சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைப்பின் தொடர்ச்சியாக...
GST
அப்பாடா... சித்திரிப்பு / விஜய்
Published on
Updated on
4 min read

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் என்றாலே பொதுவாக எல்லாருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். ஆனால், இந்த முறை அப்படியில்லை, ஏற்கெனவே, சுதந்திர தின உரையிலேயே  தீபாவளிக்கு ஜிஎஸ்டி பரிசு காத்திருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துவிட்டதால். அவ்வாறே கவுன்சிலின் 56-வது கூட்டத்தில் தடாலடியான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கவுன்சில் கூட்டம் இரண்டு நாள்கள் என்று கூறப்பட்டிருந்தாலும் முதல் நாள் கூட்டத்தின் முடிவில் அன்றிரவே வரி விகித மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. 5%, 12%, 18%, 28% என்ற நாலடுக்கு வரிவிகிதங்கள் 5%,  18%  என இரண்டாக்கப்பட்டன. புகையிலை போன்ற ஒருசிலவற்றுக்கு மட்டும் 40% வரி.  

புதிய அறிவிப்பின் மூலம் ஏறத்தாழ 400 பொருள்களுக்கான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு, செப். 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

2010 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகம் செய்தபோது, அந்த காலகட்டத்தில் குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஒருபோதும் இந்த நடைமுறை வெற்றி பெறாது என்று குறிப்பிட்டு மிகக் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், பிறகு அவரே நாட்டின் பிரதமரானதும் அதே ஜிஎஸ்டியைப் புதிதாக மாற்றி, 2017, ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்தினார். அறிமுகம் செய்த காலத்திலிருந்தே இதன் குறைபாடுகள் பற்றியும் இதனால் விளையும் பாதகங்கள்  பற்றியும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தன.

ஆனால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திடீரென, சில மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், வரி விகிதங்கள் எல்லாவற்றையும் மாற்றியமைத்துள்ளதுடன், அதையே பெரிய வெற்றியைப் போல, ஆளும் அரசே  கொண்டாடிக் கொண்டிருப்பதுதான் பெரிய நகைமுரண்.

ஆனால், இந்த எட்டு ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் எத்தனை சிறு-குறு- நடுத்தரத் தொழில்கள் நசிந்தன; எவ்வளவு பேர் வேலையிழந்தனர்? பொருளாதார ரீதியில் எத்தகைய பாதிப்புகள் நேரிட்டன?  ஊஹூம், வழக்கம் போல இதற்கும் எந்தத் தரவும் இருக்க வாய்ப்பில்லை.

எடுத்துக் காட்டாக, ஆயுள் காப்பீட்டுக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கும் 18 சதவிகித ஜிஎஸ்டி விதிப்பதை எதிர்த்து, ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ச்சியாக காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் போராடி வந்திருக்கின்றன. ஆனால், அரசு கண்டுகொள்ளவேயில்லை.

2021-22, 2022-23, 2023-24 மூன்று நிதியாண்டுகளில் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதித்த ஜிஎஸ்டி மூலம் மட்டும் அரசு பெற்ற வருவாய் ரூ. 24,529 கோடி! ஆனால், இப்போது வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வரும் ஆண்டுகளில் நிறுவனங்கள் இதையும் ஈடுகட்டி, காப்பீட்டு பிரீமியம் அதிகரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் நம்ம டிசைன் அப்படி.

பல்வேறு காரணங்களால் பண மதிப்பிழப்பு போன்றவற்றுடன், இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு / விகித முறையும்கூட நம் பொருளாதாரத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

எனவே, இப்போதைய அறிவிப்புகள் நிச்சயம் பெரிய மாற்றம்தான். ஆனால், இவற்றின்  பலன்கள் மக்களுக்கு எவ்வாறு கிடைக்கப் போகின்றன என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி வரை ஜிஎஸ்டி இருக்கிறது. மறுநாள் விற்பனையில் வரிக் குறைப்பு (அல்லது ரத்து) விலையில் பிரதிபலிக்க வேண்டும் என்கிறபோது, உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் இடையே உண்மையான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே மக்களால் பலனைப் பெற முடியும்.

ஜிஎஸ்டி உள்பட அதிகபட்ச விற்பனை விலை எனக் குறிப்பிட்டுப் பொருள்கள்  விற்கப்படும் நிலையில், என்ன விலை குறைந்திருக்கிறது, எவ்வளவு குறைந்திருக்கிறது என யாருக்குத் தெரியப் போகிறது? எப்படித் தெரியும்? இவற்றின் பயன்கள் அரூபமாகக் கரைந்துவிடக் கூடாது.

