டெய்லர் ஸ்விஃப்ட்: நூற்றாண்டின் பாடகி!

அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் ஸ்விஃப்ட், 33 வயதான இசைக் கலைஞர், பாடகி, பாடலாசிரியர். இவரது இசையில் உலகமே மிதந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம். 
லாஸ் ஏஞ்சலீஸில் எராஸ் டூர் இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்!
லாஸ் ஏஞ்சலீஸில் எராஸ் டூர் இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்!

யூனிவர்ஸ் என்கிற வார்த்தை இப்போது நம்மிடையே பிரபலம். சமீபத்தில் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்கிற அடைமொழியோடு வந்த படத்தின் முந்தைய நாள் என்ன நடந்தது எனப் பார்த்தோம். ரசிகர் ஷோ, டிக்கெட் விலை, நெரிசல் எனக் களேபரங்களுக்கு இடையில் திரையரங்கு வாசலில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். இந்த ரசிக மனநிலை உலகம் முழுவதும் உள்ளதுதான்.  

சரி, இப்போது ஸ்விஃப்ட்டிவெர்ஸ் என்பது குறித்துப் பார்ப்போம். அங்கு இதைவிட சுவாரசியமான விஷயங்கள் காணக் கிடைக்கும். சில நிகழ்வுகள் வழியாக இதனைப் பார்க்கலாம்.

2023, மே மாதத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுகள் விற்பனை முந்தைய ஆண்டு நவம்பரில் தொடங்கியது. ஆரம்பித்த சில நிமிடங்களில் முடிவடைந்தும் விட்டது. மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு தந்தை தனது மகளுக்கும் அவரின் நண்பர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்து டிக்கெட்டுகள் கிடைக்காததால் டிக்கெட் மறுவிற்பனை செய்யும் தளத்தில் பார்வையிட்டுள்ளார். 1800 டாலரில் முடிந்திருக்க வேண்டிய செலவு அதைவிட 11 மடங்கு அதிகமாக 21,000 டாலருக்கு டிக்கெட்டை வாங்க வைத்துள்ளது. இதை அவர் மகள்களிடம் சொல்லவே முடியவில்லை. அத்தனை எதிர்பார்ப்போடு இசை நிகழ்ச்சிக்கு அவர்கள் காத்திருக்கிறார்கள்.

வரலாறு காணாத அளவுக்கு டிக்கெட் தொடங்கிய சில நிமிடங்களில் விற்பனை முடிவடைந்து விடுகிறது. முன்பதிவு செய்ய இணையத்தில் அதிக நெரிசல் ஏற்படுவதால் டிக்கெட்மாஸ்டர் (ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளம்) நவம்பரில் அந்தக் குறிப்பிட்ட இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுகள் விற்பதை நிறுத்தியது.

கைகளில் நட்பு வளையங்களோடு ரசிகர்கள்
கைகளில் நட்பு வளையங்களோடு ரசிகர்கள்

இன்னொரு உதாரணம்

‘தி எராஸ் டூர்’ (நூற்றாண்டுக்கான பயணம்) இசை நிகழ்ச்சி படம் திரையரங்குகளில் அக். 13 வெளியாவதாக இருந்தது. ரசிகர்களின் கட்டுக்கடங்காத ஆர்வத்தால் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரு நாள் முன்னதாகத் படம் திரையிடப்பட்டது. படம் வெளியான வார இறுதியில் மட்டும் உலகம் முழுவதும் 120 மில்லியன் டாலர் (ரூ. 1,000 கோடி) அளவுக்கு வசூலித்தது. ஒட்டுமொத்த வசூல் 178 மில்லியன் டாலருக்கு மேல் குவிந்திருக்கும்.

படத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாப் கார்ன் டின் மட்டும் 19.89 டாலருக்கு விற்கப்பட்டது (1989 பிரபலமான இசை ஆல்பத்தின் பெயர்).

திரையரங்குகள் கொண்டாட்டத்துக்கான களமாக மாறின. நூற்றுக்கணக்கான மக்கள் நடனமிடுவதும் ஒருவருக்கொருவர் நட்பு வளையங்களைப் பரிமாறிக்கொள்வதும் சேர்ந்து பாடுவதும் அலைபேசியில் மின்னொளி வீசுவதுமாக அமெரிக்காவே களைகட்டியது.

இத்தனை கொண்டாட்டத்துக்கும் உரிய அந்த இசைக் கலைஞர் பெயர், டெய்லர் ஸ்விஃப்ட்.

டெய்லர் ஸ்விஃப்ட்
டெய்லர் ஸ்விஃப்ட்

யார் இந்த டெய்லர் ஸ்விஃப்ட்?

அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் ஸ்விஃப்ட், 33 வயதான இசைக் கலைஞர், பாடகி, பாடலாசிரியர்.

அப்பா பங்குச் சந்தைத் தரகர். அம்மா குடும்ப வேலைகளை கவனித்துக்கொள்கிறார். தம்பி ஆஸ்டின்.

தனது ஒன்பது வயதில் டெய்லர், பாடல் வகுப்புக்கும் நடிப்பு வகுப்புக்கும் செல்லத் தொடங்கினார். அவருக்கு தென்னமெரிக்காவின் இசை வகைமையான கண்ட்ரி மியூசிக் மீது ஆர்வம் ஏற்பட்டது. 

கணினி பழுதுபார்ப்பவரிடம் கிட்டார் வாசிக்கக் கற்றுக் கொண்டவர், 12 வயதில் பாடல் எழுதத் தொடங்கினார். 

இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்
இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்

பென்சில்வேனியாவில் இருந்து அவரது அப்பா பணி மாற்றம் பெற்று டென்னசி நகரத்துக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார்கள்.

14 வயதில் டெய்லர் சோனி / ஏடிவி நிறுவனத்தில் ஒப்பந்தமாகிறார். பிறகு அந்தக் குழுவில் இருந்து வெளியே வந்து தனக்கான தனிப்பட்ட கேரியரை உருவாக்க முயற்சிக்கிறார்.

ஒரு கஃபேயில் இவரது பாடலைக் கேட்டு  ‘பிக் மிஷின் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் தொடங்க இருந்தவர், இவரைப் பாட அழைக்கிறார். 2006 ஜூனில் இவரது முதல் ஆல்பம் வெளியாகிறது. 

அதே ஆண்டில் தனி ஆல்பம் வெளியிடுகிறார். அப்போது பில்போர்ட்டின் (இசைக்கான சிறப்பு வார இதழ் உருவாக்கும் பட்டியல்) முதல் 5 இடத்தில் சென்று அமர்ந்த ஆல்பம், அவரது இசை வாழ்வின் தொடக்கம்.

தற்போது பில்போர்ட்டில் முதல் 10 பாடல்களில் 7 பாடல்கள் டெய்லருடையவை. முதல் 200 பாடல்களில் 40 பாடல்கள் அவருடையதாக விற்றுத் தீர்ந்தும் அதிகமாக கேட்கப்பட்டும் வருகின்றன. இதுவரை எந்தக் கலைஞருக்கும் கிடைக்காத அங்கீகாரமாக இது மாறியுள்ளது.

ரசிகர்களுடன் டெய்லர் ஸ்விஃப்ட்
ரசிகர்களுடன் டெய்லர் ஸ்விஃப்ட்

ஸ்விப்ஃடிஸ்

டெய்லர் ஸ்விப்ட் விசிறிகள் தங்களை ஸ்விப்ஃடிஸ் என அழைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு ரெளடி ஸ்விப்ஃடிஸ் என்கிற செல்லப் பெயரும் உண்டு. அவர்களின் உலகத்துக்கு ஸ்விஃப்டிவெர்ஸ் எனப் பெயர்.

அமெரிக்கா முழுவதும் இந்த ஆண்டு, எராஸ் டூர் இசை நிகழ்ச்சிகளை டெய்லர் நடத்தினார். 

இசை நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் தாறுமாறாக விற்றன. ஓரிடத்தில் இரண்டு இடத்தில் இல்லை. நிகழ்ச்சி நடத்தப்பட்ட 53 இடங்களிலும். முதற்கட்ட டிக்கெட்டின் விலையைவிட பல மடங்கு அதிகமாக அவை வெளிச்சந்தையில் விற்பனையாகின. குறைந்தது 70 ஆயிரம் பேர் முதல் 2 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்திக்கு 4.3 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த இசை நிகழ்ச்சிகள் வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளன. இந்திய மதிப்பில் 35 ஆயிரம் கோடி ரூபாய்.

வார இறுதியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ஒரு நகரத்தின் பொருளாதாரத்தையே ஒரு இசை நிகழ்ச்சியால் உயர்த்த முடிந்திருக்கிறது. பிறகு  இசை நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. அதன் வசூல், ஹாலிவுட் ஸ்டார் படங்களுக்கு இணையானது.

இசையும் காதலர்களும் 

டெய்லரின் வாழ்வில் ஏராளாமான காதலர்கள் கடந்து சென்றிருக்கின்றனர். அவர்கள்தான் அவரது பாடல்களுக்கு உயிரோட்டமும்கூட. 

காதல் பாடல்களிலும் பிரேக்-அப் பாடல்களிலும் டெய்லர் தன் ரசிகர்களுக்கு காதலர்களைப் பற்றிய சமிக்ஞைகளை விட்டுச் செல்வார். அதை டீ-கோடு செய்த ஆயிரம் பதிவுகளை நாம் இணையத்தில் காண முடியும்.

