உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய புதிய வாழ்முறை

மனிதர்களாகிய நாம்தான் அடிக்கடி நம்மை பழக்கவழக்கங்களின் உயிரினங்களாக குறிப்பிடுகிறோம்.
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய புதிய வாழ்முறை
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய புதிய வாழ்முறை

மனிதர்களாகிய நாம்தான் அடிக்கடி நம்மை பழக்கவழக்கங்களின் உயிரினங்களாகக் குறிப்பிடுகிறோம். ஆனால், எதை மறந்துவிடுகிறோம் என்றால், தொடக்கத்திலிருந்து இறுதி வரை, நாம் இயற்கையின் படைப்புதான் என்பதை. இயற்கையின் சுழற்சிக்கு ஏற்ப வாழ்வதே, நமது நிறைவான மற்றும் உயர்ந்த வாழ்க்கைக்கு ஒரே வழி.

நம்பினால் நம்புங்கள், சமூக வலைத்தளங்கள் இன்று நம்மை முட்டாளாகவும் மூளைச்சலவை செய்தும், ஒரு குறிப்பிட்ட வழியை பின்பற்றி வாழ்வதுதான் வெற்றியைக் கொடுக்கும் என்று நம்ப வைக்கின்றன. வெற்றியைப் பெற தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும், நமது லட்சியத்தை அடைய இரவு முழுவதும் பணியாற்ற வேண்டும் மற்றும் என்னவெல்லாமோ. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, உயிரினங்களிலேயே மனிதன் மட்டுமே ஆரோக்கியம் மற்றும் உறக்கத்தை தியாகம் செய்து வாழவும் சாதிக்கவும் முனைகிறான். வெற்றிக்கான முயற்சியில் வகிக்கும் பதவி, ஈட்டும் வருவாய், ஓட்டும் கார்கள், அணியும் ஆடைகள், செல்லும் ஆடம்பர சுற்றுலா போன்றவை தான் தீர்மானிக்கின்றன என நினைத்து, நமது உடலியக்க கடிகையின் ஓட்டத்தையே சீர்குலைத்துவிடுகிறோம் என்பதை உணர தவறிவிடுகிறோம். இயற்கையின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொன்றும் நிகழ்கின்றன. ஒருவேளை நாம் வேகமாக செயல்பட்டு இயற்கையுடன் போட்டியிட முனைந்தால், அது நம் வேகத்தை குறைத்துவிடும். பலமுறை, அப்படி நடந்தும் இருக்கிறது.

நமது தனித்துவமான உடலானது, நுண்ணறிவாற்றலுடன் உருவாக்கப்பட்டு, உயிரியல் செயல்முறைமை (சர்காடியன் ரிதம்) அடிப்படையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இது உறக்கம் - எழுதல் அல்லது பகல் - இரவு சுழற்சிபோல. இந்த நுண்ணறிவாற்றல்தான் பலவகையான உணர்வுகளை  - விழித்தல் மற்றும் உறக்கம் வருவது, பசி மற்றும் திருப்தியடைதல் என 24 மணி நேர சுழற்சியை உருவாக்குகின்றன.

நாம் என்னவெல்லாம் செய்கிறோமா - உறக்கம், உண்ணுதல், செரிமானம், குறிப்பிட்ட சுரப்பிகள் சுரத்தல், குடலியக்கங்கள் மற்றும் கழிவகற்றம் - போன்ற பணிகள் இந்த உயிரியல் செயல்முறைமை அடிப்படையில்தான் நடக்கின்றன. இது, நமது உடல் எவ்வாறு வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு நேரத்தில் செய்கிறது என்ற செயல்முறைமையைக் கொண்டே தீர்மானிக்கிறது.

ஒருவேளை நீங்கள் இரவு நேரப் பணியாளர், நள்ளிரவு வரை பணியாற்றுவோர் அல்லது நேரம் மாறுபடும் நாடுகளுக்கு பயணிக்கக் கூடியவர்களை எடுத்துப்பார்த்தால், அவர்களது உயிரியல் கடிகை மாறுபட்டிருக்கும் விளைவை காண முடியும்.

எப்போது நாம் இயற்கையின் விதிகளுக்கு எதிர்வினையாற்றுகிறோமோ உயிரியல் செயல்முறைமைக்கு எதிராக பயணிக்கிறோமோ அது, மனித உடலில் இருக்கும் ஆயிரக்கணக்கான அணுக்களின் மீது ஆளுமை செலுத்தி, சிறந்த உடற்கட்டு திட்டத்தைக் கொண்டிருந்தாலும், சிகிச்சைகள், மாத்திரைகள், மருத்துவர்கள், சத்துணவு நிபுணர்கள், மதக் குருக்கள் அல்லது யோகா நிபுணர்களைக் கூட அர்த்தமற்றவர்களாக்கிவிடும்.

