இந்திராதிகாரம் பிறந்த கதை! - 10 :  ஜூன் 20, 1975 - சில நாள்களில் விசாரணை, எதிர்க்கட்சிகள் சதி என இந்திரா முழக்கம்!

1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... விசாரணைக்கு மனு வரும் நிலையில் சதி என முழங்கிய இந்திரா காந்தி...
இந்திரா காந்தி (கோப்புப் படம்)
இந்திரா காந்தி (கோப்புப் படம்)


பிரதமர் இந்திரா காந்தியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, ஜூன் 23, திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒப்புதல் தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நீதிமன்ற விடுமுறைக் காலங்களில் செவ்வாய் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் அவசர வழக்குகளைக் கவனிப்பதற்காக நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வருவார்கள். எனினும், இந்த வழக்கைத்  திங்கள்கிழமை விசாரணையை வைத்துக்கொள்ள கிருஷ்ணய்யர் சம்மதம் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ஜே.பி. தாதாசந்த்ஜியும் ராஜ்நாராயணின் வழக்கறிஞர் கோயலும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய குறிப்பு:

இந்திரா காந்திக்கு எதிராக ராஜ்நாராயண் தாக்கல் செய்திருந்த வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும் அந்தத் தீர்ப்பின் அமலை எதிர்த்தரப்புக்கு நோட்டீஸ் தராமல் நிறுத்திவைக்க வேண்டுமென்றும் மனுக்கள் தாக்கல் செய்யவுள்ளதாக (பிரதமர் இந்திரா காந்தியின் வழக்கறிஞர்) தாதாசந்த்ஜி  தெரிவித்தார்.

தீர்ப்பின் அமலை நிறுத்திவைக்கும் கோரிக்கையை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமென்றும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்கலாமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு ராஜ்நாராயண் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரான கோயல் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை -  அதாவது தீர்ப்பின் நகல்கள், மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அமலை நிறுத்திவைக்க வேண்டுமென்ற மனு போன்றவற்றை - பகிர்ந்துகொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

நிபந்தனையற்ற தடை

அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுமையான, நிபந்தனையற்ற தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி கோரியிருக்கிறார்.

இந்திரா காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்:

"நீதியின் நலன் மட்டுமின்றி, பிரதமர் வகித்துவரும் பதவியைக் கருதி, தேசிய நலனை முன்னிட்டு இத்தகைய தடை அவசியமாகும்.

"இந்திய வரலாற்றிலும் அனேகமாக உலக வரலாற்றிலேயே இதற்கு முன் இத்தகைய வழக்கு தோன்றியதில்லை. மேல் முறையீட்டில் எழுப்பியுள்ள பிரச்சினைகள் மிகத் தீவிர முக்கியத்துவம் வாய்ந்தவை. மேல் முறையீட்டு மனு விசாரணை நடந்துகொண்டிருக்கும் வரை தற்போதைய நிலை மாற்றப்படாமல் தொடருவது தேசிய நலனுக்கு அவசியமாகும்.

"ராய் பரேலியிலிருந்து இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, 1971, ஏப்ரலில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேல் முறையீடு செய்யப்படும் நாளிலிருந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் நிபந்தனையற்ற தடை வழங்குவதால் எவ்வித ஊறும் நேரிட்டுவிடாது. மாறாக, நிபந்தனையற்ற தடை விதிக்காவிட்டால், மேல் முறையீட்டாளருக்கு மட்டுமின்றி நாட்டுக்கே கடுமையான விளைவுகள் ஏற்படும்.

"இந்திரா காந்திக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. தார்மிகச் சீர்குலைவு எதுவும் இல்லாததாலும் நுணுக்கமான இரு காரணங்களாலேயே இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில்கொண்டு, இந்த மேல் முறையீட்டின் மீது இறுதியாக முடிவு எடுக்கப்படும் வரை பிரதமராகவும் எம்.பி.யாகவும் இந்திரா காந்தி நீடித்திருக்க சாதகமான நிலைமை இருக்கிறது.

"அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை நீடிக்கப்படாவிட்டால் மேல் முறையீடு செய்பவருக்கும் (இந்திரா காந்திக்கும்) மொத்தத்தில் நாட்டுக்கும் பெரும் சிரமங்களும் ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படும்."

மேல் முறையீட்டில் பின்வருவனவற்றையொட்டி, 12 அம்சங்களை இந்திரா காந்தியின் தரப்பு சுட்டிக்காட்டியது.