இந்தக் காதலர்கள் பட்டியலில் பள்ளி நண்பர்கள் ஆரம்பித்து அகாதெமி விருதுப் பட்டியல் கலைஞர்கள் வரை அடக்கம்.

டெய்லரின் பாடல்களையும் காதலர்களையும் இணைத்து ஏராளாமான ரசிகப் பார்வைகள் உள்ளன.

இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்
இசை நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட்

எது டெய்லரின் பாடல்களை முதன்மையாக்குகிறது?

டெய்லரின் இசைக் கோர்வையும் அவரது குரலும் பாடலுக்கு மெருகூட்டினாலும் அனைத்தையும் கடந்து டெய்லரின் பாடல் வரிகள் கச்சிதமாக உணர்வைக் கடத்துவதாக இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பாடல்களில் அவர் உருவாக்குகிற கதாபாத்திரங்கள், அதாவது யூனிவர்ஸ்- பார்வையாளர்களுக்கு மிகுந்த நெருக்கத்தை உண்டாக்குகிறது.

டெய்லரின் தாய் வழி பாட்டி ஓபேரா பாடகராக இருந்தவர். அதனால்தானா அந்தக் குரல்வளம் எனத் தெரியவில்லை.

1989 ஆல்பம்
1989 ஆல்பம்

சர்ச்சைகள்

புகழ்பெற்ற வாழ்வில் சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் இருக்குமா? பல பெயர்களுடன் டெய்லரின் பெயரும் இணைத்து சர்ச்சைகள் உருவாகும். 

இசைக் கலைஞர்களின் பாடல்களைப் பயன்படுத்தும் உரிமைக்கு ஆன்லைன் இசைச் செயலிகள் உரிய சன்மானம் வழங்க வேண்டும் என எழுந்த சர்ச்சையில் தனது அத்தனை பாடல்களையும் ஸ்பாட்டிபை உள்ளிட்ட தளங்களில் இருந்து திரும்பப் பெற்றார். 

அரசியல் குறித்து அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். சர்ச்சையும் நடக்கும்.

சட்ட ரீதியிலான சர்ச்சை ஒன்று, டெய்லர் ஸ்விப்ஃடை தனது ஆல்பத்தையெல்லாம் ரீ-ரிக்கார்ட் செய்து வெளியிடச் செய்தது. 

2018 இறுதியில் அவரது முதல் ஆறு ஆல்பத்தின் உரிமையை வைத்திருந்த பிக் மெஷின் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைமாறியது.

புதிதாக அதனை வாங்கியவர், டெய்லரின் அனுமதியின்றி வெளியிடப்படாத ஆல்பத்தை வெளியிட்டதோடு, விதித்த நிபந்தனைகள் டெய்லருக்கு பொருந்தக் கூடியதாக இல்லை. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு தனது பாடல்களை ரீ-ரெக்கார்ட் செய்து வெளிட்டார் டெய்லர். அவை வரலாறு காணாத அளவுக்கு விற்றுத் தீர்ந்தது.

இசை நிகழ்ச்சியின் நடுவில் குழந்தைக்கு தனது தொப்பியை வழங்கும் டெய்லர் ஸ்விஃப்ட்
இசை நிகழ்ச்சியின் நடுவில் குழந்தைக்கு தனது தொப்பியை வழங்கும் டெய்லர் ஸ்விஃப்ட்

பில்லினியர் வாழ்க்கை

அக். 2023 டெய்லர் ஸ்விஃப்டின் ஆல்பமான 1989 (டெய்லர் வெர்சன்) மீண்டும் வெளியானதும் 16 லட்சம் பிரதிகள் முதல் நாளே விற்பனையாகின. 

பிரபல ஆங்கில நாளிதழ், டெய்லரின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகத் கணக்கிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 91 ஆயிரம் கோடி ரூபாய். 

இசைத் துறை வருவாயை மட்டும் சார்ந்திருந்து பில்லியனியர் (கோடீஸ்வரர்கள்) பட்டியலில் இடம்பிடித்தவர்கள் வெகு குறைவு. அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் டெய்லர் ஸ்விஃப்ட்டின் பயணத் திட்டங்கள் 2024 இறுதி வரை திட்டமிட்டப்பட்டுள்ளன. நூற்றாண்டு பயணம் (எராஸ் டூர்) இன்னும் முடிவடையவில்லை.

டெய்லர் இசை வெள்ளத்தில் உலகமே மிதந்து கொண்டிருக்கிறது எனத் துணிந்துசொல்லலாம். இது டெய்லரின் நூற்றாண்டு. 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com