இதையே ஒரு கதை மூலம் விளக்கக் கூடும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி  எனது அலுவலகத்துக்கு ஆலோசனை பெற வந்தார். அவரது உயிரியல் செயல்முறைமையை மேம்படுத்த உதவுவதாகவே எனது அணுகுமுறை அமைந்திருந்தது. அவர் நள்ளிரவில் உறங்குவதையும், இரவு 7 மணிக்கு உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது உறங்கும் நேரத்தை இரவு 10 மணியாகவும், உடற்பயிற்சி செய்வதை காலை 7 மணிக்கும் மாற்றுவது என்று நாங்கள் முடிவு செய்தோம். இதனை மாற்றியமைக்க அவர் சில நாள்கள் எடுத்துக் கொண்டார், ஐந்து நாள்களில் அவர் செய்து முடித்தார். ஒரு வார காலத்துக்குள், அவரது உடல்நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இது அவரது உடல் மற்றும் அதன் நுண்ணறிவுத்திறனால் தான் சாத்தியமானது. எந்த சிறப்பு உணவோ, மாயாஜால மாத்திரையோ இல்லை. வெறுமனே, உயிரியல் செயல்முறையை பின்பற்றியதே காரணம்.

இயற்கையின் விதிகளுக்கு ஏற்ப நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்வது ஒன்றே நம்மை முன்னேற்றிக் கொள்வதற்கான ஒரே வழி என்பதை நிரூபிக்க ஆயிரம் உதாரணங்களில் இது வெறும் ஒரு உதாரணம் மட்டுமே. இந்த உலகிலேயே மிகச் சிறந்த முறையில், மாவை நீங்கள் பிசைந்து வைத்திருந்தாலும், ஓவனின் சுற்றுப்புறம் மோசமாக, ஈரமாக அல்லது தவறான வெப்பநிலையில் இருந்தால் அந்த ரொட்டி சரியாக வேகாது அல்லது உப்பாது. அதுபோலவே, நமது உள்புற மற்றும் வெளிப்புறக் காரணிகள், நமது உடல்நலனில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. ஒருவருக்கு மிகச் சிறந்த மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தைக் கொடுத்து, ஆனால், சாக்கடையான, ஆரோக்கியமற்ற, அழுக்கான, ஆதரவற்றநிலையில், தனிமையில், ஈரப்பதமான சுற்றுச்சூழலில் விட்டுவிடுவதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த நேர்மறையான விஷயங்கள், அவரை மேம்படுத்தவோ, ஊட்டமாக்கவோ உதவாது.

எப்போது நாம் உயிரியல் செயல்முறைமையுடன் ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து, தேவையான உடற்பயிற்சி, தரமான உறக்கம், உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் மருந்துகள் ஆகியவற்றை அளிக்கும்போதுதான், தற்காப்பு, குணம்பெறுதல் மற்றும் குணமடைதல் போன்றவற்றின் உண்மையான அனுபவத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே.. ழங்களின் மருத்துவ குணங்கள்!

எனது பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட பணி அனுபவத்தில், எனது குழு இறக்கும் தருவாயிலிருக்கும் நோயாளிகளான குணப்படுத்த இயலாத புற்றுநோய், அரிதான மரபணுக் கோளாறு மற்றும் சுரப்பிகளின் மாறுபாடு மற்றும் சில நோயாளிகளையும் கவனித்துள்ளோம். மருந்து மற்றும் சிகிச்சைகளையும் தாண்டி, ஒரே ஒரு விஷயம் மட்டும் அவர்களுக்கு மிகவும் பலனளித்துள்ளது. அதுதான் அவர்களது வாழ்வியல் மற்றும் வாழ்க்கை முறையை உயிரியல் செயல்முறைமைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவது. எப்போது ஒரு நோயாளியை நாம் உயிரியல் செயல்முறைமையின் சுழற்சிக்கு உள்படுத்துகிறோமோ, அவர்களது உடலின் நுண்ணறிவுத்திறன் செயல்படத் தொடங்குகிறது. அது வேலை செய்து, பிரச்னையை அடையாளம் கண்டு, சரி செய்கிறது.