"யஷ்பால் கபூர், 1971 ஜனவரி 14 ஆம் தேதியன்றும் அதன் பிறகும் அரசுப் பணியில் இருந்தாரா அல்லது எந்தத் தேதி வரை இருந்தார் என்பதை முடிவு செய்வதில் நீதிமன்றம் தவறுபுரிந்துவிட்டது. இந்திரா காந்திக்கு சாதகமாகவே நீதிமன்றம் முடிவு செய்திருக்க வேண்டும். யஷ்பால் கபூர் ராஜிநாமா ஜனவரி 25 ஆம் தேதிதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது;  எனவே, அதுவரை அவர் அரசுப் பணியில் இருந்திருக்கிறார் என உயர் நீதிமன்றம் முடிவு செய்தது தவறாகும்.

"இந்திரா காந்தி பேசிய கூட்டங்களுக்கு மேடைகள் அமைக்கவும் ஒலிபெருக்கிகளுக்கான மின் விநியோகத்தை ஏற்பாடு செய்யவும் மாநில அரசு அலுவலர்களின் உதவிகளை இந்திரா காந்தி பெற்றார் என்று முடிவுக்கு வந்ததிலும் உயர் நீதிமன்றம் தவறுபுரிந்துவிட்டது.

'இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கவே இந்த உதவி நாடப்பட்டது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஊழல் நடைமுறையைக் கடைப்பிடித்த குற்றம் புரிந்தவராவார்' என்று முடிவு செய்ததிலும் தவறுபுரிந்துவிட்டது. உதவி ஏதேனும் பெறப்பட்டிருந்தால், இவ்வாறு பெறப்பட்டதாகக் கூறப்படும் உதவி, அரசுப் பணியிலுள்ள நபர்களிடமிருந்து பெறப்படவில்லை. மாநில அரசிடமிருந்தே பெறப்பட்டது. எனவே, இந்திரா காந்தி ஊழல் நடைமுறையைக் கையாண்ட குற்றத்தைப் புரியவில்லை."

எதிர்க்கட்சிகள் சதி!

இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தில்லியில் ஒரு பெரும் பேரணிக்கு புது காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தப் பேரணியில் பேசிய பிரதமர் இந்திரா காந்தி, மக்கள் மனதில் ஒரு தப்பெண்ணத்தை உருவாக்கித் தன்னைப் பதவியிலிருந்து விலக்குவதற்கு எதிர்க்கட்சிகள் சதி செய்திருக்கின்றன என்று குற்றம் சாட்டினார்.

"இந்தச் சதிக்குப் பெரும் புள்ளிகள் பின்னணியில் இருக்கின்றனர் என்பதுவும் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சதி எனக்கு எதிராகச் செய்யப்படவில்லை. என்னுடைய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவே இந்த சதி நடக்கிறது.

"இதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சதிப் பின்னலிலிருந்து இந்திரா காந்தி தப்பிவந்துவிடுவாரா, இல்லையா என்பது இன்றைய பிரச்சினையல்ல. நாடு தன்னுடைய ஒற்றுமையையும் பலத்தையும் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வி.

"என்னைப் பொருத்தவரையில் கடைசி வரையில் நான் மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருப்பேன். என்னுடைய அரசைப் பொருத்தவரையில் நாட்டின் ஒற்றுமையைப் பலப்படுத்தவும் சோசலிச பாணி சமுதாயத்தை அமைக்கவும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்வார்கள்.

"இன்றைய இந்தப் பேரணி (பொதுக்கூட்டம்) பலத்தைக் காட்டிக்கொள்வதற்கான ஒரு முயற்சியல்ல. யாரையும் பயமுறுத்துவதற்கும் அல்ல. மக்களின் உறுதியைக் காட்டுவதே இதன் நோக்கமாகும். நாம் பலவீனமான நிலையில் இருக்கிறோம் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

"பேரணி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் முதலில் திட்டமிடவில்லை. என்னுடைய ராஜிநாமாவை வற்புறுத்துவதற்காக எதிர்க்கட்சியினர் பேரணி நடத்த முடிவு செய்த பிறகுதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

"எதிர்க்கட்சிகள் நன்கு ஆலோசித்துதான் இந்தச் சதியைச் செய்திருக்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள சில பலம் பொருந்திய சக்திகள் இதற்குப்  பின்னணியில் இருக்கின்றன.

"காங்கிரஸ் இரண்டாகப் பிளவுண்ட பிறகு, நான் சோசலிஸ்ட் கொள்கைகளைப் பின்பற்ற ஆரம்பித்தபோதே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை ஆரம்பித்துவிட்டனர். அலாகாபாத் தீர்ப்புக்குப் பிறகுதான் இந்த எதிர்ப்பு ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது.

