காலத்தின் கட்டாயம்!

இந்தியாவில் 362 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 45,000 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
Updated on
2 min read

இந்தியாவில் 362 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 45,000 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். நிகழாண்டில் 32 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மேலும் 1,390 உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது இந்திய மருத்துவக் குழுமம். இதனால் குறைந்த கட்டணத்தில் தகுதியுள்ள மாணவர்கள் பயன்பெறுவது உறுதி.

இந்த அனுமதியாலும், ஏற்கெனவே பெறப்பட்ட அனுமதி மூலமும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் மொத்தம் 410 மாணவர்களை கூடுதலாகச் சேர்க்க முடியும்.

இந்தியாவின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் உருவாக்கப்பட்டாலும், கட்டணம் எத்தனை லட்சம் ரூபாயாக இருந்தாலும் அதைக் கொடுத்து டாக்டர் பட்டம் பெற மாணவர்கள் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், பாடம் சொல்லித் தரும் பேராசிரியர்களுக்குத்தான் பற்றாக்குறை உள்ளது.

ஒரு மருத்துவக் கல்லூரி எத்தனை துறைகள், எத்தனை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அரசு மருத்துவக் கல்லூரிகளும்கூட பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகின்றன. சில தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வேறு கல்லூரியில் பணிபுரியும் மருத்துவப் பேராசிரியர்களை தங்கள் கல்லூரியின் நிரந்தரப் பேராசிரியர்களாக கணக்குக் காட்டி, அகப்பட்டு, நீதிமன்ற வழக்கில் சிக்கி, மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை இழந்து தவிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணும் விதமாக தற்போது மத்திய அரசு இரண்டு விதிகளைத் தளர்த்தியுள்ளது. அதாவது மருத்துவப் பேராசிரியர்கள் வயதுவரம்பு 65 ஆக இருந்ததை 70 ஆக உயர்த்தியுள்ளது. பிகார் மாநிலம் அண்மையில் அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தியது. மத்திய அரசு இதில் மேலும் கருணையுடன் 70 ஆகவே உயர்த்திவிட்டது. மேலும், எம்எஸ்., எம்டி படிப்புகள் மட்டுமின்றி டிஎன்பி தேர்வில் (டிப்ளமேட் ஆப் நேஷனல் போர்டு ஆப் மெடிசின்) தேறியவர்களும் துறைத்தலைவர்களாக நியமிக்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஓய்வு பெற்ற பலரும் மீண்டும் துறைத்தலைவர்களாகப் பணியாற்றத் தகுதி படைத்தவர்களாகிறார்கள். ஆனால், இவர்களைப் பணியமர்த்தப் போகிறவர்கள் யார்? பயன்படுத்திக்கொள்ளப் போகிறவர்கள் யார்? தனியார் மருத்துவக் கல்லூரிகளா அல்லது அரசு மருத்துவக் கல்லூரிகளா என்று கேட்டால், தனியார்தான் என்று சொல்லிவிட முடியும்.

இதனுடன் இன்னொரு விதித் தளர்வையும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதாவது, "ஆங்கிலம் பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் முதுநிலை மருத்துவம் பயின்றவர்கள் நேரடியாக இந்தியாவில் மருத்துவம் செய்யலாம்' என்று அனுமதித்துள்ளது.

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டம் பெற்று வருவோர் - இந்தியாவில் மருத்துவத்தொழில் புரிய இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இந்தியாவின் முதுநிலை மருத்துவப் பட்டங்களை அங்கீகரிக்கும் நாடுகளின் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் முதுநிலை மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, தகுதித்தேர்வு மூலம் அவர்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். இதனால், நாடு திரும்பும் மருத்துவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி இந்தியாவில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்துத் திரும்பிய இந்தியர்கள் என்றாலும்கூட தகுதித் தேர்வு எழுதியாக வேண்டும் என்று இருந்தது. இப்போது, அந்த விதியைத் தளர்த்தியுள்ளனர்.

இந்த புதிய முடிவின்படி அதிக எண்ணிக்கையில் மருத்துவப் பேராசிரியர்கள் இந்தியாவுக்கு திரும்புவார்கள். இதனால் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர் பற்றாக்குறை நீங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த புதிய விதிமுறையில், வெளிநாட்டில் முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்றவர், எத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்தார் என்பதற்கு அதிக மதிப்பு அளிக்கும் நிபந்தனைகள் இல்லாதது பெருங்குறை. அதையும் சேர்த்திருக்கலாம்.

இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைவாக உள்ளன. இதனால் சுமார் 50 லட்சம் ரூபாய்வரை செலவிட்டு, இடம் பெறும் நிலைமைகளும்கூட உள்ளன. தற்போது, அரசு குறிப்பிடும் நாடுகளில் முதுநிலை மருத்துவம் படித்துத் திரும்பினால் எந்தத் தகுதித்தேர்வும் இல்லாமல் தொழில் செய்யலாம், மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராக உதவிப் பேராசிரியராகப் பணியாற்றலாம் என்பதால், இனிமேல் அதிகமானோர் வெளிநாட்டில் முதுநிலை மருத்துவம் படிக்கச் செல்வார்கள்.

இதில் நன்மை ஒருபுறம் இருந்தாலும், தீமையும் இருக்கவே செய்கிறது. இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற்று படித்தவர்கள், அதேபோன்று வெளிநாடுகளில் பணத்தைச் செலவழித்து முதுநிலை மருத்துவப் பட்டம் பெறுவதும், எந்த அனுபவமும் பயிற்சியும் இல்லாமல் பட்டம் மட்டும் பெற்றுத் திரும்புவதும் நடைபெறக்கூடும். அவர்கள் மருத்துவத் தொழிலிலும் ஈடுபடுவார்களே, அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

வெளிநாடுகளில் முதுநிலை மருத்துவம் படித்துத் திரும்புவோருக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்ததில் தவறில்லை. அவர்கள் குறைந்தது எத்தனை ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை இல்லாததுதான் தவறு.

செய்ததுதான் செய்தார்கள், எல்லா பிரச்னைகளையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கக் கூடாதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com