உயிரியல் செயல்முறைமை என்று நாங்கள் கூறும் அந்த புதிய வாழ்க்கை முறை என்பது, மகிழ்ச்சியாக இருப்பதை நிறுத்தச் சொல்வதாக அர்த்தமாகாது. சமூக வாழ்க்கையை நீங்கள் அனுபவியுங்கள், அதனை தொடருங்கள். உண்மையைக் கூறுவது என்றால், புதிய வாழ்க்கை முறை என்பது புதியதே அல்ல. அது நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக இந்த இயற்கையின் இசைவோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள், சமுதாயத்துடன் இணைந்து, இதயம் திறந்து பாடியுள்ளார்கள், சடங்குகள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாடியுள்ளனர் மற்றும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தும் உள்ளனர். உங்களாலும் இதனை செய்ய முடியும்!

இது எப்படி பலனளிக்கும் மற்றும் இதனை எப்படி கைக்கொள்ள வேண்டும் என்பது குறித்த அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரியல் செயல்முறைமை எவ்வாறு செயல்படுகிறது?

உங்கள் ஹைபோதாலமஸ் எனப்படும் நடுமூளையின் அடிப்பகுதிதான் கடிகாரத்தின் தலைமையாக செயல்பட்டு, உடலில் இருக்கும் இதர கடிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. உங்கள் உயிரியல் செயல்முறைமை உள்பட. இது ஒருங்கிணைந்த உயர்கட்டளை மையம்
 (Suprachiasmatic Nucleus-SCN) என அழைக்கப்படுகிறது.

மிக எளிமையானது முதல் சிக்கலான பணிகள் வரை உதாரணமாக உடலின்சக்தி, உறக்கத்தின் நிலை, உணர்ச்சிகள், சீரான இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவுகள், செரிமானப் பகுதியின் செயல்பாடு, நோய் எதிர்ப்பாற்றல், உடலின் வெப்பநிலை, எடை மற்றும் பல கூடுதல் விஷயங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைந்த உயர்கட்டளை மையமே கட்டுப்படுத்துகிறது. இன்னும் எளிதாகக் கூறவேண்டுமானால், ஒருங்கிணைந்த உயர்கட்டளை மையம், உயிரியல் செயல்முறைமையை கட்டுப்படுத்தும் முடுக்கியாக செயல்படுகிறது. இது வேலை செய்வதை நிறுத்தினால், உங்கள் உடல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். 

ஒருங்கிணைந்த உயர்கட்டளை மையம் எவ்வாறு வேலை செய்கிறது?

இதுதான் வெளிச்சம் அல்லது பகல் மற்றும் இருட்டு அல்லது இரவுக்கேற்ப செயல்பட வைக்கிறது. இதன் முக்கிய பொறுப்பு, நமது உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சமிக்ஞைகளை அளிப்பது.

எப்போது வெளிச்சம் ஒருங்கிணைந்த உயர்கட்டளை மையத்தை அடைகிறதோ, அப்போது, உடலுறுப்புகளுக்கு செயல்பட அல்லது செயலை நிறுத்த என வெவ்வேறு சமிக்ஞைகளை அது அளிக்கும். எனவே, எப்போது, வெளிச்சம் மற்றும் இருட்டுக்கு இடையே சீரற்றத் தன்மை ஏற்படுமோ அதாவது, தவறான நேரங்களில் உறங்குவது, இரவில் மிக வெளிச்சமான இடத்தில் இருப்பது, நேர மாறுபாடு கொண்ட நாடுகளுக்கு பயணம் போன்றவற்றால் உடல் இயக்கத்தில் குழப்பம் ஏற்படும். சில உடல் இயக்கங்கள் தவறான நேரங்களில் செய்யவோ அல்லது செய்யப்படாமலோ போகிறது. 

அறிவியல் சோதனைமுறைகளில், 24 முதல் 48 மணி நேரம் இருண்ட அறையில் ஒரு மனிதன் இருந்தால், அனைத்து நுண்ணுணர்வுகளையும் இழந்துவிடுவான், ஏனென்றால், அவனது உயிரியல் கடிகையால் (அனைத்தும் இதனுடன் இணைந்திருக்கும்) வெளிச்சம் இல்லாமல் வேலை செய்ய முடியாது. 