ஜிஎஸ்டி சட்டத்தின் 171-வது பிரிவு எந்த விதமான வரிக் குறைப்பின் பலனும் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. எனவே, சென்றடைவதும் உறுதி செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, இப்போதே சிமெண்ட் விலையை உயர்த்துவது பற்றி நிறுவனங்கள் சிந்தித்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

ஏற்கெனவே ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை மத்திய அரசு முறையாகத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இப்போதைய வரிக் குறைப்பின் காரணமாக மாநிலங்களின் வருவாயில் கைவைத்துவிடக் கூடாது என்று மாநில அரசுகளும் கவலை தெரிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சி அரசால் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, 2019, 2024 தேர்தல் அறிக்கைகளிலும்கூட எளிய, சீர்திருத்தப்பட்ட வரி விகிதங்களை காங்கிரஸ் வலியுறுத்திவந்திருக்கிறது என்று தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார். பால், தயிர், தானியம் என விவசாயம் சார்ந்த 36 பொருள்களுக்கும் குழந்தைகளுக்கான பென்சிலிலிருந்து காப்பீடுகள் வரைக்கும் வரி விதித்ததால்தான் இந்த ஜிஎஸ்டியை கப்பர் சிங் டேக்ஸ் (Gappar Singh Tax) என்று காங்கிரஸ் விமர்சித்து வந்தது என்றும் தெரிவித்திருக்கிறார் அவர் (2017-ல் ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டார்).

நேற்று வரை நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் இவ்வளவு ஆயிரம் கோடி, வசூல் இவ்வளவு கோடிகள் அதிகரித்திருக்கின்றன என்றெல்லாம் பெரும் பெருமையாக அரசு அறிவித்துக் கொண்டிருந்தது, அதுவும் அரசின் ஒரு சாதனையைப் போலவே முன்னிறுத்தப்பட்டும் வந்தது.

இன்றைக்கு அதே ஜிஎஸ்டி வரிகளின் குறைப்பையும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி, இரண்டு அடுக்குப் புரட்சி என்றெல்லாமும் மார்தட்டி, சாதனை என பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். 28% வரி வசூலிப்பதும் சாதனை, அதே வரிகளைக் குறைப்பதும் சாதனை!

உள்ளபடியே, இந்த வரிக் குறைப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு என்றெல்லாம் அழுதுவடியக் கூடாது. கடந்த எட்டு ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் (அல்லது அநியாய!) வரி விகிதங்கள் தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றன, அவ்வளவுதான்.

இந்த வரிகள் எல்லாமும் ஏதோ பிரிட்டிஷார் விதித்திருந்த வரிகளுமல்ல; முந்தைய காங்கிரஸ் அரசு விதித்த வரிகளுமல்ல; பாரதிய ஜனதா தலைமையிலான இதே அரசு விதித்தவைதான்.

அறிமுகப்படுத்தப்பட்ட காலந்தொட்டே அதிகபட்ச வரி 18 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று எல்லாராலும் வலியுறுத்தப்பட்டு வந்ததுதான். அவர்களே வைப்பார்களாம், பிறகு அவர்களே எடுப்பார்களாம், அதையே பரிசு என்றும் அறிவிப்பார்களாம் என்றொரு வாய்ஸ் கேட்கிறதா?

2024 மக்களவைத் தேர்தலும் தாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் (400 பிளஸ்!) இருந்ததற்கு முற்றிலும் மாறாக வெளிவந்த - மாநில கட்சிகளின் உதவியில்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாதென்ற - தேர்தல் முடிவுகளும் அனேகமாக பாரதிய ஜனதா கட்சியை உள்ளுக்குள் உலுக்கிதான் வைத்திருக்கின்றனபோல.

ஏனென்றால், இப்போதெல்லாம் தங்கள் வழக்கமான நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறான முடிவுகளையும் அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி அரசு.

சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை காங்கிரஸும் ராகுல் காந்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்; தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டது. ஆனால், அதற்கெதிராகத் தொடர்ந்து பேசி, எண்ணற்ற காரணங்களைக் கூறி விமர்சித்து வந்தனர் பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும். ஆனால், திடீரென ஒரு நாள், யு டர்ன் அடித்து சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசே அறிவித்து விட்டது! பாவம் ராகுல்.

