அறிவியல் ஆயிரம்: உடற்பயிற்சிக்குப் பதிலாக மாத்திரையா? - ஆய்வு சொல்வது என்ன?

உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஒரு மாத்திரையில் கொண்டு வருவது குறித்து விஞ்ஞானத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
அறிவியல் ஆயிரம்: உடற்பயிற்சிக்குப் பதிலாக மாத்திரையா? - ஆய்வு சொல்வது என்ன?

உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஒரு மாத்திரையில் கொண்டு வருவது குறித்து விஞ்ஞானத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

பேய்லர் மருத்துவக் கல்லூரி  ஆராய்ச்சியாளர்கள், உடற்பயிற்சியின் போது, உடலின் ரத்தத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூலக்கூறை, கண்டறிந்துள்ளனர். இந்த மூலக்கூறின் மூலமாக உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனை திறம்பட குறைக்க முடியும் என்று கூறுகின்றனர். 

ஆய்வுகள்

பெய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின், ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உள்ளிட்ட மூன்று கூட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் உடற்பயிற்சி குறித்து ஆய்வு செய்து சில முக்கிய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

'உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் ரத்தத்தில் ஒரு புதிய மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற ஆச்சரியமான உண்மையைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் மூலம் எலிகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனை திறம்பட குறைக்க முடியும்' என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த கண்டுபிடிப்புகள், உடற்பயிற்சிக்கும் பசிக்கும் இடையே உள்ள தொடர்புக்கு அடிப்படையான உடலியல் செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது எனவும் கடந்த ஜூன் 12ல் "நேச்சர் இதழில்" (journal Nature ) வெளியிட்டுள்ள இதன் முடிவுகளில் கூறியுள்ளனர். 

உடற்பயிற்சியும் நன்மையும்

"வழக்கமான உடற்பயிற்சி என்பது எடை இழப்புக்கு உதவுகிறது; பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துகிறது; குறிப்பாக அதிக எடை மற்றும் பருமனானவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் நன்றாக பயனளிக்கிறது" என பத்திரிக்கையின் இணை ஆசிரியரும், குழந்தை மருத்துவம்- ஊட்டச்சத்து மற்றும் மூலக்கூறு மற்றும் செல்லுலார் உயிரியல் பேராசிரியருமான டாக்டர் யோங் சூ (Dr. Yong Xu) கூறினார்.

மேலும் பெய்லர் என்பவர், "உடற்பயிற்சி இந்த நன்மைகளைத் தூண்டும் பொறிமுறையை நாம் புரிந்துகொள்ள முடிந்தால், பலருக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதற்கு நாங்கள் தயாராக எப்போதும் இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

'போதுமான உடற்பயிற்சி செய்ய முடியாத வயதான அல்லது பலவீனமானவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அல்லது பிற நிலைமைகளை மெதுவாக்க உதவும் மருந்தை உட்கொள்வதன் மூலம் அவர்கள் உடற்பயிற்சியின் பலனை ஒருநாள் நன்றாக அனுபவிக்கலாம்/பயனடையலாம்' என்று ஸ்டான்போர்ட் மருத்துவத் துறை, நோயியல் உதவி பேராசிரியர், அறிஞரும், எழுத்தாளருமான  ஜொனாதன் லாங் கூறினார்.

மூலக்கூறின் பெயர்: லாக்-பீ (Lac-Phe)

எலிகளின் ஓட்டத்தை வைத்து அவற்றின் ரத்த பிளாஸ்மா கலவைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வுகளை நடத்தினர். அதில் லாக்-பீ(Lac-Phe) என்ற மூலக்கூறைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு  மாற்றியமைக்கப்பட்ட அமினோ அமிலமாகும். இது லாக்டேட்(Lactate) (தசைகளில் எரியும் உணர்வுக்கு காரணமான கடுமையான உடற்பயிற்சியின் விளைவுகளுக்கு காரணமானது)  மற்றும் ஃபினைல்அலனின் (Phenylalanine) (புரதங்களின் கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றான அமினோ அமிலம்) ஆகியவற்றிலிருந்து ஒருங்கிணைக்கப்படுகிறது. 

லாக்-பீயினால் உடல் எடை குறைதல்

உடல் பருமன் உள்ள எலிகளில் (அதிக கொழுப்புள்ள உணவு உண்ணப்படும் எலிகள்), 12 மணி நேரத்தில் எலிகளின் இயக்கம் அல்லது ஆற்றல் செலவினத்தை கணக்கிடுகையில்  இந்த மூலக்கூறு, எலிகளின் உணவு உட்கொள்ளலை சுமார் 50% குறைத்தது. இவ்வாறு 10 நாட்களுக்கு கண்காணிக்கப்படும்போது எலிகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனைக் குறைத்தது. 

லாக்-பீ உற்பத்தி நொதி: CNDP2

லாக்-பீ உற்பத்தியில் ஈடுபட்டுள்ள (CNDP2 -carnosine dipeptidase 2) எனப்படும் மனிதனில் உள்ள நொதியையும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இந்த நொதி இல்லாத எலிகள் அதே உடற்பயிற்சித் திட்டத்தில் கட்டுப்பாட்டுக் குழுவாக உடற்பயிற்சி முறையில் அதிக எடையைக் குறைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

லாக்-பீ செயல்பாடுகள்

பந்தயக் குதிரைகள் மற்றும் மனிதர்களில் உடல் செயல்பாடுகளை வைத்து பிளாஸ்மா லாக்-ஃபீ அளவுகளில் ஏற்படும் மாற்றத்தையும் கண்டறிந்தது. ஸ்பிரிண்ட் எனும் தீவிர உடற்பயிற்சி, லாக்-ஃபீ மூலக்கூறுகளை அதிகம் தூண்டியதும் கண்டறியப்பட்டுள்ளது. 

'லாக்-பீ என்பது பழங்கால மற்றும் பாதுகாக்கப்பட்ட அமைப்பு. இது உணவை ஒழுங்குபடுத்துகிறது, பல விலங்கு இனங்களில் உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது' என்று ஆய்வாளர் லாங் கூறினார்.

மேலும், 'எங்கள் அடுத்த ஆய்வுகளில் மூளை உள்பட உடலில் அதன் விளைவுகளை லாக் - பீ எவ்வாறு சமரசம் செய்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிந்து விடுவோம். உடற்பயிற்சிக்கு மாற்றாக மருத்துவத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்றார். 

இந்த சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மனித நலனுக்கு மிக மிகத் தேவையானவை. அனைத்தும் அறிவியலின் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com