நாள்பட்ட உடல்நலப் பிரச்னைகள், வீக்கம், உயர் ரத்த அழுத்தம், குறைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல், மோசமான உணர்ச்சித்திறன் போன்றவற்றுடன் குழப்பமான உயிரியல் கடிகைக்குத் தொடர்பிருப்பதையும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

நினைவில் கொள்ளுங்கள், நல்ல ஊட்டச்சத்து, உடற்பயிற்சி திட்டம், யோகா, பிராணாயாமா, மந்திரங்கள் மற்றும் இதர பயிற்சிகள் அனைத்தும் மேலோட்டமானவைதான், ஒருவேளை மனிதன் உயிரியல் செயல்முறையை பின்பற்றாவிட்டால்.

உயிரியல் கடிகையைப் பாதிக்கும் காரணிகள்

உயிரியல் கடிகையைப் பாதிக்கும் காரணிகள், முறையற்ற வாழ்க்கைமுறைகளை உள்ளடக்கியது. நேரடியாக உங்கள் உயிரியல் கடிகையைப் பாதிக்கும் காரணிகள் சில. 

  • இரவுப் பணிகள்.
  • விமானப் பயணம்.
  • நீண்ட தூர மற்றும் தொடர் பயணம்.
  • காஃபின், புகையிலை, ஆல்கஹால், போதைப்பொருள் அல்லது சமூக ஊடகங்கள் போன்ற தூண்டுதல்கள். 
  • மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்.
  • சூரியன் மறைவுக்குப் பிறகு செயற்கை/ நீல ஒளியின் அதிக வெளிப்பாடு.
  • தூக்கம், உணவு மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளில் ஏற்படும் தொடர் மாற்றங்கள். 

உங்கள் உயிரியல் செயல்முறைமையை மாற்றியமைக்க சில குறிப்புகள் 

உயிரியல் செயல்முறைமையை பின்பற்றி வாழ பணம் செலவாகுமா என்பது உங்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறதா? அப்படியென்றால் இல்லை, நிச்சயமாக இல்லை. 

இயற்கை மற்றும் உயிரியல் செயல்முறைமையுடன் வேலை செய்வதன் மூலம் நீங்கள் அதை அடைய முடியும். இதனால் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உடனடியாக அனுபவிக்க முடியும். உங்கள் ஆற்றல் நிலைகள் உயரும், நீங்கள் நன்றாக தூங்குவீர்கள், உங்கள் செரிமானம் மற்றும் உடலில் நீர் இருப்பு  மேம்படும். வீங்காத, தட்டையான வயிற்றுடன், பளபளப்பான, தெளிவான சருமம், குறைந்த பசியுடன் எழுந்திருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்! ஆனால், இதன் நன்மைகள் இதற்கு அப்பாலும் செல்கின்றன. 

உயிரியல் செயல்முறைமையைப் பின்பற்ற சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள்

1. சரியாகச் சாப்பிடுங்கள் - உயிரியல் செயல்முறைமை விரதம்

வானவில்லில் பல நிறங்கள் இருப்பது போன்று காய்கறிகள்(மாவுச்சத்து, மாவுச்சத்து அல்லாதது), பழங்கள்(விலங்குகள் மற்றும் தாவரங்களில் இருந்து கிடைப்பவை) மற்றும் தானியங்களில் இருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் என்ற கலவையான உணவு சாப்பிடுவதை பின்பற்றுங்கள்.

சூரியன் மறையும் நேரத்தில் (மாலை 7 மணிக்கு) அன்றைய நாளின் கடைசி உணவைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் இரவு முழுவதும் உங்களால் உயிரியல் செயல்முறைமை விரதத்தைப் பின்பற்ற முடியும். முழு நேரம் அல்லது பகுதி நேரம் என உங்களால் எந்த அளவுக்கு முடியுமோ விரதத்தைப் பின்பற்றுங்கள். அடுத்த நாள் சூரிய உதயத்தின்போது தண்ணீர் அல்லது எலுமிச்சை கலந்த நீர், அத்துடன் பேரிச்சை அல்லது பழங்களுடன் விரதத்தை முடிக்க வேண்டும். மிகவும் இயற்கையாக, சிரமமில்லாத விரதமாக இது இருக்கும். 

இரவு உணவுக்கும் நீங்கள் தூங்கச் செல்வதற்கும் இடையே இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளி இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 
நீங்கள் காலையில் எழுந்து மூன்று மணி நேரத்திற்குப் பின்னரே காபி அருந்த வேண்டும். பிற்பகலில் காபி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும். 