ஏற்கெனவே, 2020-ல் வேளாண் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றிவிட்டு, விவசாயிகளின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, பிறகு பின்வாங்கி விட்டது. இதேபோல, இலவசங்களுக்கு எதிராகப் பேசி வந்ததற்கு மாறாக, தில்லி, மகாராஷ்டிர தேர்தல்களில் மக்களுக்கான பணப் பயன் திட்டங்களை அறிவித்து வெற்றியும் பெற்றது. அதிகார வர்க்கத்தின் உயர்நிலைப் பொறுப்புகளுக்கு நேரடியாக ஆள்களை நியமிக்கும் புதிய முறையையும் அறிவித்துவிட்டுப் பின்வாங்கியது.

இப்போதும் தேர்தல்கள் வருகின்றன. மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கைப் பெருக்க வேண்டிய தேவையிருக்கிறது. கால மாற்றம். யு டர்ன் அறிவிப்புகள் தொடர்கின்றன போலும்.

அப்படியே, இந்த சேவை வரி விகிதங்களிலும் கொஞ்சம் மனசு வைக்க வேண்டும். 2014-ல் 12 சதவிகிதமாக இருந்து, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் 14% ஆக உயர்ந்து, ஜிஎஸ்டி வந்ததுடன் 18% ஆக விளைந்து நிற்கிறது. செல்போன் கட்டணத்தில் தொடங்கி ஒவ்வொன்றிலும் தேவையற்ற சதையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சேவை வரியாலும் பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான்.

டீசல் விலையைச் சார்ந்திருக்கிறது நாட்டின் வேளாண்மையும் போக்குவரத்தும். விளைபொருள்களிலும் விலையிலும் இன்ன பிறவற்றின் மூலமும் மக்களின் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும். பெட்ரோலும் அப்படியே. நாட்டின் ஒட்டுமொத்த நடுத்தர மக்கள் வாழ்க்கையிலும் பெட்ரோல் விலைக்கொரு பெரும் பங்கிருக்கிறது.

இவற்றையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும்; இவற்றுக்கான வரிகளையும் குறைத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்வு தொடர்புடைய இன்னொன்று, சமையல் எரிவாயு. விலை என்னவோ விண்ணை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை (ரஷியாவிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்து லாபம் பார்க்கிறார்கள் என்று இந்தியாவை டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். யார் லாபம் அடைகிறார்களோ, ஆனால், மக்களுக்கு எந்தப் பலனும் வந்து சேரவில்லை).

ஆக, எல்லா விலைகளும் கட்டணங்களும் உயர்கின்றன. ஆதார் அட்டை, குடும்ப அட்டையில் தொடங்கி வங்கிக் கணக்குகள் வரை நிலைத்திருப்பதற்கான அத்தியாவசியப் பொருளாகிவிட்ட, மாதாமாதம் கட்டியே தீர வேண்டிய, அலைபேசி இணைப்புக்கான கட்டணங்களில் தொடங்கி அத்தனையும்  உயர்ந்துவிட்டன. எல்லாமும் காஸ்ட்லியாகி, தற்காலம் வாழ்வது என்பதேயும் சாமானியனுக்கு காஸ்ட்லியான விஷயமாகிவிட்டது.

அடி மேலே அடி என்கிற மாதிரித் தொடர்ந்து பொருள்களின் விலைகளும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துவரும் நிலையில், ஏதோ, தீபாவளிப் பரிசாக இந்த வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஒட்டகத்தின் கண்களில் படுமாறு சின்ன துணி மூடையை இறக்கி வீசுவதைப் போல; ஆனால், இன்னும் நிறைய சுமைகள்  இருக்கின்றன. புத்தாண்டு வருகிறது, பொங்கல் வருகிறது...

எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டியை மட்டும் குறைத்துவிட்டதால் ஒரே நாளில் எல்லாமும் சுபிட்சமாக மாறிவிடாது. எனவே, மக்களால் இன்னமும் நிறைய யு டர்ன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளையும் ராகுல் காந்தியின் பேச்சுகளையும் மக்கள் தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். விரைவில் இவற்றில் எதையாவது மத்திய அரசு நிறைவேற்றி அறிவிப்பு வெளியிடும் நல்வாய்ப்பு இருக்கிறது!

எப்படியோ, யார் சொன்னதாக / சொல்வதாக இருந்தால் என்ன? நல்லது நடந்தால் நல்லதுதானே!

டெயில் பீஸ்:  அடை மழை விட்டாலும் செடி மழை விடாது போல. அது என்னங்க, வட இந்தியர்கள் சாப்பிடுகிற ரெடிமேட் ரொட்டி, மாவுக்கு வரி கிடையாதாம். ஆனால், தென்னிந்தியர்கள் சாப்பிடும் இட்லி, தோசை மாவுக்கு மட்டும் 18 சதவிகித வரியாம்!

Summary

In continuation of the reduction in GST rates...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com