"எதிர்க்கட்சியினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள துவேஷப் பிரசாரத்தினாலோ அல்லது எப்படியாவது என்னைத் தொலைத்துவிட வேண்டுமென்று அவர்கள் செய்யும் காரியங்களைக் கண்டோ நான் அஞ்ச மாட்டேன்.

"சிறுவயது முதலே நான் தேசத் தொண்டு புரிந்துவந்திருக்கிறேன். என்னதான் பயமுறுத்தினாலும் தொடரந்து இதைச் செய்துகொண்டிருப்பேன்.

"கடந்த சில ஆண்டுகளில் பல சவால்களை நாம் சந்தித்திருக்கிறோம். நெருக்கடியான காலகட்டங்களில் அரசை எதிர்க்கட்சிகள் ஆதரித்ததே இல்லை. எப்போதும் நம் மீது குற்றம் கண்டுபிடிப்பதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

"நான் வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் தேசத்தைக் கட்டி வளர்ப்பதில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறீர்கள்? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

"நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்வதுதான் எதிர்க்கட்சிகளின் கடமையே ஒழிய அரசு மீது குறை கூறுவது அல்ல. ஒவ்வொரு குடிமகனும் தன் பொறுப்பை நிறைவேற்றினால்தான் ஜனநாயகம் வெற்றி பெற முடியும்.

"பற்றாக்குறைகள், பணவீக்கம் மற்றும் நாட்டிலுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் எதிர்க்கட்சியினர் என் மீது பழி போடுகிறார்கள். வேறு எந்த நாட்டிலும் இந்த மாதிரி நடப்பதில்லை.

"எதிர்க்கட்சியினர் வேலை செய்ய விரும்பவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். சில நாள்களுக்கு முன் குடியரசுத் தலைவர் மாளிகை முன் மறியல் செய்தார்கள். ஆனால், வெய்யில் கடுமையாக இருந்ததால் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. தொண்டு செய்து அவர்களுக்குப் பழக்கமில்லை என்பதுதான் உண்மை.

"நாட்டில் எதிர்க்கட்சிகள் கருத்து ஒடுக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறு. வேறு எந்த நாட்டிலும் பத்திரிகைகளுக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ இவ்வளவு சுதந்திரம் இல்லை. இங்கு தனிநபர் என்ற வகையில் மட்டுமின்றி, பிரதமர் என்ற வகையிலும் என்னை மட்டம் தட்டுவதற்குக்கூட சுதந்திரமுள்ளது. நாட்டின் உயர் பதவி வகிப்பவரை மட்டம் தட்டுவது நாட்டையே மட்டம் தட்டுவதாகும்."

இந்திராவின் யுத்தம் எங்கள் யுத்தம்

சுமார் ஒரு மணி நேரம் பேசினார் இந்திரா காந்தி. தொடக்கத்தில் முக்கால் மணி நேரம் ஹிந்தியில். பின்னர் கால் மணி நேரம் ஆங்கிலத்தில். மேடையில் தலைவர்களுடன் ராஜீவ் காந்தியும் சஞ்சய் காந்தியும் மருமகள் சோனியா காந்தியும் இருந்தனர். காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் கோடை வெய்யிலின் கொடுமை இல்லை. இந்திரா காந்தி பேசி முடித்ததும் லேசாகத் தூரல் தொடங்கியது.

இந்திராவின் யுத்தம் எங்கள் யுத்தம் என்று சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தது. பேரணி - கூட்டம் நடைபெற்ற இந்தியா கேட் பகுதி முழுவதும் கொடிகளும் தோரணங்களுமாக இருந்தன. முந்தைய நாள் இரவிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து வாகனங்களில் தொண்டர்கள் வந்துசேர்ந்தனர்.

தொண்டர்கள் வருவதற்காக கான்பூர், வாராணசி, லக்னௌ, அலாகாபாத், ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் பேருந்துகளை காங்கிரஸ் கட்சி வாடகைக்கு எடுத்துக்கொண்டுவிட்டதால் நகரில் போக்குவரத்து குலைந்தது.

வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் ஏற்பாடுகளை எல்லாம் காங்கிரஸ் செய்திருந்தது.

இந்தப் பேரணியில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். காவல்துறையினரோ 8 லட்சம் முதல் 10 லட்சம் இருக்கலாம் என்றனர்.