காலை மற்றும் மதிய உணவுக்கு இடையில் அதிக கலோரி உணவுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் உங்களுடைய வளர்சிதை மாற்ற செயல்பாடு இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். இரவு உணவு எளிதாக செரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் மெதுவாக ஓய்வு மற்றும் மீட்பு நிலைக்குத் திரும்பும். 

இரவு பசிக்கவில்லை, ஆனால் சீக்கிரம் சாப்பிட வேண்டுமெனில் உங்களுடைய உடல்நிலையை கவனித்து அதற்கேற்றவாறு சாப்பிடுங்கள்.

பட்டினியும் இருக்கக்கூடாது, அதேநேரத்தில் அதிகமாக சாப்பிடவும் கூடாது.

அடுத்த நாள் காலை தேவைப்படின் சற்று முன்னதாகவே சாப்பிடலாம். 

இதையும் படிக்கலாமே.. வலி நிவாரண மருந்து X உடற்பயிற்சி!

தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடுங்கள். உயிரியல் கடிகை ஒத்திசைவுக்கு நேரம் மிகவும் முக்கியமான காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி செய்யுங்கள் 

தினமும் ஒரேநேரத்தில் வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய உடல் மற்றும் தசைகளுக்கு நினைவுத்திறன் உள்ளது. அதற்கு சரியான வழியில் உணவளியுங்கள்.

காலை அல்லது மாலை, உடற்பயிற்சி செய்வதற்கு உங்களுக்கு வசதியாக சரியான நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். 

உறங்கும் நேரத்திற்கு முன்னதாக தீவிரமான உடற்பயிற்சி அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியை செய்ய வேண்டாம். 

3. தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் நேரம் 


உடலானது நெகிழ்வுத்தன்மை கொண்டது. அதனால் சில இரவுகள் விழித்திருக்க நேரிடலாம். ஆனால், அதனையே பழக்கமாகக் கொண்டால் ஒரு கட்டத்தில் அது உங்களை உடையச் செய்யும். 

உயிரியல் செயல்முறைமையின்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா/ அப்படியெனில் தினமும் ஒரேநேரத்தில் தூங்குவதை வழக்கத்தில் கொண்டிருக்க வேண்டும். தூங்கும் நேரம் இரவு 9, 10, 11 ஆக இருக்கலாம். ஆனால், சீக்கிரமாகத் தூங்குவது நல்லது. 



சூரியன் உதயமாகும் நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்சம் திங்கள் முதல் வெள்ளி வரையாவது ஒரேநேரத்தில் எழுந்திருக்க பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். 

4.  நீல ஒளியின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துதல்

சூரியன் மறைவிற்குப் பின்னர் அல்லது இரவில் வேலை செய்ய வேண்டியிருக்கிறதா? மின்னணு சாதனங்களின் திரையில் இருந்து தோன்றும் நீல ஒளியினைக் கட்டுப்படுத்த நீல ஒளி தடுப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். 

சூரிய ஒளிக்கு ஏற்றவாறு தானாகவே திரையின் பின்புற ஒளி மங்கலாக அல்லது வெளிர்மஞ்சள் நிறமாக மாறக்கூடிய சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தவும்.

5. இரவு தூக்கத்திற்கு முன் 


இரவு தூங்கச் செல்வதற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக நீல ஒளி அல்லது செயற்கை ஒளி பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். இது தூங்குவதற்குக் காரணமாக இருக்கும் ஹார்மோனான மெலடோனின் சுரப்பைத் தடுக்கிறது.

ஒருவேளை நீங்கள் தூங்குவதற்கு முன்வரை செல்போன் பயன்படுத்த நேரிட்டால் ஆடியோ வடிவில் பயன்படுத்துங்கள். மொபைலில் ஆடியோ வடிவில் ஆவணங்களை பார்ப்பதற்கான செயலியை தரவிறக்கம் செய்து உபயோகித்துவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுங்கள். 


அடுத்தாக இரவு உங்களுடைய படுக்கையறையை முடிந்தவரை இருட்டாக வைத்திருங்கள். ஏனெனில் இருட்டில் தூக்கத்திற்கான மெலடோனின் சுரப்பு அதிகரிக்கும், வெளிச்சத்தில் மெலடோனின் சுரப்பது தடுக்கப்படும். 

எந்தவொரு எதிர்மறை எண்ணங்களையும் விலக்கி, உங்கள் மனதை சாந்தப்படுத்த, நன்றி தெரிவித்தல், பிரார்த்தனை செய்தல், தியானம், மந்திரம் கூறுதல் அல்லது உறுதிமொழிகளை எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். 

