணி குறித்தும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில்லையென்கிற உறுதிக்குப் பிறகு பாஜக அவசர அவசரமாக முன்னர் பேசியதை அழித்துவிட்டு, மீண்டும் பழையதையே பேச முயற்சித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கட்சி உறுப்பினர்களைவிடவும் திரைப்படத்தில் தொடர்ந்து நடிக்கக் கோரும் ரசிகர்களும், ரசிகைகளும் கலந்துகொண்டதை அதிகம் காண முடிந்தது. தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைக் காண பெருவாரியான கூட்டம் இருந்தது என்பது நன்றாகவே தெரிந்தது.

திரைப்பட நடிகர் என்கிற வசீகரம், முதன்முறையாக அருகில் பார்க்க அமைந்த வாய்ப்பு ஆகியவை அனைத்துப் பகுதிகளிலும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்தக் கூட்டத்தைக் கண்டு கமல்ஹாசனே பரவசப்பட்டு உற்சாகமும் அடைந்தார்.

கமல்ஹாசனும் கட்சித் தலைவரைப் போலில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரைப் போலவே இருக்க முயற்சிக்கிறார். அவரும் உள்ளூர் பிரச்னைகளையே அதிகம் பேசுகிறார். உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள், வழக்கறிஞர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். அவரது துணிச்சலான அனைவருக்குமான, சவாலான பேச்சு அனைவராலும் வரவேற்கப்படும் பேச்சாக வரவேற்பு பெறுகிறது.

இவரது தேர்தல் பிரசாரத்தின்போது கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் கட்சி வரையறையைத் தாண்டி தங்களால் திரையில் ரசிக்கப்பட்டவர் என்கிற உரிமையுடன் பார்த்து ரசித்ததையும் காண முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சியினர் தாங்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தை நடத்தி தேர்தலுக்கு முன்பாகவே கட்சியினர் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதும், தங்களது பலத்தைத் தாங்கள் கண்டுகொள்வதற்கும் தங்கள் கட்சியின் பலத்தை பிறருக்குக் காட்டுவதற்கும் நடத்தப்பட்ட போராட்டம் எனலாம்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரோ தன்னுடைய மனைவியான ராதிகா சரத்குமாருடன் தமிழகம் முழுவதும்  கட்சிப் பொறுப்பாளர்களைச் சந்தித்து வருகின்றார்.  

தேமுதிகவும் இதேபோன்ற நிலையைத்தான் எடுத்துக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிப் பொறுப்பாளர்களைச் சந்தித்து வருகிறார். ஆனால் இந்த நடவடிக்கைகள் அவர்கள் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சியினரிடம் தங்களது கட்சியின் பலத்தைக் காட்டுவதற்கானதாகவும் கூட்டணித் தலைமையிடம் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளை அதிகம் பெறுவதற்குமான தேர்தல் கால நடவடிக்கையாகவே உள்ளது.

இதனிடையே தமிழ்நாடு கள் இயக்கத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியோ சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியே அறிவிக்கப்படாமல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதுடன் தொழில்களும் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம்  தேர்தலுக்கான தேதியை அறிவித்ததற்குப் பிறகே அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் இனியும் என்னென்ன ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் காணப் போகிறதோ? ஆனால் அரசியல் கட்சியினரை விடவும் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாடுகளை த் தாண்டி சகலத்தையும் ஏற்றுக் கொள்ளவும், கடந்து செல்லவும் பழகிக் கொண்டுள்ளதால் வருகிற தேர்தல் திருவிழா வழக்கத்தைவிடவும் சற்றே வித்தியாசமானதாகவும் மாற்றத்திற்குரியதாகவும் அமையும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.