அதிகார பலமும் ஊழலும்

காங்கிரஸ் நடத்திய பேரணி அதன் அதிகார பலத்தையும் ஊழலையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் அல்லாத  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிர்மயி பாசு, திமுகவின் இரா. செழியன் உடனிருக்க செய்தியாளர்களுடன் பேசினார் பழைய காங்கிரஸ் தலைவர் எஸ்.என். மிஸ்ர:

"கூட்டத்தைத் திரட்டுவதற்காக அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேலையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அகில இந்திய வானொலியும் தொலைக்காட்சியும் (அப்போது வெறும் அரசுத் தொலைக்காட்சி மட்டும்தான், இன்றைக்கு இருக்கும் நிலைமையை நினைத்தும் பார்க்க முடியாது) பிரசாரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

"பிரதமரைத் தனிப்பட்ட முறையில் நாங்கள் தாக்கிப் பேசவில்லை. பிரதமர் பதவியைப் பேணிக் காக்கக் கூடிய மரபுகளுக்காகவே போராடுகிறோம். எதிர்க்கட்சிகளுக்குத் தாம் அளவுக்கு மீறி சுதந்திரம் அளித்துவிட்டதாகத் தம்மிடம் மக்கள் கூறுவதாக இந்திரா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். இது அவருடைய சொந்தக் கருத்தாகத்தான் இருக்க வேண்டும், மக்கள் யாரும் யாரிடமும்  கூறியிருக்க மாட்டார்கள். நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் அவர் கொடுத்த தர்மமல்ல. அரசியல் சட்டத்தில் இத்தகைய சுதந்திரத்துக்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த சுதந்திரத்தை ஒடுக்குவதற்குதான்  பிரதமர் முயன்றுவருகிறார். புரட்சிகரமான கொள்கைகள் அமலை எதிர்க்கட்சிகள் தடுப்பதாகக் கூறிவருகிறார் அவர். அவ்வாறு தடுக்கப்படும் புரட்சிகரமான கொள்கைகள் எவை என்றும் அவர் பட்டியலிட வேண்டும். நாசகரமான கொள்கைகள் விலை உயர்வுக்கும் வேலையின்மை பெருகவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பெருகவும் வழி வகுத்தன என்றால் அவற்றை மாற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் போராடுகிறோம்."

இந்திரா நீடிக்க வேண்டும்

ஆதரவும் எதிர்ப்புமாக நிலைமை கடந்துகொண்டிருக்க, பிரதமர் பதவியிலிருந்து தற்போது இந்திரா காந்தி விலகினால் மிகப் பெரிய தேசிய நெருக்கடி ஏற்படும் என்றும் தேசிய அளவில் மட்டுமின்றி மாநிலங்களிலும் இதனால் நிலைத் தன்மை குலையும் என்றும் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்துப் பேசிய 13 மாநிலங்களின் முதல்வர்கள் தெரிவித்தனர்.

"இது வெறும் சட்டப் பிரச்சினை அல்ல. இந்திரா காந்தி வெறும் பிரதமர் மட்டுமல்ல. இன்றைய இந்திய மறுமலர்ச்சியின் சின்னமாகவும் மக்கள் விருப்பங்களைப் பிரதிபலிப்பவராகவும் விளங்குகிறார். பிரதானமாக ஏழைகள், சிறுபான்மையோர் விருப்பங்களைப் அவர் பிரதிபலிக்கிறார்.

"தற்போது  நாடு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கடந்துகொண்டிருக்கிறது. வகுப்புவாத, நாசகர, பிளவு சக்திகள் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கக் காத்திருக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான வெளிசக்திகளின்   ஆக்கிரமிப்பு ஆபத்து இன்னமும் இருக்கிறது. இத்தகைய நிலையில் இந்திரா காந்தியின் தலைமையும் வழிகாட்டலும் நாட்டுக்கு மிகவும் தேவை" என்று தெரிவித்தது குடியரசுத் தலைவரிடம் அவர்கள் அளித்த மனு.

இந்திரா காந்திக்கு வேறு வழியில்லை

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதைத் தவிர இந்திரா காந்திக்கு வேறு வழியில்லை என்று அகமதாபாத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பழைய காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய் குறிப்பிட்டார்.

மாற்று ஏற்பாடு செய்வதற்காக அவகாசம் அளித்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு  தம்முடைய கட்சியினர் தெரிவித்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் (இந்திரா காந்தி) பதவியில் தொடருவது தவறு என்றார் தேசாய்.

நெருப்புடன் விளையாட்டு

நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தை வீதிக்குக் கொண்டுவருவதன் மூலம் நெருப்புடன் இந்திரா காந்தி விளையாடுகிறார் என்று எச்சரித்தார் ஆச்சார்ய கிருபளானி.