6. தூக்கத்திற்குப் பின்

நீங்கள் காலையில் எழுந்த பின்னர் ஓரிரு மணி நேரத்திற்கு செல்போன்களையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

தியானம் மற்றும் உடற்பயிற்சி குறித்த செயலிகள் உங்களுடைய செல்போனில் இருந்து அவற்றை நீங்கள் பார்க்க வேண்டும் எனில், செல்போனை எடுப்பதற்குமுன், எண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் உள்ளிட்ட அனைத்து காலைக்கடன்களை முடிக்க முதல் ஒரு மணிநேரத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் செல்போன் நீல ஒளியை நீண்ட நேரம் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து ஆடியோ வடிவில் கோப்புகளைப் பயன்படுத்துங்கள். 

சூரிய உதயத்திற்குமுன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சூரிய உதயத்தின்போதுதான் உங்களுடைய வளர்சிதை மாற்ற செயல்பாடு தொடங்குகிறது. இது நண்பகலில் உச்சத்தில் இருப்பதால் நல்ல மதிய உணவைச் சாப்பிடுங்கள்.

7. காலையில் மலம் கழித்தல் 

நீங்கள் தூங்கும்போது, உங்கள் உடலில் உள்ள கிருமிகளை/நச்சுகளை நீக்கும் பணியைத் தொடங்குகிறது. இது உங்கள் பெருங்குடலில் கழிவுகளைக் குவிக்கிறது. நீங்கள் உயிரியல் செயல்முறைமையைப் பின்பற்றும்போது, காலையில் எழுந்தவுடன் இயற்கையான ஒளியில் உங்கள் குடல் இயக்கம் திறக்கிறது. 

எனவே, காலையில் எழுந்தவுடன் முதலில் உங்கள் குடலை சுத்தம் செய்ய முயற்சி செய்யுங்கள். அன்றைய நாளைத் தொடங்குவதற்கு முன், உடலின் உள்பகுதியை சுத்தம் செய்யுங்கள். 

8. போதுமான சூரிய ஒளி 

மலம் கழித்து பல் துலக்கிய பின்னர் படுக்கையறையில் உள்ள உங்கள் திரைகளை விலக்கி கண்களில் சூரியஒளி படச் செய்யுங்கள். இது உங்கள் உயிரியல் செயல்முறைமையை மாற்றியமைக்க உதவும். சூரிய ஒளி பட்டவுடன் மெலடோனின் சுரப்பு நிறுத்தப்படுகிறது. இதனால் நீங்கள் இயங்க உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். 


தோட்டம், மொட்டை மாடி அல்லது பால்கனி இருந்தால் அவ்விடத்தில் நின்று சூரிய ஒளியைப் பாருங்கள், கண் சிமிட்டுங்கள்,  இயற்கையான ஒளியைப் பெறுங்கள். 

காலையில் இயற்கையுடன் நம்மை வெளிப்படுத்துவது நம்மை நன்றாக உணரவைக்கக்கூடிய 'செரோடோன்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. இது நம் மனநிலையை மேம்படுத்துகிறது. 

9. உடலில் ஆற்றல் குறைந்தால்

உயிரியல் செயல்முறைமையின்படி வாழும்போது உடலில் ஆற்றல் குறைந்தால் என்ன செய்யலாம்? அதற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இது முற்றிலும் இயல்பானது. ஏனெனில் உயிரியல் கடிகை அனைத்து நேரங்களிலும் இயங்க முடியாது. சில நேரங்களில் அவை ஓய்வு எடுக்கும். 

உயிரியல் செயல்முறைமை இயற்கையினால் கட்டப்பட்டது. நீங்கள் பின்பற்றுவது கடினமானது. விருப்பு, வெறுப்புகளுக்கு பொருத்தமற்றதாக இருந்தாலும், இதிலிருந்து உங்களால் முடிந்ததை மட்டும் எடுத்துக்கொண்டு உங்களுக்கான வாழ்க்கை முறையை உருவாக்குங்கள். காலம் மாறலாம், ஆனால் நம் உடலும் அவை செயல்படும் முறையும் அப்படியேதான் இருக்கிறது. எனவே, இயற்கையின் அடிப்படைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றுங்கள். 

வாரத்திற்கு ஐந்து நாள்கள் இந்த பயிற்சியை செய்து மாற்றத்தை கவனிக்க விரும்புகிறீர்களா? 

நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை கிடைக்க உங்களுக்கு வாழ்த்துகள். 

லுக் கோச்சின்ஹோ
வாழ்வியல் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com