மும்பையில் ஒரு கூட்டத்தில் அவர் பேசினார்:

"காங்கிரஸ்காரர்களின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் எதிர்க்கட்சிகளின் பதில் நடவடிக்கைகளும் கலகத்திலும் ரத்தக்களரியிலும் கொண்டுபோய்விடும் என்று அஞ்சுகிறேன்.

"பிரதமர் என்னவோ பதவியைத் துறக்க முடிவு செய்துவிட்டதைப் போலவும் அப்படிச் செய்யக் கூடாதென மக்கள் விரும்புவதைப் போலவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வெறும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

"இந்திரா காந்தியின் தலைமையில் நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்துதானிருக்கிறது.

"ஊழல் நிறைந்துள்ள இன்றைய நிலைமைக்கு இந்தியாவைக் கொண்டுவர இந்திரா காந்தியைத் தவிர வேறு யாராலும் முடிந்திருக்காது."

ஜனசங்கத்தினர் மறியல்

தில்லி நகரின் முக்கியமான போக்குவரத்து சந்திப்புகள் அனைத்திலும் காலை 10 மணி முதல் 6 மணி நேரத்துக்கு மறியல் போராட்டத்தை ஜனசங்கத்தினர் நடத்தினர். சுமார் 100 இடங்களில் 10 ஆயிரம் பேர் இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தில்லி ஜனசங்கச் செயலர் எம்.எல். குரானா தெரிவித்தார்.

தினமணியின்

துணைத் தலையங்கம்

எதிர்க்கட்சிகள் பொறுத்திருந்து பார்ப்பதுதான் சரியான நடைமுறையாயிருக்கும் என்று குறிப்பிட்டு மிகவும் நிதானமான, கவனமான துணைத் தலையங்கமொன்றை எழுதியது தினமணி (அன்றைய மொழிநடையிலேயே இங்கே தரப்படுகிறது).

பொறுத்துப் பார்க்கலாம்

அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி விவாதிப்பதற்காக உடனடியாக லோகசபையைக் கூட்ட வேண்டுமென்று ஜனசங்கத் தலைவர் வாஜபேயர் அறிவித்துள்ளார். சபாநாயகர் தில்லானைச் சந்தித்து இதை வற்புறுத்தவும் அவர் உத்தேசித்திருக்கிறார்; சாதாரணமாக லோகசபையின் கூட்டம் ஒன்று இன்னும் சில வாரங்களில் நடக்க வேண்டும். ஆனால், கோர்ட் தீர்ப்பினால் எழுந்துள்ள நிலைமையை முன்னிட்டு இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படலாம். அல்லது ஒத்திவைக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்கள் எழுந்திருக்கின்றன; இந்த ஹேஷ்யங்களுக்குக் கொஞ்சமும் ஆதாரமில்லாமலிருக்கலாம். இந்திரா காந்தியின் தலைமையில் தமக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டி ஊர்ஜிதம் செய்துவிட்டது. பல்வேறு ராஜ்யங்களிலுள்ள புது காங்கிரஸ் முதல் மந்திரிகளும் சட்டசபை மெம்பர்களும்கூட இந்த நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்துவிட்டனர்; லோகசபையிலும் புது காங்கிரஸ் கட்சிக்கு அமோகமான மெஜாரிட்டி இருக்கிறது. ஆகையால், லோகசபைக் கூட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற வதந்திகள் உண்மையாயிருக்குமென்று நம்ப முடியவில்லை: ஆனால், தென்றல் போல் ஆரம்பிக்கும் காற்று அரசியல் உலகில் புயலாக மாறிவிடுவது மிகவும் சகஜமானதாகும். சந்தேகங்களுக்கிடம் கொடுக்காமல் லோகசபைக் கூட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடுவது விரும்பத் தக்கதாயிருக்கும். கட்சியின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள பிரதம மந்திரி, அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்யவிருக்கிறார். அலகாபாத் கோர்ட் தீர்ப்பின் அமலுக்கு அளிக்கப்பட்டுள்ள தடை, அப்பீல் தாக்கல் செய்த உடனேயே காலாவதியாகி விடும்; சுப்ரீம்கோர்ட் மேற்கொண்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பொறுத்திருந்து பார்ப்பதுதான் சரியான நடைமுறையாயிருக்கும். காங்கிரஸ் கட்சி பிரதமரிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், அப்பீல் பைசல் ஆகும் வரையில் பிரதமர் தொடர்ந்து பதவி வகிக்க முடியுமாவென்பது அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்துத்தான் இருக்கும்.

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து - தொடரும்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com